உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்காப்பியம்/பொருளதிகாரம்/செய்யுளியல்

விக்கிமூலம் இலிருந்து


மாத்திரை எழுத்து இயல் அசை வகை எனாஅ

யாத்த சீரே அடி யாப்பு எனாஅ

மரபே தூக்கே தொடை வகை எனாஅ

நோக்கே பாவே அளவு இயல் எனாஅ

திணையே கைகோள் கூற்று வகை எனாஅ

கேட்போர் களனே கால வகை எனாஅ

பயனே மெய்ப்பாடு எச்ச வகை எனாஅ

முன்னம் பொருளே துறை வகை எனாஅ

மாட்டே வண்ணமொடு யாப்பு இயல் வகையின்

ஆறு தலை இட்ட அந் நால் ஐந்தும்

அம்மை அழகு தொன்மை தோலே

விருந்தே இயைபே புலனே இழைபு எனாஅப்

பொருந்தக் கூறிய எட்டொடும் தொகைஇ

நல் இசைப் புலவர் செய்யுள் உறுப்பு என

வல்லிதின் கூறி வகுத்து உரைத்தனரே. 1


அவற்றுள்,

மாத்திரை வகையும் எழுத்து இயல் வகையும்

மேல் கிளந்தனவே என்மனார் புலவர். 2


குறிலே நெடிலே குறில் இணை குறில் நெடில்

ஒற்றொடு வருதலொடு மெய்ப் பட நாடி

நேரும் நிரையும் என்றிசின் பெயரே. 3


இரு வகை உகரமொடு இயைந்தவை வரினே

நேர்பும் நிரைபும் ஆகும் என்ப

குறில் இணை உகரம் அல் வழியான. 4


இயலசை முதல் இரண்டு ஏனவை உரியசை. 5


தனிக் குறில் முதலசை மொழி சிதைந்து ஆகாது.6


ஒற்று எழுத்து இயற்றே குற்றியலிகரம். 7


முற்றியலுகரமும் மொழி சிதைத்துக் கொளாஅ

நிற்றல் இன்றே ஈற்று அடி மருங்கினும். 8


குற்றியலுகரமும் முற்றியலுகரமும்

ஒற்றொடு தோன்றி நிற்கவும் பெறுமே. 9


அசையும் சீரும் இசையொடு சேர்த்தி

வகுத்தனர் உணர்த்தல் வல்லோர் ஆறே. 10


ஈர் அசை கொண்டும் மூ அசை புணர்த்தும்

சீர் இயைந்து இற்றது சீர் எனப்படுமே. 11


இயலசை மயக்கம் இயற்சீர் ஏனை

உரியசை மயக்கம் ஆசிரிய உரிச்சீர். 12


முன் நிரை உறினும் அன்ன ஆகும். 13


நேர் அவண் நிற்பின் இயற்சீர்ப் பால. 14

இயலசை ஈற்று முன் உரியசை வரினே

நிரையசை இயல ஆகும் என்ப. 15


அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே. 16


ஒற்று அளபெடுப்பினும் அற்று என மொழிப. 17


இயற்சீர் இறுதி முன் நேர் அவண் நிற்பின்

உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப. 18


வஞ்சிச் சீர் என வகை பெற்றனவே

வெண் சீர் அல்லா மூ அசை என்ப. 19


தன் பா அல் வழி தான் அடைவு இன்றே. 20


வஞ்சி மருங்கின் எஞ்சிய உரிய. 21


வெண்பா உரிச்சீர் ஆசிரிய உரிச்சீர்

இன் பா நேரடிக்கு ஒருங்கு நிலை இலவே. 22


கலித்தளை மருங்கின் கடியவும் பெறாஅ. 23


கலித்தளை அடிவயின் நேர் ஈற்று இயற்சீர்

நிலைக்கு உரித்து அன்றே தெரியுமோர்க்கே. 24


வஞ்சி மருங்கினும் இறுதி நில்லா. 25


இசைநிலை நிறைய நிற்குவது ஆயின்

அசைநிலை வரையார் சீர் நிலை பெறவே. 26


இயற்சீர்ப் பாற்படுத்து இயற்றினர் கொளலே

தளை வகை சிதையாத் தன்மையான. 27


வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே. 28


இன் சீர் இயைய வருகுவது ஆயின்

வெண்சீர் வரையார் ஆசிரிய அடிக்கே. 29


அந் நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்

ஒன்றுதல் உடைய ஓர் ஒரு வழியே. 30


நாற் சீர் கொண்டது அடி எனப்படுமே. 31


அடி உள்ளனவே தளையொடு தொடையே. 32


அடி இறந்து வருதல் இல் என மொழிப. 33


அடியின் சிறப்பே பாட்டு எனப்படுமே. 34


நால் எழுத்து ஆதி ஆக ஆறு எழுத்து

ஏறிய நிலத்தே குறளடி என்ப. 35


ஏழ் எழுத்து என்ப சிந்தடிக்கு அளவே

ஈர் எழுத்து ஏற்றம் அவ் வழியான. 36


பத்து எழுத்து என்ப நேரடிக்கு அளவே

ஒத்த நால் எழுத்து ஏற்றலங்கடையே. 37


மூ ஐந்து எழுத்தே நெடிலடிக்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 38


