திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை
மாற்கு நற்செய்தி (Mark)
[தொகு]அதிகாரங்கள் 5 முதல் 6 வரை
அதிகாரம் 5
[தொகு]கெரசேனர் பகுதியில் பேய் பிடித்தவரை நலமாக்குதல்
[தொகு](மத் 8:8-28-34; லூக் 8:26-39)
1 அவர்கள் கடலுக்கு அக்கரையிலிருந்த
கெரசேனர் பகுதிக்கு வந்தார்கள்.
2 இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே
தீய ஆவி பிடித்த ஒருவர் கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிரே வந்தார்.
3 கல்லறைகளே அம்மனிதரின் உறைவிடம்.
அவரை எவராலும் ஒருபொழுதும் சங்கிலியால்கூடக்
கட்டி வைக்க முடியவில்லை.
4 ஏனெனில், அவரைப் பல முறை விலங்குகளாலும்
சங்கிலிகளாலும் கட்டியிருந்தும்
அவர் சங்கிலிகளை உடைத்து விலங்குகளைத் தகர்த்து எறிந்தார்.
எவராலும் அவரை அடக்க இயலவில்லை.
5 அவர் இரவு பகலாய் எந்நேரமும் கல்லறைகளிலும்
மலைகளிலும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்;
தம்மையே கற்களால் காயப்படுத்தி வந்தார்.
6 அவர் தொலையிலிருந்து இயேசுவைக் கண்டு
ஓடிவந்து அவரைப் பணிந்து,
7 "இயேசுவே, உன்னத கடவுளின் மகனே,
உமக்கு இங்கு என்ன வேலை?
கடவுள் மேல் ஆணை! என்னை வதைக்க வேண்டாம்" என்று
உரத்த குரலில் கத்தினார்.
8 ஏனெனில் இயேசு அவரிடம்,
"தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ" என்று சொல்லியிருந்தார்.
9 அவர் அம்மனிதரிடம், "உம் பெயர் என்ன?" என்று கேட்க
அவர், "என் பெயர் 'இலேகியோன்', [1] ஏனெனில் நாங்கள் பலர்" என்று சொல்லி,
10 அந்தப் பகுதியிலிருந்து தங்களை அனுப்பிவிட வேண்டாமென்று
அவரை வருந்தி வேண்டினார்.
11 அங்கே மலைப்பகுதியில் பன்றிகள்
பெருங் கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தன.
12 "நாங்கள் அப்பன்றிகளுக்குள் புகும்படி எங்களை அங்கே அனுப்பிவிடும்" என்று
தீய ஆவிகள் அவரை வேண்டின.
13 அவரும் அவற்றுக்கு அனுமதி கொடுத்தார்.
பின் தீய ஆவிகள் வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன.
ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகள் அடங்கிய அந்தக் கூட்டம்
செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது.
14 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்களோ ஓடிப்போய்
நகரிலும் நாட்டுப்புறத்திலும் இதை அறிவித்தார்கள்.
நடந்தது என்னவென்று பார்க்க மக்கள் வந்தனர்.
15 அவர்கள் இயேசுவிடம் வந்தபோது,
பேய் பிடித்திருந்தவர், அதாவது இலேகியோன் பிடித்திருந்த அவர்,
ஆடையணிந்து அறிவுத் தெளிவுடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அச்சமுற்றார்கள்.
16 நடந்ததைப் பார்த்தவர்கள்
பேய் பிடித்தவருக்கும் பன்றிகளுக்கும் நேரிட்டதை
அவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
17 அப்பொழுது அவர்கள் தங்கள் பகுதியை விட்டுப் போய்விடுமாறு
இயேசுவை வேண்டிக்கொண்டார்கள்.
18 அவர் படகில் ஏறியதும்
பேய் பிடித்திருந்தவர் தாமும் அவரோடு கூட இருக்க வேண்டும் என்று
அவரை வேண்டிக்கொண்டார்.
19 ஆனால் அவர் அதற்கு இசையாமல்,
அவரைப் பார்த்து, "உமது வீட்டிற்குப் போய்
ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம்
உம் உறவினருக்கு அறிவியும்" என்றார்.
20 அவர் சென்று, இயேசு தமக்குச் செய்ததையெல்லாம்
தெக்கப்பொலி நாட்டில் அறிவித்து வந்தார்.
அனைவரும் வியப்புற்றனர்.
