உள்ளடக்கத்துக்குச் செல்

நமக்கு நாமே உதவி/கவனமும் புவனமும்

விக்கிமூலம் இலிருந்து

10
சுவனமும் புவனமும்

புவனம் என்றால் உலகம். நாம் வாழும் (உலகத்தில்) புவனத்தில் நன்றாக வாழவேண்டு மென்றால் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். சிறக்க வேண்டும்.

எப்படி எப்படி வாழ்ந்தால், நமக்கு நாமே உதவிக் கொள்ள முடியும் என்பதையெல்லாம் இனி தொகுத்துக் காண்போம். இது நமது செளகரியத்திற்காக சுகம் மிகும் வாழ்க்கைக்காக!!

1. பணமும் மனமும்

ஓரிடத்தில் கூட உறுதியாக, நிலையாக நிற்க முடியாத பணந்தான், தினம் உருண்டோடும் பண்பு கொண்ட பணந்தான், இன்று உலகத்தை ஆட்டுவிக்கின்ற திரண்டதோர் தெய்வீக சக்தியாக விளங்குகிறது.

‘கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்ற பாடல் வரி, இப்பொழுது முனைமழுங்கிய கத்திபோல, வலுவு இழந்து தவிக்கிறது.

‘இல்லானை இல்லாளும் வேண்டாள், ஈன்று எடுத்தத் தாயும் வேண்டாள், செல்லாது அவன் வாய்ச் சொல்’ என்ற பாடல் தான் இன்று உண்மையாகத் தெரிகிறது. திரிகிறது.

எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம். தன் கையெழுத்துப் போடக்கூடத் தடுமாறும் குடும்பம் அது. வெளியில் போய் சொன்னால்கூட மற்றவர்கள் வெறுத்து ஒதுக்குகிற குடும்பம் அது. அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவன். தெரு நடை பாதையில் சிறுகடை ஒன்றை ஆரம்பித்தான். சொற்ப ஜீவனம், அற்ப ஜீவனந்தான். அவனது அதிர்ஷடம், தனது தொழிலைத் தொடங்கி விட்டது. நடைபாதை கடை வியாபாரம் செழித்துக் கொண்டது. பத்தே ஆண்டுகளில் அவனது குடும்பம் பணக்காரக் குடும்பம் ஆகிவிட்டது. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் அப்படியே தலைகீழாக மாறி விட்டனர்.

அதுமட்டுமா? அவர்களை அலட்சியப்படுத்திப் பேசி, மதிப்புத்தர மறுத்த அக்கம் பக்கத்தார், சுற்றத்தார் கூட எல்லாமே மாறி விட்டனர்.

அவர்களைப் பார்த்த இடத்தில் பணிவான வணக்கம். பேசும்போது குழைவு. பக்கம் வந்தால் தாழ்வு, நெளிவு, பணம் வந்த பிறகு, பிறரின் செயல் முறைகள் எல்லாம் தலைகீழாய் மாறி விட்டதே!

காரணம் பணம்தான், படிப்பு, பண்பு, பேரறிவு, ஒழுக்கம் இவையெல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டது பணம். பணம் உள்ளவன் எப்படியிருந்தாலும் போற்றுகிறது. பணத்திற்கு அவ்வளவு சக்தி. பணம் வைத்திருப்பவன், எப்படியிருந்தாலும், அவனைப் பெருமைப் படுத்தி விடுகிறது இந்தச் சமுதாயம். மானம்கெட்ட சமுதாயம்.

இந்தப் பணத்தைப் பற்றி ஏன் இவ்வாறு கொஞ்சம் அழுத்தமாக எழுதுகிறேன் என்றால், இந்தச் சமுதாயம் பணத்தைத் தான் பெருமையாகக் கருதுகிறது. பணம் தான் மக்களிடத்தில் எல்லாவற்றிற்கும் ‘பிளஸ் பாயிண்டாக’ இருக்கிறது.

இந்த சமுதாயத்தில் நாம் கெளரவமாக இருக்க வேண்டும் என்றால், நமக்கு நாமே உதவிக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் பணம் சம்பாதிப்பதை முதற்படியாகக் கொள்ள வேண்டும்.

படிப்பு, அறிவு, ஞானம், கடின உழைப்பு, உயர்ந்த பண்பாடு இவையெல்லாம் ஓர் உடல் போன்றது அந்த உடல் எழுந்து நடமாட உயிர் வேண்டுமல்லவா? அந்த உயிர் தான் நாம் பெருமையாகப் பேசிக் கொண்டு வருகிற பணம்.

