திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/கொரிந்தியருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா? சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா? யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில் எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே. எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை. அது மையினால் எழுதப்பட்டது அல்ல; மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது. கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது." (2 கொரிந்தியர் 3:1-3)


2 கொரிந்தியர் (2 Corinthians)[தொகு]

அதிகாரங்கள் 3 முதல் 4 வரை

அதிகாரம் 3[தொகு]

புதிய உடன்படிக்கையின் பணியாளர்[தொகு]


1 மீண்டும் நாங்கள் எங்களைப்பற்றி நற்சான்று அளிக்கத் தொடங்குகிறோமா?
சிலரைப் போல நற்சான்றுக் கடிதங்களை உங்களுக்குக் காட்டவோ
அல்லது உங்களிடமிருந்து பெறவோ எங்களுக்குத் தேவை உண்டா?
2 யாவரும் வாசித்து அறிந்து கொள்ளும் முறையில்
எங்கள் இதயத்தில் எழுதப்பட்ட நற்சான்றுக் கடிதம் நீங்களே. [1]
3 எங்கள் பணியின் வாயிலாகக் கிறிஸ்து எழுதிய கடிதம் நீங்களே என்பது வெளிப்படை.
அது மையினால் எழுதப்பட்டது அல்ல;
மாறாக வாழும் கடவுளின் ஆவியால் எழுதப்பட்டது.
கற்பலகையில் அல்ல, மாறாக மனித இதயமாகிய பலகையில் எழுதப்பட்டது. [2]


4 கிறிஸ்துவின் வழியாய் நாங்கள் கடவுள்மேல் வைத்துள்ள
உறுதியான நம்பிக்கையால்தான் இவ்வாறு சொல்லுகிறோம்.
5 நாங்களே செய்ததாக எதன் மேலும்
உரிமைபாராட்டிக் கொள்ள எங்களுக்குத் தகுதி இல்லை.
எங்கள் தகுதி கடவுளிடமிருந்தே வருகிறது.
6 அவரே புதிய உடன்படிக்கையின் பணியாளராகும் தகுதியை எங்களுக்குத் தந்தார்.
அவ்வுடன்படிக்கை, எழுதப்பட்ட சட்டத்தைச் சார்ந்ததல்ல;
தூய ஆவியையே சார்ந்தது.
ஏனெனில் எழுதப்பட்ட சட்டத்தால் விளைவது சாவு;
தூய ஆவியால் விளைவது வாழ்வு. [3]


7 கற்களில் பொறிக்கப்பட்ட அச்சட்டம் சார்ந்த திருப்பணி
சாவை விளைவிப்பதாயிருந்தும் அது மாட்சியுடன் அருளப்பட்டது.
விரைவில் மறையவேண்டியதாயிருந்த அம்மாட்சி
மோசேயின் முகத்தில் இஸ்ரயேல் மக்கள் பார்க்க முடியாத அளவுக்கு ஒளிவீசியது. [4]
8 அதுவே அப்படியிருந்தது என்றால்
தூய ஆவிசார்ந்த திருப்பணி எத்துணை மாட்சி பொருந்தியதாயிருக்கும்!
9 தண்டனைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணியே
இத்துணை மாட்சி பொருந்தியதாயிருந்தது என்றால்
விடுதலைத் தீர்ப்பு அளிக்கும் திருப்பணி எத்துணை மாட்சி நிறைந்ததாயிருக்கும்!
10 அன்றைய மாட்சியை ஒப்புயர்வற்ற இன்றைய மாட்சியோடு ஒப்பிட்டால்
அது மாட்சியே அல்ல.
11 மறையப்போவது மாட்சி உடையதாயிருந்தால்
நிலையாக இருப்பது எத்துணை மாட்சி மிகுந்ததாயிருக்கும்!


12 இவ்வாறு நாங்கள் எதிர்நோக்கி இருப்பதால்தான்
மிகுந்த துணிச்சலோடு செயல்படுகிறோம்.
13 மறைந்துபோகும் மாட்சியை இஸ்ரயேல் மக்கள் காணாதவாறு
தம் முகத்தை முக்காடிட்டு மறைத்துக் கொண்ட
மோசேயைப்போல் நாங்கள் செய்வது இல்லை. [5]
14 அவர்களின் உள்ளம் மழுங்கிப் போயிற்று.
இன்றுவரை அந்தப் பழைய உடன்படிக்கை நூல்களை அவர்கள் வாசிக்கும்போது
அதே முக்காடு இன்னும் அகற்றப்படாமல் இருக்கிறது.
கிறிஸ்துவின் வழியாய்த்தான் அது அகற்றப்படும்.
15 இன்றுவரை மோசேயின் திருச்சட்டம் வாசிக்கப்படும்போதெல்லாம்
அவர்களின் உள்ளத்தை ஒரு திரை மூடி இருக்கிறது.
16 ஆனால் ஆண்டவர்பால் திரும்பினால் அந்தத் திரை அகற்றப்படும்.
17 இங்கே ஆண்டவர் என்பது தூய ஆவியாரைக் குறிக்கிறது.
ஆண்டவரின் ஆவியார் இருக்குமிடத்தில் விடுதலை உண்டு.
18 இப்போது நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய்
ஆண்டவரின் மாட்சியைப் பிரதிபலிக்கிறோம்.
இவ்வாறு மேன்மேலும் மாட்சிபெற்று, அவர் சாயலாக மாற்றமடைகிறோம்.
இவையெல்லாம் ஆவியாம் ஆண்டவரின் செயலே.


