தொல்காப்பியம்/சொல்லதிகாரம்/எச்சவியல்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் என்று
அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே. 1
அவற்றுள்,
இயற்சொல்தாமே
செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி
தம் பொருள் வழாமை இசைக்கும் சொல்லே. 2
ஒரு பொருள் குறித்த வேறு சொல் ஆகியும்
வேறு பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
இரு பாற்று என்ப திரிசொல் கிளவி. 3
செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி. 4
வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே. 5
சிதைந்தன வரினும் இயைந்தன வரையார். 6
அந் நாற் சொல்லும் தொடுக்கும் காலை
வலிக்கும் வழி வலித்தலும் மெலிக்கும் வழி மெலித்தலும்
விரிக்கும் வழி விரித்தலும் தொகுக்கும் வழித் தொகுத்தலும்
நீட்டும் வழி நீட்டலும் குறுக்கும் வழிக் குறுக்கலும்
நாட்டல் வலிய என்மனார் புலவர். 7
நிரல்நிறை சுண்ணம் அடிமறி மொழிமாற்று
அவை நான்கு என்ப மொழி புணர் இயல்பே. 8
அவற்றுள்,
நிரல்நிறைதானே
வினையினும் பெயரினும் நினையத் தோன்றி
சொல் வேறு நிலைஇ பொருள் வேறு நிலையல். 9
சுண்ணம்தானே
பட்டாங்கு அமைந்த ஈர் அடி எண் சீர்
ஒட்டு வழி அறிந்து துணித்தனர் இயற்றல். 10
அடிமறிச் செய்தி அடி நிலை திரிந்து
சீர் நிலை திரியாது தடுமாறும்மே. 11
பொருள் தெரி மருங்கின்
ஈற்று அடி இறு சீர் எருத்துவயின் திரியும்
தோற்றமும் வரையார் அடிமறியான. 12
மொழிமாற்று இயற்கை
சொல் நிலை மாற்றி பொருள் எதிர் இயைய
முன்னும் பின்னும் கொள் வழிக் கொளாஅல். 13
த ந நு எ எனும் அவை முதல் ஆகிய
கிளை நுதற் பெயரும் பிரிப்பப் பிரியா. 14
இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல் என்று
அவை மூன்று என்ப ஒரு சொல் அடுக்கே. 15
வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே
வினையின்தொகையே பண்பின்தொகையே
உம்மைத்தொகையே அன்மொழித்தொகை என்று
அவ் ஆறு என்ப தொகைமொழி நிலையே. 16
அவற்றுள்,
வேற்றுமைத்தொகையே வேற்றுமை இயல. 17
உவமத்தொகையே உவம இயல. 18
வினையின்தொகுதி காலத்து இயலும். 19
வண்ணத்தின் வடிவின் அளவின் சுவையின் என்று
அன்ன பிறவும் அதன் குணம் நுதலி
இன்னது இது என வரூஉம் இயற்கை
என்ன கிளவியும் பண்பின்தொகையே. 20
இரு பெயர் பல பெயர் அளவின்பெயரே
எண்ணியற்பெயரே நிறைப்பெயர்க் கிளவி
எண்ணின்பெயரொடு அவ் அறு கிளவியும்
கண்ணிய நிலைத்தே உம்மைத்தொகையே. 21
பண்பு தொக வரூஉம் கிளவியானும்
உம்மை தொக்க பெயர்வயினானும்
வேற்றுமை தொக்க பெயர்வயினானும்
ஈற்று நின்று இயலும் அன்மொழித்தொகையே. 22
அவைதாம்,
முன் மொழி நிலையலும் பின் மொழி நிலையலும்
இரு மொழி மேலும் ஒருங்குடன் நிலையலும்
அம் மொழி நிலையாது அல் மொழி நிலையலும்
அந் நான்கு என்ப பொருள் நிலை மரபே. 23
எல்லாத் தொகையும் ஒரு சொல் நடைய. 24
உயர்திணை மருங்கின் உம்மைத்தொகையே
பலர்சொல் நடைத்து என மொழிமனார் புலவர். 25
வாரா மரபின வரக் கூறுதலும்
என்னா மரபின எனக் கூறுதலும்
அன்னவை எல்லாம் அவற்று அவற்று இயல்பான்
இன்ன என்னும் குறிப்புரை ஆகும். 26
இசைப் படு பொருளே நான்கு வரம்பு ஆகும். 27
விரை சொல் அடுக்கே மூன்று வரம்பு ஆகும். 28
கண்டீர் என்றா கொண்டீர் என்றா
சென்றது என்றா போயிற்று என்றா
அன்றி அனைத்தும் வினாவொடு சிவணி
நின்ற வழி அசைக்கும் கிளவி என்ப. 29
கேட்டை என்றா நின்றை என்றா
