நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/1. 'ஒவ்வோர் கலைஞர்கள்'

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search


எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்

1. 'ஒவ்வோர் கலைஞர்கள்'

சிறையில் இருந்தபோது, ‘பெரியார் மனம் வைத்தால் சீக்கிரமாக விடுதலையாகிவிடலாம்’ என்று நீங்கள் நினைத்ததுண்டா?”

“இல்லை; நான் யாருடைய தயவிலும், சிபாரிசிலும், கருணையிலும் எப்போதுமே வாழ்ந்தவனுமல்ல; வாழ நினைப்பவனுமல்ல?”

“முதல்வர் கருணாநிதியைப் பற்றி...”

“ஒரு காலத்தில் அவர் என் கம்பெனி ஆக்டர்; இன்று இந்த நாட்டின் முதலமைச்சர். என் கம்பெனி ஆக்டர் முதலமைச்சராயிருக்கிறார் என்றால் அதிலே எனக்குப் பெருமைதானே?”

“சரி, கலை உலகத்துக்கு வருவதற்கு முன்னால் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் ?”

“வீட்டுக்கு அடங்காத பிள்ளையாயிருந்தேன். ஸ்கூலுக்குப் போவதில்லை. ராபர்ட் கிளைவ் மாதிரி துடுக்குத்தனமாக ஏதாவது பேசிக்கிட்டிருக்கிறதே என் பொழுது போக்காயிருந்தது."

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf
"அதை விட்டுக் கலை உலகத்துக்கு நீங்கள் வந்தது எப்படி ?”

கலை உலகத்துக்கு நானாகவும் போகவில்லை; அதுவாகவும் என்னைத் தேடி வரவில்லை. சூழ்நிலையும் சந்தர்ப்பமுமே என்னையும் கலையையும் ஒன்று சேர்த்தது.”

“அது என்ன சூழ்நிலை, சந்தர்ப்பம் ?”

“வீட்டிலே சோறில்லை; டிராமா கம்பெனியைத் தேடிக்கிட்டுப் போவேன். அப்போ அங்கேதான் நல்ல சோறு கிடைக்கும். சுருக்கமாகச் சொன்னா, பாய்ஸ் கம்பெனி சோறுதான் இன்னிக்குப் பலரைக் கலைஞர்களாக்கியிருக்கிறது. ‘பேக்ட்'டை யாரும் சொல்ல மாட்டேங்கிறானுங்க. வசதி வந்ததும் ‘ஹிஸ்டரி'யையே மாத்திச் சொல்றானுங்க. ‘ராயல் பேமிலி'ங்கிறானுங்க. கலைக்காகவே அவதாரம் எடுத்ததா வேறே அளக்கிறானுங்க. என்ன செய்யறது ? உண்மை உறங்குது; பொய் பொன்னாடை போர்த்திக்கிட்டு ஊர்வலம் வருது. என்னைப் பொறுத்தவரை டிராமா கம்பெனி சோறுதான் என்னை ‘ஆக்ட'ராக்கியிருக்கிறது. இதுதான் ‘பேக்ட்’.

“ஒரு கலைஞன் முன்னேற வேண்டுமானால் மற்ற கலைஞர்களை முன்னேற விடாமல் தடுத்தால்தான் முன்னேற முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?”

“இல்லை; சரக்கு உள்ளவன் அப்படி நினைக்கமாட்டான், அந்த வேலையைச் செய்யவும் மாட்டான்.” “கலைஞன் என்பவனுக்கு இலக்கணம் ஏதாவது...”

“உண்டு; பஞ்சமாபாதகத்தில் அவன் ஒரு பார்ட்னர்”

“கலைஞன் கலைஞனாக மட்டும் இருந்தால் போதுமா ? அவன் தருமோபதேசியாகவும் தத்துவ ஞானியாகவும் கூட இருக்க வேண்டுமா ?"

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf
"கலைஞன் கலைஞனாகத்தான் இருக்க முடியும்; இருக்க வேண்டும். தருமோபதேசம், தத்துவ ஞானமெல்லாம் அவனுக்கு ஏது? இருந்தால் அதெல்லாம் இரவல் சரக்காகத்தான் இருக்கும்.”

“உண்மையான கலைஞன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்?”

“ஆடியன்ஸுக்கு லஞ்சம் கொடுப்பவனாயிருக்கக்கூடாது; அறிவைக் கொடுப்பவனாயிருக்க வேண்டும்.”

“நடிகர்களில் சிலர் பிறந்த நாள் கேக் வெட்டுவதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?”

