திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மத்தேயு நற்செய்தி/அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

விக்கிமூலம் இலிருந்து
"மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும். மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும். மரத்தை அதன் கனியால் அறியலாம்." - மத்தேயு 12:33

மத்தேயு நற்செய்தி (Matthew)[தொகு]

அதிகாரங்கள் 11 முதல் 12 வரை

அதிகாரம் 11[தொகு]

விண்ணரசின் தன்மை[தொகு]


1 இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும்
பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும்
நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

விண்ணரசின் பின்னணியில் திருமுழுக்கு யோவான்[தொகு]

(லூக் 7:18-35)


2 யோவான் சிறையிலிருந்தபோது
மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத்
தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.
3 அவர்கள் மூலமாக,
"வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?" என்று கேட்டார்.
4 அதற்கு இயேசு மறுமொழியாக,
"நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள்.
5 பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்;
கால் ஊனமுற்றோர் நடக்கின்றனர்;
தொழுநோயாளர் நலமடைகின்றனர்;
காது கேளாதோர் கேட்கின்றனர்;
இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்;
ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6 என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக் கொள்வோர் பேறு பெற்றோர்" என்றார்.


7 அவர்கள் திரும்பிச் சென்றபோது
இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்:
"நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்?
காற்றினால் அசையும் நாணலையா?
8 இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்?
மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா?
இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரசமாளிகையில் இருக்கின்றனர்.
9 பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்?
இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

10 'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன்.
அவர் உமக்குமுன் உமது வழியை ஆயத்தம் செய்வார்'


என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது.
11 மனிதராய்ப் பிறந்தவர்களுள்
திருமுழுக்கு யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை.
ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என
நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
12 திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரையிலும்
விண்ணரசு வன்மையாகத் தாக்கப்படுகின்றது.
தாக்குகின்றவர்கள் அதைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.
13 திருச்சட்டமும் எல்லா இறைவாக்கு நூல்களும்
யோவான் வரும்வரை இறைவாக்குரைத்தன.
14 உங்களுக்கு விருப்பம் இருந்தால்
வரவேண்டிய எலியா இவரே என ஏற்றுக்கொள்வீர்கள்.
15 கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.


16-17 "இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்?
இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு,
'நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை.
நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை'
என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள்.
18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை,
குடிக்கவுமில்லை.
இவர்களோ 'அவன் பேய்பிடித்தவன்' என்கிறார்கள்.
19 மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார்.
இவர்களோ, 'இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன்,
வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்.
எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு
அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று."

திருந்த மறுத்த நகரங்களுக்குச் சாபம்[தொகு]

(லூக் 10:13-15)


20 இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள்
மனம் மாறவில்லை.
எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார்.
21 "கொராசின் நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
பெத்சாய்தா நகரே, ஐயோ! உனக்குக் கேடு!
ஏனெனில் உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள்
தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால்
அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச்
சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர்.
22 தீர்ப்பு நாளில் தீருக்கும் சீதோனுக்கும் கிடைக்கும் தண்டனையை விட
உங்களுக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
23 கப்பர்நாகுமே, நீ வானளாவ உயர்த்தப்படுவாயோ?
இல்லை, பாதாளம்வரை தாழ்த்தப்படுவாய்.
ஏனெனில் உன்னிடம் செய்யப்பட்ட வல்ல செயல்கள்
சோதோமில் செய்யப்பட்டிருந்தால் அது இன்றுவரை நிலைத்திருக்குமே!
24 தீர்ப்பு நாளில் சோதோமுக்குக் கிடைக்கும் தண்டனையை விட
உனக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என
நான் உங்களுக்குச் சொல்கிறேன்."

தந்தையும் மகனும்[தொகு]

(லூக் 10:21-22)


25 அவ்வேளையில் இயேசு,
"தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக்
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.
26 ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.
27 என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்.
தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்;
மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி
வேறு எவரும் தந்தையை அறியார்" என்று கூறினார்.

இயேசு தரும் இளைப்பாறுதல்[தொகு]


28 மேலும் அவர்,
"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29 நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன்.
ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்.
அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.
30 ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது" என்றார்.


குறிப்புகள்

[1] 11:5 = எசா 35:5,6; 61:1.
[2] 11:10 = மலா 3:1.
[3] 11:12 - "திருமுழுக்கு யோவானின் காலமுதல் இந்நாள்வரை
விண்ணரசு வல்லமையாகச் செயலாற்றி வருகிறது.
ஆர்வமுள்ளோர் அதைக் கைப்பற்றுகின்றனர்" எனவும்
இவ்வசனத்தை மொழிபெயர்க்கலாம்.
[4] 11:12,13 = லூக் 1616.
[5] 11:14 = மலா 4:5; மத் 17:10-13; மாற் 9:11-13.
[6] 11:27 = யோவா 3:35; 1:18; 10:15.
[7] 11:29 = எரே 6:16; கலா 5:1.


