தெய்வ அரசு கண்ட இளவரசன்/இன்பநிலை கண்டறிந்த புத்தபிரான்

விக்கிமூலம் இலிருந்து
3. இன்பநிலை கண்டறிந்த புத்தபிரான்

மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன். அவன் ஒருநாள் தன் அரண்மனை உப்பரிகை மேலே நின்று கொண்டிருந்தான். அரண்மனை உப்பரிகைமேல் நின்று பார்த்தால் ராஜக்கிருக நகரின் பல பகுதிகளும் கண்ணுக்குத் தெரியும்.

ஒரு பிச்சைக்காரன் வீடு வீடாகச் சென்று யிச்சை யெடுத்துக் கொண்டிருக்கும் காட்சி மகத மன்னன் கண்களிலே தென்பட்டது.

சில வீதிகளிலே பிச்சை யெடுத்த பிறகு, அந்தப் பிச்சைக்காரன் மேற்கொண்டு பிச்சை யெடுக்காமல் நடந்து சென்றான்.

உப்பரிகை மேலிருந்து பார்க்கும்போதே அந்தப் பிச்சைக்காரனைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மன்னனுக்கு ஏற்பட்டது. அந்தப் பிச்சைக்காரனைப் பார்க்கும்போது பரம்பரைப் பிச்சைக்காரனைப் போல் தோன்றவில்லை. ஏதோ ஓர் இலட்சியத்திற்காகப் பிச்சை யெடுப்பவன் போலவே தோன்றினான்.

மன்னன் பிம்பிசாரன் தன் வேலையாட்களில் இருவரை அழைத்தான். பிச்சைக்காரனை சுட்டிக் காண்பித்தான். "அந்த ஆளை அவன் அறியாமல் பின்தொடர்ந்து செல்லுங்கள். அவன் எங்கு தங்குகிறான், என்ன செய்கிறான் என்று அறிந்து வாருங்கள்" என்று கட்டளையிட்டான்.

சில நாழிகைகளுக்குப் பிறகு அந்த வேலைக்காரர்கள் திரும்பி வந்தார்கள். அவர்கள் கூறிய செய்தி பிம்பிசாரன் எதிர்பார்த்தது போலவே யிருந்தது.

“அரசே, அந்தப் பிச்சைக்காரன் நகருக்கு வெளியே உள்ள கல் மலையடிவாரத்திலே நிழல் படர்ந்த ஓர் இடத்திலே உட்கார்ந்தான். தான் பிச்சை எடுத்துவந்த சோற்றைத் தன் எதிரிலே வைத்தான். அதை எடுத்துண்ணப்போகும் போது அவன் பார்வை அந்தச் சோற்றுக் குவியலிலே பதிந்தது. அந்தப் பிச்சைச் சோற்றைக் கண்டதும் ஏற்பட்ட அருவருப்பால் அவன் முகம் சுளித்ததை நாங்கள் மிக அருகில் நின்றே கண்டோம். சாப்பிடாமல் அதைத் தூக்கி எறிந்து விடுவான் என்றே எண்ணினோம். ஆனால், பாவம் ! பசி அதிகம் போலிருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு கவளம் கவளமாக அள்ளிப் போட்டு அவ்வளவு சோற்றையும் விழுங்கிவிட்டான். உண்டு முடிந்தபின் நிழலிலே சாய்ந்து படுத்து உறங்கத் தொடங்கினான். நாங்கள் திரும்பி வந்தோம்” என்றார்கள்.

“பாவம்! அவன் ஓர் அரசனாக இருக்க வேண்டும் அல்லது செல்வச் சீமானாக இருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். நாளை நானே அவனைப் போய்ப் பார்க்கிறேன்" என்று சொன்னான் அவன்.

சொன்னபடி அவன் மறுநாள் சித்தார்த்தன் தங்கியிருந்த மலையடிவாரத்திற்குச் சென்றான். சித்தார்த்தனைக் கண்டவுடனே. அந்த மகத மன்னனுக்கு அவன்மேல் ஒரு மதிப்பு ஏற்பட்டது. தொலைவிலிருந்து அவன் செயல் நடை முறைகளைக் கவனித்தபோதே அவனுடைய உயர்குடிப் பிறப்பின் தன்மை புலப்பட்டது.

