உள்ளடக்கத்துக்குச் செல்

நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்/3. வந்தது 'பிளைமவுத்'கார்

விக்கிமூலம் இலிருந்து

3. வந்தது ‘பிளைமவுத்'கார்


வீட்டுக்குத் தெரியாமல் வந்துதானே நாயுடு கம்பெனியில் சேர்ந்தீர்கள் ? உங்களை யாரும் தேடிக் கொண்டு வரவில்லையா ?”

“வந்தாக வந்து என்னை வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வந்தாக. ஆனா இப்போ எனக்கு வீடு பிடிக்கல்லே; டிராமா கம்பெனிதான் பிடிச்சது. மறுபடியும் போயிடறதுன்னு திட்டம் போட்டேன். இந்தத் தடவை என் தம்பி பாப்பாவும் என்னோடு வரேன்னான்; ‘சரி'ன்னேன். போற அன்னிக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போனாத் தேவலைன்னு நினைச்சோம். என்னத்தை, எங்கே சாப்பிடறது ? ரயில்வேக்காரன் ஏமாறாப்போல எந்த ஓட்டல்காரன் ஏமாறேங்கிறான்? சுற்றுமுற்றும் பார்த்தோம். யார் கொடுத்த வாழைப்பழத்தாரோ, வீட்டிலே இருந்தது. ரெண்டு பேருமாச் சேர்ந்து அதிலே பாதியைக் காலி செஞ்சோம். கைச் செலவுக்குக் காசு வேண்டாமா ? வீட்டிலே யார்யாரோ, எது எதுக்கோ வெச்சிருந்த காலணா அரையனாக்களையெல்லாம் எடுத்துச் சேர்த்தோம். கிட்டத்தட்ட ஒரு ரூபாய் சேர்ந்தது. சரி, புறப்படுவோமா ?ன்னேன். ‘எங்கே, நாயுடு கம்பெனிக்கா ?ன்னான் தம்பி. இல்லே, சாமண்ணா அய்யர் கம்பெனிக்கு. அவர் இப்போ மைசூரிலே இருக்கிறாராம். அங்கே போயிடுவோம்'ன்னேன். ‘சரி'ன்னு அந்தப் பாதிவாழைப்பழத்தாரைக்கூட வீட்டிலே வைக்காம அவன் கையோடு எடுத்துக்கிட்டான். வேண்டாண்டா, வெச்சிடு'ன்னேன்.” கேட்கல்லே; ‘வழியிலே பசிச்சா என்ன செய்யறது?'ன்னு அதையும் எடுத்துக்கிட்டு வந்துட்டான். ரெண்டு பேரும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குப் போறதுக்காக வால்டாக்ஸ் ரோடு வழியா வந்தோம். அப்போ அந்த ரோடு முனையிலே ஒரு டிராம் டெர்மினஸ் இருக்கும். அங்கே ஒரு தண்ணித் தொட்டி இருக்கும். அதிலே ஒரு ‘காக்காக் குளியல்’ குளிச்சிட்டுப் போலாம்னு வாழைத் தாரைக் கீழே வெச்சிட்டு, சட்டையைக் கழற்றி ரோடு போடுவதற்காக அங்கே கொட்டி வைச்சிருந்த சரளைக் கல் குவியல் மேலே வெச்சோம். குளியலை முடிச்சிட்டு வந்து என் தம்பி சட்டையை எடுத்தான். எடுத்த வேகத்தில் அதிலிருந்த காசெல்லாம் சரளைக்கல் குவியல்வே விழுந்து கல்லோடு கல்லா கலந்துவிட்டது. விடுவோமா ? -அக்கம் பக்கத்திலே யார் வராங்க, போறாங்கன்னு கூடக் கவனிக்காம ரெண்டு பேருமா கல்லை வாரிப் பின்னாலே விட்டுக்கிட்டே காசை ஒவ்வொண்ணாப் பொறுக்கி எடுத்தோம். டேய், யாரடா அது? ஏண்டா, கல்லை வாரி என்மேலே விடறீங்க ?ன்னு ஒரு குரல்-திரும்பிப் பார்த்தோம்; கையிலே குண்டாந்தடியோடு ஒரு போலீஸ்காரன்! நிற்போமா ? காசை மறந்து, வாழைப்பழத்தாரையும் மறந்து எடுத்தோம் ஓட்டம்!”