நாம் பணம் சம்பாதிப்பதைத் தான் இலட்சியமாகக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நமது பேச்சம், பண்பும், உண்மையும், உயர்ந்த லட்சிய வாழ்வும் மக்களிடையே எடுபடும். பிரபலமாகும்.

அப்படிப் பட்ட பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றால், நேர்வழியில் தான், நியாயமான வழியில். நமது உழைப்புக்கேற்ற ஊதியமாக, பிறர் பொருளைக் கவராத வகையில் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.

நமக்கு பணம் முக்கியம்தான். ஆனால் பணமே வாழ்க்கை அல்ல. பணத்திற்காக நாம் அதன் பின்னால் அலையக் கூடாது. நமக்குப் பணம் உதவுவது போல, நாம் விடுகிற ஏவலை செய்வதுபோல, பணத்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

நல்ல வழியில், நியாயமான முறையில் பணம் திரட்டும் பண்பில் தான் நமது மனம் செல்ல வேண்டும், செலுத்தப்பட வேண்டும் என்பது தான் நன்மைகளைத் தரும்.

இந்த வாசகத்தை நீங்கள் என்றும் நினைவில் நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது ‘I Need Money, but i am not after Money’.

இறுதியில் ஒன்று, பணம் இல்லாத மனிதன் வெறும் வில்லாகத் தான் இருப்பான். அதாவது வளைந்து போய். பணம் என்ற அம்பினை நாணில் வைத்து இழுக்கும்போது தான் மனிதன் என்ற வில் எழுச்சி பெறுகிறது. வீரம் அடைகிறது. வெற்றியாகத் தனது கடமையை செய்து முடிக்கிறது. அம்பும் வேகமாக விரைந்து செல்கிறது.

அதனால் தான். (அம்பு என்ற) பணம். பாதாளம் வரைக்கும் பாயும் என்றனர். இராமரின் அம்பு ஏழு மலைகளை குடைந்து செல்லவில்லையா அப்படித்தான் பணம் தேடும் இலட்சியத்தை முதலில் கொள்வோம்.

2. எண்ணமும் திண்ணமும்

நமது வாழ்க்கையின் இலட்சியம் முதலில் பணம். பிறகு புகழ்.

ஏழைக்குரிய புகழ் அவனை மற்றவர்களின் ஏளனத்திற்கு ஆளாக்கிவிடும். தமிழகத்தில் தலைசிறந்த கவிஞர் என்று போற்றப்படும் ஒருவர், ஏழை. புகழ் இருக்கும் அளவுக்குப் பொருள் வசதி இல்லாதவர். அவரால் கார் வாங்க முடியவில்லை. வெளியிலே போக ‘டாக்சியும்’ வைத்துக் கொள்ள முடியவில்லை. அதனால் பஸ்ஸில் போகிறார். பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார். அவரைப் பார்க்கிறவர்கள். ‘ஐயோ பாவம்’ என்று அனுதாபப்படுகிறார்கள். அவரது அறிவும், ஞானமும், புகழும் பெருமையும் அவரை கெளரவிக்கவில்லையே! ஏன்? ஏனென்றால், புகழுக்கேற்றபடி, அவர் சில ‘பந்தாக்களை’ செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்காகக் கொஞ்சம் பணத்தை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி ஒரு சில பணக்காரத் தனங்களை செய்யும் பொழுதுதான் சமுதாயம் சம்மதிக்கிறது. சிறப்பாக சேர்த்துக் கொள்கிறது சரித்திரக் கதாநாயகனாக சித்தரித்துப் போற்றுகிறது.

பணமும் புகழும் நாம் விரும்பியவுடனேயே வந்து சேர்ந்து விடுவதில்லை.

‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடிப்பாடி மகிழும். அதாவது நிலா தன் அருகிலே வந்து விட்டது போல உணர்வுடன் ஆடும். ஆனால் நிலா வானத்திலே. பாடும் குழந்தைகள் பூமியிலே! அதுபோல, ‘பணமே புகழே வா வா’ என்று பலர் பாடிக் கொண்டேயிருப்பார்கள். பணமும் இராது. புகழும் வராது. அவர்கள் காலம் கடைசி வரை அப்படியே பாடிப் பாடி ஏங்கியவாறே அழிந்து போகும்.