“நினைப்பதற்கு என்ன இருக்கிறது ? ‘கேக்’ வெட்றதை ஒரு ‘ஜோக்'கா ஆக்கிட்டான் இந்த நாட்டிலே. மேல் நாட்டிலே அப்படி இல்லை. அதிலே ஒரு சமதர்மச் சித்தாந்தமே அடங்கியிருக்கிறது. மனைவி மக்களோடு வீட்டு வேலைக்காரர்கள், நண்பர்கள், உறவினர்களையெல்லாம் வரவழைத்துப் பிறந்த நாள் கேக்கை வெட்டி, ஒரு துண்டைத் தன் வாயில் போட்டுக்கிட்டு, மற்ற துண்டுகளை ஏற்றத்தாழ்வைப் பார்க்காம அவன் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கிறான். ஏன் ? தன்னை வந்தடைந்துள்ள புகழ், பொருள் எல்லாவற்றையுமே பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான் தயாராயிருப்பதை எடுத்துக் காட்டுவதற்காக. இதுவே கேக் வெட்டுவதன் தாத்பரியம். இதை விட்டுவிட்டுப் பிரஸ் ரிப்போர்ட்டரைக் கூப்பிட்டு “பர்த்டே கொண்டாடறவன் உண்மையான கலைஞனல்ல; அசல் வியாபாரி. அப்படித்தான் என்னாலே சொல்ல முடியும்.”

“கலைஞனை விளம்பரம் தானாகவே தேடி வர வேண்டுமா ? அல்லது, விளம்பரத்தைத் தேடி அவன் ஓட வேண்டுமா ?

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf
"விளம்பரம் கலைஞனைத் தேடி வந்தது அந்தக் காலம்; கலைஞன் விளம்பரத்தைத் தேடி ஓடறது இந்தக் காலம்.”

“மேடை நாடகங்களில் நீங்கள் யாரை யாரையெல்லாம் சந்தித்தீர்கள் ? அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த தொடர்புகள் என்னென்ன?”

“மேடை நாடகங்களில் குரங்காட்டம் போட்டவர்களையும், கொள்கையில்லாக் கூத்தாடிகளையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு ‘அரிதாரம் பூசறது தான்.”

“அதைத் தவிர... ?” “வெட்டுப் பாறையில் கோவலன் பாடிக்கொண்டே செத்துவிடுவான். ‘ஆடிட்டோரிய'த்திலிருந்து ‘ஒன்ஸ்மோர்’ குரல் வரும்; மாண்டவன் மீண்டும் எழுந்து பாடுவான்!”

“இந்த ஒன்ஸ்மோர் கலைஞர்களைத் தவிர... “

“பெருமைக்குரிய கலைஞர்கள் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்; அவர்களைப் பற்றிப் பின்னால் சொல்கிறேன்.”

“நீண்ட நாட்களாக நீங்கள் திரை உலகத்துக்கு வராமல் இருந்தது ஏன் ? வந்தாலும் இடையிடையே விட்டுவிட்டுப் போய்விட்டது ஏன்?”

“டிராமாங்கிறது எனக்கு ‘பெர்மெனென்ட் ஹவுஸ்'; சினிமாங்கிறது ‘டெம்பரரி கேம்ப்’. இருந்தாலும் ராஜசேகரன், சத்தியவாணி, சந்தனத் தேவன், பம்பாய் மெயில், சோகாமேளர் போன்ற அந்த நாள் படங்களிலேயே நான் நடித்திருக்கிறேன்!"

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf
"சிறை சென்று வந்த பிறகு உங்கள் கருத்தில் ஏதாவது மாற்றம் உண்டா ?”

“இல்லை; எப்போதும் ஒரே கருத்துத்தான். ஒரு காலத்தில் மக்கள் என்னைக் கல்லால் அடித்தார்கள்; அதே மக்கள் இன்னொரு காலத்தில் மலர் மாலைகளால் என்னை வரவேற்று என் நாடகக் கருத்துக்களையெல்லாம் ஏற்றார்கள். இடையில் மாறுபட்டது காலம் தான்; நானோ, என் கருத்தோ அல்ல.”

“சிறையில் இருந்தபோது நீங்கள் சிந்தித்தவற்றைப் பற்றி...”

“எத்தனையோ சொல்ல வேண்டும். இந்த வாரம் தானே ஆரம்பிச்சிருக்கோம். வாராவாரம் சொல்றப்போ அதெல்லாம் தானாவே வரும்."