தெய்வ அரசு கண்ட இளவரசன்/வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
1. வீரர் குலம் விளங்கவந்த திருவிளக்கு

மாமன்னர் சுத்தோதனருடைய அரண்மனை விருந்துமண்டபம் கலகலப்பாக இருந்தது. சாக்கிய குலத்தின் வழிவந்த மாவீரர்களும், சுத்தோதன மாமன்னரின் நெருங்கிய உறவினர்களும்தான் அங்கு கூட்டியிருந்தனர். வெளியார் யாருமில்லை.

அன்று விருந்து வைக்க வேண்டும் என்று எவ்விதமான முன்னேற்பாடும் செய்யப்படவில்லை. எனவே உணவு வகைகள் சிறப்பாகத் தயாரிக்கப்படவில்லை. எதிர்பாராத விதமாக உறவினர்கள் அன்று கூடினர்கள். அப்போதைக்குச் செய்ய முடிந்த வரையில் உணவுகளைத் தயாரித்து அரண்மனைச் சமையல்காரர்கள் விருந்தை நடத்தி விட்டார்கள்.

விருந்து முடிந்து கூடத்தில் எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள். எதிர்பாராது ஒன்று கடடிய தன் உறவினர்களுடன் அளவளாவிக் கொண்டு அமர்ந்திருந்தார் மாமன்னர்.

விருந்தினர்களிலே மாமன்னரின் தம்பிமார்கள் இருந்தார்கள், மைத்துனன்மார்கள் இருந்தார்கள். தூரத்து உறவினர்கள் இருந்தார்கள். மாமன்னரின் படையிலும், அரண்மனை அலுவலிலும் அமர்ந்து பணியாற்றியவர்களும் இருந்தார்கள். எல்லோரும் வீரசாக்கிய குலத்திற் பிறந்த மறவர்கள். தோள்வலியிலும் வாள் வலியிலும் சிறந்த மாவீரர்கள். சாக்கிய குலத்தினரின் வெற்றிக்கொடி இறங்காது காத்து வரும் ஆண் சிங்கங்கள். கபிலவாஸ்துப் பேரரசைக் கட்டிக் காத்து நின்ற காளைகள்.

தன் உறவினர்கள் எல்லோரும் எதிர் பாராது ஒன்றுகட்டிய அந்த நிகழ்ச்சியை எண்ணி யெண்ணி இறும்பூதடைந்தார் சுத்தோதனர்.

இன்பமாகப் பேசிக்கொண்டிருந்த போது சுத்தோதனரின் கூடப்பிறந்த தம்பியொருவன் எதிர்பாராத விதமாக ஒரு பேச்சைக் கிளப்பினான். அவன் கேட்ட அந்தக் கேள்வி சுத்தோதனருடைய உள்ளத்திலே பெருஞ் சிந்தனையை உருவாக்கியது. மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்த அவருடைய மனத்திலே ஒரு கலக்கம் ஏற்பட்டது. அந்தக் கலக்கத்தின் பிரதிபலிப்பு அவருடைய அகன்ற நெற்றியிலே சுருக்கங்களாக வெளிப்பட்டது.

அந்தக் கேள்வியை வேறு யாரும் கேட்டிருந்தால், அரசர் ஆணை பிறப்பதற்கு முன்னாலேயே அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டிருப்பார்கள். ஆனால், கேட்டவர் மாமன்னருடைய கூடப் பிறந்த தம்பி என்பதால் யாரும் எவ்வித அசம்பாவிதமான செயலும் செய்யவில்லை. மேலும் அங்கு கூடியிருந்த உறவினர் எல்லோருக்குமே நெடுநாட்களாக அந்தக் கேள்வி மனத்திற்குள் உறுத்திக் கொண்டு நின்றது தைரியமிருந்திருந்தால் அவர்களே மாமன்னரைக் கேட்டிருப்பார்கள். அப்போது மாமன்னரின் தம்பியே கேட்டுவிட்டது கண்டு அவர்கள் மனத்திற்குள் திருப்தியடைந்தார்கள் என்றே சொல்லவேண்டும்.

பலபேருடைய மனத்தை உறுத்திநின்ற ஒரு கேள்வியை எந்தனை நாளைக்குத்தான் மூடி மறைத்து வைக்க முடியும். அன்று மாமன்னரின் தம்பி கேட்காமல் விட்டு விட்டால், பிறகு, வேறொரு நாள் யாராவது ஒருவர் கேட்காமலா விட்டுவிடப் போகிறார்கள். அணைக்கடங்காத வெள்ளம் என்றாவது ஒரு நாள் உடைப்பெடுத்துக் கொள்ளத்தானே செய்யும்?

அப்படி மாமன்னர் கவலைக்குள்ளாகும்படி அவர் தம்பி கேட்ட கேள்வி என்ன என்று அறிய ஆவல் பிறப்பது இயற்கை தானே| தம்பி கேட்ட கேள்வி இதுதான்.

"அண்ணா , சித்தார்த்தன் பெரியவனாகி விட்டான். திருமணமும் ஆகிவிட்டது. இன்னும் சின்னப் பிள்ளை போல் இருந்தால் என்னாவது? என்றும் அந்தப்புரமே கதியென்று கிடந்தால், சாக்கிய குலத்தின் வீரமெல்லாம் மங்கிப் போகாதா? நான் துணிந்து சொல்வதற்காக மன்னிக்க வேண்டும். வீரனாக வளர வேண்டிய பிள்ளையை நீங்கள் அளவுக்கு மிஞ்சிச் செல்லம் கொடுத்து ஆகாவரியாக்கிக் கொண்டு வருகிறீர்கள் !"