மூ ஆறு எழுத்தே கழிநெடிற்கு அளவே

ஈர் எழுத்து மிகுதலும் இயல்பு என மொழிப. 39


சீர் நிலைதானே ஐந்து எழுத்து இறவாது

நேர் நிலை வஞ்சிக்கு ஆறும் ஆகும். 40


எழுத்து அளவு எஞ்சினும் சீர் நிலைதானே

குன்றலும் மிகுதலுsம் இல் என மொழிப. 41


உயிர் இல் எழுத்தும் எண்ணப்படாஅ

உயிர்த் திறம் இயக்கம் இன்மையான. 42


வஞ்சி அடியே இரு சீர்த்து ஆகும். 43


தன் சீர் எழுத்தின் சின்மை மூன்றே. 44


முச் சீரானும் வரும் இடன் உடைத்தே. 45


அசை கூன் ஆகும் அவ்வயினான. 46


சீர் கூன் ஆதல் நேரடிக்கு உரித்தே. 47


ஐ வகை அடியும் விரிக்கும் காலை

மெய் வகை அமைந்த பதினேழ் நிலத்தும்

எழுபது வகையின் வழு இல ஆகி

அறுநூற்று இருபத்தைந்து ஆகும்மே. 48


ஆங்கனம் விரிப்பின் அளவு இறந்தனவே

பாங்குற உணர்ந்தோர் பன்னும் காலை. 49


ஐ வகை அடியும் ஆசிரியக்கு உரிய. 50


விராஅய் வரினும் ஒரூஉ நிலை இலவே. 51

தன் சீர் வகையினும் தளை நிலை வகையினும்

இன் சீர் வகையின் ஐந்து அடிக்கும் உரிய

தன் சீர் உள்வழித் தளை வகை வேண்டா. 52


சீர் இயை மருங்கின் ஓர் அசை ஒப்பின்

ஆசிரியத் தளை என்று அறியல் வேண்டும். 53


குறளடி முதலா அளவடி காறும்

உறழ் நிலை இலவே வஞ்சிக்கு என்ப. 54


அளவும் சிந்தும் வெள்ளைக்கு உரிய

தளை வகை ஒன்றாத் தன்மையான. 55


அளவடி மிகுதி உளப்படத் தோன்றி

இரு நெடிலடியும் கலியிற்கு உரிய. 56


நிரை முதல் வெண்சீர் வந்து நிரை தட்பினும்

வரை நிலை இன்றே அவ் அடிக்கு என்ப. 57


விராஅய தளையும் ஒரூஉ நிலை இன்றே. 58


இயற்சீர் வெள்ளடி ஆசிரிய மருங்கின்

நிலைக்கு உரி மரபின் நிற்கவும் பெறுமே. 59


வெண்தளை விரவியும் ஆசிரியம் விரவியும்

ஐஞ் சீர் அடியும் உள என மொழிப. 60


அறு சீர் அடியே ஆசிரியத் தளையொடு

நெறி பெற்று வரூஉம் நேரடி முன்னே. 61


எழு சீர் அடியே முடுகியல் நடக்கும். 62


முடுகியல் வரையார் முதல் ஈர் அடிக்கும். 63


ஆசிரிய மருங்கினும் வெண்பா மருங்கினும்

மூ வகை அடியும் முன்னுதல் இலவே. 64


ஈற்று அயல் அடியே ஆசிரிய மருங்கின்

தோற்றம் முச் சீர்த்து ஆகும் என்ப. 65


இடையும் வரையார் தொடை உணர்வோரே. 66


முச் சீர் முரற்கையுள் நிறையவும் நிற்கும். 67


வஞ்சித் தூக்கே செந்தூக்கு இயற்றே. 68


வெண்பாட்டு ஈற்று அடி முச் சீர்த்து ஆகும்

அசை சீர்த்து ஆகும் அவ் வழியான. 69


நேர் ஈற்று இயற்சீர் நிரையும் நிரைபும்

சீர் ஏற்று இறூஉம் இயற்கைய என்ப. 70


நிரை அவண் நிற்பின் நேரும் நேர்பும்

வரைவு இன்று என்ப வாய் மொழிப் புலவர். 71


எழு சீர் இறுதி ஆசிரியம் கலியே. 72


வெண்பா இயலினும் பண்புற முடியும். 73


எழுத்து முதலா ஈண்டிய அடியின்

குறித்த பொருளை முடிய நாட்டல்

யாப்பு என மொழிப யாப்பு அறி புலவர். 74


