தேன் சிட்டு/ஆமையும் முயலும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


ஆமையும் முயலும்


ஆமையும் முயலும் ஒட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட கதையைத் தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள். முயல் வெகு வேகமாகப் பாதித் தொலைவிற்கு ஓடிற்று. ஆமை அதற்குள்ளாகப் பத்தடிகூட நகரவில்லை. அதை அறிந்து இறுமாந்த முயல் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டுப் போகலாமே என்று செடி மறைவில் படுத்து நன்றாக உறங்கிவிட்டது. உள்ளந் தளராமல் விடா முயற்சியோடு ஊர்ந்து சென்ற ஆமை போட்டியிலே வெற்றி பெற்றது. ஆமையின் வெற்றியைக் கண்டு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் அளவில்லா மகிழ்ச்சி உண்டாகிறது. முயலைப்போல வேகமாகச் செல்லும் நாடுகள் உலகத்திலே பல உண்டு; ஆமைக் கூட்டத்திலே சேர்ந்த நாடுகளும் உண்டு. ஏன், நாடுகள் மட்டுமா இப்படிச் சாதி பிரிகின் றன? மனிதருக்குள்ளேயும் இவ்வாறு இனம் பிரிகின்றவர்கள் இருக்கிறார்கள். சில வகுப்பினர் எப்படியோ முயலின் வேகத்தைப் பெற்று முன்னேறியிருக்கிறார்கள்; சில வகுப்பினர் இப்பொழுதுதான் காலடியெடுத்துவைத்து நகரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆமைக்குள்ள விடாமுயற்சியும் மனத்திடமும் அவர்களுக்குண்டோ என்னவோ இனிமேல்தான் தெரிய வேண்டும். ஆனால் முயலை வெல்லவேண்டும் என்ற ஆவல் மட்டும் இருக்கிறது. இந்த ஆவல் ஆத்திரமாகவும் வெறியாகவுங்கூட மாறுவதுண்டு.

உலகத்தை நாம் நடுநிலைமையோடு நோக் கினாள் பலவேறு நாடுகளிலும், பலவேறு இனங்களிலும் இந்த இரண்டு சாதிகளினிடையே இன்று ஓயாத போட்டியிருப்பதை உணரலாம்.

வேகத்திலே பித்துக் கொண்டவர்கள் உண்டு. ஒலியின் வேகத்தை முந்திக்கொண்டு பாய்ந்து செல்லக்கூடிய விமானங்கள், படைக்கலங்கள் தோன்றிவிட்டன. அவற்றைக் கண்டுகூட அவர்கள் பித்தம் தெளியவில்லை. அவற்றைவிட வேகமாகச் செல்ல வேண்டுமென்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். வேகமே ஒரு வெறியாகி விடுகிறது.

ஒரே இடத்தில் நிலையாக அமர்ந்துகொண்டு அல்லது மெதுவாகத் தனிவழியில் சென்றுகொண்டு ஏதாவது ஒரு நல்ல கவிதையைப் படித்து அதன் கற்பனையோடு எனது உள்ளத்தையும் வேகமாக வானிலே பறக்கவிடுவதில் எனக்கு அடங்காத ஆசை யுண்டு. அந்த ஆசையால் மனோவேகங்கூடச் சில சமயங்களிலே எனக்கு ஆமை நடைபோலத் தோன்றும்.

"அரிய செயல்களைச் செய்து சாதிக்கக்கூடிய மனத்திடன் பெற்றவர்கள் செயலிலே ஈடுபடுகிறார்கள்; அப்படிப்பட்ட மனத்திடன் இல்லாதவர்களும் தன்னம்பிக்கை யற்றவர்களும் அவற்றைச் செய்து முடிப்பதாக மனக்கோட்டை கட்டிக் கொண்டு உளநிறைவு பெறுகிறார்கள்” என்று உளவியல் கூறுகிறது. ஆனால் மனக்கோட்டை கட்டு வதை நான் இங்கு குறிப்பிடவில்லை; கற்பனைத் திறனையே நான் உள்ளத்திற்கொண்டு பேசுகிறேன். எவ்விதமான மனக்கோட்டை கட்டுகிறவனும் அதற்குத் தன்னையே நாயகனாகக் கொள்ளுகிறான். வாழ்க்கை யிலே தன்னால் சாதித்துக்கொள்ள முடியாத இச்சை களை அவன் தன் ஆகாயக் கோட்டையிலே அனுபவித்து ஒருவிதமான உளநிறைவு பெறுகிறான். இவ்வித மனக்கோட்டை வேறு, கற்பனை வேறு. கற்பனை யிலே கற்பனை செய்பவனே நாயகனாக இருக்க வேண்டுமென்பதில்லை. இன்றிருப்பதைவிட இன்னும் சிறந்த அழகும், இன்பமும், உயர்வும் உலகத்திலே கண்டாகவேண்டுமென்று ஏங்கித் தவிக்கும் கற்பனையையே நான் கருத்திற்கொண்டுள்ளேன். அத்தகைய கற்பனையில்லாதவிடத்து அரிய பெரிய செயல்களைக் காண முடியாது. செயலிலே ஈடுபடுகிற வனுக்கும் கற்பனை இருக்கவேண்டும். கவிஞர்களும் கலைஞர் களும் சிந்தனையாளர்களும் தமது கற்பனைத் திறனால் ஒரு புதிய இன்ப உலகத்தை நமக்குக் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும்.

