தொந்தியைக் குறைக்க சுலபமான வழிகள்/4. தொந்தியின்றி வாழுங்கள்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

4. தொந்தியின்றி வாழுங்கள்

பட்டினி கிடந்தால் போகுமா?

வந்து விட்ட தொந்தியை விரட்டி விட வேண்டும் என்ற வேகத்துடனும் வெறியுடனும் விவரம் புரியாமலேயே, எத்தனையோ முறைகளையும், வழிகளையும் அன்பர்கள் பின் பற்றுகின்றார்கள்.

தொந்தியைத் தொலைக்கும் வழிகளைக் கூறி, விளம்பரங்கள் ஏதாவது வருகின்றனவா என்றும் பத்திரிக்கைகளைப் புரட்டிப் பார்க்கின்றனர். அக்கம் பக்கம் உள்ளவர்களை ஆலோசனை கேட்கின்றனர். அரை வேக்காடு போன்ற பல அறிவுரைகளை ஆர்வத்தோடும், அதிக அக்கறையுடனும் கேட்டு, செயலில் முனைகின்றனர்.

பல நாளாகியும், போதிய பலன் கிடைக்காது போகவே, ஒருவித சலிப்பும் வெறுப்பும் கொண்டு, தமக்குள்ளேயே ஒரு தீர்மானத்திற்கு வருகின்றனர். அது என்னவென்றால் பட்டினி கிடந்தால் தொந்தி போய்விடும் என்பது தான்.

பட்டினி கிடக்க முயன்று, பிறகு உண்ணும் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு வந்தாலும், தொந்தி தொலைவது இல்லையே? காரணம் என்ன?

உண்ணும் உணவின் அளவைக் குறைத்தாலும், பட்டினி கிடந்தாலும் பாதிக்கப்படுவது வயிறல்ல. பெருத்த தொந்தியல்ல. உடல்தான்.

உணவின் அளவு குறைவதால், உணவே இல்லாததால், உடலின் எடை குறையுமே தவிர, வயிற்றின் அளவு குறையாது. அவ்வாறு உடல் குறைவது உடலுக்கு அசதியையும் அயற்சியையும் தந்து, ஆபத்தான நிலைக்குக் கொண்டு போய்விடும்.

நாம் ஏன் உணவை உட்கொள்ளுகிறோம் என்பதை இந்த நேரத்தில் கருத்தில் கொள்வது மிகப் பொருத்தமாக அமையும். நாம் வேலை செய்யும் பொழுது உடலில் உள்ள தசைகளின் திசுக்கள் உடைந்தும், பழுதடைந்தும் போவதுடன், களைத்துப் போயும் விடுகின்றன.

அவ்வாறு பழுதடைந்தவைகளைப் புதுப்பிக்கவும், உணவின் ஊட்டம் உதவுகின்றது. அத்துடன் உடலில் உள்ள உஷண நிலையை ஒரே சீராக (98.4°F) நிலையாக வைத்திருக்கவும், மீண்டும் களைப்பின்றி பணியாற்றக் கூடிய சக்தியை அளிக்கவும் உணவு பயன்படுகின்றது.

ஆகவே, உணவைக் குறைப்பதானது உடலுக்கு ஊறு விளைவிப்பதாகும். அத்துடன், உடல் உறுப்புக்களும் தம் வலிமை இழந்து விடுகின்றன. மீண்டும் உணவினை அதிகம் உண்டால் உறுப்புகள் செழுமையடைந்து விடும் என்றால், பாதிக்கப்பட்ட உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவை தானே! பலக்குறைவு தானே!

படுக்கையில் கிடக்கும் நோயாளிகள் உணவின்றி பட்டினி கிடக்கலாம். திடகாத்திரமானவர்கள் ஏன் பசியை அடக்க வேண்டும். ஆகவே, பட்டினி கிடப்பவர்கள் இவ்வழியினைத் தவிர்த்து விட வேண்டும்.

உணவு சாப்பிட்டால் தானே வயிறு வளர்கிறது. அதற்குப் பதிலாகத் தண்ணீரை அதிகம் அருந்தலாமே என்று பலர் இப்படிச் செய்கின்றார்கள். பட்டினி கிடப்பது போல் தான் இந்த வழியும் இருக்கிறது.

தண்ணீரைக் குடித்து விட்டால், அது வயிற்றை நிரப்புவதுடன் பசியையும் தடுத்து விடுகிறது. பசி குறைந்தால், உணவு எடுபடாது. அதனால் உடல் எப்படியும் பாதிக்கப்படவே செய்கிறது.