அதிகாரம் 12[தொகு]

ஓய்வுநாளில் கதிர் கொய்தல்[தொகு]

(மாற் 2:23-28; லூக் 6:1-5)


1 அன்று ஓர் ஓய்வுநாள்.
இயேசு வயல்வழியே சென்று கொண்டிருந்தார்.
பசியாயிருந்தால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். [1]
2 பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம்,
"பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்" என்றார்கள்.
3 அவரோ அவர்களிடம்,
"தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது
தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா?
4 இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும்
அர்ப்பண அப்பங்களை உண்டார்கள்.
குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா? [2]
5 மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது
ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? [3]
6 ஆனால் கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என
நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
7 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை
நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்கமாட்டீர்கள். [4]
8 ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே" என்றார்.

கை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்[தொகு]

(மாற் 3:1-6; லூக் 6:6-11)


9 இயேசு அங்கிருந்து அகன்று அவர்களுடைய தொழுகைக்கூடத்திற்குள் சென்றார்.
10 அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.
சிலர் இயேசுவின்மேல் குற்றம் சுமத்தும் நோக்குடன் அவரிடம்,
"ஓய்வுநாளில் குணமாக்குவது முறையா?" என்று கேட்டனர். [5]
11 அவர் அவர்களிடம்,
"உங்களுள் எவரும் தம் ஒரே ஆடு ஓய்வு நாளில் குழியில் விழுந்துவிட்டால்
அதைப் பிடித்துத் தூக்கி விடாமல் இருப்பாரா? [6]
12 ஆட்டைவிட மனிதர் எவ்வளவோ மேலானவர்.
ஆகவே ஓய்வுநாளில் மனிதருக்கு நன்மை செய்வதே முறை" என்றார்.
13 பின்பு இயேசு கை சூம்பியவரை நோக்கி,
"உமது கையை நீட்டும்" என்றார்.
அவர் நீட்டினார். அது மறு கையைப் போல நலமடைந்தது.
14 பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என
அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.

தேர்ந்து கொள்ளப்பட்ட ஊழியர்[தொகு]


15 இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பலர் அவருக்குப்பின் சென்றனர்.
அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார்.
16 தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என
அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார்.
17 இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:

18 "இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்துகொண்டவர்.


இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது;
இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்;
இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார்.
19 இவர் சண்டைசச்சரவு செய்யமாட்டார்;
கூக்குரலிடமாட்டார்;
தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்;
நீதியை வெற்றி பெறச் செய்யும்வரை,
20 நெரிந்த நாணலை முறியார்;
புகையும் திரியை அணையார்.


21 எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்."[7]

இயேசுவும் பெயல்செபூலும்[தொகு]

(மாற் 3:20-30; லூக் 11:14-23; 12:10)


22 பேய்பிடித்த ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்தனர்.
அவர் பார்வையற்றவரும் பேச்சற்றவருமாக இருந்தார்.
இயேசு அவரைக் குணமாக்கினார்.
பேச்சற்ற அவர் பேசவும் பார்வையற்ற அவர் பார்க்கவும் முடிந்தது.
23 திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப் போய்,
"தாவீதின் மகன் இவரோ?" என்று பேசிக்கொண்டனர்.
24 ஆனால் இதைக் கேட்ட பரிசேயர்,
"பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டே
இவன் பேய்களை ஓட்டுகிறான்" என்றனர். [8]
25 இயேசு அவர்களுடைய சிந்தனைகளை அறிந்து அவர்களிடம் கூறியது:
"தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும்.
அவ்வாறே தனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த நகரமும் வீடும் நிலைத்து நிற்காது.
26 சாத்தான் சாத்தானையே ஓட்டினால்
அவன் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டுப் போவான்.
அப்படியானால் அவனது அரசு எப்படி நிலைத்து நிற்கும்?
27 நான் பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறேன் என்றால்
உங்களைச் சேர்ந்தவர்கள் யாரைக் கொண்டு பேய் ஓட்டுகிறார்கள்?
ஆகவே அவர்களே உங்கள் கூற்று தவறு என்பதற்குச் சாட்சிகள்.
28 நான் கடவுளின் ஆவியைக் கொண்டே பேய்களை ஓட்டுகிறேன் என்றால்
இறையாட்சி உங்களிடம் வந்துள்ளது அல்லவா?
29 முதலில் வலியவரைக் கட்டினாலன்றி
எப்படி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து
அவருடைய பொருள்களைக் கொள்ளையிட முடியும்?
அவரைக் கட்டிவைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.
30 என்னோடு இராதவர் எனக்கு எதிராக இருக்கிறார்.
என்னோடு இணைந்து மக்களைக் கூட்டிச் சேர்க்காதவர் அவர்களைச் சிதறச் செய்கிறார். [9]
31 எனவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்:
தூய ஆவிக்கு எதிரான பழிப்புரை மன்னிக்கப்படாது.
மக்களுடைய மற்றப் பாவங்கள், பழிப்புரைகள் அனைத்தும் மன்னிக்கப்படும்.
32 மானிட மகனுக்கு எதிராய் ஏதாவது ஒரு வார்த்தை சொல்லி விட்டவரும் மன்னிக்கப்படுவார்.
ஆனால், தூய ஆவிக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார். [10]

