உள்ளடக்கத்துக்குச் செல்

திவான் லொடபட சிங் பகதூர்/மதிப்புரை

விக்கிமூலம் இலிருந்து
மதிப்புரை

ஆநந்த குணபோதினி தனது கமலம் 1 இதழ் 11-ல் அடியில் வருமாறு எழுதுகிறது:

செளந்தர கோகிலம்

ஸ்ரீமான் வடுவூர் - கே. துரைசாமி ஐயங்காரவர்கள் பி.ஏ. இயற்றியது.

ஒரு குடும்பத்தலைவரின் காலத்துக்குப் பிறகு அவரை நம்பிய மனைவியும், அவரது புத்திரிகளும் ஆண் திக்கற்றுப் படும் பாடுகளையும் நேரும் சோதனைகளையும் இந்நூல் வெகு நன்றாக எடுத்துரைக்கின்றது. கண்ணபிரானின் உத்தம குணங்களும், உயிருக்குத் துணிந்து அபாயத்திலிருந்து பிறரை விடுவிக்கும் திறனும், தன் கடமையைச் செய்த அளவோடு திருப்தியேற்குந் தகைமையும் அவன்றன் காதல் நலமும், அவனுக்கு நேரும் இன்னல்களும், இதே விதமாகக் கோகிலாம்பாளின் தூய நடத்தைகளும், நிதான விவேகமும், அவளது காதலும், பிறகு நேரும் ஸம்பவங்களும், செளந்தரவல்லியின் உலகியலுணராத மெல்லிய தன்மையும், பிறரது வஞ்சனை வலையிலாழ்ந்து மயக்குறும் பான்மையும் வாசகர்களின் மனத்தை வசீகரிக்கச் செய்கின்றன. போலீஸ் அதிகாரிகளின் அநீதங்களும் சுந்தரமூர்த்தியின் காமப்பேயும் அவனது துஷ்கிருத்தியங்களும் முனியன் முத்துசாமி போன்ற வேலையாட்களின் மோசச் செயல்களும் உலக சுபாவத்தை நன்றாக நினைப்பூட்டுகின்றன. கற்பக வல்லி, பூஞ் சோலையம்மாள் இவர்களின் கஷ்டங்களும், அவர்கள் படும் ஸஞ்சலங்களும் மிக்க சோகபாகமாகும். உத்தம வேலையாட்களுக்கு உதாரணமாய் முருகேசனையும் கந்தனையும் குறிப்பிடலாம். வக்கீல் ராமராவ் ஆபத்ஸகாயரான உத்தம புருஷராயினும் அத்தகையோருக்குத்தான் தொழிலுக்குத் தக்க வருமானத்தைக் காணோம்.

இந்த நாவலின் இடையிலே இதற்குச் சம்பந்தமில்லாததாய்த் தோன்றுகின்ற திவானின் சரித்திரம் அமிர்தபானம் போன்று அத்யந்த ஸ்வாரஸ்யமாய் ருசிக்கின்றது. அவரது பெருந்தகைமையும் எளியோர் மாட்டு அவர் பாராட்டும் அன்பும், செய்யும் அரிய உதவிகளும், தமது கையெழுத்து போன்று மோசக் கையொப்பமிட்டோனை ஆதரிக்கும் பான்மையும், போலீஸ் இன்ஸ்பெக்டரை வெகு சாதுர்யமாய் ஆழங்கண்டு அந்த அக்கிரமியை சிக்ஷித்து நிரபாரதிகளைக் காக்கும் பரிவும், அவரது பத்தினியின் கற்பிலக்கணமும், அந்தோ இறுதியில் அம் மகாநுபாவரது வாழ்க்கை பாழ்பட்டு அவர் துறவியாதலும், முடிவில் மறைந்த தமது தந்தையைக் காண்பதுமான பாகங்களால் இந்நாவலின் மதிப்பு வெகு சிலாக்கினையான உச்சிக்கு உயர்ந்து வாசகர்களைத் திடுக்கிட்டுப் போகும்படி செய்விக்கின்றது. விருத்த விவாகத்தின் கோரமும், விவாகம் செய்து கொண்ட ஆடவர்க்கு அதனால் ஸஞ்சலப் பெருக்கேயன்றி ஒரு துளி இன்பமுமில்லையென்பதும் குஞ்சிதயாத முதலியாரால் இனிது புலனாகும்.

இந்நாவலின் மற்ற பகுதிகள் இனி வெளிவரும் மூன்றாம் பாகத்தில் பூர்த்தி அடையுமென்று தெரிகிறது. ஆயினும் இவ்விரு பாகங்களினின்றே காலயூகங்கள் தோன்றுகின்றன. கோகிலாவை மணத்தற்காகக் கண்ணபிரானைத் தபாற்களவிற் சேர்த்த சுந்தரமூர்த்தியே அக்களவின் காரணஸ்தனாகலாம். செளந்தரவல்லி தனது மெல்லிய தன்மையில் சுந்தரமூர்த்தியால் கற்பழிந்தும் கெடலாம்? கோகிலா தன் நற்கணவனான கண்ணபிரானை மணந்து இன்புறுதலும் கைகூடலாம். திவானின் மனைவி தன் புத்திரனைக் கண்டித்து நடத்தும் பான்மைக் குறிப்புக்கும் (இரண்டாம் பாகம் பக்கம் 122) கற்பக வல்லி கண்ணபிரானைக் கடிந்துரைக்கும் குறிப்புக்கும் (முதற் பாகம் பக்கம் 51 - 52) உள்ள ஒற்றுமையைக் கொண்டு திவானின் காணாமற்போன மனைவியும் குமாரனுமே கற்பக வல்லியும் கண்ணபிரானுமென்றும் நினைக்கலாம். இக்கண்ணபிரானுக்கும் சுந்தரமூர்த்திக்கும் கூட ஒரு உறவு நேர்ந்து கொள்ளுமோவெனவும் ஐயம். எவ்விதமோ இந்நாவலின் மூன்றாம் பாகம் மிக்க சமத்காரமாய் எழுதப் பட்டிருக்குமென்பது திண்ணமாதலின் ஆத்யந்த ஸ்வாரஸ்யமான இந் நாவலின் முடிவுக்காக அம்மூன்றாம் பாகத்தை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்கின்றோம். ஆசிரியர்க்கு நமது வாழ்த்து.