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும்,
சிறுமி உயிர்பெற்றெழுதலும்
[தொகு](மத் 9:18-26; லூக் 8:40-56)
21 இயேசு படகேறி, கடலைக் கடந்து
மீண்டும் மறு கரையை அடைந்ததும்
பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர்.
அவர் கடற்கரையில் இருந்தார்.
22 தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து,
அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து,
23 "என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள்.
நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும்.
அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்" என்று
அவரை வருந்தி வேண்டினார்.
24 இயேசுவும் அவருடன் சென்றார்.
பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர்.
25 அப்போது பன்னிரு ஆண்டுகளாய்
இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார்.
26 அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும்
ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர்.
அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது.
27 அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு
மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து
அவரது மேலுடையைத் தொட்டார்.
28 ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே
நலம் பெறுவேன்" என்று அப்பெண் எண்ணிக் கொண்டார்.
29 தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று.
அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார்.
30 உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத்
தம்முள் உணர்ந்து
மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து,
"என் மேலுடையைத் தொட்டவர் யார்?" என்று கேட்டார்.
31 அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம்,
"இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும்,
'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!" என்றார்கள்.
32 ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி
சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
33 அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய்,
அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து,
நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார்.
34 இயேசு அவரிடம்,
"மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று.
அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு" என்றார். [2]
35 அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது,
தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து,
அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள்.
போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?" என்றார்கள்.
36 அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும்,
அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம்,
"அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்" என்று கூறினார்.
37 அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான்
ஆகியோரைத் தவிர
வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.
38 அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள்.
அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும்
இயேசு கண்டார்.
39 அவர் உள்ளே சென்று,
"ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை?
சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்" என்றார். [3]
40 அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின்,
சிறுமியின் தந்தையையும் தாயையும்
தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு,
அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். [4]
41 சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்" என்றார்.
அதற்கு, "சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு" என்பது பொருள்.
42 உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள்.
அவள் பன்னிரண்டு வயது ஆனவள்.
மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள்.
43 "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது" என்று அவர்
அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்;
அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.
- குறிப்புகள்
[1] 5:9 - "இலேகியோன்" என்பது உரோமைப் படையின் 6000 போர் வீரர்கள்
கொண்ட பெரும் படைப்பிரிவு.
[2] 5:34 = மத் 8:10.
[3] 5:39 = திப 20:10.
[4] 5:40 = திப 9:40.
அதிகாரம் 6
[தொகு]சொந்த ஊரில் இயேசு புறக்கணிக்கப்படுதல்
[தொகு](மத் 13:53-58; லூக் 4:16-30)
1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார்.
அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
2 ஓய்வுநாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில்
கற்பிக்கத் தொடங்கினார்.
அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர்.
அவர்கள், "இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்!
என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!
யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர்
இவருடைய சகோதரர் அல்லவா?
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?"
என்றார்கள்.
இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். [1]
4 இயேசு அவர்களிடம்,
"சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும்
இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்றார். [2]
5 அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக்
குணமாக்கியதைத் தவிர
வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை.
6அ அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார்.
இயேசு தம்மைச் சீடருக்கு வெளிப்படுத்தல்
[தொகு]பன்னிரு திருத்தூதர் அனுப்பப்படுதல்
[தொகு](மத் 10:1,5-15; லூக் 9:1-6)
6ஆ அவர் சுற்றிலுமுள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்துவந்தார்.
7 அப்பொழுது அவர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து,
அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங்கினார்.
அவர்களுக்குத் தீய ஆவிகள் மீது அதிகாரமும் அளித்தார்.
8 மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை,
இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும்
நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
9 ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்;
அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்" என்று
அவர்களுக்குக் கட்டளையிட்டார். [3]
10 மேலும் அவர்,
"நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால்,
அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.
11 உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ
உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால்
அங்கிருந்து வெளியேறும் பொழுது,
உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்" என்று
அவர்களுக்குக் கூறினார்; [4] [5]
12 அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று
மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்;
13 பல பேய்களை ஓட்டினார்கள்;
உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள். [6]
திருமுழுக்கு யோவான் கொல்லப்படுதல்
[தொகு](மத் 14:1-12; லூக் 9:7-9)
14 இயேசுவின் பெயர் எங்கும் பரவியது.
