உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/2. கடவுள் கொடுத்த காசு

விக்கிமூலம் இலிருந்து

2. கடவுள் கொடுத்த காசு

ங்க ‘ஹிஸ்டரியை எழுதணும்னு ஆரம்பிச்சோம்; அது பொதுவா கலை உலக ஹிஸ்ட்ரியாயில்லே போய்க்கிட்டிருக்கு ?”

“ரெண்டும் ஒண்ணுதான்; என் ஹிஸ்ட்ரி கலை உலக ஹிஸ்ட்ரி; கலை உலக ஹிஸ்ட்ரி என் ஹிஸ்ட்ரி”.

“எல்லாக் கலைஞர்களுக்கும் பிறந்த ஊர் என்று ஒன்று தனியாக இருக்குமே, அந்த மாதிரி உங்களுக்கு எந்த ஊரும் கிடையாதா ?”

“இல்லை; நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மெட்ராஸில்தான். ‘எம்.ஆர்.ராதா'ன்னா ‘மெட்ராஸ் ராஜகோபால் நாயுடு மகன் ராதா'ன்னு அர்த்தம். அப்பா மட்டுமில்லே, என் தாத்தாவும் இங்கேயேதான் பிறந்து வளர்ந்தார். அவர் மூர் மார்க்கெட்டில் ‘ஆக்கர் கடை’ வைத்திருந்தார். மூர் மார்க்கெட்டுன்னா இப்போ இருக்கிற மூர் மார்க்கெட்டைச் சொல்லலே, பழைய மூர் மார்க்கெட்டைச் சொல்றேன். அது பத்தி எரிஞ்சிப் போச்சு, இப்போ இருக்கிறது புதுசாக் கட்டியது.”

“ஆக்கர் கடை யென்றால்....?”

“பழைய சாமான்களை வாங்கி விற்கிறது. அப்போ மெட்ராஸிலே எங்கே பார்த்தாலும் வெள்ளைக்காரனுக இருப்பானுக, அவனுக புதுசு புதுசா ஏதாவது வாங்கிக்கிட்டே இருப்பானுக. அப்படி வாங்கறப்போல்லாம் பழைய சாமான்களை வந்த விலைக்குக் கொடுத்துடுவானுக. அதை வாங்கி விற்கிறது. தமிழனா, வீடே குப்பைத் தொட்டியானாலும் சரி, எந்த சாமானையும் வெளியே விட மாட்டேன்னு வெச்சிக்கிட்டிருக்க?”

“உங்கள் தகப்பனார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் ?”

“கெளரவமாச் சொல்றதாயிருந்தா யுத்த சேவை செஞ்சிக்கிட்டிருந்தார்னு சொல்லணும்.... நான் அப்படிச் சொல்ல மாட்டேன். மனுஷனுக்கு வேறே வேலை கெடைக்கலை, பட்டாளத்திலே சேர்ந்துட்டார். அதுதான் பேக்ட்!”

“அதற்கும் ஒரு வீரம் இருக்க வேண்டுமே ?” “தமிழனைப் பொறுத்த வரையிலே எந்த வீரமும் சோறில்லாமப் போனாத்தான் வரும்!”

“கரெக்டாச் சொன்னீங்க, அப்புறம் ?” “அப்புறம் என்ன ? ரஷ்ய எல்லையிலே, பஸ்லோவியா என்ற இடத்திலே அவர் வீர மரணம் அடைஞ்சிட்டார்னு எங்களுக்குச் சேதி வந்தது. அதோடு அவர் சேப்டர் க்ளோஸ். அவர் ‘வார்’ சமயத்திலே வாங்கிய மெடல்களை மட்டும் நான் இன்னும் பத்திரமா வெச்சிக்கிட்டிருக்கேன்.”

“அவர் இறந்த பிறகு தான் உங்களைக் கொண்டு போய் நாடகக் கம்பெனியிலே விட்டார்களா ?”

“இல்லை; முதல்லே என்னை யாரும் கொண்டு போய் விடலே, நானாத்தான் போனேன். போனேன்னா, நேரா நாடகக் கம்பெனிக்குப் போயிடலே....”

“வேறு எங்கே போனீர்கள் ?” “சொல்றேன்; வீட்டிலே படிக்கிறவனுக்கும் படிக்காதவனுக்கும் வித்தியாசம் காட்டினாக....”