மூச்சு விடாமல் தம்பி கேட்ட கேள்வி சுத்தோதன மாமன்னரின் செவிவழியே புகுந்து சிந்தையைக் கலக்கியது. அவர் பதில் ஏதும் பேசவில்லை

சுத்தோதனரின் மனத்திரையில் பழைய நிகழ்ச்சிகள் எல்லாம் சித்திரப்படங்கள் போல் வரிசையாகக் காட்சியளிக்கத் தொடங்கின.

இரண்டு மனைவியர் இருந்தும் தனக்கு ஒரு பிள்ளை பிறக்கவில்லையே என்று சுத்தோதனர் கவலையோடிருந்த காலம் அது. ஒருநாள் மாயா தேவி அவரிடம் வந்து, தான் கண்ட கனவைப் பற்றிக் கூறியபோது அவர் எவ்வளவு உணர்ச்சி யடைந்தார்.

மாயாதேவியைச் சுற்றிலும் மக்கள் கூடி நின்றார்களாம். அவளைப் பார்த்து எல்லோரும் பயபக்தியோடு கையெடுத்துக் கும்பிட்டார்களாம். கடவுளைக் கண்டு விட்டதுபோல் அந்த மக்கள் முகங்களிலே ஆனந்தக்களை கூத்தாடியதாம்.

இப்படி ஒரு கனவு மாயாதேவி கண்டிருக்கிறாள். இந்தக் கனவுக்கு ஏதோ பொருள் இருக்க வேண்டும் என்று தோன்றியது சுத்தோதனருக்கு.

மாயாதேவியை மக்கள் பலர் கூடி பய பக்தியோடு வணங்குவதென்றால் அதன் பொருள் என்ன? மாயாதேவி மிக உயர்ந்த நிலையை அடையப் போகிறாள் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மாயாதேவி இப்போது தான் பேரரசியாக இருக்கிறாளே! இதற்குமேல் ஒருநிலை அவளுக்கு எங்கே வரப்போகிறது?

சுத்தோதனர் நினைத்து நினைத்துப் பார்த்தார். அவர் அறிவுக்கு எதுவும் எட்டவில்லை. இந்தக் கனவின் பொருள் தெரியவேண்டும் என்றால், கற்ற பேரறிஞர்களையும் அனுபவத்தால் முதிர்ந்த பெரியார்களையும் அறிஞர்களையும் கேட்டுப் பார்த்தால்தான் ஆகும்.

நாட்டில் உள்ள சான்றோர்களையும் அறிஞர்களையும் பெரியவர்களையும் அவையிலே கூட்டினார் சுத்தோதனர். யாருக்கும் இந்தக் கனவின் பொருள் புரியவில்லை. ஒரு சிலர் சொன்ன பொருள் சரியென்று படவில்லை. அர்த்தமில்லாத கனவாகவே அது போய்விடும் போலிருந்தது.

கூட்டத்தின் இடையிலிருந்து ஒரு கிழவர் எழுந்து அரசர் முன்னே வந்து நின்றார். அரசியை நோக்கி அவர் பேசினார்.

“அருள் நிறைந்த அரசியே! உன் கனவு மகிழ்ச்சிக்குரியதே! உனக்கொரு பிள்ளை பிறக்கப் போகிறான். அந்தப் பிள்ளை பேராற்றல் பொருந்தியவனாக இருப்பான். இந்த அளவிற்குத் தான் நான் உறுதியாகக் கூறமுடியும். ஏனெனில் அவன் பெரியவனாவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. அரண்மனை வாழ்விலே அவன் நிலைத்திருந்தால் ஒரு பெரிய மாவீரனாகத் திகழ்வான். நாடுகள் பலவற்றை வென்று மிகப் பெரிய வெற்றி வீரனாக விளங்குவான். ஆனால், அவன் கானக வாழ்வை நாடிச் செல்லவும் கூடும். அவ்வாறு சென்றாலும் உலகம் வணங்கும் ஓர் ஒப்பற்ற ஞானியாகத் திகழ்வான். உலகிற்கு வழிகாட்டும் ஓர் ஒளி விளக்காக விளங்குவான்” என்று சொல்லிவிட்டு அந்தக் கிழவர் கூட்டத்திற்குள்ளே புகுந்து மறைந்துவிட்டார்.

அந்தக் கிழவர் சொல்லிய ஒவ்வொரு சொல்லும் மாயாதேவி கண்ட கனவுக்குச் சரியாகப் பொருந்தி யிருந்தன. அவருக்குத் தகுந்த பரிசு கொடுக்க வேண்டும் என்று சுத்தோதனருக்குத் தோன்றியது. ஆனால், அந்தப் பெரியவர் அகப்பட்டால் தானே!

சுத்தோதனர் பிறகு இந்த நிகழ்ச்சியை மறந்துவிட்டாலும், மீண்டும் நினைத்துக் கொள்ளும்படியான நேரங்கள் எத்தனை முறை வந்து விட்டன. ஒவ்வொரு முறையும் அவர் அடைந்த மனத் துயரத்திற்கு அளவுண்டா?