மரமும் கனியும்[தொகு]

(லூக் 6:43-45)


33 "மரம் நல்லது என்றால் அதன் கனியும் நல்லதாக இருக்கும்.
மரம் கெட்டது என்றால் அதன் கனியும் கெட்டதாக இருக்கும்.
மரத்தை அதன் கனியால் அறியலாம். [11]
34 விரியன் பாம்புக் குட்டிகளே,
தீயோர்களாகிய நீங்கள் எவ்வாறு நல்லவை பேச முடியும்?
உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும். [12]
35 நல்லவர் நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை வெளிக் கொணர்வர்.
தீயவரோ தீய கருவூலத்திலிருந்து தீயவற்றையே வெளிக்கொணர்வர்.
36 மனிதர் பேசும் ஒவ்வொரு வீண் வார்த்தைக்கும்
தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்கவேண்டும் என உங்களுக்குச் சொல்கிறேன்
37 உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள்;
உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்."

யோனாவின் அடையாளம்[தொகு]

(மாற் 8:11-12; லூக் 11:29-32)


38 அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக,
"போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்" என்றனர். [13]
39 அதற்கு அவர் கூறியது:
"இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர்.
இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர
வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது. [14]
40 யோனா மூன்று பகலும் மூன்று இரவும்
ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார்.
அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும்
நிலத்தின் உள்ளே இருப்பார். [15]
41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து,
இவர்களைக் கண்டனம் செய்வார்கள்.
ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு
அவர்கள் மனம் மாறியவர்கள்.
ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா! [16]
42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து
இவர்களைக் கண்டனம் செய்வார்.
ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க
உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர்.
ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! [17]

தீய ஆவி திரும்பிவருதல்[தொகு]

(லூக் 11:24-26)


43 "ஒருவரைவிட்டு வெளியேறுகின்ற தீய ஆவி
வறண்ட இடங்களில் அலைந்து திரிந்து இளைப்பாற இடம் தேடும்.
இடம் கண்டுபிடிக்க முடியாமல்,
44 'நான் விட்டு வந்த எனது வீட்டுக்குத் திரும்பிப் போவேன்' எனச் சொல்லும்.
திரும்பி வந்து அவ்வீடு கூட்டி அழகுபடுத்தப்பட்டு யாருமின்றி இருப்பதைக் காணும்.
45 மீண்டும் சென்று தன்னைவிடப் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத்
தன்னோடு அழைத்து வந்து அவருள் புகுந்து அங்கே குடியிருக்கும்.
அவருடைய பின்னைய நிலைமை முன்னைய நிலைமையைவிடக் கேடுள்ளதாகும்.
இத்தலைமுறைக்கும் இவ்வாறே நிகழும்."

இயேசுவின் உண்மையான உறவினர்[தொகு]

(மாற் 3:31-35; லூக் 8:19-21)


46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது
அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று
வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.
47 ஒருவர் இயேசுவை நோக்கி,
"அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று
வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்" என்றார். [18]
48 அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து,
"என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?" என்று கேட்டார்.
49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி,
"என் தாயும் சகோதரர்களும் இவர்களே.
50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே
என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்" என்றார்.


குறிப்புகள்

[1] 12:1 = இச 23:25.
[2] 12:3,4 = 1 சாமு 21:1-4; லேவி 24:9.
[3] 12:5 = எண் 28:9,10.
[4] 12:7 = 1 சாமு 15:22; ஓசே 6:6.
[5] 12:10 = லூக் 20:20.
[6] 12:11 = லூக் 14:5.
[7] 12:18-21 = எசா 42:1-4.
[8] 12:24 = மத் 9:34; 10:25.
[9] 12:30 = மாற் 9:40; 11:23.
[10] 12:32 = லூக் 12:10.
[11] 12:33 = மத் 7:20; லூக் 6:44.
[12] 12:34 = மத் 15:18; லூக் 6:45.
[13] 12:38 = மத் 16:1; மாற் 8:11; லூக் 11:16.
[14] 12:39 = மத் 16:4; மாற் 8:12.
[15] 12:40 = யோனா 1:17.
[16] 12:41 = யோனா 3:5.
[17] 12:42 = 1 அர 10:1-10; 2 குறி 9:1-12.
[18] 12:47 - இவ்வசனம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.


(தொடர்ச்சி): மத்தேயு நற்செய்தி: அதிகாரங்கள் 13 முதல் 14 வரை