திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

விக்கிமூலம் இலிருந்து
"அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள். அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து, அவரைத் தொடும்படி வேண்டினர்...இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார். அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று அனைத்தையும் தெளிவாகக் கண்டார். - மாற்கு 8:22,25


மாற்கு நற்செய்தி (Mark)[தொகு]

அதிகாரங்கள் 7 முதல் 8 வரை

அதிகாரம் 7[தொகு]

மூதாதையர் மரபு[தொகு]


1 ஒருநாள் பரிசேயரும்
எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும்
அவரிடம் வந்து கூடினர்.
2 அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது,
கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். [1]
3 பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே,
தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக்
கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; [2]
4 சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே [3] உண்பர்.
அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள்
ஆகியவற்றைக் கழுவுதல் போன்று
அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
5 ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி,
"உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல்
தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" என்று கேட்டனர்.
6 அதற்கு அவர்,
"வெளிவேடக்காரர்களாகிய உங்களைப்பற்றி
எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார்.


'இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்;


இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
7 மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.


இவர்கள் என்னை வழிபடுவது வீண்'

என்று அவர் எழுதியுள்ளார். [4]


8 நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு
மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.
9 மேலும் அவர்,
"உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை
வெகு திறமையாகப் புறக்கணித்து விட்டீர்கள்.


10 'உன் தந்தையையும் தாயையும் மதித்துநட' என்றும்
தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்


என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! [5]
11 ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து,
'நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது 'கொர்பான்' ஆயிற்று;
அதாவது கடவுளுக்குக் காணிக்கையாயிற்று' என்றால்,
12 அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு
எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை.
13 இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக்
கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள்.
இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்" என்று அவர்களிடம் கூறினார்.


14 இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து,
அவர்களை நோக்கி,
நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்து கொள்ளுங்கள்.
15 வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று '
அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை.
மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே
அவர்களைத் தீட்டுப் படுத்தும்.
16 [கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும் "] [6] என்று கூறினார்.


17 அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது
அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப்பற்றிக் கேட்க,
18 அவர் அவர்களிடம்,
"நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்?
வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும்
அவர்களைத் தீட்டுப் படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா?
19 ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல்
வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய் விடுகிறது" என்றார்.
இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயனவென்று குறிப்பிட்டார். [7]
20 மேலும் "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்.
21 ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு,
கொலை, விபசாரம், பேராசை,
22 தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை,
செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும்
தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.
23 தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து
மனிதரைத் தீட்டுப் படுத்துகின்றன" என்றார்.

கானானியப் பெண்ணின் நம்பிக்கை[தொகு]

(மத் 15:21-28)


24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத்
தீர் பகுதிக்குள் சென்றார்.
அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்;
தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும்
அதை மறைக்க இயலவில்லை.
25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு
உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார்.
அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.
26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்.
அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.
27 இயேசு அவரைப் பார்த்து,
"முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்.
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து
நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல" என்றார்.
28 அதற்கு அப்பெண்,
"ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள்
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே" என்று பதிலளித்தார்.
29 அப்பொழுது இயேசு அவரிடம்,
"நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்;
பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று" என்றார்.
30 அப்பெண் தம் வீடு திரும்பியதும்
தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும்
பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.

காதுகேளாதவர் நலம் பெறுதல்[தொகு]


31 மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு,
சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து,
கலிலேயக் கடலை அடைந்தார்.
32 காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச்
சிலர் அவரிடம் கொண்டு வந்து,
அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். [8]
33 இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று,
தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு,
உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்.
34 பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து,
பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி "எப்பத்தா"
அதாவது "திறக்கப்படு" என்றார்.
35 உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன;
நாவும் கட்டவிழ்ந்தது.
அவர் தெளிவாகப் பேசினார்.
36 இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று
அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்.
அவரது கட்டளைக்கு நேர்மாறாக
இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். [9]
37 அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய்,
"இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்!
காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!"
என்று பேசிக்கொண்டார்கள். [10]


குறிப்புகள்

[1] 7:2 = லூக் 11:38.
[2] 7:3 = யோவா 2:6; கலா 1:14.
[3] 7:4 - "சந்தையிலிருந்து...பின்னரே" என்னும் சொற்றொடரை
"பொது இடங்களிலிருந்து வந்ததும் குளித்த பின்னரே" எனவும் மொழிபெயர்க்கலாம்.
[4] 7:6,7 = எசா 29:13.
[5] 7:10 = விப 20:12;21:17; லேவி 20:9; இச 5:16.
[6] 7:16 - இவ்வசனம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படவில்லை.
[7] 7:18,19 = திப 10:9-16; கொலோ 2:16,21,22.
[8] 7:32 = மாற் 6:5; 8:23; 1 திமொ 4:14,15
[9] 7:35,36 = மத் 8:3,4.
[10] 7:37 = மத் 9:33; 15:31.