“ஸ்டேஷனுக்குப் போய்த்தான் நின்றீர்களா ?”

“வேறே வழி ? வண்டி வர வரையிலே அங்கேயே சுத்திக்கிட்டு இருந்து, எப்படியோ மைசூர் போய்ச் சேர்த்தோம். அவர் எங்களைக் கம்பெனியிலே சேர்த்துக்கிட்டார்...”

“அவர் ஒரு கிராட்ஜூவேட், இல்லையா ?”

“ஆமாம், அந்த நாள் பி.ஏ. அவர். ‘டம்பாச்சாரி’ நாடகத்திலே அவருக்கு நல்ல பேர்; பதிமூணு வேஷம் போட்டு ஆடுவார். அண்ணன் சாரங்கபாணிக்கும் அந்த நாடகத்திலே அப்போ நல்ல பேர்; அவரைப் போலவே இவரும் பதிமூணு வேஷம் போடுவார்.”

“கம்பெனி முதலாளி பி.ஏ. என்றால் அங்கேயும் ‘படித்தவன் படிக்காதவன்’ என்கிற வித்தியாசம் இருந்திருக்குமே ?" "இருந்தது; அதாலே அந்தக் கம்பெனியையும் விட்டுட்டு ஆஞ்சநேயர் கோவிந்தசாமி நாயுடு கம்பெனியிலே சேர்ந்துட்டோம். அங்கே எங்களுக்கு அதிகமா கிடைச்சது ரெண்டு...”

“என்னென்ன ?”

“ஒண்ணு அடி, இன்னொண்ணு உதை’

“இப்போது சொல்ல வேடிக்கையாயிருக்கிறது: அப்போது வேதனையாயிருந்திருக்கும்...”

“அந்த வேதனையைப் பொறுக்க முடியாமல் என் தம்பி வேறே தொழிலுக்குப் போயிட்டான்; நான் மட்டும் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர்ந்துட்டேன்...”

“அதுவும் நாடகக் கம்பெனிதானா?”

“ஆமாம், ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனின்னா அதுதான், அப்போ ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனியாயிருந்தது. காலையிலே எழுந்ததும் குளிக்கிறது, தோத்திரப்பாடல் பாடறது, வேளா வேளைக்குச் சாப்பிடறது எல்லாமே அங்கே ஒழுங்கா நடந்து வந்தது. அது மட்டும் இல்லே. ‘சமபந்தி போஜனம்'னா அந்தக் காலத்திலே பெரிய விஷயம். அது ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சர்வ சாதாரணம். எந்தவிதமான பேதமும் இல்லாம அவர் எங்களோடு உட்கார்ந்து சாப்பிடுவார். சில பிராமணப் பிள்ளைக அப்படிச் சாப்பிடமாட்டோம்னு சொல்லும். அதுகளை மட்டும் தனியா உட்கார்த்து சாப்பிடச் சொல்லிவிடுவார். எதையும் வற்புறுத்தித் திணிக்க அவர் விரும்பமாட்டார். நான் சந்தித்த முதல் சீர்திருத்தவாதி அவர்தான். அவருடைய கம்பெனியிலேதான் எஸ்.வி.வேங்கடராமன், பி.டி.சம்பந்தம், கே.சாரங்கபாணி, சி.எஸ்.ஜெயராமன், யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, நவாப் ராஜமாணிக்கம் எல்லாரும் இருந்தாக.”

“கிட்டப்பா இல்லையா ?" "அவரும் ஒரு சமயம் ஜகந்நாதய்யர் கம்பெனியிலே சேர வந்தார். ஆனா அவர் மட்டும் வரல்லே, அஞ்சி அண்ணன் தம்பிகளைக் கூட அழைச்சிக்கிட்டு வந்தார். ‘ஒருத்தனுக்காக இத்தனை பேரை வெச்சி என்னாலே சமாளிக்க முடியாது'ன்னு சொல்லி, அய்யர் அவரை அனுப்பிவிட்டார்.”

“சங்கரதாஸ் சுவாமிகள்... ?”

“வருவார்; இருப்பார். குடித்துவிட்டு ஆடினால், ‘இது நமக்குப் பிடிக்காது; நீ போய்விட்டு வா!’ என்று அய்யர் அவரை வெளியே அனுப்பிவிடுவார்.”