ஏரோது அரசனும் அவரைப் பற்றிக் கேள்வியுற்றான்.
சிலர், "இறந்த திருமுழுக்கு யோவான் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்;
இதனால்தான் இந்த வல்ல செயல்கள் இவரால் ஆற்றப்படுகின்றன" என்றனர்.
15 வேறு சிலர், "இவர் எலியா" என்றனர்.
மற்றும் சிலர், "ஏனைய இறைவாக்கினரைப்போல் இவரும்
ஓர் இறைவாக்கினரே" என்றனர். [7]
16 இதைக் கேட்ட ஏரோது,
"இவர் யோவானே. அவர் தலையை நான் வெட்டச் செய்தேன்.
ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்" என்று கூறினான்.
17 இதே ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை
மனைவியாக்கிக் கொண்டிருந்தான்;
அவள் பொருட்டு ஆளனுப்பி யோவானைப் பிடித்துக் கட்டிச்
சிறையில் அடைத்திருந்தான்.
18 ஏனெனில் யோவான் ஏரோதிடம்,
"உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல"
எனச் சொல்லிவந்தார். [8]
19 அப்போது ஏரோதியா அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு,
அவரைக் கொலை செய்ய விரும்பினாள்;
ஆனால் அவளால் இயலவில்லை.
20 ஏனெனில் யோவான் நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை
ஏரோது அறிந்து அஞ்சி அவருக்குப் பாதுகாப்பு அளித்து வந்தான்.
அவர் சொல்லைக் கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும்,
அவருக்கு மனமுவந்து செவிசாய்த்தான். [9]
21 ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது.
ஏரோது தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும்,
ஆயிரத்தவர் தலைவர்களுக்கும் கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும்
ஒரு விருந்து படைத்தான்.
22 அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி
ஏரோதையும் விருந்தினரையும் அகமகிழச் செய்தாள்.
அரசன் அச்சிறுமியிடம், "உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்,
தருகிறேன்" என்றான்.
23 "நீ என்னிடம் எது கேட்டாலும்,
ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்" என்றும்
ஆணையிட்டுக் கூறினான். [10]
24 அவள் வெளியே சென்று, "நான் என்ன கேட்கலாம்?" என்று
தன் தாயை வினவினாள்.
அவள், "திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்" என்றாள்.
25 உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து,
"திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து
இப்போதே எனக்குக் கொடும்" என்று கேட்டாள்.
26 இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான்.
ஆனாலும் விருந்தினர்முன் தான் ஆணையிட்டதால்
அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
27 உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி
யோவானுடைய தலையைக் கொண்டுவருமாறு பணித்தான்.
அவன் சென்று சிறையில் அவருடைய தலையை வெட்டி,
28 அதை ஒரு தட்டில் கொண்டுவந்து அச்சிறுமியிடம் கொடுக்க,
அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து
அவருடைய உடலை எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்தல்
[தொகு](மத் 14:13-21; லூக் 9:10-17; யோவா 6:1-14)
30 திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்துகூடித் தாங்கள் செய்தவை,
கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள்.
31 அவர் அவர்களிடம்,
"நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று
சற்று ஓய்வெடுங்கள்" என்றார்.
ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால்,
உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. [11]
32 அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலைநிலத்தில் உள்ள
தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள்.
33 அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள்.
பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்து கொண்டு,
எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி,
அவர்களுக்குமுன் அங்கு வந்து சேர்ந்தனர்.
34 அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார்.
அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால்
அவர்கள் மீது பரிவு கொண்டு,
அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். [12]
35 இதற்குள் நெடுநேரமாகிவிடவே, சீடர் அவரிடம் வந்து,
"இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது.
36 சுற்றிலுமுள்ள பட்டிகளுக்கும் ஊர்களுக்கும் சென்று
உண்பதற்கு ஏதாவது அவர்களே வாங்கிக்கொள்ளுமாறு
நீர் மக்களை அனுப்பிவிடும்" என்றனர்.
37 அவர் அவர்களிடம்,
"நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்" என்று பதிலளித்தார்.
