தொல்காப்பியம்/பொருளதிகாரம்/புறத்திணையியல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


அகத்திணை மருங்கின் அரில் தப உணர்ந்தோர்

புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்

வெட்சிதானே குறிஞ்சியது புறனே

உட்கு வரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே. 1


வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக் களவின்

ஆ தந்து ஓம்பல் மேவற்று ஆகும். 2


படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி

புடை கெடப் போகிய செலவே புடை கெட

ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம்

முற்றின் ஆகிய புறத்து இறை முற்றிய

ஊர் கொலை ஆ கோள் பூசல் மாற்றே

நோய் இன்று உய்த்தல் நுவல்வழித் தோற்றம்

தந்து நிறை பாதீடு உண்டாட்டு கொடை என

வந்த ஈர் ஏழ் வகையிற்று ஆகும். 3


மறம் கடைக்கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத் திணைப் புறனே. 4


வெறி அறி சிறப்பின் வெவ் வாய் வேலன்

வெறியாட்டு அயர்ந்த காந்தளும் உறு பகை

வேந்திடை தெரிதல் வேண்டி ஏந்து புகழ்

போந்தை வேம்பே ஆர் என வரூஉம்

மா பெருந்தானையர் மலைந்த பூவும்

வாடா வள்ளி வயவர் ஏத்திய

ஓடாக் கழல் நிலை உளப்பட ஓடா

உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின்

தாவா விழுப் புகழ்ப் பூவை நிலையும்

ஆர் அமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்

சீர் சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்

தலைத் தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்

அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும்

வரு தார் தாங்கல் வாள் வாய்த்துக் கவிழ்தல் என்று

இரு வகைப் பட்ட பிள்ளை நிலையும்

வாள் மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க

நாடு அவற்கு அருளிய பிள்ளையாட்டும்

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்த மரபின் பெரும்படை வாழ்த்தல் என்று

இரு மூன்று மரபின் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட எழு மூன்று துறைத்தே. 5


