நமக்கு நாமே உதவி/நமக்குள்ளே ஒரு சக்தி

விக்கிமூலம் இலிருந்து



8
நமக்குள்ளே ஒரு சக்தி!

முன்னேறி விட வேண்டும் என்று மனதில் ஆசையானது கோட்டை கட்டிக் கொண்டு கிடக்கிறது. ஆலமரம் போல் விரிந்து பரந்து அசைந்தாடிக் கொண்டிருக்கிறது.

முன்னேறி விடுவது என்றால் என்ன? நாட்களை தள்ளிக் கொண்டே போய் விடுவது என்பதா அர்த்தம். இல்லையே!

இந்த உலகத்தில் பிறந்து விட்டோம். எத்தனையோ கோடி மக்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டார்கள். வாழ்கின்றார்கள். வந்தும் வாழப் போகின்றார்கள்.

அவர்களைப் போல நாமும் ஓர் அலைக்குமிழாய் நுரைத்து, காற்றில் வெடித்துக் காணாமல் போவதற்குத்தானா நாம் இந்த அற்புதமான மனிதப் பிறப்பை எடுத்திருக்கிறோம். இல்லையே!

எல்லாரும் புகழ்வது போல ஓர் அற்புதமான காரியத்தை செய்து புகழ் பெறுவதுதான் நமது தலையாய நோக்கம். “தோன்றிற் புகழோடு தோன்றுக” என்பது தானே அந்த லட்சியம்!

புகழ் பெறுவது என்பது உயர்ந்த பணியில், ஒப்பற்ற செயலால், திரண்ட செல்வத்தால், தர்மத்தால், தன்னிகரில்லாத தொண்டினால் என்று எத்தனையோ வகைகளில் கிடைக்கும்.

அதற்கு நம்மைத் தயார் செய்து கொள்வதுதான் வாழ்க்கையில் நாம் மேற்கொள்ள வேண்டிய பெரிய கடமையாகும்.

எனக்கு அந்த திறமையே இல்லையே! எனக்கு அப்படி ஒரு வாய்ப்பும் இல்லையே! எனக்கு எந்த விதமான வசதியும் இல்லையே! என்று பேசிக் கொண்டே கிழமாகிப் போய் மறையும், பேர் வழிகள் தாம், பிரபஞ்சத்தில் பல கோடி மக்களாக இருக்கின்றார்கள்.

இப்படி ஒரு வாழ்க்கைமுறை இருக்கிறதா? அதற்கு இப்படி வழி வகைகள் உண்டா? நானும் முயற்சித்து பார்க்கிறேனே! என்று முனையும் மக்கள் தான், முன்னேறி வருகின்றார்கள். அப்படிப்பட்டவர்கள் தாம் உலக மக்களிடையே உயர்ந்த நிலைமையில் வாழ்கின்றார்கள். உன்னதமான தலைமையில் வாழ்ந்து வழிகாட்டுகின்றார்கள்.

அப்படி என்றால் அதில் உள்ள ரகசியத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களும் மனிதர்கள் தாமே? அவர்கள் எப்படி இப்படி மாறினார்கள்? தேறினார்கள்? வாழ்க்கை உயரத்திற்கே ஏறினார்கள்?

அதுதான் முன்னேற்றத்தின் ரகசியம்.

“மரம் வைத்தவன் தண்ணீர் விடாமலா போய்விடுவான்? கல்லினுள் தேரைக்கும், முட்டையில் கருவுக்கும் உணவு தருகிற ஆண்டவன், என்னைக் கைவிடவா போகிறான்?”

விதிதான் வாழ்வை வழி நடத்துகிறது. மதியால் என்ன முடியும்? எனக்கு இன்னும் வேளை வரவில்லை. எல்லாவற்றிற்கும் இறைவன் அருளிருந்தால் போதும்; கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்து கொட்டுவான்.

ஓர் அமைதியான மன நிலைக்காக உருவாக்கிச் சொன்ன வார்த்தைகளை வைத்துக் கொண்டு வாழ்க்கையையே வடிவமைத்துக் கொள்ளும் மனிதர்கள் தாம், மேற்கூறியவாறு முணுமுணுத்துக் கொண்டு வாழ்ந்து செல்கின்றார்கள்.

இறைவன் எப்பொழுது உதவி செய்கிறான் என்றால், வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்பவர்களுக்குத்தான் என்கிறார் வள்ளுவர்.

உழுகின்ற காலத்தில் உட்கார்ந்து உறங்கிக் கொண்டிருப்பவர்கள். மற்றவர்கள் அறுவடை செய்கின்ற காட்சியைப் பார்த்து அழுது கொண்டு தவிப்பார்கள் என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதேயில்லை.

இன்றைய சோம்பேறி நாளைய பிச்சைக்காரன். இந்தப் பழமொழியை யாரும் மறந்து விடக்கூடாது.