சரியாக ஓராண்டுக்குப் பிறகு நிறைந்த வயிற்றோடு மாயாதேவி தன் தாய்வீட்டுக்குப் புறப்பட்டாள். அப்போது எவ்வளவு மகிழ்ச்சியோடு சுத்தோதனர் அவளைப் பல்லக்கில் ஏற்றி அனுப்பிவைத்தார்! ஆனால் போகும் வழியிலேயே, லும்பினி என்ற காட்டின் நடுவே மாயா தேவி பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இந்தச் செய்தியை அறிந்ததும் சுத்தோதனர் ஆவலோடு காட்டிற்கு விரைந்து சென்றார். தாயையும் பிள்ளையையும் அரண்மனைக்கு அழைத்து வந்தார். என்ன அழகாக இருந்தது அந்தப் பிள்ளை, எத்தகைய கவர்ச்சி யிருந்தது அந்தப் பிள்ளையின் முகத்திலே. தன் பிள்ளை என்பதையும் மறந்து சுத்தோதனருடைய கைகள் தாமாகக் குவிந்து அந்தப் பிள்ளையை வணங்கினவே, அதன் பொருள் என்ன?

பிள்ளை பிறந்த ஏழாவது நாள் எதிர்பாராத விதமாக மாயாதேவி இறந்து போனாள். அப்போது தான் சுத்தோதனருக்கு அந்தக் கிழவருடைய மொழிகள் நினைவுக்கு வந்தன.

அவன் கானக வாழ்வை நாடிச் செல்லவும் கூடும் என்றாரே அந்தப் பெரியவர். தன் பிள்ளை கானக வாழ்வுக்காகப் பிறந்தவன் என்பதற்காகத் தானோ காட்டில் பிறந்தான்? அவன் பந்த பாசமற்றவன் என்பதற்காகத் தானோ பிறந்தவுடன் தாயை இழந்தான்.

இப்படியெல்லாம் நினைக்க நினைக்க சுத்தோதனருடைய தலை சுழன்றது.

தன் குல விளக்காகத் திகழ வேண்டிய பிள்ளை கானகந் தேடிப் போய்விட்டால், தன் முன்னோரும் தானும் தேடி நிலை நிறுத்திய பேரரசு என்னாவது? தங்கள் குலமும் புகழும் என்னாவது? எல்லாம் மண்ணோடு மண்ணாக வேண்டியதுதானா?

முடியாது. முடியவே முடியாது!

தன் பிள்ளை அரசனாகத்தான் வாழ வேண்டும். விதி எப்படி இருந்தாலும் சரி அதை வென்று தான் ஆக வேண்டும். இனி ஒவ்வொரு கணமும் என் மகனின் வாழ்க்கைப் பாதையைச் சரி செய்வதில்தான் என் கவனத்தைச் செலுத்த வேண்டும். அவன் ஒரு மாவீரனாகத் திகழ்வதைப் பார்த்துவிட்டுத்தான் நான் சாக வேண்டும். இப்படி உறுதி செய்து கொண்டார் சுத்தோதனர்.

“பிரஜாவதி! பிரஜாவதி!” என்று கூவி அழைத்தார் மாமன்னர். அவருடைய மற்றொரு மனைவி விரைந்து வந்து பயபக்தியோடு தலை வணங்கி எதிரில் நின்றாள்.

“இதோ பார்! பிரஜாவதி! இனி இந்தப் பிள்ளை உன் பிள்ளை! நீ அவனுக்கு மாற்றாந் தாயல்ல! நீ தான் அவனைப் பெற்ற தாய்! தெரிகிறதா?'

“நான் பெற்ற பேறு, மன்னர் பிரானே!" என்று பணிவன்புடன் கூறினாள் பிரஜாவதி. அன்று கொடுத்த வாக்குறுதியை அவள் கடைசிவரை மீறவேயில்லை. சித்தார்த்தனை அவள் எத்தனை செல்லமாக வளர்த்தாள்! பெற்ற தாயே அவள் தானென்று நினைத்துக் கொள்ளும்படியல்லவா அவனைப் பேணி வளர்த்தாள். கொண்டவன் குறிப்பறிந்து நடப்பது பெண்டிர்க்கழகு என்பார்கள். சுத்தோதனர் எப்படி நினைத்தாரோ அப்படி யெல்லாம் சித்தார்த்தனை அவள் வளர்த்தாள்.

சுத்தோதனர் ஒருநாள் பிரஜாவதியைத் தனியே அழைத்தார். “பிரஜாவதி! உன்னிடம் ஒன்று சொல்லப் போகிறேன். கவனமாகக் கேள்! சித்தார்த்தனுக்கு ஒரு கவலைகூட வரக் கூடாது. அவன் எதைக் கேட்டாலும் அதைக் கொடுத்துவிட வேண்டும். என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்துவிட வேண்டும். முடிந்தால் அவன் என்ன நினைக்கிறான் என்று தெரிந்துகூட அதைச் செய்துவிட வேண்டும். அவன் சிறிது கவலைப்பட்டாலும் நான் பெருந் துயரப்படுவேன். அவன் அழுகுரல் என் காதில்பட்டால் என் உயிர் உருகி விடும்!”

“மன்னர் பிரானே, நீங்கள் கவலைப்படவே வேண்டாம். நம்முடைய சக்திக்கியன்றவரை சித்தார்த்தனுக்கு ஒரு கவலையும் ஏற்படாதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்." என்று நெஞ்சில் கைவைத்துக் கொண்டு சொன்னாள் பிரஜாவதி.

சுத்தோதனர் மனம் அமைதியடைய வேண்டும் என்பதற்காக மட்டும் அவள் அப்படிச் சொல்லவில்லை. உண்மையாகவே தான் கூறினாள். கூறியபடியே நடந்து கொண்டாள்.