“அவரை இன்று சிலர் நாடக உலகத் தந்தை என்று சொல்கிறார்களே ?”

“அதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன். அவர் நல்ல நாடகாசிரியர்; பாடலாசிரியர். எழுத ஆரம்பித்தால் தங்குதடையில்லாமல் எழுதுவார்... அதெல்லாம் சரி. ஆனா, இப்போதே இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்ட புராண இதிகாச நாடகங்களுக்கு வேண்டுமானால் அவர் தந்தையாயிருக்கலாமே தவிர நாடக உலகத்துக்கு ஒரு நாளும் தந்தையாயிருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர் ஜகந்நாதய்யராய்த்தான் இருக்க முடியும். ஏன்னா, இன்னிக்கு இருக்கிற அத்தனை கலைஞர்களும் அவருடைய வழி வழியா வந்த கலைஞர்களே. இதை யாராலும் மறுக்க முடியாது.”

“ஜகந்நாதய்யர் கம்பெனியை விட்டு நீங்கள் வேறு எந்தக் கம்பெனிக்கும் போகவில்லையா ?”

“இல்லை; போகவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

அதோடு அந்தக் கம்பெனியிலே நான் நடிகனாக மட்டும் இல்லை; கார் டிரைவராகவும், மெக்கானிக்காகவும், எலெக்ட்ரிஷியனாகவும் இருந்தேன்!”

“எலெக்ட்ரிஷியனாகவா! அதில் என்ன வேலை தெரியும் உங்களுக்கு ?" "எல்லா வேலைகளும் தெரியம். ஒரு சமயம் சேஷசாயி பிரதர்ஸாரே என் வேலையைக் கண்டு அசந்து போயிருக்கிறார்கள்!

“அது என்ன வேலை ?”

“திருப்பாற்கடலில் திருமால் பள்ளி கொண்டிருக்கும் போது அவருடைய தலையைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் அந்த நாள் நாடக மேடைகளில் சுழலும். அதை நான் தான் முதன்முதலாகச் சுழலவிட்டேன். அதற்காக நான் பயன்படுத்தியது பாட்டரி, ஜெனரேட்டரோடு சில தகரத்துண்டுகள். முதல் வரிசையில் உட்கார்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷசாயி, நாடகம் முடிந்ததும் என்னைக் கூப்பிட்டு, ‘அந்த ஒளிவட்டத்தை எப்படிச் சுழல விட்டாய்? என்று கேட்டார். நான் விளக்கினேன். அவருக்கு ஒரே ஆச்சரியம்!”

‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் கூட ஒரு சமயம் உங்கள் மெக்கானிசத்தைப் பார்த்து....”

“அதுவா?.... அதைச் சொல்றதுக்கு முந்தி அவருக்கும் எனக்கும் எப்படித் தொடர்பு ஏற்பட்டதுங்கிறதை நான் சொல்லனும், மதுரையிலே ஜகந்நாதய்யர் கம்பெனி முகாம் போட்டிருந்த சமயம் அது. நான் ஸ்பேர் பார்ட் வாங்க அடிக்கடி அய்யங்கார் கடைக்குப் போவேன்...”

‘அய்யங்கார் அப்போ ஸ்பேர் பார்ட் கடை தான் வைத்திருந்தாரா ?”

“ஆமாம். அதுவும் ரொம்ப சின்ன கடை நாலனாவுக்குச் சாமான் வாங்கினால்கூட அவர் எனக்கு மறக்காம காலணா கொடுப்பார். இப்படி ஏற்பட்ட தொடர்பு எங்கே வந்து நின்னதுன்னா, பாலாற்றங்கரையிலே வந்து நின்னுது.....”