காத்தை என்றா கண்டை என்றா
அன்றி அனைத்தும் முன்னிலை அல் வழி
முன்னுறக் கிளந்த இயல்பு ஆகும்மே. 30
இறப்பின் நிகழ்வின் எதிர்வின் என்ற
சிறப்புடை மரபின் அம் முக் காலமும்
தன்மை முன்னிலை படர்க்கை என்னும்
அம் மூ இடத்தான் வினையினும் குறிப்பினும்
மெய்ம்மையானும் இவ் இரண்டு ஆகும்
அவ் ஆறு என்ப முற்று இயல் மொழியே. 31
எவ் வயின் வினையும் அவ் இயல் நிலையும். 32
அவைதாம்,
தம்தம் கிளவி அடுக்குந வரினும்
எத் திறத்தானும் பெயர் முடிபினவே. 33
பிரிநிலை வினையே பெயரே ஒழியிசை
எதிர்மறை உம்மை எனவே சொல்லே
குறிப்பே இசையே ஆயீர் ஐந்தும்
நெறிப்படத் தோன்றும் எஞ்சு பொருட் கிளவி. 34
அவற்றுள்,
பிரிநிலை எச்சம் பிரிநிலை முடிபின. 35
வினையெஞ்சுகிளவிக்கு வினையும் குறிப்பும்
நினையத் தோன்றிய முடிபு ஆகும்மே
ஆவயின் குறிப்பே ஆக்கமொடு வருமே. 36
பெயரெஞ்சுகிளவி பெயரொடு முடிமே. 37
ஒழியிசை எச்சம் ஒழியிசை முடிபின. 38
எதிர்மறை எச்சம் எதிர்மறை முடிபின. 39
உம்மை எச்சம் இரு ஈற்றானும்
தன் வினை ஒன்றிய முடிபு ஆகும்மே. 40
தன்மேல் செஞ்சொல் வரூஉம் காலை
நிகழும் காலமொடு வாராக் காலமும்
இறந்த காலமொடு வாராக் காலமும்
மயங்குதல் வரையார் முறைநிலையான. 41
என என் எச்சம் வினையொடு முடிமே. 42
எஞ்சிய மூன்றும் மேல் வந்து முடிக்கும்
எஞ்சு பொருட் கிளவி இல என மொழிப. 43
அவைதாம்,
தம்தம் குறிப்பின் எச்சம் செப்பும். 44
சொல் என் எச்சம் முன்னும் பின்னும்
சொல் அளவு அல்லது எஞ்சுதல் இன்றே. 45
அவையல் கிளவி மறைத்தனர் கிளத்தல். 46
மறைக்கும் காலை மரீஇயது ஒராஅல். 47
ஈ தா கொடு எனக் கிளக்கும் மூன்றும்
இரவின் கிளவி ஆகு இடன் உடைய. 48
அவற்றுள்,
ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே. 49
தா என் கிளவி ஒப்போன் கூற்றே. 50
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. 51
கொடு என் கிளவி படர்க்கை ஆயினும்
தன்னைப் பிறன் போல் கூறும் குறிப்பின்
தன்னிடத்து இயலும் என்மனார் புலவர். 52
பெயர்நிலைக் கிளவியின் ஆஅகுநவும்
திசைநிலை கிளவியின் ஆஅகுநவும்
தொல் நெறி மொழிவயின் ஆஅகுநவும்
மெய்ந் நிலை மயக்கின் ஆஅகுநவும்
மந்திரப் பொருள்வயின் ஆஅகுநவும்
அன்றி அனைத்தும் கடப்பாடு இலவே. 53
செய்யாய் என்னும் முன்னிலை வினைச்சொல்
செய் என் கிளவி ஆகு இடன் உடைத்தே. 54
முன்னிலை முன்னர் ஈயும் ஏயும்
அந் நிலை மரபின் மெய் ஊர்ந்து வருமே. 55
கடி சொல் இல்லை காலத்துப் படினே. 56
குறைச்சொற் கிளவி குறைக்கும் வழி அறிதல். 57
குறைத்தன ஆயினும் நிறைப் பெயர் இயல. 58
இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச் சொல்லே. 59
உரிச்சொல் மருங்கினும் உரியவை உரிய. 60
வினையெஞ்சுகிளவியும் வேறு பல் குறிய. 61
உரையிடத்து இயலும் உடனிலை அறிதல். 62
முன்னத்தின் உணரும் கிளவியும் உளவே
இன்ன என்னும் சொல் முறையான. 63
ஒரு பொருள் இரு சொல் பிரிவு இல வரையார். 64
ஒருமை சுட்டிய பெயர் நிலைக் கிளவி
பன்மைக்கு ஆகும் இடனுமார் உண்டே. 65
முன்னிலை சுட்டிய ஒருமைக் கிளவி
பன்மையொடு முடியினும் வரை நிலை இன்றே
ஆற்றுப்படை மருங்கின் போற்றல் வேண்டும். 66
செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்
மெய் பெறக் கிளந்த கிளவி எல்லாம்
பல் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது
சொல் வரைந்து அறிய பிரித்தனர் காட்டல். 67
சொல்லதிகாரம் முற்றிற்று