நன்னெறி நயவுரை/உரையாசிரியர் முன்னுரை
உரையாசிரியர் முன்னுரை
நன்னெறி என்னும் நூலின் ஆசிரியர், நல்லாற்றுர்ச் சிவப்பிரகாச அடிகளார். நல் +நெறி=நன்னெறி, வாழ்க்கைக்குப் பயனளிக்கும் நல்ல அறவழி முறைகளைக் கூறும் நூல் நன்னெறி.
சிவப் பிரகாச அடிகளார் வீர சைவ மரபினர். சிற்றிலக்கியங்கள் முதல் பேரிலக்கியங்கள் வரை முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார். இவர் பாடல்களின் கற்பனை மிகவும் இன்பம் பயக்கும். இதனால், இவருக்குக் கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயர் வழங்கப் பெற்றுள்ளது.
இவர் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறை மங்கலம் என்னும் ஊரில் பல்லாண்டுகள் இருந்தமையால் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் என முதலில் அழைக்கப்பட்டு வந்தார். இறுதிக் காலத்தில் மயிலம்-பொம்மைய பாளைய ஆதினத்தில் வந்து சேர்ந்து பல நூல்கள் இயற்றி நல்லாற்றூரில் அடக்கமானதால் நல்லாற்றூர்ச் சிவப்பிரகாச அடிகளார் என இப்போது பெயர் வழங்கப்பெறகிறார். இந்த நன்னெறி நூலைப் பொம்மைய பாளையம் கடற்கரையில் அமர்ந்து எழுதினாராம்.
நாற்பது பாடல்கள் கொண்ட இந்நூலுக்கு உரை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதற்கு முன்பே, திருமுருகாற்றுப்படை, திருக்குறள், நாலடியார், இனியவை நாற்பது என்னும் சங்க நூல்கட்கு உரையெழுதி வெளியிடச் செய்துள்ளேன். இப்பொழுது நன்னெறி நயவுரை வருகிறது.ஆங்கிலத்தில் இலக்கியச் சுவை பெறவேண்டுமெனில், ஷேக்சுபியர், ஷெல்லி, மில்டன் முதலியோரிடம் செல்ல வேண்டும். தமிழிலோ, இந்த நன்னெறி நூலிலேயே போதுமான இலக்கியச் சுவையைப் பெறமுடியும்.
இந்த - உரைநூலை எழுதச் செய்தவர் முத்தியால் பேட்டை உயர்திரு வே.ச. பழநிசாமியவர்கள். வெளியிடுபவர்கள் அவர் குமாரர்கள். இவர்கட்கெல்லாம் நன்றி உரியது.
இந்நூலின் பெரும்பாலான பாடல்கள் பிறர்க்கு உதவி செய்வதைப் பற்றியே கூறுகின்றன. எனவே, பிறர்க்கு உதவி செய்தலையே பெருநோக்காகக் கொண்டிருந்து தெய்வமாகி விட்ட வள்ளல் மு. சின்னாத்தா முதலியாரின் நினைவு வெளியீடாக இது வருவது மிகவும் பொருத்தமாகும். சிறார் முதல் முதியோர் வரை அனை வருக்கும் இந்த வெளியீடு பயன் அளிக்கும்.
புதுச்சேரி-11.
சுந்தர சண்முகன்
26–4—1989