பாட்டு உரை நூலே வாய்மொழி பிசியே

அங்கதம் முதுசொல் அவ் ஏழ் நிலத்தும்

வண் புகழ் மூவர் தண் பொழில் வரைப்பின்

நாற் பெயர் எல்லை அகத்தவர் வழங்கும்

யாப்பின் வழியது என்மனார் புலவர். 75


மரபேதானும்,

நாற் சொல் இயலான் யாப்புவழிப் பட்டன்று. 76


அகவல் என்பது ஆசிரியம்மே. 77


அதாஅன்று என்ப வெண்பா யாப்பே. 78


துள்ளல் ஓசை கலி என மொழிப. 79


தூங்கல் ஓசை வஞ்சி ஆகும். 80


மருட்பா ஏனை இரு சார் அல்லது

தான் இது என்னும் தனிநிலை இன்றே. 81


அவ் இயல் அல்லது பாட்டு ஆங்குக் கிளவார். 82


தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப. 83


மோனை எதுகை முரணே இயைபு என

நால் நெறி மரபின தொடை வகை என்ப. 84


அளபெடை தலைப்பெய ஐந்தும் ஆகும். 85


பொழிப்பும் ஒரூஉவும் செந்தொடை மரபும்

அமைத்தனர் தெரியின் அவையுமார் உளவே. 86


நிரல் நிறுத்து அமைத்தலும் இரட்டை யாப்பும்

மொழிந்தவற்று இயலான் முற்றும் என்ப. 87


அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை. 88


அஃது ஒழித்து ஒன்றின் எதுகை ஆகும். 89


ஆயிரு தொடைக்கும் கிளையெழுத்து உரிய. 90


மொழியினும் பொருளினும் முரணுதல் முரணே. 91


இறுவாய் ஒன்றல் இயைபின் யாப்பே. 92


அளபு எழின் அவையே அளபெடைத் தொடையே. 93


ஒரு சீர் இடையிட்டு எதுகை ஆயின்

பொழிப்பு என மொழிதல் புலவர் ஆறே. 94


இரு சீர் இடையிடின் ஒரூஉ என மொழிப. 95


சொல்லிய தொடையொடு வேறுபட்டு இயலின்

சொல் இயற் புலவர் அது செந்தொடை என்ப. 96


மெய் பெறு மரபின் தொடை வகைதாமே

ஐ ஈர் ஆயிரத்து ஆறு ஐஞ்ஞூற்றொடு

தொண்டு தலை இட்ட பத்துக் குறை எழுநூற்று

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே. 97


தெரிந்தனர் விரிப்பின் வரம்பு இல ஆகும். 98


தொடை வகை நிலையே ஆங்கு என மொழிப. 99


மாத்திரை முதலா அடிநிலை காறும்

நோக்குதல் காரணம் நோக்கு எனப்படுமே. 100


ஆசிரியம் வஞ்சி வெண்பா கலி என

நால் இயற்று என்ப பா வகை விரியே. 101


அந் நிலை மருங்கின் அறம் முதல் ஆகிய

மும் முதல் பொருட்கும் உரிய என்ப. 102


பா விரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்

ஆசிரியப்பா வெண்பா என்று ஆங்கு

ஆயிரு பாவினுள் அடங்கும் என்ப. 103


ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை

வெண்பா நடைத்தே கலி என மொழிப. 104


வாழ்த்தியல் வகையே நாற்பாக்கும் உரித்தே. 105


வழிபடு தெய்வம் நின் புறங்காப்ப

பழி தீர் செல்வமொடு வழி வழி சிறந்து

பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே

கலி நிலை வகையும் வஞ்சியும் பெறாஅ. 106


வாயுறை வாழ்த்தே அவையடக்கியலே

செவியறிவுறூஉ என அவையும் அன்ன. 107


வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்

