தும்பைப்பூ-நாவல்/அத்தியாயம் 1

விக்கிமூலம் இலிருந்து

தும்பைப் பூ


1

லகமெங்கணும் ஒளி பரப்பி உயிர்களையெல்லாம் வாழ்விக்கவேண்டி, செங்கதிரோன் கீழ்வானிலிருந்து அவசர அவசரமாகப் பவனி வந்து கொண்டிருந்தான். “கீங், கைங்” எனக் கடற் பறவைகள் கீச்சிடுவது உதயகீதம் பாடி, சூரியனை வரவேற்பது போலிருந்தது. நீலவானில் திட்டுத் திட்டாகத் தென்பட்ட வெண்மேகங்களிலும் கருங்கடலிலிருந்து கணத்துக்கொருதரம் கிளம்பிக் கரை புரண்டு வரும் அலைகளிலும் செஞ்ஞாயிற்றின் ஒளி பிரதிபலித்தது. கடற்பரப்பில் மிதந்தவாறு கட்டுமரங்கள் கரை நோக்கி விரைந்துவந்து கொண்டிருக்கும் அழகு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. முன்னாள் மாலையில் மீன் பிடிக்கச் சென்ற செம்படவர்கள் எதிர்பார்த்ததைவிட ஏராளமாக மீன்கள் வலைகளில் பிடிபட்டதாலோ என்னவோ, கட்டுமரங்களைத் துடுப்புகளால் துரிதமாகத் தள்ளிக்கொண்டு தெம்மாங்கு பாடியவாறு தெம்பாக வந்து கொண்டிருந்தனர். கட்டு மரங்களுக்கு இடையிடையே பெரிய படகுகளும் மிதந்து வந்து கொண்டிருந்தன. பெரிய மீன்களைப் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்த பெரிய வலைஞர் பலர் அவற்றில் காணப்பட்டனர். இவ்விதம் படகுகளிலும் கட்டுமரங்களிலும் வரும் பரதவர்களை எதிர்பார்த்து, பரதவப் பெண்கள் பலர் கடற்கரையில் மீன் கூடைகளை இடுப்பில் வைத்தும் கையில் பிடித்தும் நின்றிருந்தனர். அவர்களுடன், சிறாரும் வயது முதிர்ந்தோரும் காணப்பட்டனர். அவர்களிடையே இருந்து கிளம்பிய பேச்சு ஆரவாரம் அலைகளின் ஓசையைக்கூட அடக்கிவிட்டது. இன்னும் சிறிது நேரத்திற்குள் தங்களுக்கு எப்படியும் இரை கிடைக்கக்கூடும் என்ற ஆசையுடன், கருடன்களும், பருந்துகளும் காக்கைகளும் அவ்விடத்தைச் சுற்றிச்சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

கடற்கரையோரத்தில் செம்படவர்களேயன்றி வேறு சிலரும் நடமாடிக் கொண்டிருந்தனர். பெரிய மனிதர்கள் சிலர் கைகளில் ஊன்றுகோலை வைத்துக் கொண்டு அலை புரளும் கரையோரத்திலும், பெரிய பாதையை அடுத்துள்ள நடைபாதையிலும் சூரியனொளியில் மூழ்கியவாறு உலவிக் கொண்டிருந்தனர். எதிர்ப்புறத்திலுள்ள மேரி ராணி கல்லூரியில் வாசிக்கும் மாணவிகள் சிலரும் கடற்கரையில் உல்லாசமாக உலவிக் கொண்டிருந்தனர். இளைஞர்கள் சிலர் கதிரொளி தங்கள் தேகங்களில் பட, மணற்பரப்பில் உடற்பயிற்சி செய்துகொண்டும் ஓட்டப்பந்தயத்துக்குப் பழக்கம் செய்துகொண்டும் இருந்தனர். நடுப்பாதையில் மோட்டார் கார்கள் இப்படியும் அப்படியுமாக ஓடிக்கொண்டிருந்தன.

ஜட்கா வண்டியொன்று தெற்குநோக்கி வேகமாகப் போய்க்கொண்டிருந்தது. சில நிமிடங்களுக்கு ஒரு தரம் சாட்டையைச் சொடுக்கியும் ‘ஏய்’ ‘ஊய்’, எனக் குரல் கொடுத்துக்கொண்டும், ஜட்கா வண்டி சாயபு சாதுர்யமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான். ‘டக்ا டக்’ என்று அடியெடுத்து வைத்து லாகவமாக ஓடிக்கொண்டிருந்த குதிரையின் குளம்பு ஓசை கேட்பதற்கு இனிமையாக இருந்தது. குதிரைகூட மற்ற ஜட்கா வண்டிக் குதிரைகளைப் போல வற்றி வாடியில்லாமல் கொழுகொழுவென இருந்தது. அதன் கருமேனியிலும், பிடரி மயிரிலும் சூரிய ஒளிபட்டுப் பார்ப்பதற்கு ஒருவிதக் கவர்ச்சியைத் தந்தது.

இந்த ஜட்கா வண்டியில் அமர்ந்து போய்க்கொண்டிருந்த மங்கையர்க்கரசிக்குக் கடற்கரைக் காட்சிகளெல்லாம் விந்தையாக இருந்தன. அவளுடைய கயற்கண்கள் வியப்பினால் விரிந்து காணப்பட்டன. அவள் கண்முன் காணப்படும் ஒவ்வொரு காட்சியையும் கட்டிடத்தையும், பொருளையும் ஆவலாகவும் அதிசயந்தோன்றவும் பார்த்துச் செல்வதிலிருந்து அவள் இப்போதுதான் முதன் முறையாகச் சென்னை நகரத்திற்கு வருகிறாள் என்று தெரிந்தது.

‘மாலையில்தான், கடற்கரையில் மக்கள் திரள் திரளாகக் கூடி இருப்பார்கள்; உல்லாசமாகப் பொழுதுபோக்குவார்கள்’ என்று அவள் தன் ஊரில் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் இப்போது இவ்வளவு அதிகாலையில் சென்னைக் கடற்கரை மேற் குறித்தவாறு கலகலப்பாக இருந்தது, அவளுக்கு அதிசயத்தையும் களிப்பையும் ஒருங்கே ஏற்படுத்தியது. மக்கள் நீராடுவதாலும் துணி துவைப்பதாலும் நித்திய கடன்களைச் செய்வதாலும் காவிரியாறு காலையில் கலகலப்பாக இருக்கும் காட்சி அச்சமயம் அவள் மனக் கண் முன் வந்தது. அவள் அடிக்கடி தன்னுடன் வரும் தாய் பக்கம் திரும்பி ஏதேதோ கேட்டுக்கொண்டே சென்றாள். சென்னைக்குப் பல முறை வந்து பழகியவளும், உலகானுபவம் நிறைந்தவளுமான சிவகாமி அம்மாள் சமயோசிதமாக அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தானாகவும் மகளுக்குத் தெரிவிக்க வேண்டுமெனக் கருதியவற்றைக் கூறிக்கொண்டே போனாள்.

தான் பிறந்ததிலிருந்து இதுவரை பிரிந்தறியாத சொந்த ஊரையும் சுற்றத்தாரையும் விட்டு வரும் அவல நிலையை நினைந்து சோகமே உருவாக ரயிலில் பிரயாணஞ் செய்து வந்த மங்கையர்க்கரசி, எழும்பூர் ஸ்டேஷனில் இறங்கியதுமே நகர வாடை தாங்காமல் நடுக்கமுற்றாள். எங்கு பார்த்தாலும் மக்கள் கடல் போல் திரண்டு அலைமோதிக் கொண்டு இருப்பதைக் கண்டு அவள் மலைப்படைந்தாள். ரயிலிலிருந்து இறங்கியவர்களில் பலரை அவர்களுடைய உறவினர்களும் நண்பர்களும் வந்திருந்து வரவேற்று அழைத்துச் செல்வதைப் பார்த்தபோது, தங்களையும் அழைத்துப் போக யாராயினும் வந்திருப்பார்களா என்று அவள் மனம் எண்ணியது. கண்கள் ஆவலோடு சுற்றுமுற்றும் பார்த்தன. ஆனால், தாங்கள் முன்னறிவிப்பின்றியே ஊரைவிட்டுத் திடீரெனப் புறப்பட்டு வந்தது அவள் ஞாபகத்திற்கு வந்ததும் ஏமாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு தாயுடன் வந்தாள். இந் நிலையில் தங்களைச் சூழ்ந்து கொண்டு, “பெட்டி படுக்கை சாமான்கள் இருக்கிறதா? அம்மா! எங்கே இருக்கிறது சொல்லுங்கோ? நாங்க எடுத்து வாரோம்” என்று நச்சரிக்கும் போர்ட்டர்களைக் கண்டு அவளுக்கு எரிச்சல் தான் வந்தது. “இவர்கள் ஏன் இப்படி பேய்கள் போல் பறக்கிறார்கள்; தொல்லைப்படுத்துகிறார்கள், பிரயாணிகளைப் போகவிடாமல்” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

இதைச் செவியுற்ற சிவகாமியம்மாள், “அவர்கள் வேறென்ன செய்வார்கள்? குழந்தை, வயிற்றுப் பிழைப்பு இருக்கிறதே!” என்று மகளுக்குச் சமாதானம் சொல்லி விட்டு, போர்ட்டர்களைப் பார்த்து, “போங்க ஐயா, எங்களிடம் சாமான்கள் ஒன்றும் கிடையாது; வழி விடுங்கள்”" என்று கூறிக்கொண்டே, தான் கையில் பிடித்திருந்த துணிமூட்டையை எடுத்துக் கக்கத்தில் வைத்துக்கொண்டு ரயில் நிலையத்துக்கு வெளியே போகலானாள்.

“இந்த ஸ்டேஷன் ரொம்ப பெரிசாயிருக்கிறதே, அம்மா! மாயவரம் ஜங்க்ஷன் கூட இவ்வளவு பெரிசா இல்லையே!” என்று மங்கையர்க்கரசி அண்ணாந்து பார்த்துக்கொண்டே கேட்டவாறு தாயுடன் நடந்தாள்.

சிவகாமியம்மாள் புன்னகை செய்தவாறு, “சே! அதெல்லாம் இதற்கு முன்னாலே நிற்குமா? இது பெரிய ஸ்டேஷனில்லையா? தெற்கே இருக்கிற ஸ்டேஷன்களுக்கெல்லாம் இதுதான் தாய் ஸ்டேஷன் என்று சொல்லுகிறார்கள். எந்த ஊருக்கும் போகிற ரயில் வண்டிகளும் இங்கிருந்து தான் புறப்படுகின்றன; வந்து சேருகின்றன. இதற்கு மேலே ரயில் போகாது. நாம் வழியிலே பார்த்தோமே! நாம் வந்த வண்டிக்குப் பக்கத்திலே ஓடி வந்ததே! மின்சார வண்டி என்று நான் சொல்லல்லை! அதுதான் இதற்கப்புறமும் பீச் ஸ்டேஷன் வரைக்கும் போகும். ஆனால் அதற்கு வேறே பாதை. அது தாம்பரத்திலிருந்து கடற்கரை வரைக்கும் போகிறது” என்று விவரித்தாள்.

மங்கையர்க்கரசி நாலா பக்கங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே. நிதானமாக நடந்தவாறு, “கட்டிடம் கூடப் பாரிக்க நன்றாக இருக்கிறது” என்று கூறியவள், “சே! இது என்ன? காலில் ஏதோ......?” என்று சொல்லிக் கொண்டே குனிந்து பார்த்தாள். யாரோ காரித் துப்பிய எச்சிலை அவள் மிதித்து விட்டிருந்தாள். “அறிவில்லாதவர்கள் வழியில் அசுத்தம் பண்ணி வைத்திருக்கிறார்களே” என்று முகத்கைச் சுளித்துக் கொண்டு கூறியவாறு, காலை ஒரு பக்கமாகப் போய்த் துடைக்கலானாள்.

“இதெல்லாம் இங்கு சகஜம், மங்கை! அதோ பார்! வாழைப்பழத்தோல், காய்ந்த ரொட்டித் துண்டு எல்லாம் கண்ட இடங்களில் எறியப் பட்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும் எச்சிலும் துப்பலுந்தான். ஊர்தான் பட்டணம். நாகரிக நகரம் என்று பேர்...—ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை அலங்காரத்தில் குறையிருக்காது. முகத்துக்குப் பவுடர், மேலே வாசனை வீச செண்டு......மற்றதெல்லாம் அப்படியப்படித்தான். நீதான் இங்கு இருக்கப் போகிறாயே! இன்னும் எத்தனை யெத்தனை விதமான வேடிக்கைகளைப் பார்க்கப் போகிறாய், பாரேன்” என்று சொன்ன சிவகாமியம்மாள், “சரி, சரி, நேரமாய் விட்டது. வா போகலாம்” என்று கூறி வெளியே அழைத்துப் போனாள்.

போர்ட்டர்கள் உள்ளே படை யெடுத்தது போல வெளியேயும் வண்டிக்காரர்கள் இவர்களை முற்றுகையிட்டதைக் கண்டு. மங்கையர்க்கரசி திகைத்துப் போனாள். ஆனால் உலக அனுபவம் வாய்ந்த சிவகாமியம்மாள் “வெளியூர்ப் பெண்கள்தானே! வெகு சுலபமாக ஏமாற்றிவிடலாம்” என்று வாய்ச் சவடால் அடித்த வண்டிக்காரர்களை யெல்லாம் விரட்டிவிட்டு யோக்கியனான ஒருவனுடைய வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டாள்.

போகும் வழியெல்லாம் மங்கையர்க்கரசி குழந்தை போலக் கட்டிடங்களையும் மற்றும் காட்சிகளையும் மனிதர்களையும் வெறித்துப் பார்த்துக் கொண்டு போகலானாள்.

வண்டி சிந்தாதிரிப்பேட்டை வாராவதிப் பக்கமாகத் திரும்புகையில், சிவகாமியம்மாள், “மங்கை, அதோ பார், இரண்டு கடியாரக் கோபுரங்கள் தெரியல்லை? சிவப்புக் கோபுரம் பெரிய ரயில்கள் போகிற ஸ்டேஷன். இந்த ஸ்டேஷனைப் போல—ஏன்? இதைவிட மிகப் பெரிசு அது....... வெள்ளைக் கோபுரம், கார்ப்பொரேஷன் கட்டிடத்தினுடையது...... இதையெல்லாம் நீ பின்னாலே பார்க்கலாம்.......” என்று சொன்னாள்.

மகளுக்கு முக்கியமாகத் தெரிவிக்க வேண்டுமென்று நினைத்தவற்றை யெல்லாம் சிவகாமியம்மாள் சொல்லிக் கொண்டே போனாள். மங்கையர்க்கரசியும் சிலவற்றைப் பற்றித் தாயைக் கேட்டு அறிந்து கொள்ளலானாள்.

கோமளேஸ்வரன் பேட்டை வாராவதியை வண்டி கடந்ததும், மவுண்ட் ரோடிலுள்ள சினிமாக் கொட்டகைகளையும், பெரிய பெரிய கம்பெனிகளையும், வியாபார ஸ்தலங்களையும் பார்த்து மங்கையர்க்கரசி முன்னைவிட வியப்படைந்தாள். சிவகாமியம்மாள் தனக்குத் தெரிந்த கட்டிடங்களைப் பற்றியும் ஓட்டல்கள், சினிமாக் கொட்டகைகளைப் பற்றியும் மட்டும் மகளுக்கு விவரித்தாள்.

இவர்கள் சாந்தோம் ஹைரோட்டிலுள்ள ஒரு வீட்டுக்குப் போக வேண்டுமென்று தெரிவித்ததால், ஜட்கா வண்டிக்காரன் ஊரைச் சுற்றிக்கொண்டு போகாமல், நேராக வாலாஜா ரோட் வழியாக வண்டியை ஓட்டிக் கொண்டு போய் மெட்ராஸ் கிரிக்கெட் மைதானம், பப்ளிக் ஒர்க்ஸ் டிபார்ட்மெண்ட் கட்டிடம், செனட் ஹவுஸ் முதலியவைகளைக் கடந்த தெற்குத் திசையாகத் திரும்பிக் கடற்கரைப் பாதையில் ஓட்டலானன்.

வண்டி சென்னை பல்கலைக்கழகக்கட்டிடத்தை நெருங்கும் போதே, பரந்து விரிந்திருக்கும் கருங்கடலைக் கண்டுவிட்ட மங்கையர்க்கரசி, “இதென்னம்மா, இது!” என்று பேராச்சரியத்துடன் கேட்கலானாள்.

“இதுதான் சமுத்திரம் நான் முன்னே சொல்லலையா?” என்று பதிலளித்தாள் சிவகாமியம்மாள்.

“நம்ம காவேரி ஆற்றைவிடப் பெரிதாக இருக்கிறதே! அகண்ட காவேரியில் வெள்ளம் வந்தால் இருப்பதைப் போல......”

“அடிப் பயித்தியக்காரப் பெண்ணே இந்தச் சமுத்திரம் எங்கே? காவேரி எங்கே? காவேரியைப்போல நூறு காவேரி ஒன்று சேர்ந்தாலும் இவ்வளவு பெரியதாயிருக்காதே! நீ என்னான்னா......” என்று சிவகாமியம்மாள் அதற்குமேல் கடலைப் பற்றி விவரிக்க முடியாமல் நிறுத்தினாள்.

‘உம்’ என்று பெருமூச்சு விட்டவாறு மெளனமாக, வான முகட்டைத் தொட்டுக்கொண்டு கண்ணுக் கெட்டும் தூரம் வரை பரவியிருக்கும் நீலக்கடலின் அழகையும், காலைக் காட்சியையும் பார்த்துக் கொண்டே போனாள்.

ஜட்கா வண்டி. பிரஸிடென்ஸி காலேஜ், சர்வ கலாசாலை பரிட்சை மண்டபம், ஐஸ் ஹவுஸ் கட்டிடம், மேரிராணி மகளிர் கல்லூரி, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆபீஸ் கட்டிடங்களனைத்தையும் முறையே கடந்து, மக்கள் வசிக்கும் பகுதியில் பிரவேசிக்கலாயிற்று.

செம்படவர்கள் குடிசைகள் சில இடப்பக்கம் தென்பட்டதுமே மங்கையர்க்கரசி, "ஆமாம், அம்மா! நாம் போக வேண்டிய இடம் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கும்?..." என்று கேட்டாள்.

"அதுவா? இன்னும் கொஞ்ச தூரம்தான் இருக்கிறது..." என்று கூறியவாறே, "இதோ குடிசைகள் தெரிகிறதே! இதற்குத்தான் நடுக்குப்பம் என்பார்கள். எதிரில் சுடுகாடு இருக்கிறது இல்லையா? ஆமாம் இந்த இடத்துக்குப் பக்கம் தான் இருக்கிறது உன் அத்தான் வீடு; சமீபத்தில்தான் வந்து விட்டோம்......" என்று யோசனையோடு சொன்னாள் அன்னை.

பின், சிவகாமியம்மாள் நாலா பக்கங்களையும் சுற்றிப் பார்த்துக் கொண்டே, "நான் இங்கு வந்தே எத்தனையோ வருஷங்கள் ஆகிவிட்டது. அதனால் இடமெல்லாம் மறந்துகூடப் போச்சு, அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தால் தான் எதுவும்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டு வத்தவள் வண்டிப் பக்கமாகக் குறுக்கிட்ட ஒரு மனிதரைக் கூப்பிட்டு, "இங்கே சதானந்தம் பிள்ளை வீடு இருக்கிறதே! அது எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா! ஐயா......" என்று விசாரித்தாள்.

"யாரையம்மா கேக்கறீங்க? வக்கீல் ஐயாவையா? காந்தி குல்லா கூடப்போட்டிருப்பாரே!..... என்று கேட்டான் வழிப்போக்கள்.

"ஆமாம், ஆமாம்" என்று ஆவலோடு சொன்னாள் சிவகாமியம்மாள்.

"இன்னம் பத்து கஜ தூரம் போகவேணுமுங்க. வீடு பங்களா மாதிரியிருக்கும்; 'கடலகம்' என்று கல்கூட அடித்திருக்கும்" எனச் சொல்லிவிட்டு, வண்டிக்காரனை நோக்கி, "கான்வென்ட் பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்திலே இருக்கிறது சாயபு! இவர்கள் போகிற வீடு, சதானந்தம் பிள்ளை பிரபல வக்கீலாச்சே காங்கிரஸ் கூட்டங்களிலே கூடக்கலந்து கொள்வாரே! உனக்குத் தெரியாதா சாயபு! ......." என்று சொன்னாள்.

"நம்பள்கி அதெல்லாம் தெரியாது, ஐயா! நாம்பள் பட்டணம் பக்கத்திலே இருக்கிறான்......" என்று சொல்லிக் கொண்டே வண்டியை நிறுத்தாமல் ஓட்டினான்.

வழிப்போக்கன் அவனுக்கு வீடு இருக்கும் இடத்தின் அடையாளத்தை விவரித்துவிட்டுப் போனான்.

"நான் காட்டுகிறேன், சாயபு! எனக்கு இப்போது இடம் தெரிந்து விட்டது" என்று சொன்னாள் சிவகாமியம்மாள்.

இதுவரை ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்த மங்கையர்க்கரசி தாயை நிமிர்ந்து நோக்கி, "அம்மா! இடம் நெருங்க நெருங்க எனக்கு என்னவோ போல் இருக்கிறது, அம்மா!..." என்று குரலில் நடுக்கம் தொனிக்கக் கூறினாள்.

"போடி, பைத்தியமே! நீ எதற்காக இப்படி பயந்து சாகிறாய்? அக்கா வீட்டுக்குப் போகிறதற்கு இவ்வளவு அச்சமேன்? பெரியம்மாவைப் போலவே திலகவதியும் நல்லவள். நீ வேண்டுமானால் பாரேன்! கூடப் பிறந்த சகோதரிகூட அவ்வளவு அன்பாக இருக்கமாட்டாள். ரொம்பப் பிரியமாக அவள் உன்னிடம் இருப்பாள். அவள் அகமுடையானும் மிக நல்லவர், அப்படியில்லாவிட்டால், நான் உன்னை அவனிடம் அழைத்து வந்து விடுவேனா?......." என்று சிவகாமியம்மாள் ஆறுதல் மொழி கூறினாள்.

"நீங்க என்னதான் தைரியம் சொன்னாலும், எனக்கென்னமோ நெஞ்சு திக்திக்கென்று தான் அடித்துக் கொள்கிறது, அம்மா!..... நான் இப்போதே சொல்கிறேன், நான் சில நாள் இங்கிருந்து பார்ப்பேன். எனக்குப் பிடிக்காவிட்டால், உங்களுடனேயே ஊருக்குத் திரும்பி விடுவேன், தெரிகிறதா! நீங்க என்னை விட்டுவிட்டு உடனே போய்விடக் கூடாது. ஒரு வாரமாயினும் இங்கு இருக்க வேண்டும். நான் பழகுகிற வரை......" என்று விதிர் விதிர்ப்பு நீங்காமலே சொன்னான்.

"நீ எப்படித்தான் இந்த உலகத்தில் வாழ்வையோ? பெண்ணே! என்னை உன் கிட்டவே இருக்கச் சொல்கிறாயே! நான் எவ்வளவு காலம் உன்னோடு இருக்க முடியும்? எனக்கோ காடு வாவா என்கிறது; வீடு போபோ என்கிறது......." என்று கண்களில் நீர் துளிக்கச் சொன்னாள்.

மங்கையர்க்கரசி தாயின் வாயைக் கையால் பொத்தி, "நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது, அம்மா! நீங்க போய்விட்டால் எனக்கு என்னம்மா இருக்கிறது? உநிகளை விட்டால் எனக்கு வேறு துணை யார் இருக்கிறார்கள்? அண்ணனை மலையாக நம்பியிருந்தேன். அவரோ என்னைக் காற்றில் பறக்க விட்டுவிட்டார், நீங்களும் கைவிட்டு விட்டால்......" என்று உருக்கமாகக் கூறி வருகையில், சிவகாமியம்மாள் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கி, நன்றாகச் சொல்கிறாயே, மங்கையர்க்கரசி! நானா உன்னைக் கைவிட்டுவிடுவேன்? அது எப்படி முடியும்? அம்மா! ஒரு நாளும் இல்லை. நான் உன்னைப் பட்டணத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டுப் போவதாலேயே மறந்து விடுவேன் என்று நீ எண்ணுகிறாயா? நான் என்னை மறக்கும் நிலை வந்தால்தான் உன்னையும் மறக்க முடியும். நான் உன்னை விட்டுப் போனால் என் உடல் தான் அங்கிருக்குமே யொழிய, உயிர் உன்னண்டைதான் சுற்றிக் கொண்டிருக்கும். மனம் உன்னைப்பற்றியே எண்ணித் துடித்துக் கொண்டிருக்கும். நான் அடிக்கடி வந்து உன்னைப் பார்த்து விட்டுப் போவேன்.. என்ன!......?" என்று ஆறுதல் மொழி கூறினாள்.

மங்கையர்க்கரசி மேலே ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள், தலை குனிந்து யோசனையில் இருக்கும் மகளின் முகத்தையே சிறிது நேரம் கவனித்துக் கொண்டிருந்த சிவகாமியம்மாள், "வீணாக ஏதேதோ எண்ணி மனதை அலட்டிக் கொள்ளாதே. மங்கை! உனக்கு ஒரு குறைவும் வராது. நல்ல குணம் வாய்ந்த உனக்குக் கடவுள் துணையிருப்பார்..." என்று தேறுதல் சொன்னாள்.

மங்கையர்க்கரசி நிமிர்ந்து அன்னையை நோக்கினாள். அவள் கண்களில் நீர் ததும்பியது.

"கண் கலங்காதே, கண்ணு! உன் அண்ணன் சரியாயிருந்தால் நீ இப்படி அவதிப்பட வேண்டியிராது... நீ இங்கு கொஞ்ச நாள் இரு. உனக்குப் பிடிக்காவிட்டால் எனக்குத் தெரிவி, உடனே நான் வந்து உன்னை அழைத்துப் போகிறேன்" என்று சமாதானஞ் சொன்ன சிவகாமியம்மாள், "உன் அண்ணனிடம் நீ மன வருத்தம் கொண்டிருப்பதால், கொஞ்ச நாள் தூர இருந்தால் நல்லதென்று நினைத்துத்தான், திலகவதி கடிதமெழுதியதுமே, உன்னைக் கொண்டு வந்துவிட ஒத்துக்கொண்டேன். இல்லையானால்..." என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினாள். பிறகு அவள் ஏதோ நினைத்துக் கொண்டு, "இன்னொன்று சொல்கின்றேன். எனக்கென்னமோ நீ உள்ளூரிலே தனிக் குடித்தனம் நடத்த முற்படுவதில் கொஞ்சமும் இஷ்டமில்லை, அண்ணனுக்கு வீம்பாக இருக்க வேண்டுமென்று நீ எண்ணுகிறாய். ஆனால், அதனால் நம் குடும்பத்துக்கு எவ்வளவு கௌரவக் குறைவு என்று சிறுசாகிய உனக்குத் தெரியவில்லை. இதைவிட கண் மறைவாக இன்னொருவர் வீட்டில் நீ இருந்து காலந்தள்ளுவது நல்லது என்று எனக்குத் தோன்றியது. ஆனால் திலகவதி வீடு அன்னியர் வீடல்லவே! என் சொந்த அக்கா மகள் வீட்டில் நீ இருப்பதில் யாதொரு சௌகரியக் குறைவும் உனக்கு இருக்காது. அத்துடன் அக்கா வீட்டில் இருப்பது பற்றி யாரும் ஒரு குறையும் சொல்ல முடியாது..." என்று கூறினாள்.

 என்ன தான் இருந்தாலும் என்னைப் போன்ற ஒரு வயதுப் பெண் வேறொருத்தர் வீட்டில்-அதுவும் அத்தான் முறையுள்ளவர் வீட்டில் இருப்பதைப் பற்றி யாராயினும் அக்கப் போர் செய்தால் என்ன செய்வது? என்றே அஞ்சுகிறேன்..” என்று மங்கையர்க்கரசி வருத்தந் தோன்றக் கூறினாள்.

சிவகாமியம்மாள், யார் என்ன சொல்லுவது? அத்தான் வீடாயிருந்தால் என்ன? எத்தனை பெண்கள் அக்கா புருஷன் வீட்டில்-மாமன் மகன் வீட்டில் இருக்கிறார்கள்? நீ பார்த்ததில்லையா? நீயாயினும் கலியாணமானவள்; இருபது வயதுக்கு மேற்பட்டவள். பெரிய மனுஷியான பெண்கள் பெற்றோர் இல்லாததால் அத்தான் வீட்டிலும் அம்மான், விட்டிலும் இருந்து வருகிறார்கள். இதெல்லாம் இயற்கையே’ குறை சொல்கிறவர்கள் எதற்கும்தான் சொல்வார்கள். மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து கொண்டு காலங்கழிப்பதென்றால் மகளிராகிய நாம் வாழவே முடியாது. நல்லொழுக்கத்தினின்றும் வழுவாமலிருக்கிறோமா? என்று நம் மனச் சாட்சிக்கு அஞ்சி நடந்தோமானால் அதுவே போதும். மங்கையர்க்கரசி இந்தக் கொள்கையை நீ எப்போதும் மனதில் வைத்துக் கொள்...' என்று பெரிய தத்துவ ஞானிபோல் உபதேசஞ் செய்யலானாள்.

"இந்த வூடுதானே? பெரியம்மா சொன்னே? என்று வண்டிக்கார சாயபு கேட்ட கேள்வி இருவரையும் தன்னிலைக்குக் கொண்டு வந்தது. "நாம் பேசிக் கொண்டிருந்த விஷயம் வண்டிக்காரன் காதில் விழுந்து விட்டதோ! வண்டியில் இருக்கிறோம் என்றுகூட ஞாபகமில்லாமல் ஏதேதோ பேசிவிட்டோமே” என்று இருவருமே எண்ணினார்கள். மங்கையர்க்கரசி வெட்கத்தால்தலை குனிந்து கொண்டாள். சிவகாமியமமாள் மட்டும் வண்டிக்காரன் சாயபுவாதலால் நாம் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்திருந்தாலும் சரியாகப் புரிந்து கொண்டிருக்கமாட்டான் என்று தனக்குத்தானே தேறுதல் செய்து கொண்டாள். ஆனாலும் அவன் முகத்தைக் கடைக் கண்ணால் ஆராயலானாள்.

“அடே! தள்ளி வந்துவிட்டாயே, அப்பா! அந்த முன் வீடு; எங்களைக் கேட்டிருக்கக் கூடாது”? என்றாள் சிவகாமியம்மாள்.

“நம்பள்கி என்ன தெரியும்? நிம்பள் இல்லே உஷாராந்து சொல்லனும், நிம்பள் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருந்தான். நாம்பள் ஜட்காவை ஒட்டிக்கிட்டே இருந்தான். நம்பள் மேலே தப்பு தண்டா இருந்தா ஒப்பிக்கறான், ஆயா சொல்லட்டும் ஞாயம்...” என்று சாயபு பாட்டுக்குப் பேசிக் கொண்டே குதிரையைப் பின்னுக்குப் போகச் செய்தான்.

“சரி, சரி, சாயபு நிறுத்து வண்டியை; இந்தப் பங்களாவுக்குள்ளே ஒட்டிக்கொண்டு போய் நிறுத்து” என்று சிவகாமியம்மாள் கட்டளையிட்டாள்.

சாயபு அவ்விதமே குதிரையை ஒட்டிக் கொண்டு போய் வண்டியை அம்மாளிகையின் முன் நிறுத்தினன்.

சிவகாமியம்மாள் உடையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த மங்கையர்க்கரசியை நோக்கி, “இறங்கம்மா, மங்கை” என்று சொன்னாள். அதன்படியே இறங்கினாள், பின் தாயிடமிருந்து துணி மூட்டையை வாங்கிக் கொண்டு வண்டியை விட்டு நகர்ந்து நின்றாள்.

வண்டி பங்களாவினுள் நுழையும்போதே தோட்டவேலை செய்து கொண்டிருந்த தோட்டக்காரன் ‘இவ்வளவு காலையில் யார் வருகிறார்கள்? கட்சிக்காரர்கள் வருகிறார்களா?’ என்று வேலை செய்வதை நிறுத்திவிட்டுக் கூர்ந்து பார்க்கலானான்; பெண்களாயிருப்பதுகண்டு, “வக்கீல் ஐயா வீட்டு மனுஷாள் போலிருக்கிறது” என்று எண்ணிக்கொண்டு வேடிக்கை பார்க்கலானான்.

வெளியே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் வண்டியைப் பார்த்துவிட்டு, “அம்மா, வண்டி வந்து நிக்குது. யாரோ வர்றாப் போல்இருக்குது” என்று கூறிக்கொண்டே உள்ளே ஓடினார்.

“திலகவதியின் பிள்ளைகள், நாம் வருகிறதை அவர்கள் தாயிடம் போய்ச் சொல்லுகிறார்கள்” என்று கூறிக் கொண்டே சிவகாமியம்மாள் வண்டிக் கம்பியைப் பிடித்துக் கொண்டு படிமேல் காலை வைத்து மெல்லக் கீழே இறங்கினாள்.

மங்கையர்க்கரசி வீட்டு வாயிலைத் திரும்பிப் பார்த்தாள். அவள் கண்கள் தற்செயலாக மேலே பார்த்த போது, மேன் மாடியிலிருந்து யாரோ ஒருவர் தன்னையே கூர்ந்து நோக்கிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு நாணத்தால் சடக்கெனத் தலை கவிழ்ந்து கொண்டாள். ஆனால் அடுத்த கணம் அவள் உள்ளம், அது யார்? ஒரு வேளை அம்மா சொன்ன அத்தானயிருக்குமோ? என்று எண்ணியவாறு அவரைக் கடைக்கணிக்க ஆவல் கொண்டது.

சிவகாமியம்மாள் வண்டிக்காரனுக்குக் கூலி கொடுத்து அனுப்பி விட்டு, “மங்கையர்க்கரசி! அப்படிச் சிலை போல் நிற்கிறாயே? வா; உள்ளே போகலாம்” என்று கூறியவாறு அவள் கரத்தைப் பற்றிக் கூப்பிட்டாள்.

இதற்குள், “அத்தானாய்த்தான் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால் வேறு யார் அவ்வளவு சுதந்திரமாக மேன் மாடியில் இருக்க முடியும்?” என்று தனக்குள் முடிவுக்கு வந்த மங்கையர்க்கரசி, அவரைச் சரியாகப்பார்க்க வில்லையே? அவர் எப்படியிருக்கிறார் என்று பார்க்கலாம்: என்ற எண்ணத்தோடு நிமிர்ந்து பார்க்க முயன்றாள். ஆனால் அடுத்த கணம் நாணமும் அச்சமும் அவளைப்பிடித்து அழுத்தி விட்டது. நாம் அவரைப் பார்ப்பதைக் கண்டு விட்டால் நம்மைப் பற்றித் தப்பாக நினைத்துக் கொண்டால் என்ன செய்வது? என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். தாயுடன் சென்று கொண்டே இருந்த அவள், “அம்மா! மேலே நின்றிருக்கிறாரே! யாரம்மா அது! அத்தானா?” என்று கேட்டாள். சந்தேகமின்றி அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் அவளுடைய வெட்க உணர்ச்சியையும் மீறி அவ்விதம் கேட்கச் செய்தது.


“அட, பார்த்ததுமே தெரிந்து கொண்டாயே, மங்கை!” என்று புன்சிரிப்புடன் கூறிய சிவகாமியம்மாள், “அவர்தான் உன் அத்தான். அவர் வீட்டுக்கு வரப் பயந்தாயே! அவர் எப்படியிருக்கிறார், பார்! பெரிய மனுஷர் மாதிரியில்லையா?” என்று கேட்டாள்.


அன்னையுடன் பேசுவதுபோல் வாயசைத்துப் பாவனை செய்தவாறு மங்கையர்க்கரசி மாடி மீதிருக்கும் சதானந்தம் பிள்ளையைப் பார்க்க மெல்லத் தலை நிமிர்ந்தாள்.


இச்சமயத்தில், “வாங்க சித்தி! வா, மங்கையர்க்கரசி!” என்று வரவேற்புக் கூறிக் கொண்டே முப்பது வயதுக்கு மேற்பட்ட மங்கையொருத்தி அவர்களை எதிர் கொண்டு அழைக்க வந்தாள். “நீங்க வருவது பற்றி ஒரு கடுதாசி போடக் கூடாதா? ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பி இருப்போமே” என்று அவள் அங்கலாய்த்துக் கொண்டாள். சிவகாமியம்மாள் அவள் கைகளைப் பற்றியவாறே, “இல்லை, திலகம், பயணம் திடீரெனக் கூடிற்று. புறப்பட்டு விட்டோம். அதுக்கென்னஇப்போ?” என்று சமாதானஞ் சொல்லிவிட்டு, “குழந்தைகள் எல்லாம் செளங்கியந்தானே! உனக்கு இப்ப உடம்புக்கு ஒன்றுமில்லையே...?” என்று க்ஷேமம் விசாரிக்கலானாள்.


“எல்லாம் செளக்கியந்தான் சித்தி” என்று சுருக்கமாகப் பதிலளித்து விட்டு, மங்கையர்க்கரசியை ஒரு விதமாகப் பார்த்த வண்ணம், “என்ன, மங்கையர்க்கரசி வாய் திறக்காமலிருக்கிறாள்? பெரியவளாய் விட்டாளே! அதனாலா?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள்.

"முதன் முதலாக அத்தான் வீட்டுக்கு வருகிறாள் இல்லையா? அதனால் தான் வெட்கம்..." என்று மகளைப் பார்த்துக் கொண்டே திலகவதிக்குப் பதிலளித்தாள் சிவகாமியம்மாள்.

மங்கையர்க்கரசி தலையைக் குப்புறக் கவிழ்த்துக் கொண்டாள்.

"மங்கை முன்னைக்கு இப்போ இளைச்சுப்போயிருக்காளே?" என்று திலகவதி அவளை ஏற இறங்கப் பார்த்தவாறே கேட்டாள்.

"கொஞ்சம் இளைப்புத்தான்” என்று சிவகாமியம்மாள் இழுப்புடன் சொல்லி நிறுத்தினாள்.

திலகவதி, வந்திருப்பவர்களை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் சிறு பிள்ளைகளை நோக்கி, "என்ன, பார்க்கிறீர்கள்? உங்க பாட்டி, சின்னம்மா! ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள்" என்று கிரித்துக் கொண்டே அறிமுகப்படுத்தினாள்.

"கடைக்குட்டி, சிவகுமாரனை மீறி விட்டானே!" என்று வியப்புணர்ச்சியுடன் வேடிக்கையாகச் சொன்னாள் சிவகாமியம்மாள்.

மங்கையர்க்கரசி பிள்ளைகளை ஆசையோடு நோக்கினாள்.

"சரி, சரி, வாங்க முதலிலே குளித்து விட்டு சிற்றுண்டி சாப்பிட்ட அப்புறம் எல்லாம் பேசலாம்" என்று திலகவதி கூறி அவர்களைப் பின்கட்டுக்கு அழைத்துப் போனாள்.