நிலா எப்படி நம்மிடம் வராதோ, அப்படியே தான் பணமும், புகழும். உங்களுக்குத் தெரியுமே நிலாவை நாடி மனிதர்கள் தானே சென்றார்கள். அதற்கு எத்தனைக் காலம் முயற்சித்தார்கள்! முனைப்புடன் செயல் பட்டார்கள்! அப்படித்தான் நாமும் பாடுபட்டு முன்னேற வேண்டும்.

நேர் வழியில் பணத்தையும் புகழையும் ஈட்டியவர்கள் எல்லாம், எண்ணத்தால் முதலில் இலட்சிய வாதிகளாகி, பிறகு உண்மையுடன் உழைப்பைத் தொடர்ந்ததால் உயர்ந்தவர்கள் ஆனவர்கள்.

தனக்கு எதுவும் சரியில்லை. நேரமே அமையவில்லை, எனக்கு வாய்ப்பே இல்லை, நான் துரதிர்ஷடக் கட்டை, என்று புலம்புகிற தவளை வாயர்கள். பணத்தையும் புகழையும் மட்டும் இழக்கவில்லை, பிறர ஏளனத்திற்கு ஆளாகி, அவமானத்திற்குள்ளகின்றார்கள்.

எண்னத்தில் முழுமை செயலில் வலிமை செல்லும் பாதையை எளிமையாகவும் இனிமையாகவும் மாற்றிவிடும் என்பதை எல்லோறும் உணர்ந்தே ஆகவேண்டும்.

எண்ணத்தில் திண்ணமாக இருப்போர்க்கு எல்லாமே நல்லதாகத் தான் மாறும், நான் உயர்ந்து விடுவேன். இது தான் என் இலட்சியம் என்று முடிவு செய்து கொண்டு முழு மூச்சாக உழைப்பவர்கள் தான் முன்னேறுகிறார்கள்.

திண்ணம் என்பதை ஆங்கிலத்தில் (Will power) என்று கூட நாம் கூறலாம். இந்தத் திண்ணம் என்பது எடுத்த காரியத்தை விட்டு விடாது. தொடர்ந்து துணிந்து செய்கின்ற விட முயற்சியாகும்.

வேண்டாதவைகளை ஒதுக்கி விட்டுவிட்டு, வேண்டுபவைகளை விடாமல் தொடரும். மனப் பாங்கும். மாபெரும் முயற்சியும் தான் திண்ணம் என்று புகழ்ந்துரைக்கப்படுகிறது.

3. காலம், நேரம், இடம்.

ஒரு பழமொழியை இங்கு நாம் தெரிந்து கொள்வோம். “வேத வாக்கியங்களின் அர்த்தங்களை தனது செயலுக்கேற்ப தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டு தான் விரும்பியவண்ணம் சைத்தான் செய்து வெற்றி கொள்கிறது” என்பதுதான் அந்தப் பழமொழி.

அந்த மொழியின் வழியினை முழுதுமாக நாம் பற்றுக் கொள்ளக் கூடாதுதான். ஆனால் அதன் அடிப்படைப் பொருளை நாம் உணர்ந்து கொண்டு, அதன்படி நடந்து கொள்வது நான் அறிவுடமையாகும்.

தான் நினைத்துக் கொண்டு ஒரு காரியத்தைத் தொடரும் போது கடைசிவரை அப்படியே நடந்து விடுவதில்லை. ஏறுக்கு மாறாக நடப்பது தானே இயற்கை.

நினைத்தது போல் நடக்கவில்லையே என்று நிலைகுலைந்து நின்று போனால், அதில் என்ன ஆண்மை இருக்கிறது.

ஆகவே, எது நமக்கு உதவியாக முன்னேற உதவுகிறதோ, எந்த வழி நமக்கு எளிதாக நடைபோட வாய்ப்பளிக்கிறதோ, அவற்றை ஏற்று, பயன்படுத்தி, வெற்றிகரமாக செயல்களை விரைந்து முடிப்பது தான் விவேகமாகும்.

சைத்தான் தவறான முறைகளைப் பின்பற்றி, தனது காரியத்தை சாதித்துக் கொள்ளும் என்பார்கள். அந்த சைத்தான் முறை வேண்டாம். நமது காரியம் நடந்தேற, நல்ல வழிகளில் நல்ல முறைகளில் நடந்து கொள்ள வேண்டும் என்பதில் நாம் கண்ணுங் கருத்துமாக இருந்திட வேண்டும்.