வேம்பும் கடுவும் போல வெஞ் சொல்

தாங்குதல் இன்றி வழி நனி பயக்கும் என்று

ஓம்படைக் கிளவியின் வாயுறுத்தற்றே. 108


அவையடக்கியலே அரில் தபத் தெரியின்

வல்லா கூறினும் வகுத்தனர் கொண்மின் என்று

எல்லா மாந்தர்க்கும் வழி மொழிந்தன்றே. 109


செவியுறைதானே,

பொங்குதல் இன்றி புரையோர் நாப்பண்

அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே. 110


ஒத்தாழிசையும் மண்டில யாப்பும்

குட்டமும் நேரடிக்கு ஒட்டின என்ப. 111


குட்டம் எருத்தடி உடைத்தும் ஆகும். 112


மண்டிலம் குட்டம் என்று இவை இரண்டும்

செந்தூக்கு இயல என்மனார் புலவர். 113


நெடுவெண்பாட்டே குறுவெண்பாட்டே

கைக்கிளை பரிபாட்டு அங்கதச் செய்யுளொடு

ஒத்தவை எல்லாம் வெண்பா யாப்பின. 114


கைக்கிளைதானே வெண்பா ஆகி

ஆசிரிய இயலான் முடியவும் பெறுமே. 115


பரிபாடல்லே தொகை நிலை வகையின்

இது பா என்னும் இயல் நெறி இன்றி

பொதுவாய் நிற்றற்கும் உரித்து என மொழிப. 116


கொச்சகம் அராகம் சுரிதகம் எருத்தொடு

செப்பிய நான்கும் தனக்கு உறுப்பு ஆக

காமம் கண்ணிய நிலைமைத்து ஆகும். 117


சொற்சீர் அடியும் முடுகியல் அடியும்

அப் பா நிலைமைக்கு உரிய ஆகும். 118


கட்டுரை வகையான் எண்ணொடு புணர்ந்தும்

முட்டடி இன்றிக் குறைவு சீர்த்து ஆகியும்

மொழி அசை ஆகியும் வழி அசை புணர்ந்தும்

சொற்சீர்த்து இறுதல் சொற்சீர்க்கு இயல்பே. 119


அங்கதம்தானே அரில் தபத் தெரியின்

செம்பொருள் கரந்தது என இரு வகைத்தே. 120


செம்பொருள் ஆயின வசை எனப்படுமே. 121


மொழி கரந்து மொழியின் அது பழிகரப்பு ஆகும். 122


செய்யுள்தாமே இரண்டு என மொழிப. 123


புகழொடும் பொருளொடும் புணர்ந்தன்று ஆயின்

செவியுறைச் செய்யுள் என்மனார் புலவர். 124


வசையொடும் நசையொடும் புணர்ந்தன்று ஆயின்

அங்கதச் செய்யுள் என்மனார் புலவர். 125


ஒத்தாழிசைக்கலி கலிவெண்பாட்டே

கொச்சகம் உறழொடு கலி நால் வகைத்தே. 126


அவற்றுள்,

ஒத்தாழிசைக்கலி இரு வகைத்து ஆகும். 127


இடைநிலைப்பாட்டே தரவு போக்கு அடை என

நடை நவின்று ஒழுகும் ஒன்று என மொழிப. 128


தரவேதானும் நால் அடி இழிபு ஆய்

ஆறு இரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129


இடைநிலைப்பாட்டே,

தரவு அகப்பட்ட மரபினது என்ப. 130


அடை நிலைக் கிளவி தாழிசைப் பின்னர்

நடை நவின்று ஒழுகும் ஆங்கு என் கிளவி. 131


போக்கு இயல் வகையே வைப்பு எனப்படுமே

தரவு இயல் ஒத்தும் அதன் அகப்படுமே

புரை தீர் இறுதி நிலை உரைத்தன்றே. 132


ஏனை ஒன்றே,

தேவர்ப் பராஅய முன்னிலைக்கண்ணே. 133


அதுவே,

வண்ணகம் ஒருபோகு என இரு வகைத்தே. 134


வண்ணகம்தானே,

தரவே தாழிசை எண்ணே வாரம் என்று

அந் நால் வகையின் தோன்றும் என்ப. 135


தரவேதானும்,

நான்கும் ஆறும் எட்டும் என்ற

