உள்ளடக்கத்துக்குச் செல்

நமக்கு நாமே உதவி/சக்தியும் சாமர்த்தியமும்

விக்கிமூலம் இலிருந்து



9
சக்தியும் சாமர்த்தியமும்

நமக்கென்று சில சக்தியும், சாமர்த்தியமும் உண்டு.

நிச்சயம் நாம் நம்பித்தான் ஆகவேண்டும். நம்பிக்கையற்றவன் நடைப்பிணம் போன்றவன்.

நமக்குள்ள சக்தி, திறமை, சாமர்த்தியம் என்ன வென்று முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அவைகள் அன்றாடம் நாம் செய்கின்ற செயல்களிலே தொனித்து நிற்கும், தனித்து நிற்கும். சில சமயங்களில் செழித்தும் நிற்கும்.

இருக்கும் சக்தியை திறமையை நமக்குள் எவ்வளவு என்று தெரிந்கொள்ள வேண்டும். அதற்கு நம்மை நாமே கொஞ்சம் தயார் செய்து கொள்ள வேண்டும்.

மற்றவர்களைப் பற்றியே பேசிப் பேசி, மற்றவர்கள் குறைகளையே ஏசி ஏசி, மற்றவர்கள் மேல் வெறுப்பையே வீசி வீசிப் பழக்கப்பட்டவர்கள் தாம் மனிதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்.

உன்னைப் பற்றி சிந்தித்துப் பார்’ என்று சில அறிஞர்கள் மக்களுக்கு அறிவுரை கூறுவார்கள்.

‘என்னைப் பற்றி நான் சிந்தித்ததால் தான், சிலை வடிக்கும் சிற்பி, சிந்தனைச் சிற்பியானேன்.’ என்று சாக்ரடீஸ் அன்று கூறினார்.

தன்னைப் பற்றி சிந்திப்பது என்பது, தன்னைப் பற்றிப் பெருமையாக மற்றவரிடம் பேச அல்ல. தன்னைப்பற்றி மற்றவரிடம் பீற்றிக்கொள்ள அல்ல. தன்னைப்பற்றி சிந்திப்பது தற்பெருமையை வளர்க்க அல்ல. தனது திறமையை அளக்க. வளர்க்க.

தற்பெருமை தலைகுனிவுக்கு ஆளாக்கி விடும். தனது அரிய திறமையை செல்லரிக்கச் செய்துவிடும். வளரும் பாங்கினை வேரோடு வெட்டிச் சாய்த்து விடும்.

இங்கே நாம் சொல்வது தன் நினைவு. சுய நினைவு.

தனக்குள்ளே திறமையின் தகுதி அளவு என்ன? அதை வளர்க்க தான் என்ன செய்ய வேண்டும்? அதை எங்கே, எப்பொழுது எப்படி பயன்படுத்த வேண்டும். என்பது தான் சாமர்த்தியம். சக்தியின் ஆரம்பம்.

நமக்கென்று ஒரு சக்தி இருக்கிறது. அதை நிறைவேற்ற ஒரு நேரம் இருக்கிறது. அதற்குரிய சாமர்த்தியம் இருக்கிறது என்று பேசிக் கொண்டிருப்பது நமக்கு நாமே செய்து கொள்ளும் உபத்திரவமாகும்.

உதவி என்பது சொல்லில் இருந்தால், ஏட்டில் சர்க்கரை என்று எழுதியிருப்பது போல் தான். ஏட்டு சர்க்கரை இனிக்காது. பேச்சு உதவி பலிக்காது. பிரயோஜனப் படாது.

மீன் பிடிக்க விரும்புகிறவன், தூண்டில் எடுத்துக் கொண்டு ஆதாரமாக புழுக்களையும் கொண்டு சென்று, மீன்கள் இருக்கும் இடம் தேர்ந்து அமர்ந்து, எச்சரிக்கையுடன் கவனமாக இருந்து, மிதப்பின் நிலையறிந்து செயல் பட்டால் தான், மீன்களைப் பிடிக்க முடியும்.

வீட்டில் படுத்துக் கொண்டால், வீண் தானே! வீட்டுக்கா, மீன்கள் ஓடிவரும்?

நமக்கெல்லாம் ஒரு நம்பிக்கை, நாளைக்கு நமக்கு - எல்லாம் வந்து விடும். கை கூடிவிடும் என்பதாகும்.

தூரத்தில் தெரிகின்ற மங்கிய பொருளைப் பார்த்துப் பெறும் மகிழ்ச்சியைத் தான் நாம் அனுபவிக்கக் கற்றுக் கொண்டிருக்கிறோமே யொழிய. களிக்க நாம் தயாராக இல்லை.

நாம் ஒரு சில இடங்களுக்கு அங்குமிங்கும் போய் வருகிறோம் என்பதாலேயே நாம் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பலர் எண்ணித் திருப்திப்பட்டுக் கொண்டு விடுகின்றார்கள்.

நாம் செய்யும் செயல்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும் வளர்ச்சி என்று சொல்லி விட முடியாது. நமது எல்லா இயக்கங்களும் முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்கின்றன என்றும் கூறிவிட முடியாது.

