நமக்கு நாமே உதவி/உழைப்பே உற்சாகம்

விக்கிமூலம் இலிருந்து


3
உழைப்பே உற்சாகம்

வாழ்கையின் இலட்சியம் ஒரு நிலையான புகழைப் பெறுவதுதான்.

இந்த உலகில் இருந்து விட்டுச் சென்ற ஒருவரது சம்பவங்களை எதிர்காலத்தில் வாழ்கின்ற மக்கள் நினைத்துப் பார்த்துப் போற்றி, தாங்களும் அதுபோல வாழ்ந்து பார்க்க முயல்கின்ற அடிச்சுவடுகளைப் பதித்துவிட்டுச் செல்கின்ற அருமையான வாழ்க்கை முறையே நிலையான புகழாகும்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் புகழுடன் இருந்து விட்டுச் செல்ல வேண்டுமென்றுதான் விரும்புகின்றார்கள். ஆனால், ஆசை இருப்பதுபோல, செயல்முறை அமைவதில்லை.

காரணம் - மனிதர்கள் எல்லோரிடமும் திறமைகள் சக்திகள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் செயல்படும் தன்மையில் தான் பற்றில்லை, பொறுப்பில்லை, ஈடுபாடுள்ள உழைப்பில்லை.

உழைப்பில் வாராத வெற்றிகளே இல்லை. இந்த உண்மையை உணர்ந்து பாராட்டி பின்பற்றுபவர்களே வாழ்க்கையில் உயர்கின்றார்கள். இலட்சிய வாழ்வு வாழ்கின்றார்கள்.

“மனிதன் என்பவன் உழைப்பாளியே. தினம் உழைக்க மறுக்கிறவன் மனிதனல்ல” என்கிறார் மேனாட்டு அறிஞர் ஒருவர்.

ஏனென்றால், உழைப்பு என்பது மனித வாழ்வுக்கு உணவு போன்றது. இன்பமே வேண்டும் என்ற மனப்பாங்கு ஒருவரது வாழ்க்கையை பாலைவனமாக மாற்றி விடுகிறது.

உழைப்புதான் வாழ்க்கை என்றால், அது எப்படி என்று இப்பொழுது உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறதல்லவா. நியாயமான எதிர்பார்ப்புதான் இது.

எவன் ஒருவனுக்கு செய்வதற்கு வேலை இருக்கிறதோ அவனே பரிபூரண ஆசிகளைப் பெற்றிருப்பவன். எவன் தனக்குரிய வேலையைத் தெரிந்து கொள்ளாமல், ஏய்த்துத் திரிந்து சோம்பேறியாக வாழ்கிறானோ, அவன் ஒரு குட்டிச் சாத்தான் ஆவான்.

ஆமாம், அவன் தன்னையும் மாய்த்துக் கொள்கிறான். தன்னைச் சார்ந்தவர்களையும் தீர்த்து விடுகிறான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வேலை நிச்சயம் வேண்டும். கட்டாயமாக வேண்டும். உழைக்கத் தெரிந்தவனே மனிதன்.

அதனால்தான் ஒரு பழமொழி இப்படிச் சொல்லிச் செல்கிறது. ‘ஒரு மனிதனுக்கு உண்மையான நண்பர்கள் அவனுடைய பத்து விரல்களே!’

இந்த உழைப்பிற்கு ஆதாரமான விரல்களை மடக்கி வைத்துக் கொண்டு சிலர் பிச்சையெடுக்கவும், வழிப்பறி செய்யவும். ஒரு சிலர் கொலை கொள்ளை செய்யவும் முயல்கின்றார்கள் என்றால் அவர்களை முட்டாள்கள் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

ஒருவன் செய்கின்ற அவனது வேலையை வைத்துக் கொண்டே, அவன் எப்படிப் பட்டவன் என்பதைத் தெரிந்துக் கொள்ள முடியும். முடியாதா என்ன?

வேலை என்பது ஒருவனை வெளிப்படுத்திக் காட்டும் இயல்புள்ளது. அவனது குணாதிசயங்களை பிரதிபலித்துக் காட்டுவதும் ஆகும்.

