தெய்வ அரசு கண்ட இளவரசன்/உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

விக்கிமூலம் இலிருந்து
2. உண்மை தேடிப் புறப்பட்ட ஒளிமாணிக்கம்

அப்பொழுது கோடைகாலம். தனக்காகக் கட்டப்பட்ட மூன்று அரண்மனைகளில் ஒன்றான வசந்த மாளிகையில் சித்தார்த்தன் இருந்தான். மூன்று மாளிகைகளிலும் மிக அழகானது வசந்த மாளிகைதான். வசந்த மாளிகையின் ஒரு மண்டபத்திலே சித்தார்த்தன் தனியாக உட்கார்ந்து கொண்டிருந்தான். யசோதரை பின்கட்டு ஒன்றிலே தன் தோழிமார்களோடு பேசிக் கொண்டிருந்தாள். ஆகையால் சித்தார்த்தன் தன்னந்தனியே பித்துப் பிடித்தவன் போல் இருக்கவேண்டி நேர்ந்தது.

அப்போது சித்தார்த்தனின் நண்பன் நந்தன் அங்கே வந்து சேர்ந்தான்.

“நந்தா, வா வா. நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய்!" என்று கூறி அவனை வரவேற்றான் சித்தார்த்தன்.

“சித்தார்த்தா, ஏன் என்னை நீ எதிர்பார்த்துக் கொண்டிருந்தாய்?" என்று ஆவலோடு கேட்டான் நந்தன்.

“இல்லை. எனக்குப் பொழுது போகவில்லை. என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தேன். இந்தச் சமயம் நீ வந்துவிட்டாய்" என்றான் சித்தார்த்தன்.

"நல்லது, இப்போது என்ன செய்யவேண்டும்?”

“பொழுது போவதற்கு ஏதாவது ஒரு வழி சொல்.”

“பூஞ்சோலைக்குப் போவோமா?" என்று கேட்டான் நண்பன் நந்தன்.

“போய்ப்போய் அலுத்துவிட்டது. வேறு ஏதாவது சொல்"

நந்தன் சிந்தனை செய்தான்.

திடீரென்று அவன் முகம் பளிச்சிட்டது.

“சித்தார்த்தா, நீ இதுவரை வேட்டைக்குப் போனதே யில்லையே! இன்று வேட்டைக் காட்டுக்குப் போகலாம். பொழுது மிக எளிதாகப் போய்விடும்!" என்றான் நந்தன்.

“உண்மையா? அப்படியானால் புறப்பட ஏற்பாடு செய்" என்றான் சித்தார்த்தன்.

நந்தன் வேட்டைக்குப் போக வேண்டிய ஏற்பாடுகளை யெல்லாம் செய்து முடித்துவிட்டுத் திரும்பி வந்தான்.

சிறிது நேரத்தில் கபிலவாஸ்து நகரையடுத்திருந்த காட்டை நோக்கி குதிரை வீரர் கூட்டம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. சித்தார்த்தனும் நந்தனும் சில வீரர்களும் தாம் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.

வேட்டைக் காட்டை அடைந்தவுடன் குதிரைகளை ஓரிடத்தில் கட்டிவிட்டு வீரர்கள் காட்டிற்குள் நுழைந்தனர்.

நெடுநேரம் அவர்கள் காடு முழுவதும் சுற்றியலைந்தும் ஒரு விலங்குகூடக் கண்ணில் படவில்லை. கதிரவன் உச்சியை அடைந்த பொழுது அவர்களுக்கு களைப்பும் பசியும் மேலிட்டது. ஒரு மரத்தடியில் உட்கார்ந்து கட்டுச் சோற்று மூட்டையை அவிழ்த்து உண்டனர். தண்ணீர் அருந்தினர். நிழலில் படுத்து அரைத் தூக்கமாக உறங்கினர்.

வலது புறத்திலே சிறிது தொலைவில் ஒரு புதர்ச் செடிக்குப் பின்னாலே சிறு சலசலப்பு ஏற்பட்டது. நந்தன் எழுந்து நின்று செவிசாய்த்துக் கேட்டான்.

அவன் முகம் மலர்ந்தது.

“சித்தார்த்தா, எழுந்திரு. அதோ அந்தப் புதர்க் கூட்டங்களின் பின்னாலே மான் கூட்டம் இருக்கிறது. நான் போய் அதைக் கலைத்து விடுகிறேன். நீ அந்த மான்களைத் தொடர்ந்து சென்று வேட்டையாடு" என்று கூறிவிட்டு அவன் புதர் நிறைந்த பகுதியை நோக்கி வலப் புறமாக ஓடினான். சித்தார்த்தன் வில்லும் அம்புமாக வேட்டையாட ஆயத்தமாக நின்றான்.

நந்தன் கலைத்துவிட்ட மான்களில் ஒன்று சித்தார்த்தன் எதிரில் மிக அருகாகத் துள்ளிப் பாய்ந்து ஓடியது.

அதைக் கண்டவுடன் சித்தார்த்தன் வில்லைத் தோளுக்கு உயர்த்தினான். குறிபார்த்தான். நாணை இழுத்தான்.