இன்னும் சிலர் (Turkish bath) வென்னீரிலும் குளிர்ந்த நீரிலும் உடலை நனைத்து அழுத்திப் பிடித்து விடுவதன் மூலம் தொந்தியைத் தொலைத்து விடலாம் என்று உடலைக் கெடுத்துக் கொள்கின்றனர். அதனால் சளி பிடித்துக் கொள்ளவும், நெஞ்சு வலி ஏற்படவும் போன்ற பல வேதனைகள் தோன்றும்.

ஆகவே, வயிற்றைக் குறைப்பதற்கு வழி ஒன்றே ஒன்று தான் . அதுதான் உணவில் கவனமும் பயிற்சியைத் தினமும் கொள்வதாகும்.

உணவு முறை

முதலில் உணவு முறைகளில் உகந்த வழியினைக் கையாளும் சிறந்த நிலையினைக் காண்போம்.

வயிற்றைச் சுற்றிலும் கொழுப்புப் பரவி விடுவதால் தான் தொந்தி வந்திருக்கிறது என்று நமக்கு நன்றாகத் தெரியும். ஆகவே தொந்தியைத் தடுக்கவோ, குறைக்கவோ, வேண்டுமானால், கொழுப்பினைக் கொடுக்காத சத்துள்ள உணவு வகைகளை நாம் உண்ண வேண்டுவது முக்கியம் என்பது சொல்லாமலே விளங்குமன்றோ!

முடிந்தவரை உருளைக்கிழங்கு, வெண்ணெய், ரொட்டி, கேக், ஜாம், இனிப்பு வகைகள், சர்க்கரைப் பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்காமல் தடுத்து அளவோடு உண்ண வேண்டும்.

எண்ணெயில் செய்த வருவல், பொரியல் அனைத்தும் ஜீரணிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கடினத்தன்மை கொண்டிருப்பதால், தொந்தியைக் கரைக்கும் காலங்களிலும், அதற்கு முன்னும் பின்னும் முடிந்தவரை பொறியல் வறுவல்களில்லாமல் அவியல் உணவையே உட்கொள்ளவேண்டும்.

மதுபானத்தில் உள்ள ஆல்கஹாலில் கார்போஹைடிரேட்டும், அதிக சர்க்கரைச் சத்தும் இருப்பதும் வயிற்றில் அதிகக் கொழுப்பு வளர்வதற்குரிய காரணமாகும்.

ஆகவே, கார்போஹைடிரேட்டு என்று கூறப்படும் மாவு சர்க்கரை சத்துள்ள உணவு வகைகள், ஸ்டார்ச் சத்துள்ள பொருட்கள் , (Bakery items) சர்ககரையால் செய்யப்பட்டிருக்கும் எந்தப் பண்டமாக இருந்தாலும் சரி அவைகளை அகற்றி, புரோட்டின் சத்துள்ள உணவு வகைகளை அதிகமாகப் பயன்படுத்த வேண்டும்.

புரோட்டின் சத்துள்ள பொருட்களில் பழவகைகள், பச்சைக் காய்கறிகள், பசும்பால், பாலேடுகள் முதலியவற்றை அதிகம் உட்கொள்வதால், உடல் சமநிலையான சத்துக்களுடன் சமாளித்துக்கொள்ளும்.

இவ்வாறு உணவு வகைகளில் மாற்றத்துடன் உட்கொள்கின்ற நேரத்தில், மலச்சிக்கலையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மலச்சிக்கல் இருந்தாலும் வேறு பல நோய்கள் வழியிருப்பதால், பூரணமாக மலத்தை வெளியேற்றிட இன்னும் உணவில் அதிகமாக முட்டைகோசு, பசலைக் கீரை, காலி பிளவர், அதிக அளவில் வெங்காயம், முள்ளங்கி போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்கையில் வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பழச்சாறு தினம் ஒரு டம்ளர் அல்லது இரண்டு டம்ளர் பருகினால், தேவையான பலனையும் பெறலாம். ஆப்பிள் சாறும் ஆரஞ்சு பழச்சாறும் உடலுக்கு நல்ல சக்தியைக் கொடுத்து உள்ளுறுப்புக்களில் இருக்கும் கொழுப்புச் சக்தியையும் அழித்து நல்ல பயனைத் தரும்.

உறக்கமும் ஒரு காரணமே!

இனி, உறங்கும் பொழுது ஒரு சில முறையையும் பற்ற வேண்டியது மிக மிக முக்கியம்.

தலைக்கு ஒரு தலையணை வைத்துக் கொண்டு, நீட்டியிருக்கும் கால்களுக்கு இரண்டு தலையணை வைத்து. அல்லது தலைக்கு வைத்திருக்கும் அளவுக்கு மேலே தலையணை கால்களுக்கு வைத்துப் படுத்து உறங்குவோர் உண்டு. அவ்வாறு தலைப்பாகம் தாழ்ந்தும், கால்பாகம் உயர்ந்தும் படுத்திருப்பது நல்லதல்ல.