சித்தார்த்தனை யார் என்று கேட்டுக் கொள்ளாமலே பிம்பிசாரன் அவனுக்கு செல்வமும் நிலமும் தருவதாகக் கூறினான். பிச்சையெடுப்பதை விட்டுவிட்டு நல்வாழ்வு நடத்துமாறு கேட்டுக் கொண்டான்.

பிம்பிசாரன் வேண்டுகோளைக் கேட்ட சித்தார்த்தன், தன்னைப் பற்றிய உண்மைகளைக் கூறினான். கபிலவாஸ்து அரசுரிமையைத் துறந்து, உலகுய்யத் தான் உண்மை தேடிப் புறப்பட்ட வரலாற்றைக் கூறினான். உண்மையை யறியாமல், மாளிகை வாழ்வை நாடப் போவதில்லை என்ற தன் நெஞ்சுறுதியைப் புலப்படுத்தினான். அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த மகத மன்னனுக்கு சித்தார்த்தன் மேலிருந்த மதிப்புக் கூடியதே தவிரக் குறையவில்லை. சித்தார்த்தனின் இலட்சிய வேட்கையையும், அந்த இலட்சியத்தில் அவன் கொண்டிருந்த பிடிப்பையும் பிம்பிசாரன் நன்றாகக் கண்டு கொண்டான்.

"ஐயா, தாங்கள் தேடிச்செல்லும் உண்மையைக் கண்டுபிடித்தபின் மீண்டும் தாங்கள் இங்கு வரவேண்டும். அந்த உண்மைவழியில் நானும் தங்களைப் பின்பற்றி நடப்பேன்!” என்று உண்மையான விருப்பத்தோடு பிம்பிசாரன் கூறினான். பிறகு சித்தார்த்தனுக்கு மேலும் தொல்லை கொடுக்கக் கூடாதென்று அவனைத் தனியே விட்டுவிட்டுத் தன் அரண்மனைக்குத் திரும்பினான்.

சித்தார்த்தன் தங்கியிருந்த இடத்தைச் சிறு கல்மலைகள் சூழ்ந்திருந்தன. அந்தக் கல் மலைகளிலே ஆங்காங்கே குகைகள் இருந்தன. அந்தக் குகைகளிலே சிங்கம் புலிகள் தங்கவில்லை. ஒளி தேடித் தவமியற்றும் முனிபுங்கவர்கள் தங்கியிருந்தார்கள். அவர்கள் அந்த மலைக்காட்டின் இடையிலே அவ்வப்போது நடமாடவும் செய்தார்கள். அவர்களைக் கண்ட சித்தார்த்தனின் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. அவர்களின் மூலமாகத் தான் தேடும் உண்மையை அறியலாமென்று எண்ணினான்.

இவர்களிலே அலார முனிவர் என ஒருவர் இருந்தார். அவருடைய ஞானச் சிறப்பின் புகழ் தவசிகளிடையே அதிகமாகப் பரவியிருந்தது. இந்த அலார முனிவரைத் தொடர்ந்து சென்று பணிவிடைகள் புரிந்து அவருடைய சீடனானான் சித்தார்த்தன். விரைவில் அவன், தனக்கு ஞான ஒளி தரக்கூடிய தீபம், அலார முனிவரிடம் இல்லை என்பதைக் கண்டு கொண்டான். அவர் காட்டும் பாதையிலே தான் தேடும் உண்மையைக் காண முடியாது என்பதை உணர்ந்து கொண்டான்.

அலார முனிவரை விட்டுப் பிரிந்து உதக முனிவரைத் தொடர்ந்து சென்றான் சித்தார்த்தன். அங்கும் அவனுக்கு ஏமாற்றமே பரிசாகக் கிடைத்தது.

வேறு சில தவசிகள், பட்டினி கிடப்பதாலும் நோன்பியற்றுவதாலும் மன அமைதியைக் காணலாம் என்று கூறினார்கள். எப்படியேனும் உண்மையைக் காண வேண்டும் என்று விரும்பிய சித்தார்த்தன் அந்த முறைகளையும் செய்து பார்க்க முடிவு செய்தான்.