அவ்வளவுதான், குறி தவறாது பாயும் அவனுடைய அம்பு ஒரு கணத்தில் அந்த மானின் குடலைக் கிழித்திருக்கும். ஆனால், இழுத்த நாணை அவன் விடுவிக்காது இழுத்தது இழுத்தபடியே அந்த மானையே பார்த்துக் கொண்டு நின்றான். காட்டுவழியே அது துள்ளித் துள்ளிப் பாய்ந்து ஓடிக் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிட்டது.

பின்னும் பின்னும் பல மான்கள் அவன் எதிரே அருகிலும் தூரத்திலுமாகத் தோன்றித் துள்ளிப் பாய்ந்து ஓடிச்சென்று மறைந்தன. சித்தார்த்தன் வில்லையும் அம்பையும் கீழே போட்டுவிட்டு அவை ஓடி மறைவதைப் பார்த்துக்கொண்டு அசைவற்று நின்றான்.

மான் கூட்டத்தைக் கலைத்து விட்டுத் திரும்பி வந்த நந்தன், சித்தார்த்தன் ஐந்தாறு மான்களையாவது வீழ்த்தியிருப்பான் என்று எதிா பார்த்தான். ஆனால், வீழ்ந்து கிடந்த வில்லையும் அம்பையும் தான் அவன் பார்த்தானே தவிர ஒரு மானைக் கூடக் காணவில்லை.

"சித்தார்த்தா, நீ வேட்டையாடவில்லையா?” என்று கேட்டான் நந்தன்.

"நந்தா, அந்த மான்களைக்கொல்ல எனக்கு மனம் வரவில்லை. அவை நமக்கு என்ன தீங்கு செய்தன? அவற்றை நாம் ஏன் கொல்ல வேண்டும்? ஆனந்தமாகக் காட்டிலே துள்ளி விளையாட வேண்டிய மான்கள் நம்மைக் கண்டு அஞ்சி அரண்டு ஓடுவதைப் பார்த்தாயா? அவற்றின் அச்சத்தைக் கண்ட பின்னும் அவற்றைக் கொல்ல மனம் வருமா?” என்றான் சித்தார்த்தன்.

“சித்தார்த்தா, நாம் இங்கே வேட்டையாடத் தானே வந்தோம்?” என்று கேட்டான் நந்தன்.

“நமக்கு வேட்டை ; ஆனால் ஒரு பாவமும் அறியாத அந்தச் சிறு விலங்குகளுக்குச் சாக்காடு! நந்தா, இது நெறியில்லை. வா திரும்பிப் போகலாம்” என்று புறப்பட்டான் சித்தார்த்தன்.

வேட்டைக் காட்டு நிகழ்ச்சியைப் பற்றி சுத்தோதனர் கேள்விப்பட்ட போது, சில நாட்களாக அவர் மறந்திருந்த கவலை மீண்டும் தலையெடுத்தது. சித்தார்த்தனின் அருள் நெஞ்சம் அரசைத் துறந்து ஞானியாகச் செய்து விடுமே என்று அவர் திரும்பவும் கவலைப்பட்டார்.

ஒரு நாள் நாட்டு வளம் காணப் புறப்பட்ட சுத்தோதனர் சித்தார்த்தனையும் தன் தேரில் அழைத்துக்கொண்டு சென்றார். வழியெங்கும் அழகிய பூஞ்சோலைகளும் நீர்நிறைந்து ஓடும் ஆறுகளும் காணுதற்கினிய காட்சிகளாக இருந்தன. பொன்னிறமான முதிர்ந்த நெல் வயல்களும் இன்னிசை பாடிப் பறந்து திரியும் சிறு பறவைகளும் கண்டு மகிழ்ச்சியடைந்தான் சித்தார்த்தன். ஓரிடத்திலே தேர் போகும் வழியிலே, ஓர் உழவன் வற்றி மெலிந்த எருது ஒன்றை ஓட்டிக் கொண்டு சென்றான். தார்க்குச்சியினால் அடித்தும் கீறியும் அதன் முதுகில் வரி வரியாகப் புண்கள் நிறைந்திருந்தன. அந்தப் புண்ணின் மேலேயே சற்றும் ஈவிரக்கமின்றி அந்த உழவன் மேலும் மேலும் அடித்து அதை ஓட்டிச் செலுத்திக் கொண்டிருந்தான்.

இந்தத் துன்பக் காட்சியைக் கண்ட சித்தார்த்தனின் உள்ளம் உருகியது. இந்தக் காட்சியைக் காணப் பொறுக்காமல் அவன் கண்களை மூடிக் கொண்டான். “அப்பா! அரண்மனைக்குப் போய்விடுவோம்" என்று கூறினான். மகன் விருப்பத்திற்கு மாற்று மொழி கூறியறியாத சுத்தோதனர் தேரைத் திருப்ப ஆணை பிறப்பித்தார். திரும்பிச் சிறிது தூரம் சென்றவுடன், ஒரு பருந்து ஒரு புறாவைக் கொன்று தின்று கொண்டிருந்த காட்சியையும் மேலும் சிறிது தூரம் சென்ற பின்னர் ஒரு புறா ஈக்களைத் தின்று கொண்டிருந்த காட்சியையும் கண்டு சித்தார்த்தன் துயருற்றான்.