அதிகாரம் 8[தொகு]

நாலாயிரம் பேருக்கு உணவு அளித்தல்[தொகு]

(மத் 15:32-39)


1 அந்நாள்களில் மீண்டும் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தார்கள்.
உண்பதற்கு அவர்களிடம் ஒன்றுமில்லை.
இயேசு தம் சீடரை வரவழைத்து அவர்களிடம்,
2 "நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவுகொள்கிறேன்.
ஏற்கெனவே மூன்று நாள்களாக இவர்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
உண்பதற்கும் இவர்களிடம் எதுவுமில்லை.
3 நான் இவர்களைப் பட்டினியாக வீட்டிற்கு அனுப்பிவிட்டால்
வழியில் தளர்ச்சி அடைவார்கள்.
இவர்களுள் சிலர் நெடுந்தொலையிலிருந்து வந்துள்ளனர்" என்று கூறினார்.
4 அதற்கு அவருடைய சீடர்கள்,
"இப்பாலைநிலத்தில் இவர்களுக்குப் போதுமான உணவு அளிப்பது எப்படி?"
என்று கேட்டார்கள்.
5 அப்போது அவர் அவர்களைப் பார்த்து,
"உங்களிடம் எத்தனை அப்பங்கள் உள்ளன?" என்று கேட்டார்.
அவர்கள் "ஏழு" என்றார்கள்.
6 தரையில் அமர மக்களுக்கு அவர் கட்டளையிட்டார்;
பின்பு அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து,
கடவுளுக்கு நன்றி செலுத்தி, பிட்டு,
பரிமாறும்படி தம் சீடர்களிடம் கொடுக்க,
அவர்களும் மக்களுக்கு அளித்தார்கள்.
7 சிறு மீன்கள் சிலவும் அவர்களிடம் இருந்தன.
அவற்றின்மீது அவர் ஆசிகூறிப் பரிமாறச் சொன்னார்.
8 அவர்கள் வயிறார உண்டார்கள்.
மீதியாய் இருந்த துண்டுகளை ஏழு கூடைகள் நிறைய எடுத்தார்கள்.
9 அங்கு இருந்தவர்கள் ஏறக்குறைய நாலாயிரம் பேர்.
பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார்;
10 உடனடியாகத் தம் சீடருடன் படகேறித்
தல்மனுத்தா பகுதிக்குச் சென்றார்.

அடையாளம் கேட்டுச் சோதித்தல்[தொகு]

(மத் 16:1-4)


11 பரிசேயர் வந்து இயேசுவோடு வாதாடத் தொடங்கினர்;
வானத்திலிருந்து அடையாளம் ஒன்றைக் காட்டும்படி அவரைச் சோதித்தனர். [1]
12 அவர் பெருமூச்சுவிட்டு,
"இந்தத் தலைமுறையினர் அடையாளம் கேட்பதேன்?
இத்தலைமுறையினருக்கு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.
13 அவர்களை விட்டு அகன்று மீண்டும் படகேறி
அவர் மறு கரைக்குச் சென்றார்.

பரிசேயர், ஏரோதியரின் புளிப்புமாவு[தொகு]

(மத் 16:5-12)


14 சீடர்கள் தங்களுக்குத் தேவையான அப்பங்களை
எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள்.
படகில் அவர்களிடம் ஓர் அப்பம் மட்டுமே இருந்தது.
15 அப்பொழுது இயேசு,
"பரிசேயர், ஏரோதியர் ஆகியோரது புளிப்பு மாவைக் குறித்து
மிகவும் கவனமாயிருங்கள்" என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். [2]
16 அவர்களோ தங்களிடம் அப்பம் இல்லையே என்று
ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.
17 இதை அறிந்த இயேசு அவர்களை நோக்கி,
"நீங்கள் உங்களிடம் அப்பம் இல்லை என ஏன் பேசிக் கொள்ளுகிறீர்கள்?
இன்னுமா உணராமலும் புரிந்து கொள்ளாமலும் இருக்கிறீர்கள்?
உங்கள் உள்ளம் மழுங்கியா போயிற்று?
18 கண்ணிருந்தும் நீங்கள் காண்பதில்லையா?
காதிருந்தும் நீங்கள் கேட்பதில்லையா?
ஏன், உங்களுக்கு நினைவில்லையா? [3]
19 ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது,
மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?"
என்று அவர் கேட்க,
அவர்கள் "பன்னிரண்டு" என்றார்கள்.
20 "ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது
மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?" என்று கேட்க,
அவர்கள், "ஏழு" என்றார்கள்.
21 மேலும் அவர் அவர்களை நோக்கி,
"இன்னும் உங்களுக்குப் புரியவில்லையா?" என்று கேட்டார்.

