உள்ளடக்கத்துக்குச் செல்

திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/தெசலோனிக்கருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரம் 3

விக்கிமூலம் இலிருந்து
"'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம். உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து, பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம். இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து, தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்." (2 தெசலோனிக்கர் 3:10-12)

2 தெசலோனிக்கர் (2 Thessalonians)

[தொகு]

அதிகாரம் 3

அதிகாரம் 3

[தொகு]

4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை

[தொகு]


1 சகோதர சகோதரிகளே!
இறுதியாக எங்களுக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.
ஆண்டவருடைய வார்த்தை உங்களிடையே விரைந்து பரவிப் புகழ் பெற்றது.
அதுபோல அது எங்கும் பரவிப் புகழ்பெறவும்,
2 தீயோர், பொல்லாதவர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படவும் வேண்டுங்கள்;
ஏனெனில் நம்பிக்கை எல்லாரிடமும் இல்லை.


3 ஆனால் ஆண்டவர் நம்பிக்கைக்குரியவர்.
அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீயோனிடமிருந்து காத்தருள்வார்.
4 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டதை நீங்கள் செய்கிறீர்கள்;
இனியும் செய்வீர்கள் என்னும் உறுதியான நம்பிக்கையை ஆண்டவர் எங்களுக்குத் தருகிறார்.
5 கடவுளின் அன்பையும், கிறிஸ்துவின் மன உறுதியையும் அடைய
ஆண்டவர் உங்கள் உள்ளங்களைத் தூண்டுவாராக!

சோம்பல் தகாது

[தொகு]


6 அன்பர்களே! எங்களிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட முறைமையின்படி ஒழுகாமல்
சோம்பித்திரியும் எல்லா சகோதரர் சகோதரிகளிடமிருந்தும் விலகி நில்லுங்கள் என,
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
7 எங்களைப்போல் ஒழுகுவது எப்படி என்பது உங்களுக்கே தெரியும்.
ஏனெனில், உங்களிடையே இருந்தபோது நாங்கள் சோம்பித்திரியவில்லை.
8 எவரிடமும் இலவசமாக நாங்கள் உணவருந்தவில்லை.
மாறாக, உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி,
இராப்பகலாய்ப் பாடுபட்டு உழைத்தோம்.
9 எங்களுக்கு வேண்டியதைப் பெற உரிமை இல்லை என்பதால் அல்ல,
மாறாக, நீங்களும் எங்களைப் போல நடப்பதற்காக
உங்களுக்கு முன்மாதிரி காட்டவே இவ்வாறு செய்தோம்.
10 'உழைக்க மனமில்லாத எவரும் உண்ணலாகாது' என்று
நாங்கள் உங்களிடையே இருந்தபோதே உங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தோம்.


11 உங்களுள் சிலர் எந்த வேலையும் செய்யாமல் சோம்பேறிகளாகச் சுற்றித்திரிந்து,
பிறர் வேலையில் தலையிடுவதாகக் கேள்விப்படுகிறோம்.
12 இத்தகையோர் ஒழுங்காகத் தங்கள் வேலையைச் செய்து,
தாங்கள் உண்ணும் உணவுக்காக உழைக்க வேண்டும் என
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரால் கட்டளையிட்டு அறிவுறுத்துகிறோம்.


13 சகோதர சகோதரிகளே! நன்மை செய்வதில் நீங்கள் மனந்தளர வேண்டாம்.
14 இத்திருமுகத்தில் நாங்கள் எழுதியவற்றிற்குக் கீழ்ப்படியாதோரைக் குறித்துவைத்துக்கொண்டு,
அவர்களோடு பழகாதிருங்கள்.
அப்பொழுதாவது அவர்களுக்கு வெட்கம் வரும்.
15 ஆனாலும், அவர்களைப் பகைவர்களாகக் கருதாது,
சகோதரர் சகோதரிகளாக எண்ணி, அவர்களுக்கு அறிவுறுத்துங்கள்.

5. முடிவுரை

[தொகு]

இறுதி வாழ்த்து

[தொகு]


16 அமைதியை அருளும் ஆண்டவர்தாமே
எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக!
ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!


17 இவ்வாழ்த்தைப் பவுலாகிய நான் என் கைப்பட எழுதுகிறேன்.
நான் எழுதும் திருமுகம் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்.
இதுவே நான் எழுதும் முறை.
18 நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் அருள் உங்கள் அனைவரோடும் இருப்பதாக!


(தெசலோனிக்கருக்கு எழுதிய 2ஆம் திருமுகம் நிறைவுற்றது)


(தொடர்ச்சி): திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகம்:அதிகாரங்கள் 1 முதல் 2 வரை