“அது என்ன வித்தியாசம்?" என அண்ணன் ஜானகிராமன் நல்லாப் படிப்பான்; அவனுக்கு எங்க அம்மா ரெண்டு மீன் வைப்பாக. நானும் என் தம்பி பாப்பாவும் படிக்க மாட்டோம். அதுக்காக எங்களுக்கு ஒரே ஒரு மீன் வைப்பாக. இந்த வித்தியாசத்தை ஒரு நாள் என்னாலே பொறுக்க முடியாமப் போச்சு; எனக்கும் ரெண்டு மீன் வச்சாத்தான் ஆச்சு'ன்னு அடம் பிடிச்சேன். ‘ஊரைச் சுத்தற பயலுக்கு ஒண்ணு போதாதா?ன்னு அம்மா என் தட்டிலே ரெண்டு வைக்கிறதுக்குப் பதிலா முதுகிலே ரெண்டு வெச்சாக. அவ்வளவு தான்; எழுந்து நடந்துட்டேன்.”

“எங்கே ?”

“எழும்பூர் ஸ்டேஷனுக்கு. அப்போ எனக்கு ஏழெட்டு வயசுதான் இருக்கும்; அங்கே போனப்புறம்தான் எங்கே போறதுன்னு எனக்கு ஒண்ணும் புரியலே. பிளாட்பாரத்தைச் சுத்திச் சுத்தி வந்துக்கிட்டிருந்தேன். ஏலே பயலே, இங்கே வாடான்’னு ஒரு குரல் கேட்டது; திரும்பிப் பார்த்தேன். கனத்த பெட்டியுடன் என்னை நோக்கி வந்துகிட்டிருந்த ஒருவர், இதை எடுத்துக்கிட்டு வான்னு என்கிட்டே பெட்டியைக் கொடுத்தார். அப்போல்லாம் ‘போர்ட்டர்'னு யாரும் தனியா கிடையாது; என் மாதிரி பொடிப் பயலுகதான் அந்த வேலையையும் செய்துக்கிட்டிருந்தானுக. நான் பெட்டியைத் தூக்கிக்கிட்டுப் போய் அவர் வைக்கச் சொன்ன இடத்திலே வெச்சேன். அவர் காலணாவை எடுத்து என் கையிலே கொடுத்துட்டு, ‘உன் பேரு என்னடா ?ன்னு கேட்டார்; ராதா'ன்னேன். அப்பா, அம்மால்லாம் இருக்காங்களா ?'ன்னார்; ‘ஒருத்தரும் இல்லே'ன்னு சொல்லி வெச்சேன். அப்படின்னா என் டிராமா கம்பெனியிலே சேர்ந்துடறியா ? நான் தான் ஆலந்தூர் டப்பி ரங்கசாமி நாயுடு எங்கிறவரு; கேள்விப்பட்டிருப்பியே ?ன்னார்; ‘நல்லாக் கேள்விப்பட்டிருக்கேன்; சேர்ந்துடறேன்'னேன். சரி, ஏறு வண்டியிலே'ன்னார்; ‘டிக்கெட் வாங்கலையான் ?'னேன். அதெல்லாம் ஒண்ணும் வாணாம்; “சும்மா ஏறு ‘ன்னு அவர் என்னை வண்டியிலே ஏத்திவிட்டு, ஒரு பெஞ்சுக்குக் கீழே பதுங்கி உட்கார்ந்துக்கச் சொன்னார். நான் அப்படியே உட்கார்ந்துக்கிட்டேன். அவர் ஒரு படுக்கை விரிப்பை எடுத்து பெஞ்சியின் மேல் போட்டு, என்னை மறைக்கும் அளவுக்கு அதைக் கீழே தொங்கவிட்டு, அதுக்கு மேலே அவர் உட்கார்ந்துட்டார்...”

“அதாவது, டிராமாவிலே எப்படி நடிக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன்னால் ரயிலில் டிக்கெட் இல்லாமல் எப்படிப் பிரயாணம் செய்வது என்பதை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டார்!”

“இவருடைய கண்ணியம் தான் இப்படி இருந்ததுன்னா, அந்த நாள் ஸ்டேஷன் மாஸ்டர்கள் கடமை எப்படி இருந்தது, தெரியுமா ? இதை விட வேடிக்கையாயிருந்தது. சிதம்பரம் ஸ்டேஷன்லே பெட்டியோடு பெட்டியா நாயுடு என்னையும் இறக்கிவிட்டார். பெட்டியைத் துக்கி என் தலையிலே வெச்சுட்டு அவர் முன்னால் நடந்தார். ஒரு பய டிக்கெட் கேட்கணுமே? மூச்! எல்லாரும் ‘சல்யூட்’ அடிச்சி எங்களை வெளியே விடறானுக. விஷயம் என்னடான்னா, நாயுடு வசூலாகாத நாடகமாப் பார்த்து அவனுகளுக்கெல்லாம் ‘ஓசிப் பாஸ் கொடுப்பாராம்.”

“இந்த உலகமே ஒரு திறந்த புத்தகம் என்று சொல்வார்கள். அதை நீங்கள் அப்போதுதான் படிக்க ஆரம்பித்தீர்கள் போல் இருக்கிறது!”

“ஆமாம், அதைவிட நல்ல புத்தகம் இல்லேங்கிறது இப்போ என் கருத்து.”

