நமக்கு நாமே உதவி/இதுதான் இதமான சமயம்

விக்கிமூலம் இலிருந்து

2
இதுதான் இதமான சமயம்

இதுவரை வாழ்ந்து கொண்டு வருகிறோம். நிச்சயம், நமக்கு இதில் எவ்வித ஐயமும் இல்லை.

எதிர்க் காற்றில் பட்டம் ஏறி பறப்பது போல, எதிர்நீச்சல் போட்டுக் கொண்டு வாழ்க்கையை சமாளித்துக்கொண்டு வருகிறோம். இதிலும் நமக்கு எந்த வித சந்தேகமும் இல்லை.

காலிலே இடித்துக் கொண்ட பிறகு கீழே கிடக்கும் கல்லைப் பார்க்கிறோம். தலையிலே முட்டிக் கொண்ட பிறகு, மேலே இருக்கும் பொருளைப் பார்க்கிறோம். வலியிருக்கும் வரை அதை சபிக்கிறோம். பிறகு பயணத்தைத் தொடர்கிறோம். வாழ்க்கையில் இதுபோல எத்தனையோ சந்தர்ப்பங்கள், சம்பவங்கள்.

காலிலோ தலையிலோ இடித்துக் கொள்ளாமல் தப்பித்துக்கொள்ள, நாம் போதிய கவனம் செலுத்துவதில்லை. ஏதோ ஒரு நினைவில், ஏதோ ஒரு கவலையில், ஆழ்ந்து மூழ்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். அதுதான் நம்மை ஆட்டிப்படைத்து, அறிவுக் கண்ணை மறைத்து, அல்லாட வைத்து விடுகிறது.

இதுதான் இதமான சமயம், நம்மை நாம் அறிந்து கொள்ள, ஏனென்றால், பிறர்தான் நம்மை உயர்த்த முடியும் - உற்சாகப்படுத்த முடியும், உதவ முடியும் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருந்த புண்ணாக்கு நம்பிக்கையை இன்றுப் புறம்தள்ளிவிட்டு, முன்னோக்கி நடக்கும் ஒரு முழு நம்பிக்கையான சக்தியை மனதில் ஏற்றிக்கொள்ள முன் வந்திருக்கிறோம்.

நம்மைப் பற்றி நாமே சிந்திக்க, ஆராய்ச்சி செய்ய, புரிந்து கொள்ள, யார் என்று தெரிந்து கொள்ள, ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டு சுறு சுறுப்பாக நிமிர்ந்து நிற்கிறோம்.

நமது எதிர்கால ஏற்றமான முன்னேற்றங்களுக்கு இதுதான் முதல் படி என்பதால் தான், இந்த நேரத்தை இதமான சமயம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

சத்தமிட்டுக் கொண்டிருக்கும் சமுத்திரத்தில், சதா காலமும் முரட்டு அலைகள், முண்டி எழுந்து கொண்டுதான் இருக்கும். பேய்க் காற்றுகள் வாய்விட்டு அலறி பிரலாபித்துக் கொண்டுதான் இருக்கும். இந்தக் காற்றுக்கும் அலைக்கும் பயந்து கொண்டு கப்பலை செலுத்தாமல் இருப்பதில்லை கப்பல் தலைவன்.

பயம் இல்லாமல் ஓட்டுவது ஒருபுறம் இருந்தாலும், பாய்ந்து வரும் அலைகளையும் காற்றையும் தனக்காகப் பயன்படுத்திக் கொண்டு, வெற்றிகரமாகக் கப்பலைச் செலுத்தி, குறித்த இடத்திற்குக் குறித்த நேரத்தில் கொண்டு செல்கிறானே, அவன்தான் சிறந்த தலைவன் ஆவான்.

வாழ்க்கைக் கடலில் விளையாத எதிர்ப்புக்களா? துன்பங்களா? இவற்றை சமாளித்துச் செல்பவன் சாதாரண மனிதன். சமாளிப்பதற்கு மேலே சாதனை புரிகிறவன் தான் சாமர்த்தியசாலி. சந்தோஷக்காரன். பிறர் போற்றும் பெரிய நிலையில் உயர்பவனாவான்.

இது எப்படி முடியும் என்று நீங்கள் திகைப்பது தெரிகிறது!

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே அளப்பரிய ஆற்றல், அதிகமான திறமை, நிறைந்து கிடக்கின்றன. அதனைத் தெரிந்து கொள்ளத் தவறுகிறவன் ஜடமாகக் கிடக்கிறான். தெரிந்துகொண்டு பயன்படுத்தாதவன் விலங்காகத் திரிகிறான். தெரிந்து கொண்டு துணிந்து முனைகிறவனே, தேர்ந்து வாழ்கிறான். செழிப்பாக வாழ்கிறான்.

சிறந்த ஞானி என்பவன் எவன்? தன்னைப் பற்றி சிந்திக்கிறவனும், தன்னை உணர்ந்து கொள்பவனுமே அந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறான்.

நாம் ஞானியாக வேண்டாம். நம்மை நாமே அறிந்து கொள்ள முயன்றிடுவோம். நமக்கு இப்பொழுது அதுவே போதும்.

அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா பல்கலைக் கடிகம் ஒன்றில், ஓர் ஆராய்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு துறையிலும் உயர்ந்து விளங்கிய 1500 திறனாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் கருத்தறிந்தபோது, ஓர் உண்மையைக் கண்டறிந்தார்கள். அதாவது, ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே சிறப்பான திறமைகள் இருக்கின்றன. அந்த அரிய பரிசினைப் பயன்படுத்திக் கொண்டால், பிரமாதமாக வாழலாம். பிரபலமாக வாழலாம் என்பதுதான் அந்தப் பேருண்மை.

குள்ளன் ஒருவன் இமயமலை உச்சியில் ஏறி நின்றாலும், அவன் குள்ளனாகத் தான் தெரிவான். உயரமானவன் கிணற்றுக்குள்ளே நின்று கொண்டிருந்தாலும், அவன் உயரமானவன் தான்.

இந்த உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நமக்குள்ளே இருக்கும் திறமையை புரிந்து கொண்டோமானால், பார்த்துக் கொள்ள வேண்டிய திறமையையும் வகுத்துக் கொள்ளமுடியும். அதற்கு மனம் வேண்டும். சோம்பேறித்தனம் கொண்டவர்கள்தான் குள்ளர்கள். அவர்களால் உயர முடியாது. முடியும் என்று நம்புபவர்கள்தான் உயரமானவர்கள். அவர்களால் நிச்சயம் உயர்ந்து காட்ட முடியும்.

எப்படி?

நாம் எல்லோரும் ஆசைக்குட்பட்டவர்கள்தான். சில சமயங்களில் ஆசைகளால் அலைக்கழிக்கப்படுகிறோம். அந்த சபலத்தில் எழுகின்ற சலனத்தில் தான் நாம் சஞ்சலப்பட்டுப் போய்விடுகிறோம்.

ஏன் இப்படி?

நாம் எப்பொழுதும் தூரத்திலிருக்கும் ஒரு பொருளின் மங்கலான காட்சியில்தான் மயங்கி, கஷ்டப்பட்டுக் காணத் துடிக்கிறோம். அதன் அரசாட்சியில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கையிலிருக்கும் பொருளின் துல்லியமான காட்சியை நாம் மதிப்பதில்லை, அதன் பெருமையும் நமக்குத் தெரிவதில்லை.

வராத எதிர்கால இன்பத்தை நோக்கி ஏங்குகிறோம். வந்திருக்கும் நிகழ்கால இன்பத்தை விலக்கி வைத்துவிட்டு வேதனைப்படுகிறோம்.

இப்படி ஏட்டிக்குப் போட்டியாக, செயல்களை நீட்டிக் கொண்டு போனால் நம்மால் என்ன செய்ய முடியும்?

ஒருவருக்கு எதிரி வேறு யாருமில்லை. அவரேதான். நமக்கு நாமே உதவி என்பது நடைமுறை உண்மை. ஆனால் நமக்கு நாமே எதிரிகள் என்றால் அது நாம் மாறி நடந்து கொள்கின்ற முறைகளால் வருவது

என்பதை மட்டும் உணர்ந்தால் போதும்.

வலிமையான மக்களும், வலிமையான ஒரு நாடும், நிகழ்காலத்தில் செயல்படுகிறது. இனிய எதிர்காலத்தை உருவாக்குகிறது என்ற ஒரு கருத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

நிகழ்காலத்தில் உழைத்து எதிர்காலத்தில் பலனை எதிர்பார்க்கிற பண்புகள், உண்மையான அறிவாகும். நிகழ் காலத்தில் கனவு காண்பவன், நித்திய நோயாளியாக, வறுமையில் வதியும் கயவாளியாகவே வாழ்வான்.

கனவு கண்டு கொண்டு கிடப்பவனுக்கு கடமையாற்றத் தெரியாது. அவனது உடலும் மனதும் ஒத்துழைக்காது. அவனால் செயல் படவே முடியாது.

‘ஒருவர் ஒரு செயலில் ஈடுபடுவது என்பதே பெரிய காரியம்’ என்கிறார் ஒரு மேல் நாட்டறிஞர்.

ஒரு நல்லசெயலில் இறங்குவதே மகிழ்ச்சியான காரியம். மகிழ்ச்சி என்பதே நல்ல செயலில் ஈடுபடுவதுதான். அந்த செயலில் தான் ஆற்றல்கள் விளையும்!

சில சமயங்களில் செயல்களில் ஈடுபடும் பொழுது மகிழ்ச்சி கிடைப்பதில்லை. ஆனால், மந்தமாக உட்கார்ந்து கிடப்பவர்களுக்கும் மகிழ்ச்சி இல்லையே!

ஆனால் ’காரியம் ஆற்ற முனைகிறவர்களுக்குக் கடவுளே வந்து உதவுவார்’ என்ற ஒரு முதுமொழியையும் இங்கே நாம் நினைவு கூர்வோம்.

நமது திறமை என்ன என்று உணரும் நாள் இந்நாள். நாம் எப்படி வாழவேண்டும் என்று திட்டமிடுகிற திறமை நமக்குள்ளே இருக்கிறது. ஆற்றல் கொள்ள வைக்கிறது. ஆற்றலோ அதனை செயல்படுத்துகிறது. அறிவு எந்த முடிவையும் ஏற்றுக்கொள்ளும் ஆற்றலை வளர்த்து விடுகிறது. சோம்பேறித்தனமோ வராத முடிவுக்காகவே வருந்தித் துடிக்கிறது.

நாம் ஆற்றலை அறிந்து, அறிவினை வளர்த்துக் கொள்வது தான் நாம் மேற்கொள்ள வேண்டிய முதன்மையான பணியாகும்.