நமது தகுதியை எண்ணி ஆராய்ந்து, ‘இதுதான்’ என வரையறுத்து முடிவுசெய்து கொண்டு, இப்படித்தான் நடக்க வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு, கஷடங்களைப் பொருட்படுத்தாமல் காலத்தைப் பயன்படுத்தி உழைப்பவனே கர்ம வீரனாக, கலங்காத தீரனாக மாறுகிறான்.

நமது உழைப்புக்கோ, முன்னேற்றத்திற்கோ மற்றவர்கள் வந்து உதவி செய்வார்கள். உயரும் வரை அருகில் நிற்பார்கள்; நமது வெற்றியில் மற்றவர்கள் மகிழ்வார்கள் என்பன போன்ற எண்ணங்களை, நாம் கொஞ்சங் கூட நினைக்கக் கூடாது. நம்பக் கூடாது. எதிர்பார்க்கவும் கூடாது.

மேல் நாட்டுப் பெண்மணி ஒருவர், நம் நாட்டிற்கு வந்து நான்கைந்து ஆண்டுகள் தங்கியிருந்து விட்டு, தனது தாய்நாட்டுக்கு மீண்டும் செல்கிறபோது. அவரை ஒருவர் விசாரித்தாராம்.

எங்கள் இந்தியர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று!

மிகவும் நல்லவர்கள். பயபக்தியுள்ளவர்கள் என்றெல்லாம் வருணித்த அந்தப் பெண்மணி, இறுதியாக ஒரு கருத்தைக் கூறினார்களாம்.

‘யாராவது அடி மட்டத்திலிருந்து மேலே உயர முற்படும் போது, அனுதாபத்துடன் ஆதரவு தந்து உதவி செய்வார்கள். அவர் முன்னேறத் தொடங்கிவிட்டார் என்று அறிந்து கொண்டால், அவரை எல்லோரும் சேர்ந்து அழுத்தி விடுவார்கள்’ என்று அந்த மங்கை திருவாய் மலர்ந்ததாக ஒரு செய்தி பத்திரிக்கையில் வந்தது.

அனுதாபத்துக்காக பிறர் தம்மைப் போற்ற வேண்டும் என்பதற்காக உதவ முற்படுபவர்கள் சிலர். பலரோ, மற்றவர்கள் முன்னே உதவுவதுபோல் பாசாங்கு செய்து விட்டு, பிறகு பின் வாங்கி விடுவார்கள். தோற்றுப் போக வேண்டிய விதங்களிலெல்லாம் மறைமுகமாக வேலை செய்து விடுவார்கள்.

இதுதான் உலக நியதி.

ஒருவரது துன்பத்தைக் கேட்டு வருந்துவதுபோல் மகிழ்கிற கூட்டம் தான் சமுதாயமாக இருக்கிறது.

ஒருவரது இன்பத்தினைக் கேட்கவே யாருமே வரமாட்டார்கள். ஏனெனில், மனித குலத்தின் வாடிக்கையோ, பொறாமை குணத்தில் தான் பொசிங்கிக் கொண்டு கிடக்கிறது.

அதனால்தான், ‘துன்பத்தில் நண்பனைப்பார்’ என்ற பழமொழி இருக்கிறது.

பிறர் நமக்கு உதவுவார்கள் என்று நினைப்பது பேதமை.

வாழ்க்கையில் உயர்ந்துவிட்டால், வந்து வணங்கி, வாழ்த்தி, மகிழ்வது போல் மனங்கசிகிற மக்களே நம்மைச் சுற்றியிருக்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடவே கூடாது.

நம் வாழ்க்கையில் உயர்வதற்கு, ஒரு சிலர் வழி காட்டுவார்கள். இன்னும் சிலர், தொடக்க முயற்சிக்குத் துணையாக சில அறிவுரைகளைக் கூறி ‘அப்படி இப்படி’ என்ற பெரிய மனிதத் தன்மையுடன் பலாபலன்களைப் பொழிந்துவிட்டுப் போவார்கள்.

அதனால்தான் முன்னோர்கள் ஓர் அருமையான தத்துவார்த்த பழமொழி ஒன்றை வழங்கி விட்டுப் போயிருக்கிறார்கள்.

“எட்டுகிற மட்டும் தான் ஏற்றி விடுவார்கள்.”

மரத்தின் மீது ஏறமுயலுகிற ஒருவனுக்கு, மரத்தடியில் நிற்பவர்கள் கைகள் எட்டுகிற உயரம் வரைக்கும் தான் தூக்கி விட முயற்சிப்பார்கள். அதற்குப் பிறகு அவனது சாமர்த்தியம்.

ஏறும் சாமர்த்தியம் இருந்தால் ஏறிப் பார்ப்பான் இல்லையென்றால், யாரும் இறக்கி விடாமலேயே அவனே கீழே சரிந்து வீழ்ந்து கிடப்பான்.