நாம் என்ன செய்கிறோம் என்று அறிந்து செய்வதுதான் சாமர்த்தியம்.

ஒவ்வொரு காரியத்திலும் சங்கடங்கள், தடைகள் வரும். நேரும், அவற்றை சந்திப்பதிலும், சமாளிப்பதிலும், சரிகட்டுவதிலும், சாதிப்பதிலும் தான் சக்தியும் திறமையும் நிறைந்து கிடக்கின்றன.

நமக்கும் ஒரு காலம் நிச்சயம் வரும் என்று நம்பி உழைப்பது அறிவாளியின் செயலாகும். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கிடப்பது முட்டாள்களின் பண்பாகும்.

சாமர்த்தியத்திற்கு ஓர் இலட்சியம் உண்டு. அது சக்தியை சரியான வழியில் பயன்படுத்தி, முன்னேற்றப் பாதையில் நடத்தி விடுவதுதான்.

உலகத்தில் முன்னேறிய பல மேதைகள், சாமர்த்தியசாலிகள் இப்படித்தான் கூறுகின்றார்கள். “நாம் எங்கு இருக்கிறோம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எந்தத் திசை நோக்கிப் போய்க்கொண்டி ருக்கிறோம். என்பதைப் பொறுத்தே நமக்கு உதவி கிடைக்கிறது. உயர்வும் கிடைக்கிறது” என்பதாக.

“ஆகா! நாம் நல்ல நினைவுகளுடனே இருக்கிறேன். எனக்கும் எல்லாமே நல்லதாகத்தான், நடக்கும்” என்று எண்ணிப் பெருமைப்பட்டுக் கொண்டு வாழ்பவர்கள் நிறைய பேர் உண்டு.

நல்ல நினைவுகள், நல்ல கனவுகள் கொண்டிருப்பது நியாயம் தான். அவைகள் செயல் ரூபம் பெறும் போதுதான் சிறப்புப் பெறுகின்றன. மதிப்பும் பெறுகின்றன.

இவற்றையெல்லாம் ஒருவர் தனிமையில் இருக்கும்போது தன்னைப்பற்றி சிந்தித்துப் பார்த்துக் கொள்ள உதவும்.

மனிதன் தனிமையில் இருக்கும் போதுதான், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டவனாக, மரபுக்கும் தருமத்திற்கும் மதிப்பளிப்பவனாக விளங்குகிறான். மற்றவர்களோடு சேர்ந்து கொள்ளும் பொழுது, மாறுபட்ட குணாதிசயங்களில் முடங்கிப்போய் விடுகிறான்.

அதனால் தான் அறிவாளிகள் எல்லோரும் ‘தனிமையே இனிமை’ என்று பேசினர். பிறருக்கும் உபதேசித்தனர்.

அதற்காகத் தனியாகவே இருக்க வேண்டும் என்பது நமது வாதமல்ல.

காலையில் தூங்கி விழித்தவுடனே, மற்றவர்களைப் பற்றி யோசிக்காது. நாம் இன்று செய்ய வேண்டியது என்ன என்று யோசித்துத் திட்டமிடுகிற சிந்தனை வேண்டாமா! அது தான் தனி சிந்தனை.

நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று திட்டமிட்டு நடந்து கொள்கிறவர்கள் தாம் சோம்பலின்றி, திகைப்பின்றி, சுறுசுறுப்பாகக் காரியமாற்றிக் கொண்டும், அதனை முடித்த திருப்தியில் மகிழ்ச்சியாகவும் வாழ்கின்றார்கள்.

நாம் அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடாதவர்கள், அவர்களுக்கு அவர்களே எதிரிகளாகி விடுகின்றார்கள். ஏனென்றால், திட்டமிடாத வாழ்க்கை சுற்றுச் சுவர் இல்லாத வீடாகப் போகின்றது.

திட்டம் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அதை தீட்டுவதுதான் சாமர்த்தியமாகும்.

வானொலி, தொலைக்காட்சி போன்ற நிலையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை நீங்கள் அறிவீர்கள். அங்கு பணியாற்றும் தயாரிப்பாளர்கள். தாங்கள் அடுத்த மாதத்திற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, அதற்கான வழிமுறைகளைக் கடைப் பிடித்து, வேண்டிய யாவையும் செய்து தயாராகிக் கொண்டு விடுவார்கள்.

அப்படிப்பட்ட எதிர்காலத் தாயார் நிலை ஒவ்வொரு மனிதருக்கும் வேண்டும்.

பத்திரிக்கைகளில் நீங்கள் படிக்கும்பொழுது, தலைவர்களைப் பற்றிய செய்திகள், இன்னும் பிற விஷயங்களை உடனடியாக பிரசுரிப்பதைப் பார்த்து, நீங்கள் ஆச்சரியம் அடைவதுண்டு.

அங்கே பணியாற்றுபவர்கள், எதிர்காலத்திற்கு இவையெல்லாம் தேவை என்று முன்னுணரும் அறிவினை வளர்த்துக் கொண்டு பணிபுரிகின்றார்கள்.

அப்படிப்பட்ட எதிர்கால முன்னுணரும் அறிவு ஒவ்வொருவருக்கும் வேண்டும்.