ஆகவே, தேர்ந்தெடுத்துக் கொள்ளும் ஒரு வேலையே, அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காட்டிவிடும் என்பதால் நாம் மிகவும் கவனமாக வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். காரணம், நமக்கு நாமே உதவி என்பதால்தான்.

நம்மை உயர்த்திக் கொள்ளத்தான் நாம் முயல்கின்றோம். தாழ்த்தவோ வீழ்த்தவோ இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது.

எவ்வாறு நமக்குரிய வேலையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் அடுத்த பகுதியில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன் வேலையைப் பற்றிய விவரத்தைப் புரிந்து கொள்வோம். வீட்டுக்கு வாசற்படி போல இது இருக்கிறது.

வேலை என்பது வாழ்வின் ஆதாரம் மட்டுமல்ல. வேலையில் ஈடுபடும்பொழுது, அது நமக்கு அளிக்கின்ற சுகங்கள் பல.

பணம்தான் ஒருவருக்கு மகிழ்ச்சி கொடுக்கும் என்பதல்ல. ஒரு வேலையில் ஈடுபட்டு, அந்த வேலையை சிறப்பாக முடித்து, சிறந்த சாதனை புரியும் பொழுது ஏற்படுகின்ற மகிழ்ச்சிக்கும் இதய நிம்மதிக்கும் ஈடான நேரம் எதுவுமே இல்லை.

வேலையானது மகிழ்ச்சியை மட்டுமா விளைவிக்கிறது? வேறுபல சிறப்புக்களையும் அல்லவா விரைந்து கொடுக்கிறது! ஒரு மனிதன் முன்னேற வேண்டுமென்றால் மூன்றுதரமான குணாதிசயங்கள் கொண்டிருக்க வேண்டும்.

1. உண்மையான உழைப்பு, 2. உறுதியான உழைப்பு, 3. உற்சாகமுள்ள உழைப்பு. இந்த மூன்றையும் கொஞ்சம் நிதானமாகவே சிந்தித்துப் பாருங்கள் விளங்கும்.

உண்மையான, உறுதியான, உற்சாகமுள்ள உழைப்பு, மகிழ்ச்சியையும் செல்வத்தையும் கொண்டு வந்து தருகின்றன. எப்படி? அவை மனத்தின் அனத்தல்களை (பிரச்சினைகளை) விரட்டியடிக்கின்றன. அதற்குப் பக்கபலமாக விளங்கும் கெட்ட குணங்களை விட்டொழிக்கச் செய்கின்றன. அதற்கும் மூலகாரணமாக இருக்கும் வறுமையை வரவிடாமல் செய்கின்றன.

ஆகவே, உழைப்பே உற்சாகம், உற்சாகமே உழைப்பு என்ற ஓர் இலட்சியத்தை நாம் கடைப் பிடித்துக் கொண்டால் வாழ்வும், வளமும், புகழும் பெருமையும் நமது காலடியில் வந்து தவம் கிடக்காதா என்ன?

இது எப்படி முடியும்? என்று எதிர் கேள்வி போடுபவர்களுக்கு இந்த நிலை வராது. வரவே வராது. ஏனெனில் அவர்கள் நம்பிக்கை கெட்டவர்கள். தம்மைப் பற்றித் தாழ்வாகவே தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறவர்கள். உழைப்பின்மேல் நம்பிக்கை இல்லாதவர்கள்.

ஏனெனில், உழைப்பு என்பதும் வேலை என்பதும் ஒருவரை ஆட்டிப்படைத்து, உலக வாழ்க்கையின் இன்பங்களிலிருந்து வேறுபடுத்திவிடும் என்று தவறான கருத்துகளை அவர்கள் கொண்டிருப்பதால் தான்.

வேலையும் உழைப்பும் எப்படி இருக்க வேண்டும் என்பதை இனிக் காண்போம்.

வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் எல்லாம் கடுமையான உழைப்பாளிகளே.

அலுவலகத்தில் நாள் பூராவும் வேலை செய்து விட்டு, அதை வீட்டிற்கும் கொண்டு வந்து, இரவு நெடுநேரம் செய்து விட்டு, உறங்குகின்றவர்களும் கடுமையான உழைப்பாளிகள் தானே என்று கேட்பவர்களும் உண்டு.