நேரடி பற்றிய நிலைமைத்து ஆகும். 136


ஒத்து மூன்று ஆகும் ஒத்தாழிசையே

தரவின் சுருங்கித் தோன்றும் என்ப. 137


அடக்கு இயல் வாரம் தரவொடு ஒக்கும். 138


முதல் தொடை பெருகிச் சுருங்குமன் எண்ணே. 139


எண் இடை ஒழிதல் ஏதம் இன்றே

சின்னம் அல்லாக் காலையான. 140


ஒருபோகு இயற்கையும் இரு வகைத்து ஆகும். 141


கொச்சக ஒருபோகு அம்போதரங்கம் என்று

ஒப்ப நாடி உணர்தல் வேண்டும். 142


தரவு இன்று ஆகித் தாழிசை பெற்றும்

தாழிசை இன்றித் தரவு உடைத்து ஆகியும்

எண் இடை இட்டுச் சின்னம் குன்றியும்

அடக்கியல் இன்றி அடி நிமிர்ந்து ஒழுகியும்

யாப்பினும் பொருளினும் வேற்றுமை உடையது

கொச்சக ஒருபோகு ஆகும் என்ப. 143


ஒருபான் சிறுமை இரட்டி அதன் உயர்பே. 144


அம்போதரங்கம் அறுபதிற்று அடித்தே

செம்பால் வாரம் சிறுமைக்கு எல்லை. 145


எருத்தே கொச்சகம் அராகம் சிற்றெண்

அடக்கியல் வாரமொடு அந் நிலைக்கு உரித்தே. 146


ஒரு பொருள் நுதலிய வெள்ளடி இயலான்

திரிபு இன்றி வருவது கலிவெண்பாட்டே. 147


தரவும் போக்கும் பாட்டு இடை மிடைந்தும்

ஐஞ் சீர் அடுக்கியும் ஆறு மெய் பெற்றும்

வெண்பா இயலான் வெளிப்படத் தோன்றும்

பாநிலை வகையே கொச்சகக் கலி என

நூல் நவில் புலவர் நுவன்று அறைந்தனரே. 148


கூற்றும் மாற்றமும் இடை இடை மிடைந்தும்

போக்கு இன்றாகல் உறழ்கலிக்கு இயல்பே. 149


ஆசிரியப் பாட்டின் அளவிற்கு எல்லை

ஆயிரம் ஆகும் இழிபு மூன்று அடியே. 150


நெடுவெண்பாட்டே முந் நால் அடித்தே

குறுவெண்பாட்டின் அளவு எழு சீரே. 151


அங்கதப் பாட்டு அளவு அவற்றொடு ஒக்கும். 152


கலிவெண்பாட்டே கைக்கிளைச் செய்யுள்

செவியறி வாயுறை புறநிலை என்று இவை

தொகு நிலை மரபின் அடி இல என்ப. 153


புறநிலை வாயுறை செவியறிவுறூஉ எனத்

திறநிலை மூன்றும் திண்ணிதின் தெரியின்

வெண்பா இயலினும் ஆசிரிய இயலினும்

பண்புற முடியும் பாவின என்ப. 154


பரிபாடல்லே,

நால் ஈர் ஐம்பது உயர்பு அடி ஆக

ஐ ஐந்து ஆகும் இழிபு அடிக்கு எல்லை. 155


அளவியல் வகையே அனை வகைப்படுமே. 156


எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

அடி வரை இல்லன ஆறு என மொழிப. 157


அவைதாம்,

நூலினான உரையினான

நொடியொடு புணர்ந்த பிசியினான

ஏது நுதலிய முதுமொழியான

மறை மொழி கிளந்த மந்திரத்தான

கூற்று இடை வைத்த குறிப்பினான. 158


அவற்றுள்,

நூல் எனப்படுவது நுவலும் காலை

முதலும் முடிவும் மாறுகோள் இன்றி

தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி

உள் நின்று அகன்ற உரையொடு புணர்ந்து

நுண்ணிதின் விளக்கல் அது அதன் பண்பே. 159


அதுவேதானும் ஒரு நால் வகைத்தே. 160


ஒரு பொருள் நுதலிய சூத்திரத்தானும்

இன மொழி கிளந்த ஓத்தினானும்

பொது மொழி கிளந்த படலத்தானும்