வஞ்சிதானே முல்லையது புறனே

எஞ்சா மண் நசை வேந்தனை வேந்தன்

அஞ்சு தகத் தலைச் சென்று அடல் குறித்தன்றே. 6


இயங்கு படை அரவம் எரி பரந்து எடுத்தல்

வயங்கல் எய்திய பெருமையானும்

கொடுத்தல் எய்திய கொடைமையானும்

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்

மாராயம் பெற்ற நெடுமொழியானும்

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும்

வரு விசைப் புனலைக் கற் சிறை போல

ஒருவன் தாங்கிய பெருமையானும்

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும்

வென்றோர் விளக்கமும் தோற்றோர் தேய்வும்

குன்றாச் சிறப்பின் கொற்ற வள்ளையும்

அழி படை தட்டோ ர் தழிஞ்சியொடு தொகைஇ

கழி பெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே. 7


உழிஞைதானே மருதத்துப் புறனே

முழு முதல் அரணம் முற்றலும் கோடலும்

அனை நெறி மரபிற்று ஆகும் என்ப. 8


அதுவேதானும் இரு நால் வகைத்தே. 9


கொள்ளார் தேஎம் குறித்த கொற்றமும்

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்

தொல் எயிற்கு இவர்தலும் தோலது பெருக்கமும்

அகத்தோன் செல்வமும் அன்றியும் முரணிய

புறத்தோன் அணங்கிய பக்கமும் திறல் பட

ஒரு தான் மண்டிய குறுமையும் உடன்றோர்

வரு பகை பேணார் ஆர் எயில் உளப்பட

சொல்லப்பட்ட நால் இரு வகைத்தே. 10


குடையும் வாளும் நாள்கோள் அன்றி

மடை அமை ஏணிமிசை மயக்கமும் கடைஇச்

சுற்று அமர் ஒழிய வென்று கைக்கொண்டு

முற்றிய முதிர்வும் அன்றி முற்றிய

அகத்தோன் வீழ்ந்த நொச்சியும் மற்று அதன்

புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்

நீர்ச் செரு வீழ்ந்த பாசியும் அதாஅன்று

ஊர்ச் செரு வீழ்ந்த மற்றதன் மறனும்

மதில்மிசைக்கு இவர்ந்த மேலோர் பக்கமும்

இகல் மதில் குடுமி கொண்ட மண்ணுமங்கலமும்

வென்ற வாளின் மண்ணொடு ஒன்ற

தொகைநிலை என்னும் துறையொடு தொகைஇ

வகை நால் மூன்றே துறை என மொழிப. 11


தும்பைதானே நெய்தலது புறனே

மைந்து பொருளாக வந்த வேந்தனைச்

சென்று தலை அழிக்கும் சிறப்பிற்று என்ப. 12


கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்

சென்ற உயிரின் நின்ற யாக்கை

இரு நிலம் தீண்டா அரு நிலை வகையொடு

இரு பாற் பட்ட ஒரு சிறப்பின்றே. 13


தானை யானை குதிரை என்ற

நோனார் உட்கும் மூ வகை நிலையும்

வேல் மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன்

தான் மீண்டு எறிந்த தார் நிலை அன்றியும்

இருவர் தலைவர் தபுதிப் பக்கமும்

ஒருவன் ஒருவனை உடை படை புக்கு

கூழை தாங்கிய எருமையும் படை அறுத்து

பாழி கொள்ளும் ஏமத்தானும்

களிறு எறிந்து எதிர்ந்தோர் பாடும் களிற்றொடு

பட்ட வேந்தனை அட்ட வேந்தன்

வாளோர் ஆடும் அமலையும் வாள் வாய்த்து

இரு பெரு வேந்தர்தாமும் சுற்றமும்

ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும்

செருவகத்து இறைவன் வீழ்ந்தென சினைஇ

ஒருவன் மண்டிய நல் இசை நிலையும்

பல் படை ஒருவற்கு உடைதலின் மற்றவன்

ஒள் வாள் வீசிய நூழிலும் உளப்படப்

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே. 14


வாகைதானே பாலையது புறனே

தா இல் கொள்கைத் தம்தம் கூற்றைப்

பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப. 15


அறு வகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

ஐ வகை மரபின் அரசர் பக்கமும்

இரு மூன்று மரபின் ஏனோர் பக்கமும்

மறு இல் செய்தி மூ வகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

நால் இரு வழக்கின் தாபதப் பக்கமும்

பால் அறி மரபின் பொருநர்கண்ணும்

அனை நிலை வகையொடு ஆங்கு எழு வகையான்

தொகை நிலைபெற்றது என்மனார் புலவர். 16


கூதிர் வேனில் என்று இரு பாசறைக்

காதலின் ஒன்றிக் கண்ணிய வகையினும்

ஏரோர் களவழி அன்றி களவழித்

தேரோர் தோற்றிய வென்றியும் தேரோர்

வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்

ஒன்றிய மரபின் பின்தேர்க் குரவையும்

பெரும் பகை தாங்கும் வேலினானும்

அரும் பகை தாங்கும் ஆற்றலானும்

புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்

ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்

சொல்லிய வகையின் ஒன்றொடு புணர்ந்து

தொல் உயிர் வழங்கிய அவிப்பலியானும்

ஒல்லார் இடவயின் புல்லிய பாங்கினும்

பகட்டினானும் ஆவினானும்

துகள் தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்

கடி மனை நீத்த பாலின்கண்ணும்

எட்டு வகை நுதலிய அவையகத்தானும்

கட்டு அமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்

இடை இல் வண் புகழ்க் கொடைமையானும்

பிழைத்தோர்த் தாங்கும் காவலானும்

பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்

அருளொடு புணர்ந்த அகற்சியானும்

காமம் நீத்த பாலினானும் என்று

இரு பாற் பட்ட ஒன்பதின் துறைத்தே. 17


காஞ்சிதானே பெருந்திணைப் புறனே

பாங்கு அருஞ் சிறப்பின் பல் ஆற்றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே. 18


மாற்ற அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்

பண்பு உற வரூஉம் பகுதி நோக்கிப்

புண் கிழித்து முடியும் மறத்தினானும்

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற்

பேஎய் ஓம்பிய பேஎய்ப் பக்கமும்

இன்னன் என்று இரங்கிய மன்னையானும்

இன்னது பிழைப்பின் இது ஆகியர் எனத்

துன்ன அருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும்

இன் நகை மனைவி பேஎய் புண்ணோன்

துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்

நீத்த கணவன் தீர்த்த வேலின்

பேஎத்த மனைவி ஆஞ்சியானும்

நிகர்த்து மேல் வந்த வேந்தனொடு முதுகுடி

மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்

முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோ ன்

தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ

ஈர் ஐந்து ஆகும் என்ப பேர் இசை

மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம்

மாய்ந்த பூசல் மயக்கத்தானும்

தாமே எய்திய தாங்க அரும் பையுளும்

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச்

செல்வோர் செப்பிய மூதானந்தமும்

நனி மிகு சுரத்திடைக் கணவனை இழந்து

தனி மகள் புலம்பிய முதுபாலையும்

கழிந்தோர் தேஎத்துக் கழி படர் உறீஇ

ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்

காதலி இழந்த தபுதார நிலையும்

காதலன் இழந்த தாபத நிலையும்

நல்லோள் கணவனொடு நளி அழல் புகீஇச்

சொல் இடையிட்ட பாலை நிலையும்

மாய் பெருஞ் சிறப்பின் புதல்வற் பயந்த

தாய் தப வரூஉம் தலைப்பெயல் நிலையும்

மலர் தலை உலகத்து மரபு நன்கு அறியப்

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை இரண்டு உடைத்தே. 19


பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே

நாடும் காலை நால் இரண்டு உடைத்தே. 20


அமரர்கண் முடியும் அறு வகையானும்

புரை தீர் காமம் புல்லிய வகையினும்

ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப. 21


வழக்கு இயல் மருங்கின் வகைபட நிலைஇ

பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்

முன்னோர் கூறிய குறிப்பினும் செந்துறை

வண்ணப் பகுதி வரைவு இன்று ஆங்கே. 22


காமப் பகுதி கடவுளும் வரையார்

ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர். 23


குழவி மருங்கினும் கிழவது ஆகும். 24


ஊரொடு தோற்றமும் உரித்து என மொழிப

வழக்கொடு சிவணிய வகைமையான. 25


மெய்ப் பெயர் மருங்கின் வைத்தனர் வழியே.26


கொடிநிலை கந்தழி வள்ளி என்ற

வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்

கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. 27


கொற்றவள்ளை ஓர் இடத்தான. 28


கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும்

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும்

சேய் வரல் வருத்தம் வீட வாயில்

காவலர்க்கு உரைத்த கடைநிலையானும்

கண்படை கண்ணிய கண்படை நிலையும்

கபிலை கண்ணிய வேள்வி நிலையும்

வேலை நோக்கிய விளக்கு நிலையும்

வாயுறை வாழ்த்தும் செவியறிவுறூஉவும்

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்

கைக்கிளை வகையொடு உளப்படத் தொகைஇ

தொக்க நான்கும் உள என மொழிப. 29


தாவின் நல் இசை கருதிய கிடந்தோர்க்குச்

சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி

பெற்ற பெரு வளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ

சென்று பயன் எதிரச் சொன்ன பக்கமும்

சிறந்த நாளினில் செற்றம் நீக்கி

பிறந்த நாள்வயின் பெருமங்கலமும்

சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும்

நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும்

மாணார்ச் சுட்டிய வாள்மங்கலமும்

மன் எயில் அழித்த மண்ணுமங்கலமும்

பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்

பெற்ற பின்னரும் பெரு வளன் ஏத்தி

நடைவயின் தோன்றிய இரு வகை விடையும்

அச்சமும் உவகையும் எச்சம் இன்றி

நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்

காலம் கண்ணிய ஓம்படை உளப்பட

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பின்

காலம் மூன்றொடு கண்ணிய வருமே. 30