சித்தார்த்தன் செல்லப் பிள்ளையாக வளர்ந்தான். செல்லமென்றால் செல்லம் அப்படிப்பட்ட செல்லம். மாயாவதி இருந்திருந்தால் கூட அப்படிச் செல்லமாக வளர்த்திருக்க மாட்டாள். அவன் வேண்டுமென்று கேட்ட பொருள் கிடைக்கும். அது மட்டுமல்ல, அவன் ஒரு பொருளை விரும்பிப் பார்த்தாலே அது அவனுக்குத் தரப்படும்.

அவன் கண் எதிரில் எந்தவிதமான கோரக் காட்சியும் நிகழக் கூடாது என்பது மாமன்னர் கட்டளை. அரண்மனைக்குள் யாரும் சண்டை யிட்டுக் கொள்ளவோ சச்சரவிட்டுக் கொள்ளவோ கூடாது. மீறி நடந்தால் கடுந் தண்டனை. தாதிமார்கள் சித்தார்த்தனுக்கு பயங்கரமான விளையாட்டு எதையும் காட்டக் கூடாது. பேய்பூதக் கதைகள் பூச்சாண்டி பயமுறுத்தல்கள் எதுவும் அவனெதிரில் பேசக் கூடாது. இப்படிப்பட்ட கட்டுத்திட்டங்களெல்லாம் அரண்மனைப் பணியாளர்களுக்கு விதிக்கப்பட்டன.

அழகான தோற்றமுடைய செவிலிகள் தான் அரண்மனையில் வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்டார்கள். சிரித்த முகத்தோடு உள்ளவர்கள் தாம் அந்தப்புரத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள். முகத்தைச் சிணுங்குபவர்களும், கவலைப்பட்டவர்களும், திருப்தியில்லாதவர்களும் அழகற்றவர்களும் அரண்மனை வேலையிலிருந்து நீக்கப்பட்டார்கள்.

இப்படிச் சித்தார்த்தனுடைய வாழ்வின் ஒவ்வொரு நாளும் அவனறியாமலே சுத்தோனரால் கண்காணிக்கப்பட்டு வந்தது. அவன் வளர்ந்து வந்தான். உரிய காலத்தில் ஆசிரியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டான். ஆசிரியர் எவ்வளவு கற்றிருந்தாரோ அவ்வளவும் சித்தார்த்தன் கற்றுக் கொண்டுவிட்டான். ஆசிரியர் எத்தனை கலைகள் கற்றிருந்தாரோ அத்தனை துறைகளும் சித்தார்த்தனுக்குப் பாடமாகிவிட்டன.

“மன்னர் பிரானே, தங்கள் பிள்ளைக்கு எனக்குத் தெரிந்ததெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டேன். இனியும் அவன் படிக்க வேண்டும் என்றால், என்னைக் காட்டிலும் மேதைகள் யாராவது இருந்தால் அவரிடம் அனுப்ப வேண்டியதுதான்" என்று ஆசிரியர் வந்து கூறியபோது, தன் மகனின் திறமையை அறிந்து சுத்தோதனர் உள்ளத்தில் களிப்பு மிகுந்தது. மிகுந்த உவகையோடு ஆசிரியருக்குரிய சீர் வரிசைகளைச் செய்து அனுப்பி வைத்தார். கணித அறிவும் நூலறிவும் மட்டும் ஓர் அரசிளங்குமரனுக்குப் போதுமா? வீர விளையாட்டுகள் முற்றிலும் அவன் அறிந்து கொள்ள வேண்டாமா? சுத்தோதனர் தன் நாட்டில் இருந்த மிகப் பெரிய வீரர்களை அழைத்தார். சித்தார்த்தனுக்குப் போர்க்கலை பயிற்றும்படி ஆணையிட்டார்.

பயிற்சி கொடுப்பவர்கள் எல்லாருக்கும் ஒரே மாதிரியான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இளவரசன் மனம் நோக யாரும் நடந்து கொள்ளக்கூடாது. பயிற்சியில் இளவரசனுக்கு நாட்டம் இல்லை யென்றால், அத்தோடு நிறுத்திவிட்டு அரசருக்குத் தெரிவிக்க வேண்டும்.

சித்தார்த்தன் எந்தக் கலையிலும் சலிப்புக் கொண்டவனாகத் தெரியவில்லை. வாள் வீச்சில் கைதேர்ந்தவனானான். அதுபோலவே வேல் பாய்ச்சுவதிலும் சிறந்த வீரனாகத் திகழ்ந்தான், யானைகளைப் பழக்கி அடக்கி நடத்தும் கலையையும் கற்றுக் கொண்டான். அவன் மாமன் ஒருவன் அம்பு எய்யும் முறையைப் பயிற்று வித்தான்.

பயிற்சியாளர் ஒவ்வொருவரும் வந்து சித்தார்த்தன் எதையும் மிக எளிதாகக் கற்றுக் கொள்ளும் பாங்கையும், இலாவகமாக ஆயுதங்களைக் கையாளும் திறமையையும் பற்றிக் கூறும் பொதெல்லாம் சுத்தோதனர் உள்ளம் குளிர்ந்துவிடும். “என் மகன் நாடாளப் பிறந்தவன்தான். இதில் ஐயத்திற்கிடமே இல்லை" என்று தன் மனத்தைச் சமாதானப்படுத்திக் கொள்வார்.

ஒருநாள் ரோகிணி ஆற்றின் கரையிலே இருந்த ஒரு பெரிய மரம் வேரோடு சாய்ந்து விட்டது. அந்த மரம் ஆற்றின் குறுக்கே விழுந்ததால் ஆற்றின் ஓட்டம் தடைப்பட்டது. தடைப்பட்ட தண்ணீர் கரைப் பக்கமாக உடைத்துக் கொண்டு வயற்புறங்களிலே வெள்ளமாகப் பாய்ந்து ஓடியது. இதனால் விளைந்திருந்த வயல்கள் நாசமாயின. ஆற்றின் கீழ்ப் பகுதியிலே உள்ள நிலங்களுக்குத் தண்ணீரில்லாமல் போயிற்று

குடிமக்கள் அரண்மனையிலே வந்து முறையிட்டார்கள். அரசர் கட்டளைப்படி பல ஏவலாளர்கள் மரத்தை அப்புறப்படுத்துவதற்காகச் சென்றார்கள். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் மரத்தை அப்புறப்படுத்த முடியவில்லை. இந்தச் செய்தி சித்தார்த்தன் செவியில் விழுந்தது. அரண்மனையிலிருந்து அவன் ஆற்றங்கரைக்கு ஓடோடி வந்தான். துணிச்சல் உள்ள இளைஞர்கள் சூழச் சென்று, அவர்கள் துணையோடு மரத்தைத் திருப்பி எளிதாகக் கரைக்கு இழுத்து வந்துவிட்டான்.

பலர் கூடி முயன்றும் முடியாத அரிய செயலை மிக எளிதாகச் செய்து முடித்த சித்தார்த்தனின் திறமையையும் கூரிய மதி நுட்பத்தையும் கண்டு நாடே அதிசயித்தது. குடிமக்களைக் காப்பாற்றும் ஒரு கோமகனைத் தான் நான் பெற்றிருக்கிறேன் என்று சுத்தோதனர் உள்ளம் தனக்குள்ளே பேசிக் கொண்டது.

இன்னுமொரு நிகழ்ச்சி சுத்தோதனருடைய மனத்திரையிலே படம் விரித்தது. அரண்மனையிலிருந்து சிறுவர் கூட்டம் ஒன்று ரோகிணியாற்றை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அரண்மனைப் பூங்காவை யொட்டி யிருந்த ஆற்றங்கரையில் ஒன்று கூடி விளையாடுவதற்காகத்தான் அச்சிறுவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பூங்காவின் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தபோது தலைக்கு மேலே ஒரு தாராக் கூட்டம் பறந்து சென்றது. சித்தார்த்தனும் மற்ற சிறுவர்களும் பட படக்கும் பறவைகளின் இறக்கை ஒலி கேட்டு மேல் நிமிர்ந்து பார்த்தார்கள். அப்போது சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த தேவதத்தன் எனும் சிறுவன், தன் வில்லை வளைத்து தாராக் கூட்டத்தை நோக்கி ஓர் அம்பை எய்தான்.

பாவம்! ஒரு தாராப் பறவை அம்பு பட்டுச் சாய்ந்து கீழே விழுந்தது. அது நடந்து சென்று கொண்டிருந்த சித்தார்த்தனின் எதிரில் அவன் காலடியில் வந்து வீழ்ந்தது.

சித்தார்த்தன் குனிந்து அந்தப் பறவையை எடுத்தான். குருதி வழியும் அதன் உடலைக் கண்டு உருகி மனங் கசிந்தான். எவ்வளவு மெதுவாக எடுத்தால் பறவைக்கு வேதனை குறைவாக இருக்குமோ, அவ்வளவு மெதுவாக அதன் உடலில் பாய்ந்திருந்த அம்பை உருவி வெளியே எடுத்தான். புண்ணைக் கழுவித் துடைத்து, குருதி மேலும் வெளிப்படாதபடி புண் வாயை அடைத்துத் துணி வைத்துக் கட்டினான்.

தாரா இனிப் பிழைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு தான் அவனுடைய பணிகள் நின்றன.

“சித்தார்த்தா, இந்தத் தாராவுக்கும் உனக்கும் முன்னமேயே உறவிருக்கிறதோ? நேராக உன் காலடியில் வந்து தஞ்சமடைந்து விட்டதே. நீயும், அதைக் காப்பாற்றி விட்டாயே!" என்று கேட்டான் கூட இருந்த ஒரு சிறுவன். "ஆம்' இதுவரை எனக்கும் இதற்கும் உறவு இருந்ததோ இல்லையோ, இனிமேல் நிச்சயமாக உண்டு. நான் இந்தப் பறவையை வளர்க்கப் போகிறேன்" என்று கூறிச் சோர்ந்து கிடந்த பறவையைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டான் சித்தார்த்தன்.

அப்போது சிறிது தூரத்திலிருந்து ஒரு பையன் ஓடிவந்தான்.

"சித்தார்த்தா, இந்தத் தாராவை தேவதத்தன் வாங்கிக் கொண்டுவரச் சொன்னான்” என்றான் அந்தச் சிறுவன்.

“தேவதத்தனா? அவன் எதற்கு வாங்கி வரச் சொன்னான்?” என்று கேட்டான் சித்தார்த்தன்.

"தேவதத்தன் தான் அம்பெய்து இந்தப் பறவையை வீழ்த்தினான். அது அவனைச் சேர வேண்டியதுதானே" என்று நியாயம் பேசினான் அந்தச் சிறுவன்.