சித்தார்த்தனை ஏன் அழைத்துக் கொண்டு வந்தோம் என்றாகிவிட்டது சுத்தோதனருக்கு. அன்றைய நிகழ்ச்சிகளை சித்தார்த்தன் மறந்துவிட அருள் புரிய வேண்டுமென்று அவர் ஆண்டவனை வேண்டிக்கொண்டார்.

சித்தார்த்தன் வெளியே செல்வதற்கென்று நான்கு குதிரை பூட்டிய தேர் ஒன்று இருந்தது. அந்தத் தேரைச் செலுத்தும் பாகன் பெயர் சாணன். தேர்ப்பாகன் சாணன் நல்ல திறமைசாலி மட்டுமல்ல, அனுபவசாலியும்கூட. இளவரசன் கருத்தறிந்து நடக்கக் கூடியவன் என்பதற்காகவே, அவனை சித்தார்த்தனின் தேர்ப்பாகனாக நியமித்திருந்தார் சுத்தோதனர்.

ஒருநாள் சித்தார்த்தன் நான்கு குதிரை பூட்டிய தன் தேரில் ஏறிப் புறப்பட்டான். நகரின் பெரிய வீதிகள் வழியாக அந்தத் தேர் சென்றது. கேளிக்கை மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்தத் தேரை சாணன் தான் ஓட்டிக் கொண்டு சென்றான்.

வழிநெடுகிலும், எதிர்பாராது இளவரசனைக் கண்ட மக்கள் கைகுவித்து வணங்கினர்; வாழ்த்து மொழிகள் கூறினர். சிரித்துக் கை தட்டி ஆரவாரம் செய்தனர். ஜெய ஜெய முழக்கம் எழுப்பினர். எல்லாம் இன்பமாகவேயிருந்தது. அன்போடு சிரித்து வரவேற்கும் குடிமக்களைக் கண்டபோது, சித்தார்த்தனுக்கும் மனத்துக்குள் இன்பம் நிறைந்தது.

ஆனால், அந்த இன்பம் நிலைக்கவில்லை. ஐந்தாறு வீதிகளைக் கடந்து மேலும் தேர் ஓடிக் கொண்டிருந்தபோது தள்ளாடித் தள்ளாடி நடந்து செல்லும் ஒரு கிழவனைக் கண்டான் சித்தார்த்தன்.

வாடி மெலிந்த உடலும், வதங்கிச் சுருங்கிய வயிறும், கூனல் விழுந்த முதுகும், குச்சி போன்ற கைகால்களும், குழிவிழுந்தகண்களும், நரைத்துப்போன தலைமயிரும், திரை விழுந்த நெற்றியுமாக அந்தக் கிழவன் ஒரு கம்பைப் பிடித்துக் கொண்டு தள்ளாடித் தள்ளாடி. நடந்து சென்று கொண்டிருந்தான். வழியில் போவோர் வருவோரைப் பிச்சை கேட்டு நீட்டிய அவன் கை நடுநடுங்கிக் கொண்டிருந்தது.

பதைபதைக்கச் செய்யும் இது போன்ற காட்சியை சித்தார்த்தன் அதற்கு முன் கண்டதே இல்லை. அந்தக் கிழவனின் நடுக்கமும் துடிப்பும் சித்தார்த்தனின் நெஞ்சை உலுக்கிவிட்டன. இந்த மனிதன் ஏன் இப்படித் துன்புற்றுத் துடிக்கிறான் என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது.

“சாணா, ஏன் இந்த மனிதன் இப்படி யிருக்கிறான்?” என்று தேர்ப்பாகனை நோக்கிக் கேட்டான்.

“இளவரசே, இதுதான் முதுமை. இந்தக் கிழவன் உலகில் பல ஆண்டுகள் வாழ்ந்து இப்போது மூப்படைந்துவிட்டான். மூப்பினால் அவன் தளர்ந்து மெலிந்துபோய்விட்டான். மனிதர்கள் எல்லோருமே ஒரு காலத்தில் இப்படிப்பட்ட நிலைக்கு ஆளாகித்தான் தீர வேண்டும்” என்று உலக உண்மையை எடுத்துக் கூறினான் அனுபவசாலியான தேர்ப்பாகன்.

இந்தப் பதிலைக் கேட்டு சித்தார்த்தன் கதி கலங்கிப் போனான். மனிதகுலம் இந்த முதுமைப் பிணிக்கு ஆளாகித்தான் தீரவேண்டுமா என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. அந்தக் கிழவனின் தோற்றம் அவன் மனக் கண்ணை விட்டு நெடுநேரம் வரை அகலவேயில்லை. கேளிக்கை மைதானம் சென்ற பிறகும் அவன் இந்தச் சிந்தனை வயப்பட்டவனாகவே யிருந்தான். அரண்மனைக்குத் திரும்பிய பிறகும் சித்தார்த்தனின் முகம் வாட்டத்துடனேயே இருந்தது. அந்தக் கிழவனின் முதுமைத் துன்பம் அவன் மனக் கண்ணை விட்டு அகலாத காட்சியாகவே இருந்தது.

சித்தார்த்தன் இத்துன்ப சிந்தனையில் ஈடுபட்டிருந்த போதே எதிர்பாராத விதமாக சுத்தோதனர் அவனைக் காண நேரிட்டது. மகன் துக்கத்தோடிருப்பதன் காரணத்தை தேர்ப் பாகன் மூலமாக அறிந்தபோது அவர் மனம் கலங்கி விட்டார். இப்படிப்பட்ட துயரக் காட்சிகளைக் காணக் காண மகன் அருளுள்ளம் இளகி அவன் துறவியாகி விட்டால் என்ன செய்வது என்ற அச்சம் அவரைப் பிடித்துக் கொண்டு விட்டது.