கவிஞனை மனத் திடனில்லாதவனேன்று தன்னம்பிக்கையற்றவனென்ருே கூற முடியாது. "வண்மை யில்லையோர் வறுமையின்மையால்..... உண்மை யில்லை பொய்யுரையிலாமையால்” என்று கற்பனை செய்வதற்கு எவ்வளவு மனத்திடனும் துணிச்சலும் வேண்டும்!

எண்ணிப் பார்த்தால் ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் முயலாக இருப்பான்; வேறொரு வகையில்  ஆமையாகிவிடுவான். எனது நண்பன் வீராசாமி பேசத் தொடங்கினால் நயாகரா அருவி தோற்றுப் போகும். உலகமே அதிரும்படி அவன் வேகமாகப் பேசுவான்; செய்கைக்கு வரும்போது ஆமையின் வேகத்தை அவனால் எட்டிப் பிடிக்க முடியாது. அதனால் நான் அவனை இழிவாகக் கருதுவதில்லை. அவனுடைய பேச்சில் வேகம் ஆயிரம் பேரைச் செயலிலே தூண்டுகிறது. அது பெரிய சாதனையல் லவா?

வேகமாகச் செயலிலே ஈடுபடுகின்றவர்களும் உள்ளத்திலே பதட்டமில்லாது அமைதியாக இருக்க வேண்டும் என்று நமது நூல்கள் கூறுகின்றன. கண் தெறிக்கும் வேகத்திலேயும் ஆழ்ந்த அமைதியைக் காணவேண்டும். முயலுக்குள்ளே ஆமையையும், ஆமைக்குள்ளே முயலையும் கண்டவன் வாழ்க்கையின் இரகசியத்தைக் கண்டவனாகிறான் என்று கூறும் போது அது ஒரு புதிர்போலத் தோன்றினலும் உண்மையான வாக்கு. வேகமாகச் சுற்றும் பம்பரம் ஓரிடத்திலே அசையாது நிற்கிறது; 'பம்பரம் தூங்குகிறது' என்று கூறுகிறோம். "அந்தப் பம்பரத்தின் தூக்கம் நமக்கு வாய்க்கவேண்டும். அந்தப் பம்பரத்தைப்போல நாம் சும்மா இருப்பதே சுகம்" என்று ஞானிகள் கூறுகிறார்கள். அண்டங்களையெல்லாம் படைத்தும் காத்தும் அழித்தும் அளவில்லாத தொழில் புரியும் இறைவன் சாந்திமயமானயோகத் திலிருக்கிறான். அவனுடைய ஆனந்த நடனம் செயலையும் சாந்தியையும் ஒருங்கே காட்டுகின்றது. வேகத்திற்கும் அதே வேளையில் அமைதிக்கும் அந்த நடனம் சின்னமாக விளங்குகின்றது. ஆமை முயல் கதையில் தொடங்கி நான் எங் கேயோ பறந்துவிட்டேன். ஆமைபோல அசைவற்றுக் கிடக்க விரும்பும் நான் மனத்திலே எப்படியெல்லாம் வேகமாகப் பறக்க விரும்புகிறேன் என்பதை இதிலிருந்து நீங்கள் கண்டுகொள்ளலாம். ஆனால் தத்துவ விசாரணை செய்வது இங்கு எனது நோக்கமல்ல.

வேகம் மிகுந்த முயலை ஊர்ந்து அசையும் ஆமை வெல்லவேண்டும் என்று உலகம் ஆசைப்படுகிறது. இல்லாவிட்டால் இந்த ஆமை முயல் போட்டிக் கதையிலே மக்களுக்கு நிரந்தரமாக இத்தனை இன்பம் பிறக்காது. ஊர்ந்து செல்லும் பிராணி ஒட்டம் மிகுந்த பிராணியை வெல்லவேண்டும் என்று மக்களின் உள்ளத்திலே பரிவு சுரக்கின்றது. இந்தப் பரிவு நிலைத்திருக்கும் வரையில் மனித இனத்திற்கு உய்வுண்டு என்பது எனது திடமான நம்பிக்கை. ஆமை முயலை வெல்லக்கூட வேண்டாம்; முயலோடு கூடவே செல்லவாவது உதவலாம் என்ற பரிவு எல்லோருடைய உள்ளத்திலும் தழைக்கவேண்டும். அப்பரிவு தழைத்திடும்போது போட்டி தானாகவே மறைந்துவிடும். முயல் தன் முதுகிலேயே ஆமையைச் சுமந்து செல்லவும் பரிவோடு முன்வரும்போது போட்டி ஏது? போட்டியில்லாது, அனைவரையும் உடன்கூட்டிச் செல்லவேண்டுமென்ற பரிவுடைய மனப்பான்மை ஓங்கவேண்டும். ஆமை முயல் கதையை நினைக்கும்பொழுதெல்லாம் எனக்கு இந்த ஆசை உண்டாகிறது. ஆமையிடம் மக்கள் காட்டும் பரிவைபுணர்ந்துநம்பிக்கையும் கூடவேபிறக்கின்றது.