“தேவதத்தன் அம்பு எய்து இதைக் கொல்லப் பார்த்தான். நான் காயத்துக்குக் கட்டுப்போட்டு இதைக் காப்பாற்றிவிட்டேன். நெஞ்சில் கைவைத்துச் சொல். இது யாருக்குச் சொந்தம்? கொல்ல முயன்றவனுக்கா? காப்பாற்றியவனுக்கா?", என்று சித்தார்த்தன் கேட்டான்.

“காப்பாற்றியவனுக்குத்தான் சொந்தம்!" என்று கூட இருந்த சிறுவர்கள் சித்தார்த்தனோடு சேர்ந்துகொண்டு பேசினார்கள்.

தாராவை வாங்கிச் செல்ல வந்த பையன் ஏமாற்றத்தோடு திரும்பினான். தேவதத்தனிடம் போய் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினான்.

சித்தார்த்தன் தாராவைக் கொடுக்க முடியாதென்று சொன்னது கேட்டு தேவதத்தன் சீறினான்; ஆத்திரப்பட்டான். அவனும் அரச குலத்தைச் சேர்ந்தவன் தான். சித்தார்த்தனுக்கு உறவினன்தான். ஆனால், இளவரசனை அதுவும் சுத்தோதனருடைய செல்லக் குழந்தையை எதிர்த்து அவன் என்ன செய்துவிட முடியும்.

சித்தார்த்தன் அந்தத் தாரா குணமடையும்வரை வைத்திருந்து பிறகு அதைச் சுதந்திரமாகப் பறந்து செல்லும்படி விட்டு விட்டான்

இந்த நிகழ்ச்சியைச் சிறுவர்கள் சொல்லக் கேட்டது முதல் சுத்தோதனருக்கு இருப்புக் கொள்ளவில்லை. இவ்வளவு கருணை ஓர் இளவரசனுக்கு இருக்குமா? இருக்க முடியுமா? இருக்கலாமா? ஒரு பண்பட்ட ஞானிக்குத்தான் இந்தக் குணம் ஏற்றது. அப்படியானால் சித்தார்த்தன் ஞானியாகத்தான் திகழ்வானா? அரண்மனை வாழ்வைத் துறந்துவிடுவானா? என்று நினைத்தபோது சுத்தோதன மாமன்னருக்கு சிந்தை குழம்பியது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் அவர் மனத்தைக் கலக்கியது. அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கானகம் செல்லாமல் சித்தார்த்தனைத் தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்டு என்ன செய்யலாமென்று சிந்தித்துத் திட்டங்கள் வகுத்தார்.

கவலையே தெரியாமல் வளர்த்தால் இளவரசனுக்குக் கானக நாட்டம் எழாது என்று முடிவு கட்டினார். உலகில் உள்ள கவலைகள் ஒன்றுகூட அவனுக்கு ஏற்படக்கூடாது. மனிதர்களாலும் விலங்குகளாலும் ஏற்படுகின்ற துன்பம் மட்டுமல்லாமல் காலத்தால் ஏற்படுகின்ற கவலைகளும்கூட சித்தார்த்தனை அணுகக் கூடாது என்று அவர் முடிவு செய்தார்.

வெயிலின் கடுமையோ பனியின் கொடுமையோ மழையின் குளுமையோ சித்தார்த்தன் உடலைத் தீண்டித் தொல்லை கொடுக்கக் கூடாது என்று அவர் முடிவு செய்தார்.

உடனே அவர் தம் அரண்மனையை அடுத்தாற்போல் மூன்று மாளிகைகள் கட்ட ஏற்பாடு செய்தார்.

ஒரு மாளிகை கார் காலத்தில் வசிப்பதற்கு ஏற்றதாயிருந்தது. மழைக் காற்றின் ஊதலோசையும். இடியின் உறுமலோசையும், மின்னல் வீச்சின் ஒளியும் உள் நுழையாதபடியான அமைப்புடன் கைதேர்ந்த கட்டிடக் கலைஞர்களைக்கொண்டு அந்த மாளிகையைக் கட்டி முடித்தார் சுத்தோதனர்.

இரண்டாவது மாளிகை கோடை காலத்தில் இருப்பதற்குப் பொருத்தமாயிருந்தது. வெப்பம் உள் நுழையாதவாறு மாளிகையைச் சுற்றிலும் அசோக மரங்கள் வளர்க்கப் பெற்றிருந்தன. இடைவிடாது பீச்சிப் பாய்ந்து, கொண்டிருக்கும் நீரூற்றுக்கள் மாளிகையின் உள்ளும் புறமும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. நல்ல காற்றோட்டமுள்ளதாகவும் கோடையின் வெப்பம் சிறிதும் தாக்காதவாறும் அமைக்கப் பெற்றிருந்தது அம்மாளிகை.

மூன்றாவது மாளிகை பனிக் காலத்தில் வாசம் செய்வதற்குத் தக்கதாயிருந்தது. வாட்டும் குளிர்காற்று உள் நுழையாதபடி செய்யப் பெற்றிருந்ததுடன், ஆங்காங்கே கணப்புக்களும் அமைக்கப் பெற்று வாடைக் காற்றின் கொடுமையை அகற்றிக் கொண்டிருந்தன.

ஆண்டின் மூன்று பருவங்களிலும் சித்தார்த்தன் இந்த மாளிகைகளில் மாறிமாறி இருந்துவந்தான். மூன்று மாளிகைகளும் எடுப்பான பார்வையும், சுற்றிச் சூழ்ந்த அழகான பூங்காக்களும் அமைந்து இன்ப உலகங்களாகக் காட்சியளித்தன.

