நமக்கு நாமே உதவி/தொழிலைத் தேர்ந்தெடுக்கும் திறம்!

விக்கிமூலம் இலிருந்து



4
தொழிலைத் தேர்ந்தெடுக்கும் திறம்!

ஒரு பட்டதாரி ஆசிரியர் வேலை பார்த்துக் கொண்டே ஏதாவது ஒரு தொழிலைச் செய்து முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அவரது ஆசையைப் புரிந்து கொண்டான் ஒருவன்.

தினமும் வீட்டுக்கு வந்து பால் கொடுக்கும் பழக்கம் உள்ள பால்காரன் அவன். ஒரு பால் மாடு வாங்கி விட்டீர்களானால், தினம் பால் வாங்கும் செலவு போக, பத்து ரூபாயாவது மிஞ்சும் என்று ஆசை காட்டினான்.

கையிலிருந்த 2000 ரூபாயைப் போட்டு, எருமைமாடு ஒன்றை அந்த ஆசிரியர் வாங்கினார்.

அவரால் மாட்டைப் பார்த்துக் கொள்ள முடியுமா? பால்காரனையே முழுதாக நம்பினார். பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

அவனே மாட்டுக்குப் பொறுப்பாளியானான். அவன் செலவு என்று சொன்னது தான் கணக்கு. லாபம் என்று தந்தது தான் வரவு. ‘சைட் பிசினஸ்’ என்பார்களே. அப்படி நடந்து வந்தது.

அக்கம் பக்கம் உள்ளவர்களிடம், மாடு அவனுடையது என்று சொல்லிக் கொண்டே வந்த பால்காரன், ஒரு நாள் மாட்டை ஓட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டான்.

பதட்டப்பட்ட ஆசிரியர், மாடு தன்னுடையது என்று தடுத்தார். அவன் மறுத்தான். மற்றவர்களும் அவர் பேச்சை நம்ப மறுத்தார்கள். மாடு பால்காரன் மாடாகப் போயே விட்டது.

வருத்தப்பட்டார் ஆசிரியர். தனது நண்பர்களிடம் கூறினார். அவர்கள் கூறியது அவருக்கு வருத்தமாக இருந்தாலும், உண்மையாகவே பட்டது.

‘உங்களுக்குத் தெரிந்த தொழிலை, உங்கள் கெளரவத்திற்கு ஏற்ற தொழிலைச்செய்திருந்தால். இந்த கதி வருமா?’ உண்மைதானே! இரண்டாயிரத்தை இழந்து அந்த உண்மையை உணர்ந்தார். அத்துடன், படித்த முட்டாள் என்ற பட்டத்தையும் பக்கத்து வீட்டார் வழங்க, பெற்றுக் கொண்டார்.

அடுத்ததாகவும் ஒரு தொழிலில் மாட்டிக் கொண்டார்.

தன் கூட இருப்பவனுக்கு உதவவேண்டும்! அத்துடன் தனக்கும் வருமானம் வேண்டும் என்று இரட்டை இலட்சியத்துடன் ஒரு தொழிலைத் துவங்கினார் அதே ஆசிரியர். தொடங்கிய தொழிலோ சைக்கிள் கடை.

என்ன ஆகியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? சைக்கிள் கடை பொறுப்பில் இருந்த ‘அவன்’ அதில் வந்த வருமானத்தையெல்லாம் தனதாக்கிக் கொண்டான். எப்பொழுதோ போய், கடைக்குச் சென்று, சிறிதுநேரம் இருந்துவிட்டு வருகின்ற பழக்கம் உள்ள ‘அவர்’. பாவம் - நஷ்டத்தையே சந்திக்க வேண்டியிருந்தது.

ஒன்றன்பின் ஒன்றாக சைக்கிள்கள் காணாமல் போகத் தொடங்கின. வருமானம் குறைந்தது. செலவோ அதிகமாகியது. அவர் கேட்கும் கேள்விகளுக்கு, அவன் கூறிய காரணம் அவரைக் குழப்பியது. கொஞ்சங் கொஞ்சமாகப் பிரச்சனைகள் பெருகின.

உடும்பைப் பிடிக்கப் போய், உடும்பு கையைக் கெளவிக் கொள்ள, ‘உடும்பு வேண்டாம் கை கிடைத்தால் போதும்’ என்று ஓடி வந்தவனைப் போல. வந்த விலைக்கு சைக்கிள் கடையை விற்று விட்டுத் தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடிவந்தார் அவர்.