அன்றே அவர் கோட்டை வாயில்களில் புதிய காவலர்களை நிறுத்தினார். இளவரசன் கோட்டையை விட்டு வெளிச் செல்லாதபடி நயமாகப்பேசித்தடுக்க வேண்டியதே இவர்கள் வேலையாக இருந்தது.

நெடுநாட்கள் வரை சித்தார்த்தன் வெளிக் கிளம்பவேயில்லை. பின்னர் ஒரு முறை தேரில் ஏறிக் கேளிக்கை மைதானம் நோக்கிப் புறப்பட்டான். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே வீதியின் ஓரத்தில் ஒரு கிழவன் படுத்திருப்பதைக் கண்டான். அந்தக் கிழவனின் உடல் உப்பிப் போயிருந்தது. வலி தாங்காமல் அவன் முக்சி முனகிக் கொண்டிருந்தான். அவன் படும் வாதனையைக் கண்டு மனம் பொறுக்க முடியாமல் சித்தார்த்தன் தேரிலிருந்து கீழே குதித்தோடினான். அவனுக்கு ஏதாவது உதவி செய்து எப்படியாவது அவனுடைய துன்பத்தைத் தணிக்கவேண்டும் என்பதுதான் அவன் எண்ணமாக இருந்தது. ஆனால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. ஒருவர் உடற் பிணியினால் வருந்தும்போது, இன்னொருவர் அவருக்கு எப்படி உதவி செய்யமுடியும்? சித்தார்த்தன் தன் தேர்ப்பாகனை நோக்கி, “சாணா, இந்த மனிதன் ஏன் இப்படி வீதியோரத்தில் படுத்துத் துடித்துக் கொண்டிருக்கிறான்?” என்று கேட்டான்.

“இளவரசே, இதுதான் நோய், நோயினால் பீடிக்கப்பட்ட எவரும் இதுபோலத்தான் வேதனைப்பட நேரிடும். இதிலிருந்து யாரும் தப்ப முடியாது." என்றான் தேர்ப்பாகன்.

இந்தப் பதிலைக் கேட்ட சித்தார்த்தன் அங்கிருந்து புறப்பட்டுவிட்டான். தன்னால் அந்த நோயுற்ற கிழவனுக்கு எதுவும் உதவ முடியாது என்ற எண்ணம் ஏற்பட்ட பிறகு, அங்கு நின்று அந்த வேதனைக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்று புறப் பட்டுவிட்டான். யாரும் பிணியிலிருந்து தப்ப முடியாதபோது, அரசர்கள் போரிட்டு நாடு சேர்ப்பதும், மக்கள் பாடுபட்டு உழைத்துப் பணம் சேர்ப்பதும் எதற்காக? இவற்றால் என்ன பயன் வந்துவிடப் போகிறது? என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டான் சித்தார்த்தன்.

சித்தார்த்தன் மூன்றாவது முறையாகத் தன் தேரின்மீது சென்றபோது, ஒரு வீதியிலே கண்ட காட்சி அவன் சிந்தையைக் கிளறியது. நான்குபேர் சேர்ந்து ஒரு பிணத்தைத் தூக்கிக் கொண்டு போனார்கள். பின்னால் கோவென்று அழுதுகொண்டும் புலம்பிக் கொண்டும் கண்ணீர் விட்டுக் கொண்டும் சிலர் சென்றார்கள். பாடையில் சென்ற பிணம் அசையாமல் கல்போல் கிடந்தது. அதைச் சூழ்ந்து சென்ற ஆண்களும் பெண்களும் அலறி ஒப்பாரி வைத்துக்கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் சென்றார்கள். சித்தார்த்தன் அதற்கு முன் இதுபோன்ற காட்சியைக் கண்டதேயில்லை. அரசர்கள் உலாவருவதையும், தெய்வங்கள் ஊர்வலம் செல்வதையும் தான் பார்த்திருந்தான்.

“சாணா, இது என்ன ஊர்வலம்? அவர்கள் எதைத் தூக்கிக்கொண்டு போகிறார்கள்?” என்று தன் தேர்ப்பாகனைக் கேட்டான் சித்தார்த்தன்.

“இளவரசே, அது பிணம். பிணத்தைத் தான் பாடைகட்டித் தூக்கிக்கொண்டு போகிறார்கள். மனிதராகப் பிறந்தவர்கள் எல்லோருமே ஒருநாள் இறக்க வேண்டியது தான். இறந்து பிணமானவனை எரிப்பதற்காகத்தான் இப்போது கொண்டு செல்கிறார்கள். எவ்வளவு ஆற்றல் வாய்ந்தவர்களானாலும், எத்தனை பெரிய மாவீரர்களானாலும் கடைசியில் ஒரு நாள் சாக வேண்டியதுதான். சாவிலிருந்து யாரும் தப்பமுடியாது. மனிதர்கள் ஒவ்வொருவரும் என்றோ ஒரு நாள் இப்படி இறந்து பிணமாகி மண்ணுலகைவிட்டுப் போக வேண்டியது தான்!" என்று விரிவாகவும் விளக்கமாகவும் சாக்காட்டைப் பற்றிக் கூறினான் தேர்ப்பாகன்.