உரிய பருவத்தில் சித்தார்த்தனுக்குத் திருமணம் செய்து வைத்து விட்டார் சுத்தோதனர். சித்தார்த்தனுக்குத் தகுந்த பெண்ணைத் தேடி அவர் அலைந்துகொண்டிருக்க நேரவில்லை. அவனுக்குப் பொருத்தமான பெண் அருகிலேயே இருந்தாள். முறைப் பெண்ணாக இருந்த இளவரசி யசோதரை அழகியாக இருந்ததுடன் அரசர் நினைத்தபடி சித்தார்த்தனை வைத்துக் கொள்ளக்கூடிய நற்குணவதியாகவுமிருந்தாள். மென்மையான அவளுடைய நல்லியல்புகளும், அமைதியாகவும் பொறுமையாகவும், அடக்கமாகவும் இருக்கும் குணச் சிறப்பும் பொருந்தியவளாக இருந்த அவளைச் சித்தார்த்தனுக்கு மணமுடித்து வைத்தார் மன்னர்.

ஏராளமான பொருட் செலவில் திருமணம் சீரும் சிறப்புமாக நடந்தது. சித்தார்த்தனும் அழகி யசோதரையுடன் இன்பமாக இல்லறம் நடத்தினான். சித்தார்த்தனும் யசோதரையும் அன்புடன் இன்பமாக வாழ்வதைக் கண்ட பிறகுதான், சுத்தோதனர் மனக்கவலையில் பெரும்பகுதி தீர்ந்தது. இனிமேல் தன் மகன் துறவியாக மாட்டான் என்ற ஓர் உறுதி அவர் உள்ளத்திலே வளரத் தலைப்பட்டது. இருந்தாலும் அவர் தம் மகன் உலக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளாதபடியே பார்த்துக்கொண்டு வந்தார். ஏனெனில், திடீரென்று அவன் மனம் மாறிவிட்டால் என்ன செய்வதென்ற ஓர் அச்சம் சிறிதளவு அவர் மனத்தில் இருக்கத்தான் செய்தது.

இப்படி சுத்தோதனர் ஓரளவு கவலை நீங்கி இருந்தபோதுதான் அவருடன் பிறந்த தம்பி, அந்தப்புரமே கதியென்று சித்தார்த்தன் கிடப்பது அரசகுலத்து மாவீரர்களுக்கு ஏற்றதல்ல என்ற உண்மையை நினைவு படுத்தினான்.

யார் என்ன சொன்ன போதிலும் சித்தார்த் தன் அசாதாரண ஆற்றல் படைத்த மாவீரன் என்பதிலே சுத்தோதனருக்குச் சிறிது கூட ஐயம் இல்லை. தன்னுடைய ஏற்பாட்டின் பேரில் தான் அவன் அந்தப்புரமே கதியென்று கிடக்கிறான் என்ற உண்மையையும் அவர் மறந்து விடவில்லை.

ஆகவே, அவர் தன் தம்பியையும், கூடி யிருந்த உறவினர்களையும் நோக்கி, “சித்தார்த்தன் நீங்கள் நினைப்பது போல் கோழையல்ல; திறமையற்றவனுமல்ல. காலம் வரும்போது அவனுடைய ஆற்றலைக் காண்பீர்கள் என்று உறுதி மிகுந்த குரலில் கூறினார்.

அவர் எவ்வளவு உறுதியான முறையில் கூறிய போதிலும் கூடியிருந்த உறவினர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை.

இந்தப் பேச்சு, இளவரசன் வீரமற்றவனாக விளங்கினான் என்ற பேச்சு அந்த விருந்து நிகழ்ச்சிக்குப் பிறகு எங்கும் பரவியது. நகரின் முக்கிய மன்றங்களிலும், அரண்மனை அலுவலகங்களிலும், அந்தப்புர வேலைக்காரர்கள் கூடும்போதும், பொழுது போக்குத்துணையாக இந்தப் பேச்சுப் பயன்பட்டது.

“இளவரசன் இப்படி யிருந்தால் நம் நாடு என்ன ஆகும்? பெரிய அரசருக்குப் பிறகு இந்தப் பேரரசு எப்படி நடைபெறும்? எதிரிகள் சுற்றி வளைத்துக் கொள்வார்களே! என்றெல்லாம் மக்களும் அரசியல் அலுவலாளர்களும் ஆங்காங்கே பேசிக்கொள்ளத் தொடங்கினர்.

சுத்தோதனரின் கட்டுத்திட்டங்களை யெல்லாம் மீறி இந்தப் பேச்சு சித்தார்த்தனின் செவிகளிலும் விழுந்தது.

“அப்படியா பேசிக் கொள்கிறார்கள்? நான் என் திறமையைக் காட்டுகிறேன் பார்!” என்று சித்தார்த்தன் தன் உயிர் நண்பன் ஒருவனிடம் கூறினான்.

சித்தார்த்தன் போட்டியில் ஈடுபட விரும்புகிறான் என்ற செய்தி கேட்டவுடன் சுத்தோதனர் பெருமகிழ்ச்சி யடைந்தார். உடனே போட்டிவிழா நடப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தார்.