தனக்குத் தெரிந்த தொழிலை அவர் தேர்ந்து எடுக்கவில்லை. தன் அந்தஸ்துக்கு ஏற்ற தொழிலாகவும் பார்க்கவில்லை. பிறரை நம்பித் தொழில் ஆரம்பித்தால் பெருத்த இழப்புதான் ஏற்படும் என்ற பேருண்மையை மட்டும் அப்பொழுது புரிந்து கொண்டார்.

துன்பம் தான் தொடர்கிறது என்றாலும், அவரால் ‘சும்மா’ இருக்க முடியவில்லை. கெளரவமான தொழிலாக ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது மனதுக்கு சமாதானமாக இருந்தது. வருமானம் அதிகம் இல்லையென்றாலும், வாழ்வுக்கு கெளரவம் கிடைத்தது.

போட்டோ ஸ்டுடியோ தொழில் அது. அதைப் பற்றிய ‘ஆன்னா ஆவன்னா கூட அவருக்குத் தெரியாவிட்டாலும், ஓர் அசட்டுத் தைரியம். 300 ரூபாய் சம்பளத்தில் ஒரு வேலைக்காரரை நியமித்தார். லாபம் அதிகம் இல்லாவிட்டாலும், நஷ்டம் இல்லாமல் தொழிலோ ஓடிக் கொண்டிருந்தது’.

ஒரு நாள் அந்த முதலாளி ஊரில் இல்லாத சமயம், திருமண வைபவத்திற்கு போட்டோ பிடிக்க ஒப்புக் கொண்டு போனார் அந்தத் தொழிலாளி. 20போட்டோ எடுத்ததில் ஒன்றைத் தவிர எல்லாமே பாழாய் போயிருந்தது தவறுசெய்தவன் தொழிலாளி. அதற்குரிய தண்டனையை அடைந்ததோ அந்த முதலாளி.

“இப்படி போட்டோ எடுத்து எங்கள் திருமண வைபவத்தையே குட்டிச்சுவர் ஆக்கிவிட்டீர்களே! இனிமேல் நாங்கள் திருமணமா செய்து கொள்ளப் போகிறோம்! நீங்கள் போட்டோ எடுத்த லட்சணம்...” பாருங்க என்று காட்டிப் பலவாறாகப் பேசிவிட்டுப் போய்விட்டார் பாதிக்கப்பட்ட அந்த மணமகன்.

முடிவு! தனக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்ட அந்த ‘அவர்’, போட்டோ கடையையும் மூடிவிட்டார்... பாவம்!

இதுபோல எத்தனையோ சுவையான சம்பவங்களைக் கூறலாம். தெளிந்த அறிவுள்ளவர்கள் கூட, தங்களுக்குத் தெரியாத தொழிலில் ஈடுபட்டதால், தங்கள் சொத்தையும் இழந்து, சுகத்தையும் இழந்து சோகத்திற்குள்ளாகி இருக்கின்றார்கள்.

ஒருவர் உலகில் உயிர் வாழ்வதற்கு, ஒன்று உத்தியோகத்தில் சேர்ந்தாக வேண்டும். அல்லது தொழில் முறை சார்ந்த வியாபாரத்தில் ஈடுபட்டாக வேண்டும்.

இரண்டில் ஒன்றை - எதுவாக இருந்தாலும் மனிதர்கள் தேர்ந்தெடுத்துத் தான் வாழ்ந்தாக வேண்டும். அது எப்படி என்று எது என்று தேர்ந்தெடுப்பதில் தான் திறமும் தேர்ச்சியும் இருக்கிறது.

மனதுக்குப் பிடித்த வேலையை அல்லது வியாபாரத்தைத் தேர்ந்தெடுப்பதுதான் மனிதர்க்கு உரிய மதிக்கூர்மையாகும் என்ற உண்மையை நாம் முதலில் புரிந்து கொண்டாக வேண்டும்.

‘மனிதர்கள் தங்களுக்குரிய வேலையை அல்லது தொழிலை தேர்ந்தெடுப்பதில்லை. அவைகள் தாம் மனிதனை ஆட்கொண்டு விடுகின்றன.’ என்ற வாசகமும் உண்மைதான்.

இதுதான் இயற்கையின் எழுதாத விதிமுறையாகும். இதனை உணர்ந்து ஒரு மேதை கூறுகிறார் இப்படி, ‘இந்த உலகம் ஒரு வைக்கோற்போர் போன்றது. அதனை மனித இனம் என்ற கழுதைகள் சுமந்து கொண்டும், இழுத்துக் கொண்டும் திரிய வேண்டியதுதான்.’

அதனால் தான், நமக்குரிய நிலை என்ன, நம்மால் என்ன முடியும் என்று, நமது வாழ்க்கைக்கு உதவுகின்ற பணியினை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ள முன் வர வேண்டும்.

தேர்ந்தெடுப்பதால் கிடைப்பன!