சிந்தனைவயப்பட்டவனாகச் சித்தார்த்தன் தன் மாளிகைக்குத் திரும்பினான். முதுமை, பிணி, சாக்காடு ஆகிய மூன்றையும் விளக்கும் மூன்று காட்சிகளும் சேர்ந்து அவன் மனத்தில் ஒரு பெருஞ் சிந்தனையைக் கிளப்பிவிட்டன.

சித்தார்த்தனின் மனத்திற்குள்ளே ஒரு பெரும் புயல் உருவாகியது. மனிதராகப் பிறந்தவர்கள் இந்தத் துன்பங்களிலிருந்து தப்ப முடியாதா என்ற எண்ணம்தான் ஒவ்வொரு நாளும் அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. அதுவரை தானடைந்த இன்பங்களும் பெருமைகளும் சிறிதுநேரக் கனவுகள் போல மறைந்துபோய்விட்டதை அவன் உணர்ந்தான்.

சித்தார்த்தன் இந்த வேதனைக் காட்சிகளைக் கண்டது பற்றியும், பித்துப்பிடித்தவன் போல் அரண்மனையில் தன்னந்தனியே அன்னம் தண்ணீர் நாட்டமின்றி சிந்தனைவயப்பட்டு இருந்தது பற்றியும் அறிந்த போது சுத்தோதனர் மிகவும் துன்பப்பட்டார். மேலும் ஒரு முறை சித்தார்த்தன் இத்தகைய வேதனைக் காட்சியைக் காணாமல் இருக்க அவர் தீவிரமான ஏற்பாடுகளை மேற் கொண்டார்.

நான்காவதாக ஒரு துன்பக் காட்சியைக் கண்டால், தான் நெடுநாளாக எதிர்பார்த்துப் பயந்து கொண்டிருந்ததுபோல் அவன் துறவியாகிவிடக்கூடும் என்ற பயம் அவரைப் பிடித்துக் கொண்டது.

கோட்டை வாயில்களிலே அவர் அதிகமான காவல் வீரர்களை நியமித்தார். அத்தோடு மனநிறைவு கொள்ளாமல், தன் தம்பிமார் மூவரையும் மூன்று வாயில்களிலும் நிறுத்தி வைத்துத் தானே நான்காவது வாயிலில் காவல் நின்றார். இரவு நேரத்திலும் வீதிகள்தோறும் காவல் படைகளை உலவிவரச் செய்தார்.

இத்தனை ஏற்பாடுகளையும் கடந்து சித்தார்த்தன் கோட்டையிலிருந்து வெளியேறி விட்டான். சித்தார்த்தனின் தேர்ப்பாகன் சாணன் நல்ல அனுபவமும் திறமையும் உடையவன் என்பதுமட்டு மல்லாமல், சித்தார்த்தனிடம் ஒருவிதமான ஈடுபாடும் கொண்டிருந்தான்.

சித்தார்த்தனின் மனங்கோண அவனல் நடக்க முடியவில்லை. எப்படியோ கோட்டைக்கு வெளியே தேரைச் செலுத்திக் கொண்டு வந்து விட்டான்.

சித்தார்த்தன் நான்காவது முறையாக வழியில் கண்ட காட்சி முந்திய மூன்று முறைகளில் கண்டவை போன்றதல்ல; முற்றிலும் மாறுபாடானது.

காவியுடை பூண்ட ஒரு மனிதன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக் கொண்டு வீடு வீடாக நுழைந்து பிச்சை வாங்கிக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் மற்ற யாரிடமும் காணப்படாத அமைதியும் இன்பமும் நிலவுவதை இளவரசன் சித்தார்த்தன் கண்டான். அவனுக்கு அந்த மனிதனின் தோற்றம் மிகவும் பிடித்திருந்தது.

"சாணு, இந்த மனிதன் யார்? இவன் இவ்வளவு களிப்போடு இருப்பதற்குக் காரணம் என்ன?” என்று தேர்ப்பாகனைக் கேட்டான்.

"இளவரசே, இவன் ஒரு துறவி. தனக்கென ஒன்றும் வேண்டாமல் எல்லாப் பொருள்களையும் துறந்துவிட்டவன். இவனுக்கு பந்தம் பாசம் இன்பந் துன்பம் என்று எதுவும் கிடையாது. வயிறு பசிக்கும்போது தெருத் தெருவாகச் சென்று பிச்சை யெடுத்து உண்பான். வேறு எதைப்பற்றியும் யாரைப்பற்றியும் இவன் கவலைப்படுவது கிடையாது. ஆகவேதான் இவன் மகிழ்ச்சியாக இருக்கிறான்” என்று தேர்ப் பாகன் கூறினான்.

தேர்ப்பாகன் கூறிமுடிப்பதற்குள்ளாகச் சித்தார்த்தன் தேர்த்தட்டிலிருந்து கீழே குதித்தான். அந்தக் காவி கட்டிய துறவியின் அருகில் சென்று அவனைச் சில கேள்விகள் கேட்டான்,

துறவியோடு பேசியபின் அவன் தன் ஐயமெல்லாம் தீர்ந்ததுபோல் உணர்வு பெற்றான். தான் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது அவனுக்குத் தெளிவாகிவிட்டது. அரசையும், அரண்மனை இன்பங்களையும் துறந்தாலன்றித் தான் மன அமைதி பெற முடியாதென்று அவனுக்குத் தோன்றியது.