மரம் ஏறத்தெரிகிற திறன், மரம் ஏற முடியும் என்ற நம்பிக்கை எப்படியும் ஏறி விடுவேன் என்ற வைராக்கியம் மரத்தின் உச்சிக்குப் போய் விட வேண்டும் என்கிற இலட்சியம். அதனை மறிக்க வருகின்ற கவக்டத்தை முறியடிக்கும் மனோபலம். இத்தனையும் இருந்தால் அவன் மரத்தின் உச்சிக்கு ஏறிட முடியும்.

அப்படிப்பட்ட சாமர்த்தியம் தான் வாழ்க்கைக்கும் வேண்டும்.

மரத்தின் உயரத்திற்கு ஏறி கனிகள் பறிப்பதுபோல, வாழ்க்கை மேம்பாட்டுக்கு வந்து, புகழைப் பெறுவது தான் நமது இலட்சியம்.

கூக்குரலிட்டுக் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்திற்குள்ளே போய், சத்தமிட முடியாது மெளனியாகப் போகிறான் ஒரு மனிதன். இதுதான் தற்போது சமுதாய தர்மமாக இருக்கிறது.

பேச்சுகளுக்கிடையே சத்தமிட்டுப் பேச முடியாது. ஊமையாகிப் போகிறவன் போல, வாழ்க்கைக் கஷடங்களுக்கிடையே மனிதன் வலிமையுடன் முன்னேற முடியாமல் மனம் புழுங்கி தவிக்கிறான். தளர்கிறான்.

வசதிகள் ஒருவனை வீரமுடையவனாக, விவேகமுடையவனாக மாற்றாது. உண்டாகும் கஷ்டங்கள் தான் ஒருவனை மனிதனாக மாற்றும் சக்தியை உடையவையாக விளங்குகின்றன.

உழைப்பு உடலை வலிமையாக்குவது போல, கஷ்டங்கள் மனதை வலிமையுடையதாக்குகின்றன.

ஆகவே, நமது முன்னேற்றத்திற்கு உதவிகள் பிறரிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டே இருந்தால் அது பேரிழப்பாகவே முடியும்.

‘நமக்குள்ளே ஒரு சக்தி இருக்கிறது’ என்பதை நாம் நினைத்துப் பார்க்கவே மறந்து விடுகிறோம்.

எண்சாண் உடம்பு என்று நமது உடம்பின் அளவைக் குறித்துக் காட்டுவார்கள்.

யானைக்கும் அது அளவால் எட்டு சாண் என்றால், எறும்பும் அதன் அளவால் எட்டு சாண்தான் என்று கூறுபவரும் உண்டு.

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், மனிதராகப் பிறந்து விட்டாலே. அவரவருக்கு என்று ஒரு சக்தியும் சாமர்த்தியமும் இருக்கத்தான் இருக்கிறது.

இந்தக் குறிப்பை நாம் மறந்து விட்டு மயானப் புலம்பலில் மயங்கிக் கிடக்கிறோம்.

அனுமாருக்கு அதனால் விசுவரூபம் எடுக்க முடியும் என்பதை, இராமர் வந்து கூறுகிறவரைக்கும் தெரியாமல் இருந்தது என்பது இராமாயணத்தில் ஒரு குறிப்பு.

அனுமாருக்கு ஒரு இராமர் வந்து உணர்த்துவது போல, யாராவது ஒருவர் உங்களுக்கு வந்து உணர்த்தத்தான் செய்வார்.

அந்தக் குறிப்பை உன்னிப்பாய் கவனித்து உணர்ந்து குறிப்புக் கேற்றபடி தன்னைத் தயார் செய்து கொள்வது தான் சாமர்த்தியசாலிகளின் சிறப்புப் பண்பாகும்.

‘சந்தர்ப்பத்தினை விரைவாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்தவனையே விவேகி’ என்பார்கள்.

அதுபோலவே, தன்னுடைய உண்மை நிலையை உணரும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, எறிந்த பந்து மேலும் மேலும் எகிறிக்குதிப்பதுபோல, செயல்களாற்றுவது தான் சிறந்த மனிதர்களுக்குரிய சத்தியாகும்.

நமக்குள்ளே ஒரு சக்தி என்றால், அது - நமக்கு என்ன தகுதி இருக்கிறது. ஆற்றல் இருக்கிறது என்று அறியும் சக்தி.

நாம் முயன்றால், இதுவே நம்மால் வெற்றி பெற முடியும் என்று விளங்கிக் கொண்டு, தொடங்குகின்ற சக்தி.

இந்த சக்தியானது, நம்முடன் தொடர்ந்து வளர்ந்து கொண்டே வருகிற சக்தியாகும். அதனை அடுத்துக் காண்போம்.