மூன்று உறுப்பு அடக்கிய பிண்டத்தானும் என்று

ஆங்கு அனை மரபின் இயலும் என்ப. 161


அவற்றுள்,

சூத்திரம்தானே

ஆடி நிழலின் அறியத் தோன்றி

நாடுதல் இன்றிப் பொருள் நனி விளங்க

யாப்பினுள் தோன்ற யாத்து அமைப்பதுவே. 162


நேர் இன மணியை நிரல்பட வைத்தாங்கு

ஓர் இனப் பொருளை ஒரு வழி வைப்பது

ஓத்து என மொழிப உயர் மொழிப் புலவர். 163


ஒரு நெறி இன்றி விரவிய பொருளான்

பொது மொழி தொடரின் அது படலம் ஆகும். 164


மூன்று உறுப்பு அடக்கிய தன்மைத்து ஆயின்

தோன்று மொழிப் புலவர் அது பிண்டம் என்ப. 165


பாட்டு இடை வைத்த குறிப்பினானும்

பா இன்று எழுந்த கிளவியானும்

பொருள் மரபு இல்லாப் பொய்ம்மொழியானும்

பொருளொடு புணர்ந்த நகைமொழியானும் என்று

உரை வகை நடையே நான்கு என மொழிப. 166


அதுவேதானும் இரு வகைத்து ஆகும். 167


ஒன்றே மற்றும் செவிலிக்கு உரித்தே

ஒன்றே யார்க்கும் வரை நிலை இன்றே. 168


ஒப்பொடு புணர்ந்த உவமத்தானும்

தோன்றுவது கிளந்த துணிவினானும்

என்று இரு வகைத்தே பிசி நிலை வகையே. 169


நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்

எண்மையும் என்று இவை விளங்கத் தோன்றி

குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்

ஏது நுதலிய முதுமொழி என்ப. 170


நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்

மறைமொழிதானே மந்திரம் என்ப. 171


எழுத்தொடும் சொல்லொடும் புணராதாகி

பொருட்புறத்ததுவே குறிப்பு மொழியே. 172


பாட்டிடைக் கலந்த பொருள ஆகி

பாட்டின் இயல பண்ணத்திய்யே. 173


அதுவேதானும் பிசியொடு மானும். 174


அடி நிமிர் கிளவி ஈர் ஆறு ஆகும்

அடி இகந்து வரினும் கடி வரை இன்றே. 175


கிளர் இயல் வகையின் கிளந்தன தெரியின்

அளவியல் வகையே அனை வகைப்படுமே. 176


கைக்கிளை முதலா ஏழ் பெருந் திணையும்

முன் கிளந்தனவே முறையினான. 177


காமப் புணர்ச்சியும் இடம் தலைப்படலும்

பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும் என்று

ஆங்க நால் வகையினும் அடைந்த சார்பொடு

மறை என மொழிதல் மறையோர் ஆறே. 178


மறை வெளிப்படுதலும் தமரின் பெறுதலும்

இவை முதலாகிய இயல் நெறி திரியாது

மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும்

பிரிவொடு புணர்ந்தது கற்பு எனப்படுமே. 179


மெய் பெறும் அவையே கைகோள் வகையே. 180


பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி

சீர்த்தகு சிறப்பின் கிழவன் கிழத்தியொடு

அளவு இயல் மரபின் அறு வகையோரும்

களவின் கிளவிக்கு உரியர் என்ப. 181


பாணன் கூத்தன் விறலி பரத்தை

ஆணம் சான்ற அறிவர் கண்டோ ர்

பேணுதகு சிறப்பின் பார்ப்பான் முதலா

முன்னுறக் கிளந்த அறுவரொடு தொகைஇ

தொல் நெறி மரபின் கற்பிற்கு உரியர். 182


ஊரும் அயலும் சேரியோரும்

நோய் மருங்கு அறிநரும் தந்தையும் தன்னையும்

கொண்டெடுத்து மொழியப்படுதல் அல்லது

கூற்று அவண் இன்மை யாப்புறத் தோன்றும். 183


கிழவன்தன்னொடும் கிழத்திதன்னொடும்

நற்றாய் கூறல் முற்றத் தோன்றாது. 184


ஒண் தொடி மாதர் கிழவன் கிழத்தியொடு

கண்டோ ர் மொழிதல் கண்டது என்ப. 185


இடைச் சுரமருங்கின் கிழவன் கிழத்தியொடு

வழக்கியல் ஆணையின் கிளத்தற்கும் உரியன். 186


ஒழிந்தோர் கிளவி கிழவன் கிழத்தியொடு

மொழிந்தாங்கு உரியர் முன்னத்தின் எடுத்தே. 187


மனையோள் கிளவியும் கிழவன் கிளவியும்

நினையும் காலை கேட்குநர் அவரே. 188


பார்ப்பார் அறிவர் என்று இவர் கிளவி

யார்க்கும் வரையார் யாப்பொடு புணர்ந்தே. 189


பரத்தை வாயில் என இரு வீற்றும்

கிழத்தியைச் சுட்டாக் கிளப்புப் பயன் இலவே. 190


வாயில் உசாவே தம்முள் உரிய. 191


ஞாயிறு திங்கள் அறிவே நாணே

கடலே கானல் விலங்கே மரனே

புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே

அவை அல பிறவும் நுதலிய நெறியான்

சொல்லுந போலவும் கேட்குந போலவும்

சொல்லியாங்கு அமையும் என்மனார் புலவர். 192


ஒரு நெறிப்பட்டு ஆங்கு ஓர் இயல் முடியும்

கரும நிகழ்ச்சி இடம் என மொழிப. 193


இறப்பே நிகழ்வே எதிரது என்னும்

திறத்தியல் மருங்கின் தெரிந்தனர் உணர

பொருள் நிகழ்வு உரைப்பது காலம் ஆகும். 194


இது நனி பயக்கும் இதன் மாறு என்னும்

தொகு நிலைக் கிளவி பயன் எனப்படுமே. 195


உய்த்துணர்வு இன்றி தலைவரு பொருண்மையின்

மெய்ப் பட முடிப்பது மெய்ப்பாடு ஆகும். 196


எண் வகை இயல் நெறி பிழையாதாகி

முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே. 197


சொல்லொடும் குறிப்பொடும் முடிவு கொள் இயற்கை

புல்லிய கிளவி எச்சம் ஆகும். 198


இவ் இடத்து இம் மொழி இவர் இவர்க்கு உரிய என்று

அவ் இடத்து அவர் அவர்க்கு உரைப்பது முன்னம். 199


இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்

ஒழுக்கமும் என்று இவை இழுக்கு நெறி இன்றி

இது ஆகு இத் திணைக்கு உரிப் பொருள் என்னாது

பொதுவாய் நிற்றல் பொருள் வகை என்ப. 200


அவ் அம் மக்களும் விலங்கும் அன்றிப்

பிற அவண் வரினும் திறவதின் நாடி

தம்தம் இயலின் மரபொடு முடியின்

அத் திறம்தானே துறை எனப்படுமே. 201


அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும்

இயன்று பொருள் முடிய தந்தனர் உணர்த்தல்

மாட்டு என மொழிப பாட்டியல் வழக்கின். 202


மாட்டும் எச்சமும் நாட்டல் இன்றி

உடனிலை மொழியினும் தொடர்நிலை பெறுமே. 203


வண்ணம்தாமே நால் ஐந்து என்ப. 204


அவைதாம்,

பாஅ வண்ணம் தாஅ வண்ணம்

வல்லிசை வண்ணம் மெல்லிசை வண்ணம்

இயைபு வண்ணம் அளபெடை வண்ணம்

நெடுஞ்சீர் வண்ணம் குறுஞ்சீர் வண்ணம்

சித்திர வண்ணம் நலிபு வண்ணம்

அகப்பாட்டு வண்ணம் புறப்பாட்டு வண்ணம்

ஒழுகு வண்ணம் ஒரூஉ வண்ணம்

எண்ணு வண்ணம் அகைப்பு வண்ணம்

தூங்கல் வண்ணம் ஏந்தல் வண்ணம்

உருட்டு வண்ணம் முடுகு வண்ணம் என்று

ஆங்கு என மொழிப அறிந்திசினோரே. 205


அவற்றுள்,

பாஅ வண்ணம்

சொற்சீர்த்து ஆகி நூற்பால் பயிலும். 206


தாஅ வண்ணம்

இடையிட்டு வந்த எதுகைத்து ஆகும். 207


வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே. 208


மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே. 209


இயைபு வண்ணம் இடையெழுத்து மிகுமே. 210


அளபெடை வண்ணம் அளபெடை பயிலும். 211


நெடுஞ்சீர் வண்ணம் நெட்டெழுத்துப் பயிலும். 212


குறுஞ்சீர் வண்ணம் குற்றெழுத்துப் பயிலும். 213


சித்திர வண்ணம்

நெடியவும் குறியவும் நேர்ந்து உடன் வருமே. 214


நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும். 215


அகப்பாட்டு வண்ணம்

முடியாத் தன்மையின் முடிந்ததன் மேற்றே. 216


புறப்பாட்டு வண்ணம்

முடிந்தது போன்று முடியாதாகும். 217


ஒழுகு வண்ணம் ஓசையின் ஒழுகும். 218


ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும். 219


எண்ணு வண்ணம் எண்ணுப் பயிலும். 220


அகைப்பு வண்ணம் அறுத்து அறுத்து ஒழுகும். 221


தூங்கல் வண்ணம் வஞ்சி பயிலும். 222


ஏந்தல் வண்ணம்

சொல்லிய சொல்லின் சொல்லியது சிறக்கும். 223


உருட்டு வண்ணம் அராகம் தொடுக்கும். 224


முடுகு வண்ணம்

அடி இறந்து ஓடி அதன் ஓரற்றே. 225


வண்ணம்தாமே இவை என மொழிப. 226


வனப்பு இயல்தானே வகுக்கும் காலை

சில் மென் மொழியான் தாய பனுவலின்

அம்மைதானே அடி நிமிர்வு இன்றே. 227


செய்யுள் மொழியான் சீர் புனைந்து யாப்பின்

அவ் வகைதானே அழகு எனப்படுமே. 228


தொன்மைதானே

உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே. 229


இழுமென் மொழியான் விழுமியது நுவலினும்

பரந்த மொழியான் அடி நிமிர்ந்து ஒழுகினும்

தோல் என மொழிப தொல் மொழிப் புலவர். 230


விருந்தேதானும்

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே. 231


ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப்

புள்ளி இறுதி இயைபு எனப்படுமே. 232


சேரி மொழியான் செவ்விதின் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்

புலன் என மொழிப புலன் உணர்ந்தோரே. 233


ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்து அடங்காது

குறளடி முதலா ஐந்து அடி ஒப்பித்து

ஓங்கிய மொழியான் ஆங்கு அவண் மொழியின்

இழைபின் இலக்கணம் இயைந்ததாகும். 234


செய்யுள் மருங்கின் மெய் பெற நாடி

இழைத்த இலக்கணம் பிழைத்தன போல

வருவ உள எனினும் வந்தவற்று இயலான்

திரிபு இன்றி முடித்தல் தெள்ளியோர் கடனே. 235