“பாலாற்றங்கரையிலா!" "ஆமாம், அந்த ஆத்து மேலே பாலம் கடடிக்கிட்டிருந்த சமயம் அது. டிராமா குரூப்போடு நான் அந்த வழியா வேன்லே வந்துக்கிட்டிருந்தேன். ஆத்தைக் கடக்கிற இடத்திலே ஒரே கூட்டம்.என்னடான்னு பார்த்தா, டி.வி.எஸ். லாரி ஒண்னு ஆத்துமணல்லே சிக்கிக்கிட்டிருந்தது. அதைத் தூக்கக் கிரேன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தாங்க. இந்தப் பக்கம் இருநூறு வண்டி, அந்தப் பக்கம் இருநூறு வண்டி நிக்குது. டிராபிக் ஒரே ஜாம். நான் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தேன், பொறுக்க முடியல்லே. வேனை விட்டுக் கீழே இறங்கினேன். ஆத்திலே முழங்கால் அளவு தண்ணிதான் இருந்தது. இறங்கி நடந்தேன். ‘யாரப்பா அது, இங்கே பாருங்க. லாரி அசையறதா இல்லே, கிரேனும் அதைத் தூக்கறதாயில்லே. இப்படியே இருந்தா நாங்க எப்போ ஊர் போய்ச் சேர்றது ? ஒண்ணு, கிரேனை ஒரு மணி நேரம் ஒரு பக்கமா தள்ளி நிறுத்தி எங்களுக்கு வழி விடுங்க. இல்லேன்னா இந்த லாரியைக் கிளப்ப எனக்கு அரை மணிநேரம் அவகாசம் கொடுங்கன்னேன். நான் சொன்னதை ஒருத்தனும் காதிலே போட்டுக்கல்லே, அவனுக பாட்டுக்குத் தஸ்.புஸ்னு இங்கிலீஷிலே ஏதோ பேசிக்கிட்டே இருந்தானுக. எனக்குக் கோபம் வந்துடுது. ‘என்னடா, சொல்றதைக் கேட்காம தஸ்.புஸ்ஸுங்கிறீங்களே ?ன்னேன். அப்போத்தான் நான் யாருன்னு அவனுகளுக்குத் தெரிஞ்சுது. அதுக்குள்ளே என்னைச் சுற்றி ஒரு கூட்டமும் சேர்ந்தது. நான் மறுபடியும் விஷயத்தைச் சொன்னேன். “கிரேனைத் தள்ளி நிறுத்தறதுக்கில்லே; உங்களுக்கு வேணும்னா லாரியைக் கிளப்ப அரை மணி நேர அவகாசம் கொடுக்கிறோம்னு கொஞ்சம் கேலியாச் சொன்னானுக. ‘கெடக்கிறானுக'ன்னு நான் வேனைக் கொண்டு வரச் சொல்லி, அதிலே இருந்த கம்பெனி ஆட்களையெல்லாம் கீழே இறங்கச் சொன்னேன். டி.வி.எஸ். லாரியை ‘அன்லோ'டாக்கறதுக்காக அதிலிருந்த சரக்கையெல்லாம் இறக்கி என் வேன்லே போடச் சொன்னேன். இப்போ என்ன ஆச்சு ? லாரி ‘லைட்'டாச்சு, வேன் ‘வெ ய்ட்'டாச்சு. அந்த “லைட்'டை இந்த ‘வெய்ட்'டாலே கட்டி இழுக்கச் சொன்னேன். விஷயம் முடிஞ்சது. கிரேன் இல்லாமலே லாரி கிளம்பிடுது. ‘ஆஹா'ன்னான் ஒருத்தன்; ‘நல்ல மெக்கானிக்கல் பிரெய்ன்'னான் இன்னொருத்தன். ஊருக்கு வந்து சேர்ந்தோம். ஒரு நாள் காலையிலே பார்த்தா என் வீட்டு வாசல்லே பிளைமவுத் கார் வந்து நிக்குது. ‘என்ன விஷயம் ?'னா சுந்தரம் அய்யங்கார் அனுப்பினார்'னு சொன்னாக. என்கிட்டே இதுக்கு ஏது பணம் ?ன்னேன். ‘உங்களுக்கு எப்ப செளகரியமோ அப்போ கொடுக்கலாம்’னு அய்யங்கார் சொன்னதாச் சொன்னாக. ‘சரி'ன்னு ஐந்நூறும் ஆயிரமுமா கொடுத்து அந்தக் கடனை அடைச்சேன். அதிலிருந்து அய்யங்கார் மகன் துரைசாமிக்கும் எனக்கும் ஏற்பட்ட தொடர்பு அவர் மறையற வரையிலே இருந்தது. நான் ஜெயில்லே இருந்தப்போ அவர் பொண்ணு கூட வந்து என்னைப் பார்த்துட்டுப் போச்சு."