அவர்கள் உழைப்பாளிகள் தான். ஆனால் புத்திசாலிகள் அல்ல.

உழைப்பு புத்திசாலித்தனத்துடன் அமைய வேண்டும். முட்டாள்கள் புரிந்து கொண்ட கடைசியாகச் செய்கின்ற காரியத்தை, புத்திசாலிகள் முதலிலேயே செய்து விடுகின்றார்கள் என்கிற ஒரு மேதாவியின் கருத்தை இங்கே நாம் ஆராய வேண்டும்.

ஒரு வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருப்பதாலேயே அவர் சிறந்த உழைப்பாளி என்பவராகி விட மாட்டார்.

குறிப்பிட்ட வேலையை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள்ளே செய்வதுதான் புத்திசாலித்தனம்.

கடினமாக உழைக்கின்ற உள்ளம் மட்டும் போதாது. விரைவாக முடித்து விட்டு, ஓய்வாகவும் இருக்கத் தெரிய வேண்டும்.

செய்கின்ற வேலையை செய்கின்ற இடத்திலேயே விட்டு விட்டு வரத் தெரிய வேண்டும்.

நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று வேலையை சேர்த்து வைத்துக் கொள்பவர்கள், சித்ரவதைப்படுவார்களே தவிர, சந்தோஷமாக மீண்டும் உழைப்பில் ஈடுபட முடியாது.

உழைப்பில் முன்னேற வேண்டும் என்று உறுதி எடுத்துக் கொள்பவர்கள், மேலும் நெஞ்சில் சில கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

காரணமில்லாமல் கோபப்படுவது ஒன்று அது மனதையும் கெடுக்கும். சுமுகமான சூழ்நிலையையே பாதித்து விடும்.

அடுத்தது அநாவசியமான பேச்சு, தன்னை அறிவாளி என்று வெளிப்படுத்த முனைந்து, அசடராகக் காண்பித்துக் கொள்ளச் செய்துவிடும். அநாவசியமான பேச்சு தேவையற்றதாகும். தேவைப்படும்படியான தன்மையில், சுருக்கமாக, தெளிவாக இதமாகப் பதமாகப் பேச வேண்டும். அதுவே உழைக்கும் இனிய நிலையை உருவாக்கும்.

மற்றொன்று காரணமில்லாமல் கருத்தை மாற்றிக் கொள்வது, என்ன நடக்கும் என்று முடிவறியாமல், செயலை மாற்றி அமைப்பது; முன் பின் தெரியாதவர்கள் சொல்லில் நம்பிக்கை கொள்வது, எதிரிகளை நண்பர்களாக எண்ணிப் பழகுவது. இவை எல்லாம் ஒருவரை முட்டாளாக வெளிபடுத்திக் காட்டுவதுடன், நல்ல செயலாற்றல் இல்லாதவர்கள் என்பதையும் தெளிவாக்கி விடும்.

ஆகவே, உழைப்பு என்பது மனிதர்க்குக் கிடைத்த வரப்பிரசாதம் என்று எண்ணி மகிழ்ந்து, செயல்பட்டு கடுமையாக உழைப்பவர்களே வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியும்.

‘தைரியமாக உழைப்பவர்கள் தான் வெற்றியை அடைய முடியும்’ என்கிறார் நேரு.

“வேலையைத் தொடங்குவதே சிறந்த வெற்றிதான்.” என்கிறார் இன்னொருவர்.

அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அறிவு கற்பிக்கிறது. அதை முடித்து வெற்றி காண்கிறது உழைப்பு.

இறுதியாக ஒன்று.

ஒரு பணியில் ஈடுபடும் பொழுதுதான் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஒவ்வொரு பணிக்கும் உள்ளாற்றல், திறமை தேவைப்படுகிறது. மனித சக்தியும் திறமையும் அதற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது.

எனவே, மகிழ்ச்சிதரும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் உழைக்காமல் மகிழ்ச்சி இல்லை. உற்சாகத்துடன் உழைப்போம். அது நம்மை உயர்த்தித்தான் நிற்கும். நாம் உயர வேண்டுமானால், நமக்கு நாம் தான் உதவிக் கொள்ள வேண்டும்.

வேறு வழியேயில்லை!