அத்துடன் கால்களுக்கிடையிலே தலையணையைத் திணித்துக் கொண்டு உறங்குவதும் நல்ல முறையல்ல. குறுக்கிப் படுத்திருந்தாலும், நீட்டிப் படுத்திருந்தாலும் வயிறு தொய்ந்த நிலையில் இல்லாமல் படுத்து உறங்கும் பழக்கம் வயிறு பெருக்காமல் காப்பாற்றும்.

பகலில் உறங்குவதால் உடல் பெருத்து விடும் வயிறு பெருத்து விடும் என்றும் ஒரு ஐதிகம் உண்டு நன்றாகக் களைத்துப் போகும் அளவுக்கு உழைப்பவர்கள் ஒரு சிறிதுநேரம் படுத்துத் தூங்கி எழுவது நல்லது. அதை ஆங்கிலத்தில் NAP என்பார்கள். தமிழிலே கோழித்துக்கம் என்றும் சொல்வார்கள்.

அயர்ந்து அதிக நேரம் பகலில் உறங்குவது உடலுக்கு நல்லதல்ல. அது இரவு தூக்ததைக் கெடுத்துவிடும். நன்றாக இரவில் தூங்கினால்தான் உண்ட உணவு சீரணமாகும். இல்லையேல் விழித்திருப்பது கண்ணுக்கும் வயிற்றுக்கும் மற்றும் உடலுக்கே கேடு பயப்பதாகும்.

இனி தொந்தியைத் தொலைப்பதற்குரிய ஒரே துணையான உடற்பயிற்சியைப் பற்றி விளக்குவோம்.

உடற்பயிற்சி என்றதும், எதையோ தூக்கச் சொல்வார்கள். என்னென்னமோ பண்ணச் செய்வார்கள் என்ற பயம் எல்லோருக்குமே வருவது இயல்புதான். அந்த அளவுக்கு உடற்பயிற்சியைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக, பொய் வதந்தியை பொல்லாதவர்கள் பரப்பி விட்டிருக்கின்றார்கள்.

இங்கே நாம் கூறப் போகின்ற பயிற்சி எந்த எடையையும் தூக்கவோ, அந்தரத்தில் தொங்கவோ இருக்கும் வகையில் அல்ல. உடலை இயக்கப் போகிறோம். முறுக்கப் போகிறோம் என்பது அல்ல.

உடல் உறுப்புக்களைப் பதமாக்கப் போகிறோம். வதமாக்குவது அல்ல. உடலை இன்பத் தலமாக்கப் போகிறோம். துன்பக் களமாக்க அல்ல என்பதை முதலில் உணர வேண்டும்.

பயிற்சி என்றால் என்ன?

ஆகவே, உடற்பயிற்சி என்றதும், முன்னே வைத்துக் கொண்டிருக்கின்ற முரணான கருத்துக்களை முற்றுந் துறந்துவிட்டு, மறந்துவிட்டு, உடற்பயிற்சி என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் போதும். பூரிப்புதானே வந்து விடும்.

நாம் பேசும்பொழுதும், நடக்கும் பொழுதும் கைகால்களை அவயங்களை அசைக்கிறோமே, அது இயற் கையான இயல்பான இயக்கம். அதனை இயற்கையான அசைவு (Movement) என்பார்கள்.

ஏதாவது வாழ்வின் தேவைக்காக உடலை நாமே வலிந்து இயக்குகிறோமே அதற்கு வேலை (work) என்று பெயர். அதாவது பயன் கருதி தேகத்தை உழைப்பில் ஆழ்த்துவது.

உடற் பயிற்சி எண் பது, இயற்கையான அசைவுகளுடன், உடல் நலம் வேண்டும் என்று எதிர்பார்க்கும் பயனை எதிர்நோக்கி, அதிக சுவாசத்தை உள்ளிழுத்து வெளிவிட்டு, ஒரு முறையான ஒழுங்கான அசைவுகளை உடல் உறுப்புகளுக்குத் தருவதுதான் உடற்பயிற்சியாகும்.

உடலை உல்லாசமாக, உற்சாகமாக வாழ வைக்கப்பயிலுதல், பயிற்றுதல் தான் உடற்பயிற்சியாகும்.

உடல் உறுப்புக்களை இயக்கி, இயக்குவதன் மூலம் நுரையீரலை உயிர்க்காற்றால் நிரப்பி அதன் மூலம் இதயத்தை வலிமையாக்கி, இரத்தத்தை விரைவுபடுத்திக் கழிவுப் பொருட்களை விரைவாக வெளியேற்றி, உடலைத் தூய்மைப்படுத்தவும் உடலை மேன்மைப்படுத்தவும், மெருகேற்றவும் மேற் கொள்கொள்கின்ற முயற்சியே உடற்பயிற்சியாகும்.