பெத்சாய்தாவில் பார்வையற்ற ஒருவர் நலமடைதல்[தொகு]


22 அவர்கள் பெத்சாய்தா வந்தடைந்தார்கள்.
அப்பொழுது சிலர் பார்வையற்ற ஒருவரை இயேசுவிடம் கொண்டுவந்து,
அவரைத் தொடும்படி வேண்டினர்.
23 அவர் பார்வையற்றவரது கையைப் பிடித்து
ஊருக்கு வெளியே அழைத்துச் சென்றார்.
அவருடைய விழிகளில் உமிழ்ந்து கைகளை அவர்மேல் வைத்து,
"ஏதாவது பார்க்கிறீரா?" என்று கேட்டார். [4]
24 அவர் நிமிர்ந்து பார்த்து,
"மனிதரைப் பார்க்கிறேன். அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள்.
ஆனால் நடக்கிறார்கள்" என்று சொன்னார்.
25 இயேசு மீண்டும் தம் கைகளை அவருடைய கண்களின்மீது வைத்தார்.
அப்போது அவர் நலமடைந்து முழுப் பார்வை பெற்று
அனைத்தையும் தெளிவாகக் கண்டார்.
26 இயேசு அவரிடம், "ஊரில் நுழைய வேண்டாம்" என்று கூறி
அவரை அவருடைய வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

இயேசு மெசியா என்னும் அறிக்கை[தொகு]

இயேசுவைப் பற்றிய பேதுருவின் அறிக்கை[தொகு]

(மத் 16:13-20; லூக் 9:18-21)


27 இயேசு தம் சீடருடன் பிலிப்புச் செசரியாவைச் சார்ந்த
ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
வழியில் அவர் தம் சீடரை நோக்கி,
"நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?" என்று கேட்டார்.
28 அதற்கு அவர்கள் அவரிடம்,
"சிலர் திருமுழுக்கு யோவான் எனவும்
வேறு சிலர் எலியா எனவும்
மற்றும் சிலர் இறைவாக்கினருள் ஒருவர் எனவும் சொல்கின்றனர்" என்றார்கள். [5]
29 "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?"
என்று அவர் அவர்களைக் கேட்க,
பேதுரு மறுமொழியாக, "நீர் மெசியா" என்று உரைத்தார். [6]
30 தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று
அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

இயேசுவே மானிட மகன்[தொகு]

பயணம் செய்யும் மானிடமகன்[தொகு]

இயேசு தம் சாவை முதன்முறை முன்னறிவித்தல்[தொகு]

(மத் 16:21-28; லூக் 9:22-27)


31 "மானிடமகன் பலவாறு துன்பப்படவும்
மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால்
உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும்
மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும்"
என்று இயேசு அவர்களுக்குக் கற்பிக்கத் தொடங்கினார்.
32 இதையெல்லாம் அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டார்.
33 ஆனால் இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம்,
"என் கண் முன் நில்லாதே, சாத்தானே.
ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல்
மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்று கடிந்துகொண்டார்.


34 பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து,
"என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து,
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். [7]
35 ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும்
அதை இழந்து விடுவார்;
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தம்
>உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார். [8]
36 ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும்
தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன?
37 அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்?
38 பாவத்தில் உழலும் இவ்விபசாரத் தலைமுறையினருள்,
என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்படும்
ஒவ்வொருவரையும் பற்றி
மானிட மகனும் தம்முடைய தந்தையின் மாட்சியோடு
தூய வானதூதருடன் வரும்போது வெட்கப்படுவார்" என்றார்.


குறிப்புகள்

[1] 8:11 = மத் 12:38; லூக் 11:16.
[2] 8:15 = லூக் 12:1.
[3] 8:18 = எரே 5:21; எசே 12:2; மாற் 4:12.
[4] 8:23 = யோவா 9:6.
[5] 8:28 = மாற் 6:14,15; லூக் 9:7,8.
[6] 8:29 = யோவா 6:68,69.
[7] 8:34 = மத் 10:38-39; 16:24-28; லூக் 9:23-27; 14:26.
[8] 8:35 = மத் 10:39; லூக் 17:33; யோவா 12:25.



(தொடர்ச்சி): மாற்கு நற்செய்தி: அதிகாரங்கள் 9 முதல் 10 வரை