தவறான வழிகளில் பெறுகிற வெற்றி, தவறான ஆசைகளுக்கே தூண்டுகோலாகிவிடும். தூய்மையான வழிகளில் வந்து சேரும் திரவியம், தீயவைகளுக்கு உட்படுத்தி, தீராத துன்பங்களையே துணையாக்கித் தந்துவிடும்.

வேப்ப மரத்தின் எந்த பாகமும் கசப்புதான். தீமையின் மூலம் தேடுகிற புகழும், திரட்டுகிற செல்வமும் தீமைகளையே தரும்.

எனவே, நமக்கு நாமே உதவிக்கொள்ள முனையும் போது, ஏற்கனவே திட்டமிட்டபடி காரியங்கள் நடைபெறாத பொழுது, ஏற்படுகிற சந்தர்ப்பங்களை நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது தான், நாம் மேற்கொள்ள வேண்டிய சிறந்த அணுகு முறையாகும்.

அதனால், காலம், நேரம், இடம் பார்த்து, கவனமாக இருந்து, எதிர்த்து வருகிற செயல்களுக்கேற்ப தந்திரமாக, தன் திறத்துடன் செயல்பட்டு, ஜெயித்துக் கொள்ள வேண்டும்.

காலத்தை வீணாக்காமல் கணக்கிட்டு, நேரம் பார்த்து செயல்பட்டு, இடம் தெரிந்து திறமைகளைப் பிரயோகித்து விட்டால் வெற்றிகள் வந்து குவிந்து விடுமே!

4. செயலும் பலனும்

கிணற்றில் குப்பைகளை வாரிக் கொட்டிவிட்டு, அதிலிருந்து நல்ல தண்ணீரைக் குடிப்பதற்காக எடுக்க விரும்புகிறவன், கேடு கெட்ட முட்டாளாகத்தான் இருப்பான்!

சுத்தமான தண்ணீர் வேண்டும் என்று சுகம் கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது.

இதனால் தான் நல்ல நீரை விரும்புகிறவன் கிணற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்டவைகள் அதில் விழுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நல்ல மனம் என்ற கிணற்றில், நல்ல தண்ணிர் என்ற நினைவுகள் ஊறிக் கொண்டேயிருக்கும்.

தீய நினைவுகள், தீய பழக்கங்கள் என்ற குப்பைகள் மனக் கிணற்றில் விழாமல் பார்த்துக் கொள்பவர்களுக்கு, ‘தாகம் தீர்க்கும்’ தூய தண்ணீர் கிடைப்பதுடன், ‘சுகம்’ கொடுக்கும் சுவையான நீராகவும் கிடைத்து விடுகிறது.

இதனால் தான் நல்ல உடல் - நல்ல மனம் - நல்ல வாழ்வு என்பதை வற்புறுத்தி எழுதிவருகிறேன்.

இப்படிப்பட்ட பண்பார்ந்த மனம், நல்ல வலிமையான உடல் செழிப்பினால்தான் வரும், வளரும்.

சோம்பேறித் தெரு நாய்கள், முயல்களை விரட்டத்தான் முடியும். வலிமையான வேட்டை நாய்களே, முயல்களை விரட்டிப் பிடிக்க முடியும் என்கிற பழமொழியை இங்கே நினைவு கூர்வோம்.

வலிமையான உடலில் விளையும் நலமான சிந்தனைகள், நல்ல செயல்களில் ஈடுபடும் பொழுதுதான், எதிர்பார்க்கும் இனிய பலன்களைக் கொடுக்கும்.

வேட்டை நாய்களைப் போல செயல்களில் ஈடுபட வேண்டும். விரட்டும் வேலை எளிது. பிடிக்கும் வேலையோ பெரிது. அதுபோலவே, செய்யும் தொழிலை செய்வது போன்ற ஆரவார பாவனையுடன் செய்வது எளிது. ஆனால் பலனும் குறைவுதான்.

அப்படிச் செய்வதை நம்மை நாமே குழியில் வீழ்த்திக் கொள்வது போலாகும். அவ்வாறு செய்வதைவிட்டு, நமக்கு உதவுகின்ற வகையில், பலன்கள் பெறுகின்ற வழியில் நமது சிந்தனைகளும் செயல் முறைகளும் விளங்க வேண்டும்.