1. சிறந்த உழைப்பாளர்கள் அல்லது தேர்ந்த அறிவாளர்கள் தாங்கள் எதை அதிகமாக விரும்புகின்றார்களோ அந்தப் பணியில் தான் ஆர்வம் காட்டி, தேர்ந்தெடுத்துக் கொள்கின்றார்கள்.

2. அப்படி அவர்கள் ஆசைப்பட்டதைத் தெரிவு செய்து கொள்வதன் காரணமாக, அவர்களுக்கு உள்மனதிலே திருப்தியும் சமாதானமும் ஏற்படுகிறது. திருப்திதானே தொடர்ந்து பணியாற்றும் திறமைகளையும் சக்தியினையும் அளிக்கிறது! வளர்க்கிறது!

3. அப்படித் தேர்ந்தெடுப்பதானது ஆற்றலை அளிப்பதுடன், ஆழ்ந்த அறிவினையும் கொடுக்கிறது. இதனால் சாமர்த்தியமாக எந்தப் பணியையும் சாதிக்கின்ற தெளிவும் வலிவும் கிடைத்து விடுகின்றது. அதற்குரிய பரிசாக, பதவி உயர்வோ, பணவரவோ, புகழோ, அதிகார பலமோ எதுவும் கிடைப்பதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது.

4. பணியோ வியாபாரமோ எதுவாக இருந்தாலும், அதை பாரமாகக் கருதாமல், கடனே என்று நினைக்காமல், விதியே என்று தொடராமல், செய்யும் பொழுதே சந்தோஷமாகச் செய்யும் சிந்தையை இந்தத் தேர்ந்தெடுக்கும் பணி அளிக்கிறது.

5. செய்யும் தொழிலில் சந்தோஷம் இருப்பதால், இறுதி முடிவும், அதற்குரிய பலனும் சிறப்பாகவே அமைகின்றன. விரைவாகவும் பணி முடிகிறது. அதன் விளைவுகளும் நேர்த்தியாகவே நிறைவுபெற்று வருகின்றன.

எவ்வாறு தேர்ந்தெடுப்பது?

நமக்கென்று ஒரு பணியை அல்லது தொழிலைத் தேர்ந்தெடுப்பது ஏன் என்றால், அது நமக்கு உதவியாக இருக்கும் என்பதால் தான். ‘நமக்கு நாமே உதவி’ என்பதை நம் மனதில் கொண்டு தான் நடந்து கொள்ள வேண்டும்.

“பிறர் கையை எதிர்பார்த்துப் பிழைப்பது பேதையின் செயலாகும்! பிறரை நம்புவதே இறுதியில் வறுமையில் கொண்டு போய் விட்டுவிடும்” என்பதையும் நாம் மறக்கக் கூடாது.

ஆகவே, தொழிலை எப்படித் தேர்ந்தெடுப்பது?

அறிவுள்ள மனிதன் ஒருவன் தனக்குரியதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, தன்னை ஒரு முறை பார்த்துக் கொள்ள வேண்டும். தனக்குரிய தகுதிகளையும், திறமைகளையும், ஒருவாறு சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதிக எச்சரிக்கையுடன் இருந்து தேர்ந்தெடுக்க முயற்சிப்பது அதிக அறிவுடமையைக் குறிக்காது. அதனால், நமது உண்மை நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது சாலச் சிறந்ததாகும்.

இதயம் மிகச் சிறியதுதான். ஆனால் அதனுள் இருந்து வெளிக் கிளம்பும் நினைவுகளோ வான வீதியையும் வளைத்துப் பிடித்து முற்றுகையிட்டு, மோதிச் சாய்க்கும் வலிமை உடையது.

ஆகவே, ஆசைப்படுவனவற்றையெல்லாம் நாம் ஆக்ரமித்துக் கொள்ள முயற்சிக்கக் கூடாது.

வாழ்க்கையைப் பிரச்சினையாகவும் கருதிவிடக் கூடாது.

நமக்குரிய தொழில், நம்மை யாரென்று வெளிப்படுத்திக் காட்டக் கூடியது. ஆகவே, தேர்ந்தெடுக்கும் பொழுது, இது நமக்குப் பொருந்தும். இது நம்மால் முடியும். இதில் தொடர்ந்து செயலாற்ற முடியும். இதனால் நம் திறமைவளரும், பெருமை உயரும் என்பதை ஆய்ந்தறிந்து மேற் கொள்ள வேண்டும்.

தேர்ந்தெடுப்பதில் திறம் காட்டி விட்டால், பிறகு தெளிவான வழியும், வலிவான அறிவும் நமக்கு வந்து விடும். பிறகு சாதிப்பது கடினமான காரியமா என்ன?