அன்று அவன் கேளிக்கை மைதானத்துக்கு சென்றபோது மன அமைதியோடு இருந்தான். மலர்ந்திருந்த பூஞ்செடிகள் ஓர் இன்பத்தை உண்டாக்கின. வானிலே பாடிப் பறக்கும் சிறுபறவைகளின் குரலொலியும் இறக்கைகள் அடித்துக் கொள்ளும் படபடப்பொலியும் கேட்டு ஆனந்தமுற்றான். என்றும் மலர்ந்திருக்கும் இன்ப வாழ்வை மனித குலம் எய்த வழி கண்டு பிடிப்பதற்குத் தான் ஓர் ஒப்பற்ற வழியைக் கண்டுபிடித்துவிட்டதாக அவன் உள்ளுணர்வு கூறியது.

உடனடியாகத் தான் துறவியாகிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

அரண்மனைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணமே சித்தார்த்தனுக்கு அப்போது எழவில்லை. மாலைப்பொழுது வந்தபோது, பூஞ்சோலையின் நடுவில் இருந்த ஏரியிலே இறங்கிக் குளித்தான். குளித்தபின் ஒரு கல்மேடையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டான். இளவரசன் இருக்கும் இடத்தை அறிந்து கொண்டு அரண்மனையிலிருந்து வேலையாட்கள் ஆடைகளை எடுத்துவந்தனர். இளவரசன் வழக்கமாக அணிந்து கொள்ளும் ஆடம்பரம் மிகுந்த அந்த ஆடைகளை சித்தார்த்தன் அணிந்து கொண்டான். 'இதுதான் நான் கடைசி முறையாக இத்தகைய ஆடைகளை அணிந்து கொள்வது'

என்று தன் மனத்திற்குள்ளே எண்ணிக் கொண்டான்.

ஆடையணிந்து முடிந்தபின், தன் தேரிலே ஏறப்போனான். தேர்த்தட்டில் ஒரு காலை எடுத்து வைத்தபோது, அரண்மனையிலிருந்து ஓர் ஆள் ஓலை கொண்டுவந்தான். “இளவரசே ஒரு மகிழ்ச்சியான செய்தி. யசோதரா தேவியார் ஓர் ஆண் மகனைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். என்று அந்த ஆள் பொங்கும் மகிழ்ச்சியோடு ஓலையை நீட்டினான்.

இந்த நற்செய்தி சித்தார்த்தனுக்கு இன்பம் தருவதற்கு மாறாக சிந்தனையைக் கிளறுவதாகவே இருந்தது. “என்னைப் பிணைக்க மற்றொரு பந்தம் பிறந்தது போலும். அன்பு மனைவி யசோதரையையும் அருமைத் தந்தை சுத்தோதனரையும் துறப்பது போலவே இந்தப் பிள்ளையையும் துறக்க வேண்டியதுதான்" என்று மனத்திற்குள் முடிவுகட்டினான் இளவரசன்.

இளவரசன் தான் சொல்லிய செய்திக்குக் கையில் கிடைத்த பொருளைப் பரிசாக அளிப்பான் என்று எதிர்பார்த்த வேலையாள் ஏமாந்து போனான். சிந்தனை வயப்பட்ட சித்தார்த்தன் அவன் கையில் எதுவுமே கொடுக்கவில்லை. தன் நினைவற்று அவன் தேரில் ஏறியவுடன் தேர் புறப்பட்டது. அரண்மனையில் கொண்டுவந்து அவனை இறக்கிவிட்டது.

அரண்மனை முழுவதும் ஒரே கோலாகலமாக இருந்தது. பணியாட்களும் தாதிப் பெண்களும் செவிலிகளும் அங்குமிங்கும் அவசரமாகவும் ஆனந்தமாகவும் ஓடிக் கொண்டிருந்தனர். வேளைக்கு வேளை விருந்தினர்கள் வந்து கூடிக் கொண்டிருந்தனர். எங்கும் திரு விளக்குகள் ஏற்றப்பட்டன. இன்னிசை முழக்கம் இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது. ஏரிக்கரையில் உடுத்திய ஆடம்பர உடையுடன் இளவரசன் சித்தார்த்தன் அரண்மனையில் நுழைந்தபோது, அவன் தன் மகிழ்ச்சிக்குரிய ஆடையணிந்திருக்கிறான் என்றே பார்த்தவர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால், இந்தக் கோலாகலமெல்லாம் அவன் உள்ளத்தில் குதூகலத்தை எழுப்பவில்லை.

தன் தனி அறைக்குச் சென்று கட்டிலில் சாய்ந்து படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.

சித்தார்த்தன் கண் விழித்தபோது நள்ளிரவு. அரண்மனை ஆரவாரங்களெல்லாம் அடங்கி அமைதியாகக் காட்சி யளித்தது. எழுந்து மெல்லமெல்ல நடந்து தேர்ப்பாகன் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.

