திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/தெசலோனிக்கருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
"சகோதர சகோதரிகளே! நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருiகையைப் பற்றியும் அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என, இறைவாக்காகவோ அருளுரையாகவோ நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால், நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம். எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்." (2 தெசலோனிக்கர் 2:1-3)

தெசலோனிக்கருக்கு எழுதிய இரண்டாம் திருமுகம் (2 Thessalonians) [1][தொகு]

முன்னுரை

ஆசிரியர்[தொகு]

இத்திருமுகத்தைப் பவுல் எழுதினாரா, வேறொருவர் எழுதினாரா என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது. பவுல் இதனை எழுதவில்லை என்பதற்குச் சான்றுகள் உள்ளது போலவே, அவரே எழுதினார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன. எனினும் அகச் சான்றுகளை வைத்துப் பார்க்கும்போது, பவுல் இதனை நேரடியாக எழுதிருக்க முடியாது என்று சொல்லத் தோன்றுகிறது. பவுலின் உள்ளக் கிடக்கையை அறிந்து கொண்டு, அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, அவர் கருத்துக்களில் ஊன்றி நின்று, திருமுகம் எழுதப்பட்ட காலக்கட்டத்தில் இரண்டாம் வருகைபற்றிப் பவுல் என்ன கூறியிருப்பார் என்பதை அவருடைய சீடர் ஒருவர் பவுல் பெயரால் திருமுகமாக எழுதியுள்ளார் எனக் கருத இடமிருக்கிறது. இவ்வாறு எழுதுவது அந்தக் காலத்தில் முறையாகக் கருதப்பட்டது.

சூழலும் நோக்கமும்[தொகு]

தெசலோனிக்கருக்கு எழுதிய முதலாம் திருமுகம் பல ஐயப்பாடுகளை உருவாக்கிற்று. அவை குறிப்பாக இயேசு கிறிஸ்து மீண்டும் வருதலைப் பற்றியனவாக இருந்தன. முதல் திருமுகத்தில் ஆறுமுறை கிறிஸ்துவின் வருகை பற்றிப் பேசப்பட்டிருந்தது. அது விரைவில் நிகழும் என அத்திருமுகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில் இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதென்று சிலர் நினைத்தனர்; வேறு சிலர் அது நெருங்கி வந்து விட்டது எனக் கருதிச் சோம்பித் திரிந்தனர். இக்கருத்துக்களை மாற்றிட இரண்டாம் திருமுகம் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்டது.

இது எழுதப்பட்ட காலத்தைக் குறிப்பிட்டுச் சொல்வது கடினம். கி.பி. 52ஆம் ஆண்டுக்கும் 100ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இது எழுதப்பட்டிருக்க வேண்டும்.

உள்ளடக்கம்[தொகு]

இறுதி வருகை ஏற்கெனவே நிகழ்ந்துவிட்டதென்ற அவர்கள் எண்ணத்தை மாற்ற, ஆண்டவரின் இறுதி வருகை நிகழுமுன் கிளர்ச்சி ஏற்படும் என்றும், நெறிகெட்ட மனிதன் தோன்றுவான் என்றும், அவன் கிறிஸ்துவுக்கு எதிராய் இருப்பான் என்றும் திருமுக ஆசிரியர் கூறுகிறார்.

இவ்வருகையை முன்னிட்டுத் தெசலோனிக்காவில் பலர் வேலை செய்யாமல் சோம்பித் திரிந்தனர். அவர்கள் நிலையாய் இருந்து, தாங்கள் கற்றுக்கொண்ட உண்மைகளின்படி வாழப் பணிக்கிறார் ஆசிரியர்; வேலை செய்யாது சோம்பித் திரிவோர் உழைத்து உண்ணுமாறு கட்டளை இடுகின்றார்.

2 தெசலோனிக்கர்[தொகு]

நூலின் பிரிவுகள்

பொருளடக்கம் நூல் அதிகாரங்கள் மற்றும் வசன வரிசை 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை (வாழ்த்து) 1:1-2 388
2. புகழாரம் 1:3-12 388
3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை 2:1-17 388 - 389
4. கிறிஸ்தவ வாழ்வுக்குப் பரிந்துரை 3:1-15 389 - 390
5. முடிவுரை (இறுதி வாழ்த்து) 3:16-18 390

}

2 தெசலோனிக்கர் (2 Thessalonians)[தொகு]

அதிகாரங்கள் 1 முதல் 2 வரை

அதிகாரம் 1[தொகு]

1. முன்னுரை[தொகு]

வாழ்த்து[தொகு]


1 நம் தந்தையாகிய கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் உரிய
தெசலோனிக்க திருச்சபைக்குப்
பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: [*]
2 நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும்
ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்
உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!