குறிப்பிட்ட நாளொன்றில் போட்டி விழா நடைபெற்றது. நகரெங்கும் முரசறைபவர்கள் போட்டியாளர்களைக் கூவி அழைத்தார்கள். இளவரசனைப் போட்டியிலே எதிர்த்து நின்று வெல்லுபவர்களுக்குப் பரிசுகள் கிடைக்கும் என அறிவித்தார்கள். வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ளவும், போட்டியைக் காணவும் களத்தில் வந்து கூடினார்கள். வேடிக்கை பார்க்கப் பொதுமக்கள் திரண்டு வந்தார்கள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களும், பெருநிலக் கிழார்களும், வீரர்களும் சூரர்களும் போட்டியிலே கலந்து கொண்டார்கள்.

வில்லெய்வதிலே இளவரசனை வென்று வாகை சூட வந்த வீரர்கள் பலர். சிலம்ப வித்தையிலே சித்தார்த்தனைத் தோற்கடிக்க எண்ணிவந்த தீரர்கள் பலர். வாள் வீச்சிலே தோள் வலியைக் காட்டிப் பரிசுப் பொருளைத் தூக்கிக் கொண்டுபோக ஊக்கமுடன் வந்தவர்கள் பலர், மற்போரிலே மலர் வாகை சூட. வந்த மல்லர் பலர். இப்படி வந்தவர்களை யெல்லாம் அவரவர்களுக்குரிய துறையிலே மண்ணைக் கவ்வச் செய்து விண்ணை எட்டும் புகழ் பெற்றான் சித்தார்த்தன்.

அம்பெய்யும் கலையிலே அவனுக்கு நிகரில்லை என்று அந்நாளில் புகழ்பெற்றிருந்த தேவதத்தன் சித்தார்த்தன் திறமைக்கு முன்னாலே வெட்கித் தலைகுனிய நேர்ந்தது. அது போலவே, சிறந்த வாள் வீரன் என்று பல நாட்களாகப் புகழுடன் விளங்கிய நந்தன் சித்தார்த்தனின் சுழலும் வாளின் வேகங் கண்டு ஆற்றாமல் தோற்றுப் பின்வாங்கிவிட்டான்.

போட்டி விழாவிலே நடைபெற்ற அத்தனை போர்க்கலைகளிலும் வென்று புகழ்வாகை சூடி நின்ற சித்தார்த்தனை அந்த அளவிலே ஒரு மாவீரனாக ஏற்றுக்கொள்ள அங்கு கூடியிருந்த சாக்கிய வீரர்கள் மனம் துணியவில்லை.

கபிலவாஸ்து நகரிலே இருந்த திருக்கோயில் ஒன்றிலே ஒரு பெரிய வில் இருந்தது. அந்தப் பெரிய வில் சித்தார்த்தனின் பாட்டனார் சின்னகானு என்பவருடையது. சின்னகானு பெரிய போர்வீரர். மலையென உயர்ந்த தோளும், அகன்ற மார்பும் பொருந்திய வலியவர். அவருக்குப் பிறகு அந்தப் பெருவில்லை வளைக்கும் திறனுடையார் யாரும் பிறந்ததில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த வில்லை வளைத்து நாணேற்றுபவனே மாவீரன் என்று சாக்கிய வீரர்கள் தீர்மானித்தார்கள். எனவே, போட்டிக்கு வந்த வீர இளைஞர்கள் சின்னகானுவின் பெரிய வில் இருக்கும் திருக்கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இளமையும் துடிப்பும் கொண்ட அந்த வீர இளைஞர்கள் யாராலும் பருமையும் திண்மையும் கொண்ட அந்த வில்லை வளைக்க முடியவில்லை.

கடைசியாகச் சித்தார்த்தன் எழுந்தான். அந்த வில்லை நோக்கி நடந்தான். பருத்த அந்த வில்லை நிமிர்த்தினான். தரையில் ஒரு புறத்தை அழுத்தி மிக எளிதாக வளைத்துக் கண்மூடிக் கண் திறப்பதற்குள் நாண்பூட்டி விட்டான். நாண்பூட்டிய உடனே அதைத் தோளுக்கு நேரே தூக்கிப் பிடித்து அம்பொன்று பொருத்தி விண் என்ற ஒலியுடன் விடுத்தான். சித்தார்த்தன் விடுத்த அந்த அம்பு விண்வீதி வழியாக விரைந்து சென்று நகரின் எல்லை கடந்து காட்டுக்குள்ளே வெகு தொலைவிலே போய் விழுந்தது.

கூடியிருந்தவர்கள் பிரமித்து நின்றார்கள் இளவரசனைப் பற்றித் தாங்கள் எண்ணிக் கொண்டிருந்த தெல்லாம் எவ்வளவு தவறு என்று உணர்ந்தார்கள். பலபல பாராட்டுரைகள் கூறி மகிழ்ந்தார்கள்.

சாக்கிய குலம் விளங்கவந்த தனி வீரன் என்று மாவீரர்கள் கூடிச் சித்தார்த்தனைப் பாராட்டினார்கள்.

"எல்லா வகையாலும் நாடாளத் தகுதி பெற்ற ஓர் ஒப்பற்ற வீரனை மகனாகப் பெற்றேன்” என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தார் மாமன்னர் சுத்தோதனர்.

விருந்து மண்டபத்திலே அவரைக் கேள்வி கேட்ட தம்பி, “அண்ணா , சித்தார்த்தன் நம் குலத்தின் திருவிளக்காக விளங்குவான்!” என்று பொங்கும் இன்பத்துடன் கூறிய சொற்கள் சுத்தோதனரின் செவிகளிலே தேன் பாய்ச்சின.