"சாணா" சாணா" என்று அவன் அழைத்த குரல் கேட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த தேர்ப்பாகன் சட்டென்று விழித் தெழுந்தான்.

“சாணா, வெளியே போகவேண்டும். என்னுடைய குதிரையை ஆயத்தப்படுத்து" என்றான் சித்தார்த்தன். அந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனையை விட்டு எதற்காகப் போக வேண்டும் என்று சற்றுத் தயங்கினான் தேர்ப்பாகன். சுத்தோதனரின் கட்டளைகள் அவனுக்கு நினைவு வந்தன.

“சாணா, நான் அரண்மனை வாழ்வையே துறக்கப் போகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும். எழுந்திரு. விரைவில் குதிரையை ஆயத்தப்படுத்து" என்று மீண்டும் சித்தார்த்தன் கூறியபோது தேர்ப்பாகன் அதிர்ச்சியடைந்து போனான் என்றே சொல்லவேண்டும்.

அவனுக்குத் துன்பமாக இருந்தது. ஆனால், என்றுமே சித்தார்த்தனின் கட்டளையை மறுத்துப் பழக்கமில்லாத அந்தத் தேர்ப்பாகன், அன்றும் மறுக்க முடியவில்லை. ஆணையை ஏற்றுக் குதிரைகளை ஆயத்தப்படுத்த குதிரைக் கொட்டிலுக்குச் சென்றான்.

இதற்கிடையில் தான் எப்படி வெளியேறுவது என்ற சிந்தனையில் சித்தார்த்தன் மூழ்கினான். தன் தந்தையிடம் போய்த் தன் மனக் கருத்தைக் கூறி விடைபெற்றுக் கொள்வோமா என்று முதலில் அவன் நினைத்தான். ஆனால் அது எளிதான செயலல்ல என்று தோன்றியது. தனக்காக அவர் தனக்குத் தெரியாமல் ஏற்பாடு செய்திருந்த கட்டுக் காவல்களைப் பற்றி நினைத்தபோது, அவர் தன்னைப் போகவிடமாட்டார் என்பது உறுதியாகத் தோன்றியது. எனவே அவரிடம் சொல்லிக் கொள்ளாமலே புறப்படுவது என்று முடிவு செய்தான்.

யசோதரையைப் பற்றி நினைத்தபோதுதான் அவன் மனம் சிறிது சஞ்சலமுற்றது. தன்னிடம் அவள் எவ்வளவு அன்பாக இருந்தாள்? உயிரையே வைத்திருக்கிறாளே! அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் போவது எவ்வளவு தவறு என்று நினைத்தான். ஆனால், சொல்லிக் கொண்டு போவதென்றால் அது நடக்கக் கூடியதா? அவள் தன்னைப் போக விடுவாளா? காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுது கதறினால் என்ன செய்வது! அவள் துன்பப்பட்டுத் தான் பார்த்ததே யில்லையே! அப்போது அவள் அடையக் கூடிய துன்பத்தைப் பார்த்துக் கொண்டு தன்னால் கல்போல் இருக்க முடியுமா? முடியவே முடியாது. ஆனால், எப்படியும் யசோதரையைவிட்டுப் பிரிந்துதான் ஆக வேண்டும். அவள் ஒருத்தி படும் துன்பத்துக்காகத் தயங்கினால், கோடானு கோடியாக உலகில் வாழும் மக்களின் துன்பத்தைப் போக்க வழி காண முடியாமலே போய்விடுமே! கடைசி முறையாக அவளைப் பார்த்து, அவளிடம் தன் கருத்தை எடுத்துக்கூறி, அவள் மலர்க் கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விடை பெற்றுக்கொண்டு போய்விடலாம் என்று முடிவு செய்து கொண்டான்.

மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்து, அவள் அறைப்பக்கம் போனான். அவள் அன்று தன் அறைக் கதவைத் தாளிடாமலே படுத்திருந்தாள். ஆகவே, மிக எளிதாக ஓசைப் படாமல் கதவை நகர்த்திக் கொண்டு அவன் உள்ளே நுழைந்தான். அமைதியாக, பின் நிகழ்வைப் பற்றிய எத்தகைய கவலையுமின்றி கண்மலர் மூடித் துயின்று கொண்டிருக்கும் அந்தப் பூங்கொடியைப் பார்த்தவுடனேயே அவன் ஊக்கமெல்லாம் பறந்துவிட்டது. அவளை விட்டுப் பிரிவது என்ற எண்ணமே வேதனை தருவதாக இருந்தது. அவளை எழுப்பி அவளிடம் விடைபெற்றுக் கொள்ளத் தக்க ஊக்கமும் உறுதியும் தனக்குக் கிடையாது என்பதை உணர்ந்த சித்தார்த்தன் அவளை எழுப்பாமலே சென்றுவிட முடிவு செய்தான்.