2. புகழாரம்[தொகு]

தீர்ப்பு நாள்[தொகு]


3 சகோதர சகோதரிகளே!
உங்கள் பொருட்டுக் கடவுளுக்கு எப்பொழுதும் நன்றி செலுத்த
நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். ஆம், அவ்வாறு செய்வது தகுதியே.
ஏனெனில் நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கை ஓங்கி வளருகின்றது;
நீங்கள் எல்லாரும் ஒருவருக்கொருவர் செலுத்தும் அன்பு பெருகி வழிகிறது.
4 ஆகவேதான் நாங்கள் கடவுளின் சபைகளில்
உங்களைக் குறித்துப் பெருமையாகப் பேசி வருகிறோம்;
உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத்தன்மையையும்
இன்னல்களுக்கு இடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும்
நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்.


5 இவை, கடவுளின் தீர்ப்பு நீதியானது என்பதற்கு அறிகுறியாக அமைகின்றன.
இவையனைத்தின் விளைவாக நீங்கள் இறையாட்சிக்குத் தகுதியுள்ளவர்களாவீர்கள்.
இந்த ஆட்சிக்காகவே நீங்கள் துன்புறுகிறீர்கள்.
6 ஏனெனில் உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்குத் துன்பத்தையும்
துன்புறுத்தப்படும் உங்களுக்குத் துயர் நீக்கி அமைதியையும்
எங்களோடு கைம்மாறாக அளிப்பது கடவுளுடைய நீதியன்றோ!
7 நம் ஆண்டவர் இயேசு வல்லமையுள்ள தம் தூதரோடு
வானிலிருந்து வெளிப்படும் போது இப்படி நிகழும்.
8 அப்பொழுது அவர் தீப்பிழம்பின் நடுவே தோன்றி,
கடவுளை அறியாதவர்களையும்
நம் ஆண்டவர் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை ஏற்காதவர்களையும் தண்டிப்பார்.
9 இவர்கள் ஆண்டவருடைய சீர்மிகு மாட்சியைக் காண இயலாது,
அவருடைய திருமுன்னிருந்து அகற்றப்பட்டு,
முடிவில்லா அழிவைத் தண்டனையாகப் பெறுவர்.
10 அந்நாளில் அவர் வரும்பொழுது
இறைமக்கள் அவரைப் போற்றிப்புகழ்வர்;
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் வியந்து போற்றுவர்.
நாங்கள் உங்களுக்கு அளித்த சான்றை நம்பி ஏற்றதினால் நீங்களும் அவ்வாறு செய்வீர்கள்.


11 இதற்காகத்தான் நாங்கள் உங்களுக்காக என்றும் இறைவனிடம் வேண்டுகிறோம்.
நம் கடவுள் தாம் விடுத்த அழைப்புக்கு உங்களைத் தகுதியுள்ளவராக்குவாராக!
உங்கள் நல்லெண்ணம் ஒவ்வொன்றையும்,
நம்பிக்கையால் தூண்டப்படும் ஒவ்வொரு செயலையும்
தம் வல்லமையால் நிறைவுறச் செய்வாராக!
12 இவ்வாறு நம் கடவுளும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் அளிக்கும் அருளுக்கேற்ப,
உங்களால் நம் ஆண்டவராகிய இயேசுவின் பெயருக்கும்
அவரால் உங்களுக்கும் மேன்மை உண்டாகுக!


குறிப்பு

[*] 1:1 = திப 17:1.


அதிகாரம் 2[தொகு]

3. கிறிஸ்துவின் வருகை குறித்து அறிவுரை[தொகு]

ஆண்டவரின் வருகைக்கான அடையாளங்கள்[தொகு]


1 சகோதர சகோதரிகளே!
நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் வருiகையைப் பற்றியும்
அவரோடு நாம் ஒன்று கூடுவதைப்பற்றியும் உங்களுக்கு நாங்கள் கூற விழைவது: [1]
2 ஆண்டவருடைய நாள் வந்துவிட்டது என,
இறைவாக்காகவோ அருளுரையாகவோ
நாங்கள் எழுதிய திருமுகத்தின் செய்தியாகவோ யாராவது சொன்னால்,
நீங்கள் உடனே மனங்கலங்கி நிலைகுலைய வேண்டாம்; திகிலுறவும் வேண்டாம்.
3 எவரும் உங்களை எவ்வகையிலும் ஏமாற்ற இடம் கொடாதீர்.
ஏனெனில் இறைவனுக்கு எதிரான கிளர்ச்சி முதலில் வந்தே தீரும்.
பின்னர், நெறிக்கெட்ட மனிதன் வெளிப்பட வேண்டும். அவன் அழிவுக்குரியவன்.
4 தெய்வம் என வழங்கப்படுவதையும்
வழிபாட்டுக்குரிய அனைத்தையும் எதிர்த்து,
அவற்றுக்கு மேலாகத் தன்னை அவன் உயர்த்திக் கொள்வான்.
அதோடு கடவுளின் கோவிலில் அமர்ந்து கொண்டு,
தன்னைக் கடவுளாகவும் காட்டிக் கொள்வான். [2]


5 நான் உங்களோடு இருந்தபொழுதே இவற்றைச் சொல்லிவந்தேன் என்பது
உங்களுக்கு நினைவில்லையா?
6 அவனுக்குக் குறித்த காலம் வருமுன் அவன் வெளிப்படாதபடி,
இப்பொழுது அவனைத் தடுத்து வைத்திருப்பது எதுவென்பது உங்களுக்குத் தெரியுமே!
7 நெறிகேட்டை விளைவிக்கும் ஆற்றல் ஏற்கெனவே மறைவாகச் செயல்பட்டு வருகிறது.
ஆனால், அதை இதுவரை தடுத்து வைத்திருப்பது அகற்றப்படும் வரை,
அது இப்படியே செயலாற்றிக் கொண்டிருக்கும்.
8 பின்னரே நெறிகெட்டவன் தோன்றுவான்.
ஆண்டவர் தம் வாயினால் ஊதி அவனை ஒழித்து விடுவார்;
அவர் வரும்போது அவரது தோற்றமே அவனை அழித்துவிடும். [3]
9 அவன் சாத்தானின் ஆற்றலால் வருவான்.
அவன் எல்லா வகைப் போலியான வல்ல செயல்களையும்
அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்வான். [4]
10 அழிந்து போகிறவர்களை முற்றிலும் ஏமாற்றித் தீங்கிழைப்பான்.
ஏனெனில் அவர்கள் தங்களை மீட்க வல்ல உண்மையின்பால் ஆர்வம் காட்ட மறுத்தனர்.
11 ஆகவே பொய்யானதை அவர்கள் நம்பும்வண்ணம்
கடவுள் அவர்களை வஞ்சக ஆற்றலுக்கு உட்படுத்தினார்.
12 இவ்வாறு உண்மையைப் பற்றிக்கொண்டு வாழாது
தீமையில் இன்பம் காணும் அனைவரும் தீர்ப்புக்கு உள்ளாவர்.

மீட்புப் பெறத் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள்[தொகு]


13 ஆண்டவரால் அன்புகூரப்பட்ட சகோதர சகோதரிகளே!
நாங்கள் கடவுளுக்கு உங்கள்பொருட்டு என்றும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
ஏனெனில் தூய ஆவியால் தூய்மையாக்கப்பட்டு,
நீங்கள் உண்மையை நம்பி மீட்பு அடையும்படி,
கடவுள் உங்களை முதன்முதலாகத் தேர்ந்துகொண்டார்.
14 நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் மாட்சியை நீங்கள் அடையும்பொருட்டே,
நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக அவர் உங்களை அழைத்தார்.
15 ஆகவே அன்பர்களே!
எங்கள் வாய்மொழி வழியாகவோ திருமுகம் வழியாகவோ
அறிவிக்கப்பட்ட முறைமைகளைப் பற்றிக் கொண்டு அவற்றில் நிலையாயிருங்கள்.


16 நம் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவும்,
நம்மீது அன்புகூர்ந்து தம் அருளால் நிலையான ஆறுதலையும் எதிர்நோக்கையும் அளித்த
நம் தந்தையாம் கடவுளும்
17 உங்கள் உள்ளங்களுக்கு ஊக்கமளித்து,
நல்லதையே சொல்லவும் செய்யவும் உங்களை உறுதிப்படுத்துவார்களாக!


குறிப்புகள்

[1] 2:1 = 1 தெச 4:15-17.
[2] 2:4 = தானி 11:36; எசே 28:2.
[3] 2:8 = எசா 11:4.
[4] 2:9 = மத் 24:24.


(தொடர்ச்சி): தெசலோனிக்கருக்கு எழுதிய 2ஆம் திருமுகம்: அதிகாரம் 3