நோன்பியற்றும் முறைகளையும், பட்டினி கிடந்து தவமிருந்து செய்ய வேண்டிய கிரியைகளையும் கேட்டறிந்துகொண்டு ராஜகிருகத்தை விட்டுப் புறப்பட்டான். பழைய முனிவர்களையெல்லாம் விட்டுப் பிரிந்து அவன் மிகத் தொலைவு சென்றான்.

கடைசியில் உருவேலங்காடு என்னும் பெரிய வனத்திற்கு வந்து சேர்ந்தான். இருள் படர்ந்து வளர்ந்த அந்தப் பெருங் காட்டிலே அவன் தன்னந்தனியாக இருந்தான். பயங்கரமான காட்டு மிருகங்கள் இரை தேடித் திரியும் பெருங்காடு அது என்பதைச் சிறிது கூட நினைத்துப் பாராமல் அந்தக் காட்டின் மத்தியிலே பட்டினி கிடந்து தவம்புரியத் தொடங்கினான்.

இறைவனைத் தொழுவதும், சமாதியிலிருப்பதுமாக சித்தார்த்தன் அந்தக் காட்டிலே தன் வாழ் நாட்களைக் கழித்தான்.

தான் தேடும் உண்மையைக் காண வேண்டும் என்ற வேட்கையோடு அவன் பல நாட்கள் தொடர்ந்து பட்டினி கிடந்தான். ஒரு மண்டலம் இரு மண்டலம் என்று அன்னந்தண்ணீர் எதுவுமின்றிச் சமாதியில் இருப்பான். பிறகு குறிப்பிட்ட நாளெல்லை வந்ததும் சிறிது பசியாறுவான். சில நாட்கள் சென்ற பின் மீண்டும் சமாதி நிலையில் இருப்பான். இவ்வாறு அரைப் பட்டினியும் முழுப் பட்டினியுமாக ஆறு ஆண்டுகள் கழிந்தன. கூனிக் குறுகி மெலிந்து போனான் சித்தார்த்தன். அவன் உடலில் இருந்த வலுவெல்லாம் தொலைந்தது.

ஆறு ஆண்டுகள் பட்டினி கிடந்தும் தவம் புரிந்தும் அவன் எதிர்பார்த்த உண்மை புலப்படவில்லை. பட்டினி கிடப்பது சரியான வழியல்ல என்ற எண்ணம் தலை தூக்கியது. எனவே அவன் பட்டினி கிடப்பதை நிறுத்தி மீண்டும் வழக்கம் போல் உணவுண்ணத் தொடங்கினான்.

அந்த ஆறு ஆண்டுகளும் சித்தார்த்தனுடன் நான்கு சாதுக்கள் சேர்ந்து திரிந்தார்கள். அவனுடைய மன உறுதியைக் கண்டு அவர்கள் அவனைத் தங்கள் குருவாக எண்ணிக் கொண்டார்கள். தவமியற்றி முடிவில் அவன் பெரு ஞானியாகி விடுவான் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் ஆறே ஆண்டுகளில் அவன் பட்டினியிருப்பதைக் கை விட்டவுடன், உறுதியில்லாத கோழை என்று அவர்கள் எண்ணலானார்கள். எனவே அச் சாதுக்கள் சித்தார்த்தனைப் பிரிந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்றது பற்றி சித்தார்த்தன் கவலைப் படவில்லை. எப்படியேனும் தான் தேடும் உண்மையை அறிய வேண்டும் என்று அவன் தன் முயற்சியில் ஈடுபட்டிருந்தான். உண்மையை அறிவதற்காக அவன் எவ்வளவு கடுமையான பயிற்சியையும் மேற்கொள்ளத் தயங்கவில்லை.

ஒரு நாள் சித்தார்த்தன் ஆற்றங்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்குத் தன் குடும்பத்தைப் பற்றிய நினைவு வந்தது. சுத்தோதனரின் அன்பு மிகுந்த முகமும், யசோதரையின் அழகுத் தோற்றமும், ராகுலனுடைய பிஞ்சு உடலும் அவன் கண் முன் தோன்றின. ஆனால், இத் தோற்றங்களெல்லாம், தன் இலட்சியத்தைச் சிதைக்கத் தோன்றிய மாயை உருவங்கள் என்று தனக்குத் தானே கூறி நெஞ்சை வலுப்படுத்திக் கொண்டான். அலைந்து அலைந்து அவன் கால்கள் அலுத்து விட்டன. களைப்பாறுவதற்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான்.

அது ஓர் அத்தி மரம்.

அத்தி மரத்தின் அடியில் உட்கார்ந்த சித்தார்த்தன் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டான். "என் உடலுக்கு என்ன நேர்ந்தாலும் சரி. இந்த இடத்தை விட்டு எழுந்திருக்க மாட்டேன். என் மனத்திற்கு என்று உண்மை புலப்படுகிறதோ அன்று தான் இதை விட்டு நகர்வேன்" என்று சித்தார்த்தன் தன் மனத்திற்குள் உறுதி செய்து கொண்டான்.

ஆடாமல் அசையாமல் அந்த மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்திருந்தான். இடையிடையே மனம் என்னும் குரங்கு பல இடையூறுகளைச் செய்தது. என்னென்னவோ எண்ணங்களையெல்லாம் அந்த மனக் குரங்கு பற்றித் தாவியது. ஆனால் சித்தார்த்தன் அதை அடக்கி ஆண்டான். உண்மையை அறியும் வரை வேறு எந்த நினைப்பு வந்தாலும் அதை அடக்கி நிற்பதென்ற உறுதியோடு அத்தி மரத்தடியில் அமர்ந்திருந்தான். அவனுடைய உறுதி மனக்குரங்கைக் கட்டிப் போட்டது. எப்படி அவனுடைய உடல் அசையாமல் உட்கார்ந்திருந்ததோ அப்படியே அவனுடைய உள்ளமும் அசையாத நிலையையடைந்தது. அவன் நெஞ்சில் அப்போது நிலைத்திருந்தது ஒரே நினைப்புத்தான். உலகம் துன்பங்களிலிருந்து விடுதலை யாவது எப்படி? என்று அறியும் ஆசை ஒன்றைத் தவிர வேறு விருப்பம் அவனுக்குக் கிடையாது.

இரவு நேரத்திலே திடீரென்று அவன் உள்ளத்திலே ஓர் ஒளி பிறந்தது. ஆண்டுக் கணக்காக அவன் கேட்டுக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ஆம்! அவன் தேடிய உண்மை புலப்படவும் அவன் முகம் ஒளிபெற்றுத் திகழ்ந்தது. அந்த ஒளிக்கு ஈடான ஒளியைப் பகலவனிடத்திலும் பார்க்க முடியாது. உண்மை அறிவினால் பிறந்த அந்த இன்ப ஒளிக்கு ஈடேது? இணையேது?

அமைதியாகிய விடுதலையின்பத்தின் திரு ஒளிதான் அந்தப் பேரொளி. வாழ்வுக்கும் சாவுக்கும் காரணமான அந்தரங்கங்களின் உண்மையை அவன் அறிந்து கொண்டான். உலகை இயக்கி நடத்தும் உண்மையும் ஒழுங்கும் மாறாத நெறிமுறையின் மருமத்தை அவன் உணர்ந்து கொண்டான்.

ஒவ்வொரு பொருளையும் அதன தன் ஒழுங்குமுறை மாறாமல் நடத்தி வருகின்ற ஒரு மாபெரும் சக்தி உலகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு காரணமுண்டு. தற்செயலாக எதுவும் நடந்துவிடுவதில்லை. ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு விளைவு உண்டு. இந்தப் பிறப்பில் நாம் நடத்தும் வாழ்க்கை. நம் முற்பிறப்பின் நேர் பயனே யாகும். இப்பிறப்பில் நாம் பாவம் புரிந்தால் அதன் பலனை அடுத்த பிறப்பில் அடைந்து துயரடைவோம். உலக வாழ்வில் முழு இன்பம் அடைய முடியாது. உள்ளம் முழுவதும் அமைதியடைந்து, உலக வாழ்வைத் துறந்து அடையும் இன்பமே முழு இன்பம். அந்த இன்பமே விடுதலை இன்பம். அந்த விடுதலை இன்பத்தின் பெயரே நிர்வாணம். அமைதி நிறைந்த அந்த முழு இன்பத்தை அடைய நாம் முயற்சி செய்துகொண்டே யிருக்க வேண்டும்.