எழுப்ப வேண்டாம். அவள் கன்னத்திலாவது ஒரு முத்தம் இட்டுச் செல்லலாம் என்று எண்ணிக் குனிந்தான். ஆனால் முத்தமிடவில்லை. முத்தமிடும்போது அவள் விழித்துக் கொண்டால் என்ன செய்வதென்று நிமிர்ந்துவிட்டான்

அன்று பிறந்த தன் பிள்ளை ராகுலன், சின்னஞ் சிறிய மலர்போல் அழகாக யசோதரையின் மார்போடு ஒட்டிக் கொண்டு கிடப்பதைக் கண்டான் சித்தார்த்தன். ஒரு முறை தன் மகனைத் தூக்கி மார்பில் அணைத்து முத்தமிட வேண்டும் என்று ஆசைப்பட்டான். ஆனால், அவன் விழித்துக் கொண்டு அழுதால் யசோதரையும் விழித்துக் கொண்டுவிடக் கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. எனவே அந்தப் பிள்ளையின் கையை மெல்லத் தொட்டுப் பார்த்துவிட்டுத் தன் கையை எடுத்துக் கொண்டான். இனித் தான் அரண்மனையில் நிற்பதற்கு நேரமில்லை என்ற உணர்வு வந்தவுடன் அந்த அறையிலிருந்து அப்போதே வெளியேறினான். மெல்ல மெல்ல நடந்து குதிரைக் கொட்டிலை அடைந்தான்.

தேர்ப்பாகன் சாணன் குதிரைக்குச் சேணம் பூட்டி ஆயத்தமாக வைத்திருந்தான். சித்தார்த்தன் தன் குதிரையின் மீது ஏறிக் கொண்டு புறப்பட்டான். தேர்ப்பாகனும் மற்றொரு குதிரையில் அவனைப் பின் தொடர்ந்தான்.

ராகுலன் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வீதிகள் முழுவதும் மக்கள் தூவிய மலரிதழ்கள் நிறைந்து கிடந்தன. எனவே விரைந்து சென்ற குதிரைகளின் குளம்புகள் அம்மலர் இதழ்களின்மேல் மிதித்துக் கொண்டு சென்றதால், அவை ஓடும்போது வழக்கமாக எழக்கூடிய குளம்போசை எழவில்லை.

பகலெல்லாம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், இரவுக் காவலர்கள் கூட அந்த நள்ளிரவில் கண்ணயர்ந்து விட்டனர். எனவே யாரும் கவனியாமலே அவர்கள் கோட்டை வாயிலைத் தாண்டி எளிதாக வெளியேறிச் சென்றனர்.

கோட்டையின் கிழக்குவாயில் வழியாக வெளியேறிய அவர்கள் இரவு முழுவதும் பயணம் செய்து பொழுது விடியும் நேரம் ஓர் ஆற்றங் கரையை அடைந்தனர்.

ஆற்றங்கரையில் சித்தார்த்தன் குதிரையைவிட்டு இறங்கினான்.

"சாணா நீ திரும்பிப் போ" என்றான் சித்தார்த்தன்.

“இளவரசே, தங்களைத் தனியாக விட்டு நான் எப்படிப் போவேன்" என்று கதறினான் தேர்ப்பாகன். எப்போதும் அவன் கூடவேயிருக்கப் போவதாகக் கூறினான்.

“சாணா, நான் எங்கே போனேன்? எதற்காகப் போனேன்? என்றெல்லாம் தெரியாமல் அப்பா மனங்கலங்கிப் போயிருப்பார். நீ போய் நான் அரண்மனையை விட்டு வெளியேறிய காரணத்தைக் கூறினால்தான் அவர் ஒருவாறு மனந்தெளியக்கூடும். போ. போய் நான் அரச வாழ்வை துறந்துவிட்டதாகச் சொல். வீண் மனக்கலக்கங்களுக்கு இடம் கொடாதே! என்று வற்புறுத்திச் சொன்ன பிறகுதான் தேர்ப்பாகன் அவ்விடத்தைவிட்டு அசைந்தான்.

சாணன் சென்ற பிறகு சித்தார்த்தன் ஆற்றங் கரையிலே தனியாக நின்று கொண்டிருந்தான். ஒரு முறை தன் உடைகளைப் பார்த்துக் கொண்டபோது, தன் புது வாழ்வுக்கு அவை ஏற்றவையல்ல என்ற எண்ணம் பிறந்தது. சிறிது தொலைவில் மரத்தடியில் ஒரு பிச்சைக்காரன் முடங்கிப் படுத்துக் கொண்டிருந்தான். அவனருகே சென்ற சித்தார்த்தன், தன் ஆடைகளைப் பெற்றுக் கொண்டு அவனுடைய ஆடைகளைத் தருமாறு கேட்டுக் கொண்டான்.

அந்தப் பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு தன் கந்தல்களைக் களைந்து கொடுத்தான். அழுக்கடைந்த அந்தக் கந்தல் துணிகளை வாங்கி அணிந்து கொண்டு சித்தார்த்தன் தன் கால்போன திசையில் நடந்து சென்றான்.

உண்மையைத் தேடிப் புறப்பட்ட அந்த ஒளி மாணிக்கம், பிச்சைக்காரன் உடையுடனும், குன்றாத ஆர்வத்துடனும், உறுதி நிறைந்த உள்ளத்துடனும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையெல்லாம் நடந்து காடும் மேடும் கடந்து கங்கைக் கரைக்குப் போய்ச் சேர்ந்தது. கங்கையைக் கடந்து மகத தேசத்தை அடைந்தது. மகத நாட்டின் தலைநகரான ராஜக்கிருகத்திலே இலையினால் தைத்த ஒரு பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தி வீடு வீடாகப் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது.