தொல்காப்பியம்/பொருளதிகாரம்/பொருளியல்

விக்கிமூலம் இலிருந்து


இசை திரிந்து இசைப்பினும் இயையுமன் பொருளே

அசை திரிந்து இசையா என்மனார் புலவர். 1


நோயும் இன்பமும் இரு வகை நிலையின்

காமம் கண்ணிய மரபிடை தெரிய

எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய

உறுப்புடையது போல் உணர்வுடையது போல்

மறுத்து உரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்

சொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ

செய்யா மரபின் தொழிற்படுத்து அடக்கியும்

அவர் அவர் உறு பிணி தம போல் சேர்த்தியும்

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ

இரு பெயர் மூன்றும் உரிய ஆக

உவமவாயில் படுத்தலும் உவமம்

ஒன்று இடத்து இருவர்க்கும் உரிய பாற் கிளவி. 2


கனவும் உரித்தால் அவ் இடத்தான. 3


தாய்க்கும் உரித்தால் போக்கு உடன் கிளப்பின்.4


பால் கெழு கிளவி நால்வர்க்கும் உரித்தே

நட்பின் நடக்கை ஆங்கு அலங்கடையே. 5


உயிரும் நாணும் மடனும் என்று இவை

செயிர் தீர் சிறப்பின் நால்வர்க்கும் உரிய. 6


வண்ணம் பசந்து புலம்புறு காலை

உணர்ந்த போல உறுப்பினைக் கிழவி

புணர்ந்த வகையான் புணர்க்கவும் பெறுமே. 7


உடம்பும் உயிரும் வாடியக்கண்ணும்

என் உற்றனகொல் இவை எனின் அல்லதை

கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை. 8


ஒரு சிறை நெஞ்சமொடு உசாவும் காலை

உரியதாகலும் உண்டு என மொழிப. 9


தன்வயின் கரத்தலும் அவன்வயின் வேட்டலும்

அன்ன இடங்கள் அல் வழி எல்லாம்

மடனொடு நிற்றல் கடன் என மொழிப. 10


அறத்தொடு நிற்கும் காலத்து அன்றி

அறத்து இயல் மரபு இலள் தோழி என்ப. 11


எளித்தல் ஏத்தல் வேட்கை உரைத்தல்

கூறுதல் உசாஅதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்பும் கிளவியொடு தொகைஇ

அவ் எழு வகைய என்மனார் புலவர். 12


உற்றுழி அல்லது சொல்லல் இன்மையின்

அப் பொருள் வேட்கை கிழவியின் உணர்ப. 13


செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

அறிவும் அருமையும் பெண்பாலான. 14


பொழுதும் ஆறும் காப்பும் என்று இவற்றின்

வழுவின் ஆகிய குற்றம் காட்டலும்

தன்னை அழிதலும் அவண் ஊறு அஞ்சலும்

இரவினும் பகலினும் நீ வா என்றலும்

கிழவோன் தன்னை வாரல் என்றலும்

நன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்

புரை பட வந்த அன்னவை பிறவும்

வரைதல் வேட்கைப் பொருள என்ப. 15


வேட்கை மறுத்துக் கிளந்தாங்கு உரைத்தல்

மரீஇய மருங்கின் உரித்து என மொழிப. 16


தேரும் யானையும் குதிரையும் பிறவும்

ஊர்ந்தனர் இயங்கலும் உரியர் என்ப. 17


உண்டற்கு உரிய அல்லாப் பொருளை

உண்டன போலக் கூறலும் மரபே. 18


பொருள் என மொழிதலும் வரை நிலை இன்றே

காப்புக் கைம்மிகுதல் உண்மையான

அன்பே அறனே இன்பம் நாணொடு

துறந்த ஒழுக்கம் பழித்து அன்று ஆகலின்

ஒன்றும் வேண்டா காப்பினுள்ளே. 19


சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே. 20


உயர்ந்தோர் கிளவி வழக்கொடு புணர்தலின்

வழக்கு வழிப்படுதல் செய்யுட்குக் கடனே. 21


அறக் கழிவு உடையன பொருட் பயம் பட வரின்

வழக்கு என வழங்கலும் பழித்து அன்று என்ப. 22


மிக்க பொருளினுள் பொருள் வகை புணர்க்க

நாணுத் தலைப்பிரியா நல்வழிப் படுத்தே. 23


முறைப்பெயர் மருங்கின் கெழுதகைப் பொதுச் சொல்

நிலைக்கு உரி மரபின் இரு வீற்றும் உரித்தே. 24


தாயத்தின் அடையா ஈயச் செல்லா

வினைவயின் தங்கா வீற்றுக் கொளப்படா

எம் என வரூஉம் கிழமைத் தோற்றம்

அல்லாவாயினும் புல்லுவ உளவே. 25


ஒரு பால் கிளவி எனைப் பாற்கண்ணும்

வரு வகைதானே வழக்கு என மொழிப. 26


எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது

தான் அமர்ந்து வரூஉம் மேவற்று ஆகும். 27


பரத்தை வாயில் நால்வர்க்கும் உரித்தே

நிலத் திரிபு இன்று அஃது என்மனார் புலவர். 28


ஒருதலை உரிமை வேண்டினும் மகடூஉப்

பிரிதல் அச்சம் உண்மையானும்

அம்பலும் அலரும் களவு வெளிப்படுக்கும் என்று

அஞ்ச வந்த ஆங்கு இரு வகையினும்

நோக்கொடு வந்த இடையூறு பொருளினும்

போக்கும் வரைவும் மனைவிகண் தோன்றும். 29


வருத்த மிகுதி சுட்டும் காலை

உரித்து என மொழிப வாழ்க்கையுள் இரக்கம். 30


மனைவி உயர்வும் கிழவோன் பணிவும்

நினையும் காலை புலவியுள் உரிய. 31


நிகழ் தகை மருங்கின் வேட்கை மிகுதியின்

புகழ் தகை வரையார் கற்பினுள்ளே. 32


இறைச்சிதானே உரிப் புறத்ததுவே. 33


இறைச்சியின் பிறக்கும் பொருளுமார் உளவே

திறத்து இயல் மருங்கின் தெரியுமோர்க்கே. 34


அன்புறு தகுவன இறைச்சியுள் சுட்டலும்

வன்புறை ஆகும் வருந்திய பொழுதே. 35


செய் பொருள் அச்சமும் வினைவயின் பிரிவும்

மெய்பெற உணர்த்தும் கிழவி பாராட்டே. 36


கற்புவழிப் பட்டவள் பரத்தைமை ஏத்தினும்

உள்ளத்து ஊடல் உண்டு என மொழிப. 37


கிழவோள் பிறள் குணம் இவை எனக் கூறி

கிழவோன் குறிப்பினை உணர்தற்கும் உரியள். 38


தம் உறு விழுமம் பரத்தையர் கூறினும்

மெய்ம்மையாக அவர்வயின் உணர்ந்தும்

தலைத்தாட் கழறல் தம் எதிர்ப்பொழுது இன்றே

மலிதலும் ஊடலும் அவை அலங்கடையே. 39


பொழுது தலைவைத்த கையறு காலை

இறந்த போலக் கிளக்கும் கிளவி

மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு

அவை நாற் பொருட்கண் நிகழும் என்ப. 40


இரந்து குறையுற்ற கிழவனைத் தோழி

நிரம்ப நீக்கி நிறுத்தல் அன்றியும்

வாய்மை கூறலும் பொய் தலைப்பெய்தலும்

நல் வகையுடைய நயத்தின் கூறியும்

பல் வகையானும் படைக்கவும் பெறுமே. 41


உயர் மொழிக் கிளவி உறழும் கிளவி

ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே. 42


உறுகண் ஓம்பல் தன் இயல்பு ஆகலின்

உரியதாகும் தோழிகண் உரனே. 43


உயர் மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே. 44


வாயிற் கிளவி வெளிப்படக் கிளத்தல்

தா இன்று உரிய தம்தம் கூற்றே. 45


உடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பு எனக்

கெடல் அரு மரபின் உள்ளுறை ஐந்தே. 46


அந்தம் இல் சிறப்பின் ஆகிய இன்பம்

தன்வயின் வருதலும் வகுத்த பண்பே. 47


மங்கல மொழியும் வைஇய மொழியும்

மாறு இல் ஆண்மையின் சொல்லிய மொழியும்

கூறிய மருங்கின் கொள்ளும் என்ப. 48

சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு


அனை நால் வகையும் சிறப்பொடு வருமே. 49

அன்னை என்னை என்றலும் உளவே

தொல் நெறி முறைமை சொல்லினும் எழுத்தினும்

தோன்றா மரபின என்மனார் புலவர். 50


ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா

கற்பும் ஏரும் எழிலும் என்றா

சாயலும் நாணும் மடனும் என்றா

நோயும் வேட்கையும் நுகர்வும் என்று ஆங்கு

ஆவயின் வரூஉம் கிளவி எல்லாம்

நாட்டு இயல் மரபின் நெஞ்சு கொளின் அல்லது

காட்டலாகாப் பொருள என்ப. 51


இமையோர் தேஎத்தும் எறி கடல் வரைப்பினும்

அவை இல் காலம் இன்மையான. 52