குறிப்புகள்

[1] 3:2 = 1 கொரி 9:2.
[2] 3:3 = விப 24:12; எரே 31:33; எசே 11:19; 36:26.
[3] 3:6 = எபே 3:7.
[4] 3:7 = விப 34:29.
[5] 3:13 = விப 34:33.


அதிகாரம் 4[தொகு]

மண்பாண்டத்தில் செல்வம்[தொகு]


1 கடவுளின் இரக்கத்தால் நாங்கள் இத்திருப்பணியைப் பெற்றிருக்கிறோம்.
ஆகையால் மனந்தளராமல் இருக்கிறோம்.
2 மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை
நாங்கள் தவிர்த்து விட்டோம்.
எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை.
கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை;
மாறாக உண்மையை வெளிப்படையாக எடுத்துரைக்கிறோம்.
இவ்வாறு கடவுளின் முன்னிலையில் நல்ல மனச்சான்று கொண்ட அனைவருக்கும்
நாங்கள் எங்களைப் பற்றி நற்சான்று அளிக்கிறோம். [1]
3 நாங்கள் அறிவிக்கும் நற்செய்தி அழிவுறுவோருக்கே அன்றி
வேறு எவருக்கும் மறைக்கப்பட்டிருக்கவில்லை.
4 இவ்வுலகின் தெய்வம் நம்பிக்கை கொண்டிராதோரின்
அறிவுக் கண்களைக் குருடாக்கிவிட்டது.
எனவே அவர்கள் கடவுளின் சாயலாய் விளங்கும் கிறிஸ்துவின்
மாட்சி பொருந்திய நற்செய்தி ஒளியைக் காணமுடிவதில்லை. [2]
5 நாங்கள் எங்களைப் பற்றி அல்ல,
இயேசு கிறிஸ்துவைப் பற்றியே அறிவிக்கிறோம்;
அவரே ஆண்டவர் எனப்பறைசாற்றி வருகிறோம்.
நாங்கள் இயேசுவின் பொருட்டு வந்த உங்கள் பணியாளர்களே.
6 "இருளிலிருந்து ஒளி தோன்றுக!" என்று சொன்ன கடவுளே
எங்கள் உள்ளங்களில் அவரது ஒளியை வீசச் செய்தார்.
அது கிறிஸ்துவின் திருமுகத்தில் வீசும் கடவுளின் மாட்சியாகிய அறிவொளியே. [3]


7 இந்தச் செல்வத்தை மண்பாண்டங்கள் போன்ற நாங்கள் கொண்டிருக்கிறோம்.
இந்த ஈடு இணையற்ற வல்லமை எங்களிடமிருந்து வரவில்லை,
அது கடவுளுக்குகே உரியது என்பது இதிலிருந்து விளங்குகிறது.
8 நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும்
மனம் உடைந்து போவதில்லை;
குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை;
9 துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை;
வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை.
10 இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு
நாங்கள் எங்குச் சென்றாலும்
அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம்.
11 இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு
உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு
எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம்.
12 சாவின் ஆற்றல் எங்களிலும்
வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது.


13 "நான் கடவுள்மீது நம்பிக்கையோடு இருந்தேன்;
ஆகவே பேசினேன்"


என்று மறைநூலில் எழுதியுள்ளது.
அதற்கொப்ப நம்பிக்கை மனப்பான்மை கொண்டுள்ள நாங்களும் நம்புகிறோம்;
ஆகவே பேசுகிறோம். [4]
14 ஆண்டவர் இயேசுவை உயிர்த்தெழச் செய்த கடவுளே
எங்களையும் அவரோடு உயிர்த்தெழச் செய்து அவர் திருமுன் நிறுத்துவார்;
உங்களையும் அவ்வாறே நிறுத்துவார் என்பது எங்களுக்குத் தெரியும்.
15 இவையனைத்தும் உங்கள் நன்மைக்கே நிகழ்கின்றன.
இறையருள் பெறுவோரின் தொகை பெருகப்பெருக
அவர்கள் கடவுளுக்குச் செலுத்தும் நன்றியும் பெருகும்.
இதனால் கடவுள் போற்றிப் புகழப்படுவார்.

நம்பிக்கையோடு வாழ்தல்[தொகு]


16 எங்கள் உடல் அழிந்து கொண்டிருந்தாலும்
எங்கள் உள்ளார்ந்த இயல்பு நாளுக்கு நாள் புதுப்பிக்கப் பெற்று வருகிறது.
எனவே நாங்கள் மனந்தளருவதில்லை.
17 நாம் அடையும் இன்னல்கள் மிக எளிதில் தாங்கக் கூடியவை.
அவை சிறிது காலம்தான் நீடிக்கும்.
ஆனால் அவை ஈடு இணையற்ற மாட்சியை விழைவிக்கின்றன.
அம்மாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். [5]
18 நாங்கள் காண்பவற்றையல்ல,
நாங்கள் காணாதவற்றை நோக்கியே வாழ்கிறோம்.
காண்பவை நிலையற்றவை;
காணாதவை என்றென்றும் நிலைத்திருப்பவை.


குறிப்புகள்

[1] 4:2 = 1 தெச 2:4,5.
[2] 4:4 = எபே 2:2.
[3] 4:6 = தொநூ 1:3; யோவா 8:12.
[4] 4:13 = திபா 116:10.
[5] 4:17 = மத் 5:11,12.


(தொடர்ச்சி): கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம்: அதிகாரங்கள் 5 முதல் 6 வரை