உண்மை விளக்கம் பெற்ற அறிஞர்களை அக்காலத்தில் மக்கள் புத்தர் என்று அழைத்தார்கள். சித்தார்த்தர் வாழ்வின் உண்மையை அறிந்த காரணத்தினால் புத்தர் ஆனார். அவர் அறிவொளி பெற்ற இடத்திலிருந்த மரம் போதி மரம் என்று அழைக்கப் பெற்றது.

அறிவு விளக்கம் பெற்ற அந்த மரத்தடியைவிட்டுச் செல்ல விருப்பமின்றி அதனடியிலே புத்தர் அமர்ந்திருந்தார். ஏழு நாட்கள் தொடர்ந்து மனத்தை ஒருநிலைப்படுத்தி உட்கார்ந்து முழுமை இன்பத்தை அடைதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்தார். கடைசியில் முழு இன்பம் பெறும் வழிகள் மூன்று என்ற அவர் கண்டார்.

முதலாவதாக மனிதன் தன் தீய ஆசைகளை அடக்க வேண்டும். எண்ணம், பேச்சு, செயல் ஆகிய எதனாலும் அவன் தீய ஆசைகளை வளர்க்கக் கூடாது. ஆசையை அறுத்தாலன்றி விடுதலை கிடையாது.

இரண்டாவதாக மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் பிறருக்கு நன்மையே செய்ய வேண்டும். தீயன புரிந்தவர்க்கும் நன்மையே திருப்பிச் செய்ய வேண்டும். நன்மையின் காரணமாகவே நன்மை உண்டாகும்.

மூன்றாவதாக மனிதன் எப்போதும் உண்மையே பேசவேண்டும். உண்மைக்கு அழிவே இல்லை.

மக்கள் எல்லோரும் இந்த நெறிமுறைகளை வாழ்வில் மேற்கொண்டால், துன்பங்களிலிருந்து விடுதலையாகி அமைதி நிறைந்த முழு இன்ப நிலையை அடையலாம். எனவே மக்களுக்குத் தான் கண்ட உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்ற எண்ணம் புத்தருக்கு ஏற்பட்டது.

முன் தன் குருநாதர்களாயிருந்த அலார முனிவருக்கும் உதக முனிவருக்கும் முதலில் இந்த உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் என்று புத்தர் எண்ணினார். ஆனால் அவர்கள் அப்போது இறந்துபோய்விட்டனர். பின்னர் உருவேலங்காட்டில் தன் சீடர்களாகத் திரிந்த ஐந்து தவசிகளைத் தேடிச் சென்றா. அவர்களைக் காசித் தலத்தின் அருகிலே கண்டார். அவர்கள் மீண்டும் புத்த பெருமானைத் தங்கள் குருநாதராக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. பட்டினி கிடக்க முடியாமல் தவத்தைக் கைவிட்டவர் ஞானியாக முடியாது என்பது அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது. எடுத்த எடுப்பில் அவர்களுடைய மூடநம்பிக் கையை புத்தரால் அகற்ற முடியவில்லை. ஆனால், வேறு சிலருக்குத் தான் கண்ட புது உண்மைகளை அவர் விளக்கிக் கூறியபோது, அவர்களும் அறிவு விளக்கம் பெற்றனர்.

புத்தரின் முதல் சீடனாக இருக்கும் பெருமை பெற்றவன் யாசன் என்பவன். அவன் உண்மை விளக்கம் பெற்றவுடன் தன் செல்வங்களையெல்லாம் துறந்து புத்தர் பொன்னடிகளையே போற்றி அவரைப்பின்தொடர்ந்து திரிந்தான். புத்த சங்கத்தில் சேருபவர்கள் உலக இன்பங்களில் நாட்டம் செலுத்தக் கூடாது என்று புத்தர் கூறியிருந்தாலும், செல்வங்களைத் துறக்க வேண்டும் என்று கூறியதில்லை. இருந்தாலும், அவர் வழியைப் பின்பற்றிய பலரும் தங்கள் செல்வங்களைத் துறந்துவிட்டே வந்து சேர்ந்தார்கள்.

நாள்தோறும் புத்தபிரானின் அருள் உரைகளைக் கேட்டு அவர் வழியைப் பின்பற்ற முன்வந்தவர்களின் தொகை பெருகிற்று. ஒரு நாள், புத்தருக்கு பிம்பிசார மன்னனின் வேண்டுகோள் நினைவு வந்தது. உடனே ராஜகிருக நகரத்துக்குச் சென்றார். புத்தர் அறிவொளி பெற்றுத் திரும்பி வந்ததையறிந்த மன்னன் அவருடைய காலடியில் வீழ்ந்து வணங்கினான். தனக்குச் சொந்தமான ஒரு சிறு தோப்பைக் கொடுத்து அதில் புத்த பெருமான் தங்கியிருக்க வேண்டும் என்று அவன் கேட்டுக் கொண்டான். அவன் அன்பு வேண்டுகோளை ஏற்று இரண்டு மாதங்கள் புத்தர் அந்தத் தோப்பில் தங்கினார்.

புத்தர் அங்கு தங்கியது வீண் போகவில்லை. அரச குலத்திற் பிறந்த இரண்டு இளைஞர்கள் புத்தர் சங்கத்தில் சேர்ந்தார்கள். பின் நாளில் அவர்களே புத்த பிரானின் வலது கையாகவும் இடது கையாகவும் விளங்கினார்கள்.

புத்தர் அரண்மனையை விட்டுப் போன நாள் முதலாய் சுத்தோதனர் அடைந்த துயரமும் மனக் கவலையும் சொல்லும் அளவினதன்று. எத்தனையோ முறைகள் தம் ஆட்களை அனுப்பி மகனைத் திருப்பி அழைத்துக் கொள்ள முயன்றார். முடியவில்லை. தன் மகன் பட்டினி கிடந்து வாடி மெலிந்து போன செய்தி கேட்டு அவர் உள்ளம் உருகித் தவித்தார்.

கடைசியில், புத்தர் வெளியேறிய ஏழாவது ஆண்டில் ராஜகிருகத்தில் அவர் இருக்கும் செய்தி யறிந்தார். தன் மகனை அழைத்து வரும்படி ஆயிரம் ஆட்களுடன் ஒரு செல்வரை அனுப்பினார். சென்றவர்கள் திரும்பி வரவில்லை. இரண்டாம் முறையாக மற்றொரு செல்வரை மேலும் ஆயிரம் ஆட்களுடன் அனுப்பினார். அப்போதும் ஏமாற்றமே. இப்படி ஒன்பது முறை ஆளனுப்பியும் ஒரு பதிலும் கிடைக்கவில்லை. பத்தாவது முறையாக கலா உதயன் என்பவனை அனுப்பினார். கலா உதயன் மிகவும் நம்பிக்கைக்குரியவன்; புத்தரின் விளையாட்டுத் தோழனாக இருந்தான்.

கலா உதயன் ராஜகிருகத்தை யடைந்த போது, முன் ஒன்பது முறை அனுப்பப் பெற்றவர்கள் அனைவரும் புத்த சங்கத்தில் சேர்ந்து விட்டதை அறிந்தான். புத்த பெருமானைக் கண்ட பிறகு அவனும் தன் ஆட்களுடன் புத்த சங்கத்தில் சேர்ந்து விட்டான். இருந்தாலும் சுத்தோதனரின் பணியையும் அவன் மறந்து விட வில்லை.

புத்த பிரானிடம் பல முறை பேசி அவரை கபில வாஸ்துவுக்கு அழைத்து வந்து விட்டான் இரண்டு மாதம் நடந்து புத்த சங்கத்தினர் கபில வாஸ்து நகரை யடைந்தனர். கோட்டைக்கு வெளியே மரத்தடியில் அமைக்கப்பட்ட குடிசைகளில் தங்கினர்.

சுத்தோதன மாமன்னர் புத்த பிரானைச் சந்திக்க வந்தார். மழுங்க வழித்த தலையும் காவி உடையும், கையில் திருவோடுமாகக் காட்சியளித்த அவரைக் கண்டு கண் கலங்கினார். கண்ட மாத்திரத்தில் சுத்தோதனர் தம்மையறி யாமலேயே கை கூப்பி புத்தபிரானை வணங்கினார்.