5. தடைகளை உடைக்கும் ஆற்றல்

அமைதியான கடலில் கப்பல் விடுவதென்றால், எல்லோராலும் தான் முடியும் கொந்தளிக்கும் சூறாவளியில், மலை உயரம் எழும்புகிற அலைகளுக்கிடையில், கொட்டும் மழையில், கப்பலைச் செலுத்துவது என்பது தேர்ந்த மாலுமிகளால், நல்ல கப்பல் தலைவர்களால் மட்டுமே முடியும்.

அதுபோலவே, சாதாரண நேரங்களில், சமர்த்தாகப் பேசி, சாதுர்யமாக வேலைகளை முடித்து விடுவோம் என்பது சாமான்ய மனிதர்களாலும் முடியும்.

தவிர்க்க முடியாத தடைகள், குழப்பிவிடுகின்ற குயுக்திகள், சதித்திட்டம் போல் விளங்கும் சந்தர்ப்பங்கள், மீறி வர முடியாத அளவுக்குப் பிரச்சினைகள். இவற்றிலிருந்து வெற்றிகரமாக வெளிவருவதுதான் வீரத்திற்கு அழகாகும். விவேகிகளின் செயலுமாகும்.

ஆகவே, எதிர்ப்புக்களைக் கண்டு இடறி விழாத பண்புள்ளவர்கள். அவற்றை எத்தி உதைத்துவிட்டு, பாதையை ராஜ பாதையாக ஆக்கிக் கொள்பவர்களால் தான் வெற்றியாளர்களாக விளங்க முடியும். வாழ்வையும் வெற்றி கொள்ள முடியும்.

6. நாவும் நயமும்

அன்பு தான் உலகை ஆள்கிறது. அன்பான சொல் தான் கேட்பவரை மகிழ்விக்கிறது. அன்பான நடத்தையே அடுத்தவர்களிடம் பிரியத்தையும் மரியாதையும் பெற்றுத் தருகிறது.

நமது முயற்சியைப் பற்றிக் கேவலமாகப் பேசுபவர்களும், நமது வெற்றியைப் பற்றி வன்மையாக விமர்சிப்பவர்களும், நமது தோல்வியைக் கண்டு விலா எலும்புகள் ஒடிய சிரிப்பவர்களும் தான் நம்மைச் சுற்றி இருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

அப்படிப்பட்டவர்களிடமும் நாம் அன்பாகத் தான் பேச வேண்டும். அன்பாகவே நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் விரும்பாவிட்டாலும், நாம் அன்புடன் பழகிடவே முயல வேண்டும்.

ஏனெனில், பேசுகிற சொல்லும், வீசுகிற கல்லும் மீண்டும் தொடங்கிய இடத்திற்கு வந்து சேராது. பேசிய சொல் பேசியது தான். வீசிய கல்வீசியதுதான்.

வாழ்வில் முன்னேற விரும்புபவர்கள், நாவை மிக எச்சரிக்கையுடன் பயன்படுத்தவேண்டும் சொல் மட்டுமே முதலில் ஒருவரை வசீகரிக்கிறது. அல்லது விரோதியாக்குகிறது.

முன்னேற விரும்புகிறவர்களுக்கு பல நல்ல நண்பர்கள் கூட இல்லாமல் இருந்துவிடலாம். ஆனால் எதிரி என்று யாரும் இருக்கக்கூடாது.

ஏனெனில், நமது முன்னேற்றத்தின் வேகத்தை எங்கிருந்தோ ஓர் எதிரியால் மிக எளிதாகத் தடுத்து விட முடியும். வீணானத் தடைகளை நாமே ஏன் விளைவித்துக் கொள்ள வேண்டும்?

ஆகவேதான், செயலில் விவேகம் காட்டுவது போல. சொல்லிலும் விவேகம் காக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

7. நாணயம் வேண்டும்

உறுதியான மனம், உறுதியான எண்ணங்கள், உறுதியான சொல்லாற்றல், உறுதியான தொடர் செயல்கள் எப்பொழுதும் வெற்றிகளை உறுதி செய்வனவாகும்.

பிறருக்கு உதவி செய்யாமல் கூட இருக்கலாம். உபத்திரவம் செய்யாமல் இருப்பதுதான் உத்தமமான பண்பு என்று கூறுவார்கள்.

