திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு/அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


"பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், "அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன" என்று பாடக் கேட்டேன். அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்." (திருவெளிப்பாடு 6:13-14)


திருவெளிப்பாடு (Revelation)[தொகு]

அதிகாரங்கள் 5 முதல் 6 வரை

அதிகாரம் 5[தொகு]

ஆட்டுக்குட்டியும் சுருளேடும்[தொகு]


1 அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன்.
அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது;
அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது. [1]
2 "முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?" என்று
வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன்.
3 நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ
கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை.
4 சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று
நான் தேம்பி அழுதேன்.
5 அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம்,
"அழாதே, யூதா குலத்தின் சிங்கமும்
தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்;
அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து
ஏட்டைப் பிரித்து விடுவார்" என்று கூறினார். [2]


6 அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ,
அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன்.
கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது.
அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன.
அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே. [3]
7 ஆட்டுக்குட்டி முன்சென்று,
அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது.
8 அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும்
ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்;
அவர்கள் ஒவ்வொருவரும் யாழும்,
சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள்.
இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள். [4]
9 அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:


"ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை


உடைத்துப் பிரிக்கவும்
தகுதி பெற்றவர் நீரே.
நீர் கொல்லப்பட்டீர்;
உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு,
மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக்
கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். [5]
10 ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும்
அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர்.


அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்." [6]


11 தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது,
அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற
கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: [7]


12 "கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி


வல்லமையும் செல்வமும் ஞானமும்
ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும்


பெறத் தகுதி பெற்றது"


என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள்.


13 பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு,
கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும்,
அவற்றில் இருந்த ஒவ்வொன்றும்,


"அரியணையில் வீற்றிருப்பவருக்கும்


ஆட்டுக்குட்டிக்கும்
புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும்


ஆற்றலும் என்றென்றும் உரியன"


என்று பாடக் கேட்டேன்.
14 அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன.
மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.


குறிப்புகள்

[1] 5:1 = எசே 2:9,10; எசா 29:11.
[2] 5:5 = விப 49:9; எசா 11:1,10.
[3] 5:6 = எசா 53:7.
[4] 5:8 = திபா 141:2.
[5] 5:9 = திபா 33:3; 98:1; எசா 42:10.
[6] 5:10 = விப 19:6; திவெ 1:6.
[7] 5:11 = தானி 7:10.

அதிகாரம் 6[தொகு]

ஏழு முத்திரைகள்[தொகு]


1 பின்னர் ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன்.
அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது
"வா" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன்.
2 உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன்.
அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது.
அவருக்கு வாகை சூட்டப்பட்டது.
வெற்றிமேல் வெற்றி கொள்ள அவர் வெளியே புறப்பட்டுச் சென்றார். [1]


3 ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது
அவ்வுயிர்களுள் இரண்டாவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.
4 அப்பொழுது சிவப்புக் குதிரை ஒன்று வெளியே வந்தது.
அதன்மேல் ஏறியிருந்தவருக்கு,
உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது;
பெரியதொரு வாளும் அளிக்கப்பட்டது.
மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே
இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன. [2]


5 ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது,
அவ்வுயிர்களுள் மூன்றாவது "வா" என்று அழைக்கக் கேட்டேன்;
தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன்.
அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது. [3]
6 நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது.
அது, "ஒரு தெனாரியத்துக்கு கோதுமை அரைப்படி;
வாற்கோதுமை ஒன்றரைப் படி;
எண்ணெயையும் திராட்சை இரசத்தையும்
சேதப்படுத்தவேண்டாம்" என்றது.


7 ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது
அவ்வுயிர்களுள் நான்காவது, "வா" என்று அழைக்கக் கேட்டேன்.
8 தொடர்ந்து வெளிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன்.
அதன்மேல் ஏறியிருந்தவரின் பெயர் சாவு.
பாதாளமும் அவரோடு சென்றது.
வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும்
மண்ணுலகின் விலங்குகளாலும்
உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும்
அதிகாரம் அளிக்கப்பட்டது. [4]


9 ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது,
கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக்
கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப்
பலிபீடத்தின் அடியில் கண்டேன்.
10 அவர்கள் உரத்த குரலில்,
"தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே,
எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு
நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்?
எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு
எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?"
என்று கேட்டார்கள்.
11 அவர்கள் ஒவ்வொருவருக்கும்
ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது.
இன்னும் சிறிது நேரம்,
அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும்
அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை
அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.


12 ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன்.
அப்பொழுது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது.
நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது. [5]
13 பெரும் காற்று அடிக்கும்பொழுது
அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று
விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன.
14 சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது.
மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின. [6]
15 மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள்,
ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர்,
அடிமைகள், உரிமைக் குடிமக்கள் ஆகிய அனைவரும்
குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டார்கள். [7]
16 அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும்,
"எங்கள்மீது விழுங்கள்,
அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும்
ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; [8]
17 ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது.
அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?" என்று புலம்பினார்கள். [9]


குறிப்புகள்

[1] 6:2 = செக் 1:8; 6:3,6.
[2] 6:4 = செக் 1:8; 6:2.
[3] 6:5 = செக் 6:2,6.
[4] 6:8 = எசே 14:21.
[5] 6:12 = எசா 13:10; யோவே 2:10,31; 3:15;
மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25.
[6] 6:13,14 = எசா 34:4.
[7] 6:15 = எசா 2:19,21.
[8] 6:16 = ஓசே10:8; லூக் 23:30.
[9] 6:17 = யோவே 2:11; மலா 3:2.


(தொடர்ச்சி): யோவானுக்கு அருளப்பெற்ற திருவெளிப்பாடு: அதிகாரங்கள் 7 முதல் 8 வரை