“டிராமாவிலே உங்களுக்கு என்ன வேஷம் கிடைத்தது?”

“அரிச்சந்திரனிலே லோகிதாசனா வந்து ‘அம்மா பசிக்குது, அப்பா பசிக்குதுன்னு அழற வேஷம்; நல்லதங்காளிலே ஏழு பிள்ளைகளிலே ஒருத்தனா வந்து கிணத்திலே விழுந்து சாகற வேஷம்; கிருஷ்ண லீலாவிலே நச்சுப் பால் கொடுக்க வரும் பூதகியைக் கொல்ற பாலகிருஷ்ணன் வேஷம். இந்த வேஷங்களோடு அப்பப்போ ஸ்டேஜுக்கு வந்து சர்க்கஸ் டான்ஸும் ஆடணும்...”

“அது என்ன சர்க்கஸ் டான்ஸ்?" "அந்த நாள் நாடக மேடையிலே சதிராட்டமோ, ஓரியண்டல் டான்ஸுகளோ கிடையாது. என் வயகப் பையன்களை வரிசையா ஒருத்தன் மேலே ஒருத்தனா கோபுரம் மாதிரி காலை அகட்டி நிற்க வைப்பானுக. இங்கிலீஷ் பாண்டு மியூசிக்குக்கு ஏத்தாப்போல நாங்க காலையும் கையையும் அசைச்சி ஆடணும். அதுதான் சர்க்கஸ் டான்ஸ்!”

‘தவறி விழுந்தால் முட்டி உடைந்து விடும் போலிருக்கிறதே?”

“அப்படியும் உடையலேன்னா கம்பெனிக்காரனுக உடைச்சிடுவானுக!”

“ரொம்ப மோசமான வாழ்க்கையாக இருந்திருக்கும் போலிருக்கிறதே... ?”

“எங்கேயோ அடிமை வாழ்க்கை இருந்ததாச் சொல்றாகளே, அந்த வாழ்க்கை அங்கே இருந்தது!”

“அப்புறம்?”

“ராஜா வேஷம், மந்திரி வேஷம் போடறவனுக வீட்டு வேலையிலிருந்து கம்பெனி வேலை வரையிலே நாங்கதான் செய்யணும். பொழுது விடிஞ்சதும் வீட்டிலே இவனுக உடம்பைப் பிடிச்சி, எண்ணெய் தேய்ச்சிக் குளிப்பாட்டி விடுவாக, சூப் வெச்சிக் கொடுப்பாக. ராத்திரி டிராமாவிலே அத்தனை கஷ்டப்பட்டு இவனுக நடிச்சிட்டு வந்திருக்கானுகளாம். என்ன கஷ்டம்?'னு கேட்கிறீங்களா ? சொல்றேன்: ‘மந்திரி, மாதம் மும்மாரி பெய்ததா?'ம்பான் ராஜா ‘பெய்தது, அரசே ‘ம்பான் மந்திரி. ‘ஆகம விதிப்படி ஆலயங்களிலெல்லாம் ஆறு கால பூஜை நடக்கிறதா ?'ம்பான் ராஜா நடக்கிறது அரசே ‘ம்பான் மந்திரி. இதுதான் இவனுக நடிச்சிக் கிழிக்கிற நடிப்பு. இதுக்குப் பொழுது விடிஞ்சதும் இவனுகளுக்கு உடம்புப்பிடி, எண்ணெய்க் குளிப்பு, சூப்பு எல்லாம். எங்களுக்கு ? -இவனுக தின்னு மீந்தாத்தான் சோறு. இல்லேன்னா, காலையிலே இவனுக கொடுக்கிற காலணாவிலே ரெண்டு தம்பிடிக்கு ஆப்பம், ஒரு தம்பிடிக்குக் காப்பி வாங்கிக் குடிக்கிறோமே, அதோடு சரி!”

“கைச்செலவுக்கு ஏதாவது வேண்டுமானால்.... ?”

“கடவுள் கொடுப்பார்!”

“கடவுளா ?”

“ஆமாம், ராத்திரி டிராமா முடிஞ்சதும் பெரிய நடிகனுக எல்லாம் நல்லாக் குடிச்சிட்டு நாடகக் கொட்டாவுக்குப் பின்னாலே இருக்கிற மணல் தரையிலே படுத்துப் புரளுவானுக. பொழுது விடிஞ்சப்புறம்தான் எழுந்து வீட்டுக்குப் போவானுக. இவனுக போனதும் நாங்க மணல்லே கையை விட்டுத் துழாவிப் பாப்போம். காலணா, அரையனா, ஓரணா, ரெண்டணாக்கூடக் கிடைக்கும். குடி வெறியிலே இவனுங்களுக்குத் தெரியாம மணல்லே விழுந்து புதையற காசுதான் அத்தனையும்!"