அதுபோலவே, பிறருக்கு உதவுகிறேன் என்று பேசாமல் கூட இருந்துவிடலாம். ஆனால், வாக்குறுதி கொடுக்காமல் இருப்பதுதான் விவேகம்.

ஏனெனில், ஒரு பறவையானது அதன் குரலைக் கொண்டே அறியப்படுவது போல, (முன்னேற விரும்பும்) ஒருவரது நாணயமும் அவர் சொல்லாலே அறியப்படுகிறது.

ஒருவர் காலால் தடுமாறி விடலாம். விழலாம். ஆனால் சொல்லால் தடுமாறி வாழவே கூடாது.

முட்டாள்கள்தான் தங்கள் சொற்களால் தங்களையே முழுதாக அதாவது மட்டரகமாக வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அறிவாளிகளோ அர்த்த ராத்திரியில் அற்புத முழு நிலவாக ஒளிர்ந்து கொள்கிறார்கள்.

ஆகவே, நாணயத்தை வெளிப்படுத்தும் சொற்களைப் பேசுவதும், அவற்றைக் கண்ணியத்துடன், கடமை உணர்வுடன் காப்பாற்றிக்கொள்வதும். முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவுவனவாகும்.

8. சிக்கனமும் செலவும்

ஒருவர் எவ்வளவு ரூபாய் சம்பாதிக்கிறார் என்பதில் அல்ல பெருமை. அவர் எவ்வளவு சேர்த்து வைக்கிறார் என்பதில்தான் பெருமை.

ஆயிரம் ரூபாய் ஒரு மாதத்திற்கு சம்பாதித்து விட்டு 1200 ரூபாய் செலவு செய்பவரை விட, மாதத்திற்கு 500 ரூபாய் சம்பாதித்து, 50 ரூபாய் சேர்த்து வைப்பவரே சிறந்தவராவார்.

ஒரு பைசா கூட ஒரு நாளைக்கு சேர்த்து வைக்காதவர் பணக்காரர் ஆகிடுவார் என்கிற பேச்சுக்கு இடமேயில்லை.

இன்றைய செலவாளி நாளைய பிச்சைக்காரன் ஆவான்.

பணத்தால் மட்டும் தான் சேர்க்க முடியுமா? உடலாலும்தான். உடல் சக்தியை ஊதாரித்தனமாக செலவு செய்பவர்கள், உருக்குலைந்து போயொழிவார்கள்.

இன்றைய உடல் சக்தியை, இளமை சக்தியைச் சேர்த்துவைக்காமல் சீரழிக்கிற செலவாளி, நாளைய நோயாளியாவான் என்பதற்கு சந்தேகமே இல்லை.

நீங்கள் பெரும் பணக்காரர்களைப் பார்த்திருப்பீர்கள். பணத்தை சிக்கனப்படுத்தத் தெரிந்துகொண்ட அவர்களால், உடல் சக்தியை சிக்கனப்படுத்தாமல் செலவு செய்துவிட்டதால், சேர்த்தப் பணத்தை அனுபவிக்க முடியாமல், செத்தும் சாகாத நடைப்பிணங்களாய், நோய்களால் நொறுக்குண்டு கிடக்கின்றார்கள்.

நோய் என்பது உடல் உழைக்க மறுத்து செய்கின்ற ‘ஸ்டிரைக்’ போன்றதாகும்.

பலவாறான பேய்ச் செயல்களால் பாதிக்கப்பட்ட உடல்தான் நோய்வாய்ப்படுகிறது.

பணத்தைச் செலவு பண்ணாமல் சேர்த்து வைக்கிறவன் பணக்காரன் ஆகிறான். உடல் சக்தியை செலவு செய்யாமல் சேர்த்து வைக்கிறவன் பலவான் ஆகிறான்.

முன்னேற விரும்புகிறவர், அவருக்கு அவரே செய்துகொள்கின்ற உதவியாவது - பணத்தைச் சேர்ப்பது போலவே உடல் சக்தியையும் நேர்த்தியாக சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

உங்கள் உயர்ந்த நினைப்பும், உன்னத உழைப்பும், உங்களை நிச்சயம் காக்கும். உங்களுக்கு கட்டாயம் உதவும். உங்களது எதிர்காலத்தை ஒளி மிகுந்ததாகப் பிறப்பிக்கும்.

நல்ல தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுங்கள். சரித்திரம் படையுங்கள். எழுச்சியுடன் உழைப்பவருக்கு இறைவன் உதவி என்றுமே உண்டு!