அவர்கள், "நாங்கள் போய் இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கி
இவர்களுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும் என்கிறீரா?" என்று கேட்டார்கள். [13]
38 அப்பொழுது அவர்,
"உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன? போய்ப் பாருங்கள்"
என்று கூற,
அவர்களும் பார்த்து விட்டு,
"ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன" என்றார்கள்.
39 அவர் எல்லாரையும் பசும்புல் தரையில் அமரச் செய்யும்படி
சீடர்களைப் பணித்தார்.
40 மக்கள் நூறு பேராகவும்,
ஐம்பது பேராகவும் வரிசை வரிசையாய் அமர்ந்தனர்.
41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து
வானத்தை அண்ணாந்து பார்த்து,
கடவுளைப் போற்றி,
அப்பங்களைப் பிட்டு,
அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார்.
அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார்.
42 அனைவரும் வயிறார உண்டனர்.
43 பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும்
பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
44 அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.
கடல்மீது நடத்தல்
[தொகு](மத் 14:22-33; யோவா 6:15-21)
45 இயேசு கூட்டத்தினரை அனுப்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது தம் சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன்
அக்கரையிலுள்ள பெத்சாய்தாவுக்குச் செல்லுமாறு
அவர் கட்டாயப் படுத்தினார்.
46 அவர் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு,
இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைக்குச் சென்றார்.
47 பொழுது சாய்ந்த பிறகும் படகு நடுக்கடலில் இருந்தது.
ஆனால் அவர் தனியே கரையில் இருந்தார்.
48 அப்போது எதிர்க் காற்று அடித்தது.
சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர்
கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்;
அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார்.
அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. [14]
49 அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு,
"அது பேய்" என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
50 ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர்.
உடனே இயேசு அவர்களிடம் பேசினார்.
"துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்;
51 பிறகு அவர்களோடு படகில் ஏறினார்.
காற்று அடங்கியது. அவர்கள் மிகமிக மலைத்துப் போனார்கள்.
52 ஏனெனில் அப்பங்கள்பற்றிய நிகழ்ச்சியை
அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.
அவர்கள் உள்ளம் மழுங்கிப்போயிருந்தது. [15]
கெனசரேத்தில் நலமளித்தல்
[தொகு](மத் 14:34-36)
53 அவர்கள் மறு கரைக்குச் சென்று
கெனசரேத்துப் பகுதியை அடைந்து
படகைக் கட்டி நிறுத்தினார்கள்.
54 அவர்கள் படகைவிட்டு இறங்கிய உடனே,
மக்கள் இயேசுவை இன்னார் என்று கண்டுணர்ந்து,
55 அச்சுற்றுப் பகுதி எங்கும் ஓடிச் சென்று,
அவர் இருப்பதாகக் கேள்விப்பட்ட இடங்களுக்கெல்லாம்
நோயாளர்களைப் படுக்கையில் கொண்டு வரத் தொடங்கினார்கள்.
56 மேலும் அவர் சென்ற ஊர்கள், நகர்கள்,
பட்டிகள் அனைத்திலும் உடல் நலம் குன்றியோரைப்
பொதுவிடங்களில் கிடத்தி,
அவருடைய மேலுடையின் ஓரத்தையாவது அவர்கள் தொட
அனுமதிக்குமாறு அவரை வேண்டினார்கள்.
அவரைத் தொட்ட அனைவரும் நலமடைந்தனர். [16]
- குறிப்புகள்
[1] 6:3 = யோவா 6:42.
[2] 6:4 = யோவா 4:44.
[3] 6:9 = மத் 8:10.
[4] 6:8-11 = லூக் 10:4-11.
[5] 6:11 = திப 13:51
[6] 6:13 = யாக் 5:14.
[7] 6:14,15 = மத் 16:14.
[8] 6:17,18 = லூக் 3:19,20.
[9] 6:20 = திப 24:25.
[10] 6:23 = எஸ் 5:3.
[11] 6:31 = மாற் 2:2; 3:20.
[12] 6:34 = எண் 17:17; 1 அர 22:17; 2 குறி 18:16; 34:5;
செக் 10:2; மத் 9:36.
[13] 6:37 - மத் 18:28 அடிக்குறிப்பைப் பார்க்க.
[14] 6:48 - காண். மத் 14:25 அடிக்குறிப்பு.
[15] 6:52 = மாற் 4:13.
[16] 6:56 = மாற் 5:27-28; திப 5:15.
(தொடர்ச்சி): மாற்கு நற்செய்தி: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை