தும்பைப்பூ-நாவல்/முதற் பதிப்பின் முன்னுரை
முதற் பதிப்பின் முன்னுரை
இச் சிந்தனையின் முதிர்ச்சி நாளாவட்டத்தில் என் உள்ளத்தில் ஒரு சிறந்த நாவலாக என்னை யறியாமலே உருவாகிக் கொண்டிருந்தது. என் மதிப்புக்குரிய விருதுநகர் நண்பர் உயர்திரு வி. வி. இராமசாமி அவர்கள் தாம் தொடங்கி நடத்திக் கொண்டிருந்த தமிழ்த் தென்றல் மாத இதழுக்குத் தொடர் கதையாக வெளியிட ஒரு நாவல் எழுதித் தர வேண்டுமென்று 1952-ஆம் ஆண்டில் கேட்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க நாவலொன்று எழுத முயற்சி எடுத்துக்கொண்ட போதுதான் இப்படி ஒரு கதை என் உள்ளத்தில் உருவாயிருப்பது தெரிந்தது. இந்நாவலுக்குச் சகோதர எழுத்தாளர்களிடையிலும் வாசகர்களிடையிலும் நல்ல வரவேற்பு இருந்தது. ஒரு பிரபல எழுத்தாளர். நான் இந்நாவலுக்குக் கொடுத்திருந்த பெயரையும், கதைப் போக்கிலுள்ள சில அம்சங்களையும் தமதாக்கிக் கொண்டதிலிருந்தே தொடர்ந்து படித்து வந்தவர்களின் உள்ளங்களை இது எவ்வளவு கவர்ந்திருக்கிறது என்று தெரிந்தது.
நம் தேசத்துக்கு ஆட்சி சுதந்திரங் கிடைத்த பின்னர் நிலவி வந்த அரசியல் நிலையையும் சமுதாய நிலையையும் அடிப்படையாக வைத்தே நான் இந்நாவலைப் புனைந்திருக்கிறேன். கதையின் கருப் பொருளும் அமைப்பும் அதில் நிலவும் சமுதாயச் சூழ்நிலையும், கதா பாத்திரங்கள் வெளியிடும் அபிப்பிராயங்களும் சுயராஜ்யங் கிடைத்த ஆண்டுக்கும், முதல் பொதுத் தேர்தல் நடந்து முடிந்த மூன்று நான்கு ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தின் பிரதிபலிப்பு என்று கொள்ள வேண்டும். ஆனால், இது சுயாட்சிக்குப் பின் ஆளுங்கட்சியில் இருந்தவர்களில் ஒரு சிலரிடம் காணப்பட்ட மாறுதலையும் அதன் எதிரொலியாக எழுந்த விளைவுகளையும் ஏகதேசமாகப் படம் பிடித்துக், கற்பனையில் காட்டுவதே தவிர, இதில் வரும் ஒரு சில சம்பவங்களையும் நபர்களையும் நிசமென்று அப்படியே யாரும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்நாவலில் வரும் சம்பவங்களும் பாத்திரங்களும் முழுக்க முழுக்க என் கற்பனையில் உதயமானவைகளே. கதையைச் சுவையாகக் கொண்டு செல்வதற்காக நாட்டு நடப்பையும் அரசியல் பிரதிபலிப்பையும் தொட்டுக் காட்டியிருந்தாலும், இதில் ஒரு நிகழ்ச்சிகூட உண்மையில் நடந்ததில்லை. இந்நாவலில் நடமாடும் கதாபாத்திரங்கள் உயிராக உள்ளவர்களையோ, காலஞ் சென்றவர்களையோ யாரையும் குறிப்பிடுவதில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்த அடிப்படை உண்மையை வைத்துக்கொண்டுதான் வாசக நேயர்களும் எழுத்தாளச் சகோதரர்களும் இந்நாவலைப் படித்துச் சுவைக்க வேண்டும். இலக்கிய விமர்சகர்களும் சீர்தூக்கிப் பார்த்துத் தங்கள் கருத்தை நடுநிலையாக வெளியிட வேண்டும். கதை நிகழுங் களம், காலம், சூழ்திலை ஆகியவைகளை அறிந்து கொள்ளாமல், கதாசிரியன் எந்தக் கருத்தில் அல்லது எந்தக் கண்ணோட்டத்தில் தன் படைப்பை உருவாக்கியிருக்கிறன் என்பதைப் புரிந்து கொள்ளாமல் அல்லது எண்ணிப் பார்க்காமலே விமர்சகர்கள் சிலர் கதையை மட்டும் மேலெழுந்த வாரியாகப் பார்த்து விட்டுத் தங்கள் கருத்தைத் தாறுமாறாக வெளியிட்டுத் தடுமாறுகின்றனர். கதையின் கருப்பொருளையும் கதாசிரியன் கதையை எழுதிய நிலையையும் நோக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமானால், நூலாசிரியன் எழுதியுள்ள முன்னுரையை முக்கியமாக வாசித்து அறியவேண்டும். அப்போதுதான் வாசகர்கள் கதையை நன்றாகச் சுவைக்க முடியும். விமர்சகர்கள் ஆசிரியனின் படைப்பைக் குறித்துச் சரியான மதிப்புரை கூறமுடியும். வாசகர்களும் எழுத்தாளர்களும் இலக்கிய விமர்சகர்களும் இந்நாவலைப் படிப்பதற்கு முன், நான் எழுதியுள்ள முன்னுரையைப் படிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்நாவலில் நடமாடும் கதாபாத்திரங்களைப் பற்றிச் சில வார்ததைகள் சொல்ல விரும்புகிறேன். இந்நாவலில் முக்கிய பாத்திரங்களாக மூவர் வருகின்றனர். அவர்கள் மங்கையர்க்கரசி, சதானந்தம் பிள்ளை, திலகவதி ஆகியோராவார். இவர்களில் கதைத் தலைவன் சதானந்தம் பிள்ளை என்பது யாருக்கும் ஐயமிருக்க முடியாது. ஆனால், கதைத் தலைவி மங்கையர்க்கரசியா? திலகவதியா? எனச் சிலர் உள்ளத்தில் வினா எழும்பும். இதுபற்றி ஒரு முடிவுக்கு வர இயலாமலும் போகலாம். ஏனெனில் இவ்விரு பெண்களுமே இந்நாவலில் முக்கியமான பாத்திரங்களாவர். ஆயினும் இக் கதையைப் படித்து, சிறிது ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு மங்கையர்க்கரசி தான் இந் நாவலுக்கே உயிராக இருப்பவள்; தொடக்சுத்திலிருந்து இறுதிவரை நடத்திச் செல்பவள் இவள் தான் என்பதை நன்கு அறிவர். நம் நினைவை விட்டு நீங்கமுடியாத ஜீவ சித்திரம் மங்கை ஒருத்திதான். இவள் போன்ற சிறந்த நற்குணவதியை நம் சமுதாயத்தில் அபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.
மங்கையர்க்கரசி இன்னமும் நம் கிராமப் புறங்களில் மத்தியதரக் குடும்பங்களில் பழைய காலப் போக்கில் வாழ்ந்து வரும் பெண்களின் பிரதிநிதியாக இருப்பவள். இவளைப் போன்ற இளம் மகளிரைத் தென் கோடிப் பகுதிக் கிராமங்களில் இப்போதுகூடப் பார்க்கலாம். தொடக்கத்தில் ஒரு சில நிமிடங்களில் வந்து மறைந்து போகும் அவள் அன்னையும் அப்படித்தான்.
சதானந்தம் பிள்ளை போன்ற கதாபாத்திரம் பார்க்கச் சாதாரணமாகத்தான் தோன்றும். ஆனால் சூழ்நிலைக்கும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கும் ஆளாகிவிடக் கூடிய சோதனை மிக்க நிலையிலும் தடுமாற்றத்துக்கு முழுதும் இரையாகாமல் சமாளித்து நின்று தன் தகுதியையும் ஒழுக்கத்தையும் தற்காத்துக் கொள்ளும் அவருடைய தனித் தன்மையை எல்லோரிடமும் காண முடியாது. லட்சோப லட்சம் மக்களில் ஒருவர் இருவர்பால் மட்டுமே காண முடியும்.
திலகவதி போன்ற மங்கையைப் பெரும்பாலும் எல்லா நல்ல குடும்பங்களிலுமே காண முடியும். நற்குடியில் பிறந்த இவ்வொரு பெண்ணும் திலகவதியைப் போல் கைப்பிடித்த கணவன்பால் மாறா அன்பும் நம்பிக்கையும்தான் கொண்டிருப்பாள். நோய்வாய்ப் பட்டு இறக்கும் நிலையிலும் அகமுடையானைப் பிரிந்துபோக, திலகவதியைப் போலவே வருந்துவாள்; ஆற்றாமை கொள்ளுவாள். நாம் இதைச் சகஜமாகப் பெரும்பாலான குடும்பங்களில் பார்க்கலாம்.
மாசிலாமணி முதலியார் ஒரு விசித்திரமான பாத்திரம். நடுநடுவே தோன்றிக் கதையைச் சுவாரஸ்யமாக நடத்திச் செல்லுபவரும் இவர் தான்; இதை முடித்து வைப்பவரும் இவரே.
இந்நாவலை விரிவாக்க வேண்டுமானால் சிவகுமாரன், விசுவநாதன், கோகிலா, கணேசன் ஆகிய பாத்திரங்கள் உதவுவார்கள். சந்தர்ப்பம் வந்தால் அவர்களைப் பயன்படுத்திக் கொள்வோம். வேலைக்காரி முத்தம்மா, வக்கீல் குமாஸ்தா இரண்டொரு கணங்களில் தோன்றி மறையும் மிகச் சிறிய பாத்திரங்கள். ஆதலால் இவர்களைப் பற்றி ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. பொதுவாகப் பாத்திரங்களின் குணப் பண்பும் செயல்களும் சரியாகத் தீட்டப்பட்டிருக்கின்றனவா என்று பார்த்தால் மட்டும் போதும்.
இதற்குமேல் இந்நாவலில் வரும் கதாபாத்திரங்களைப் பற்றி அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. இனி வாசகர்களே அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களோடு அளவளாவி மகிழும்படியாக விட்டு விடுகிறேன்.
“தமிழ்த் தென்ற”லில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்நாவல் எப்போதோ புத்தக உருவில் வந்திருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக என்னை அலைக்கழித்து வந்த வாழ்க்கைச் சோதனைகள் என் இந்த இலக்கியப் படைப்பையும் பற்றிக்கொண்டு மூலையில் கிடத்தி வைத்திருந்தது என்றால் மிகையாகாது.
சென்ற ஆண்டு வெளியிட்ட “தரங்கினி” நாவலின் முதற் பதிப்பு 15 மாதங்களுக்குள் விற்பனையாகிவிட உதவி புரிந்த வாசகர்கள், இந்தத் “தும்பைப் பூ” நாவலையும் வரவேற்றுத் தமிழகம் முழுவதும் உலவ விடுவார்கள் என்பது திண்ணம்.
என் இலக்கிய முயற்சிக்குப் பேராதரவு காட்டிவரும் அனைவருக்கும் என் பணிவார்ந்த நன்றி உரியதாக. கதிவோதயம்.
“ஜீவோதயம்”, சென்னை-24 |
நாரண-துரைக்கண்ணன் |