ஆயிரக் கணக்கான சீடர்கள் பின் தொடர அருள் ஒளி நிரம்பிய திரு முகத்துடன் தன் மகன் ஒரு பெரும் தெய்வம் போலக் காட்சி யளித்தது சுத்தோதனருக்குப் பெருமையாகத்தான் இருந்தது. ஆனால், அந்தக் காவியுடையும் கைத் திருவோடும் முடியற்ற தலையும் காணப் பொறுக்க வில்லை.

“மகனே அரண்மனைக்கு வந்து விடு" என்று திரும்பத் திரும்ப அழைத்தார். பயன் கிட்டவில்லை.

பின் ஒரு நாள் தன் மகன் தெருத் தெருவாக பிச்சை எடுக்கின்றான் என்று கேள்விப்பட்டு ஓடோடிச் சென்றார். "வேண்டாமடா மகனே, வேண்டாம்! ஆளப்பிறந்த நீயா பிச்சை ஏற்பது?” என்று கேட்டுத் தடுத்து நின்றார். ஆனால், புத்த பிரான் அவர் அன்பழைப்பைப் பொருட்படுத்த வில்லை.

ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று யசோதரையைக் கண்டு புத்த பெருமான் ஆறுதல் கூறினார். பிறகு தன் குடிசைக்குத் திரும்பி விட்டார். அவர் துறவுக் கோலத்தை அகற்ற யசோதரை செய்த முயற்சிகளும் பயனற்றுப் போயின.

தன் மகன் ராகுலனை யசோதரை புத்த பெருமானிடம் அனுப்பினாள். “உன் அப்பாவைப் பார்த்து, 'அப்பா எனக்குப் பட்டம் சூட்டுங்கள்' என்று கேள்" என்று கூறியனுப்பினாள். புத்த பிரானோ, “நான் கண்ட இந்தத் தெய்வ அரசுக்கு உன்னை இளவரசனாகப் பட்டஞ் சூட்டுகிறேன்' என்று மனத்திற்குள் தீர்மானித்துக் கொண்டு அவனுக்கு உண்மை விளக்கம் செய்தார். ராகுலன் அன்று முதல் அவரின் சீடனானான்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு சுத்தோதனர் நோய்வாய்ப்பட்டிருப்பதை அறிந்து புத்தர் அவரைக் காணச் சென்றார். புத்தரைக் கண்டதும் சுத்தோதனர் மகிழ்ச்சி யடைந்தார். முன்பெல்லாம் தனக்குப் பின் தன் அரசை ஏற்றுக் கொள்ளாமல் மகன் துறவியாகி விட்டானே என்று அவர் வருந்தினார். அப்போதோ, புத்த சங்கத்தில் தம்மையும் சேர்த்துக் கொள்ளும்படி அவர் புத்தபிரானை வேண்டினார். அவ்வாறே புத்த பிரான் சுத்தோதனரைத் தம் சீடராக்கிக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அமைதியுடன் சுத்தோதனர் உலக வாழ்வை நீத்தார்.

பிறகு பிரஜாபதியும், யசோதரையும் வேறு பல சாக்கிய குலத்துப் பெண்மணிகளும் உலக வாழ்வைத் துறந்து புத்த சங்கத்தில் சேர்ந்தார்கள். அதன் பிறகு புத்த சங்கத்தில் பெண்களுக்கும் இடம் ஏற்பட்டது.

புத்தர் ஊரூராகச் சென்று தாம் கண்ட புதிய உண்மைகளை மக்களுக்கு விளக்கிக் கூறினார். நாள் தோறும் புத்த சங்கம் தழைத்து வளர்ந்தது.

உலகுக்கு ஒரு புதிய ஒளியைக் காட்டிய அந்தத் திருமகன் குசிநாகரம் என்ற ஊரில் நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். அவர் இறந்த போது அவருக்கு வயது எண்பது.

புத்தபிரான் காட்டிய ஒளி இன்றும் இருக்கிறது; உலகமெங்கும் பரவியிருக்கிறது. அந்த உண்மை ஒளியை நாமும் வழிபடுவோம்.