உள்ளடக்கத்துக்குச் செல்

நமக்கு நாமே உதவி/நம்மாலும் முடியும்

விக்கிமூலம் இலிருந்து

7
நம்மாலும் முடியும்

நமது வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? மேலேநட; நடந்து கொண்டேயிரு. அதாவது வாழ்ந்து கொண்டேயிரு. வாழ்ந்து கொண்டேயிருப்பது என்றால் விலங்குகளின் வாழ்க்கை ஆவதா? அப்படியென்றால், மனித வாழ்க்கை என்றால் என்ன பொருள்? வளர்ந்து கொண்டே வாழ்வது.

வளர்ச்சி என்றால், வயதால் பெறும் உடல் முதிர்ச்சி அல்ல. வாழ்வின் எழுச்சி, முன்னேற்றமான நிகழ்ச்சிகள்.

மனிதன் வந்தான், வாழ்ந்தான், மடிந்தான் என்ற சாதாரண வாழ்க்கை அறிவுடையோர்க்கு அழகல்ல.

மனிதர்கள் அனைவருக்கும் ஆண்டவன் பல அரிய சக்திகளைத் தந்திருக்கிறான். ஆற்றல்களை, அறிவுபூர்வமான சிந்தனைகளைத் தந்திருக்கிறான்.

வெந்த சோறும், விரித்த படுக்கையும், வீணான பேச்சும் மட்டுமே போதும் என்பவர்கள் வீணாகிப் போன உயிர்ப்பிண்டங்கள். தலையிருந்தும் தள்ளாடுகின்ற முண்டங்கள்.

நமக்கு இறைவன் கொடுத்த திறமையிருக்கிறது. முயற்சித்துப் பார்ப்போம், என்று முனைபவர்களே மனிதர்கள்.

நம்மால் முடியும் என்ற செயலில் இறங்கி விடுபவர்கள் தான் ஆண்மையாளர்கள். ஆற்றல் நிறைந்தவர்கள்.

வெற்றி கிடைத்தால் கிடைக்கட்டும். காரியத்தில் ஈடுபட்டோம். கஷ்டப்பட்டோம். நமது கடமையை நிறைவேற்றி விட்டோம். இனிமேல் கவலையேயில்லை என்று எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்பவர்கள்தான் இலட்சியவாதிகள்.

எல்லோரும் இலட்சியவாதிகளாக ஆகிவிட முடியுமா? அது கஷ்டம் தான்.

ஆனால், எந்தக் காரியத்தை நினைத்தாலும். ‘நம்மால் முடியுமா? நிச்சயம் முடியாது’ என்று, நான்கு அடிகள் பின்னால் நடப்பது தான் மனிதர்க்கு அழகல்ல என்கிறேன்.

சிறந்த பலமுள்ள மனிதர்களால் முடியும். சிந்தித்ததை செயல்படுத்த முடியும்.

பயந்தாங்கொள்ளிகள், பலமற்ற பலவீன மனிதர்களால் ஆசைப்படத் தான் முடியும். அரங்கேற்றிக் கொள்ள முடியாது.

பலம் என்றால் என்னவென்று நினைக்கின்றீர்கள்? மனோபலம். வெறும் உடல்பலம் மட்டும் போதாது. அதனுள்ளே உள்ள மன பலம் (Will Power). விடா சக்தி.

இந்த விடாசக்தி என்கிற மனோபலம் சிறந்த தேகம் உள்ளவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது.

இதனால் என்ன நடந்து விடும் என்று நீங்கள் கேட்கும் வினா எனக்கும் கேட்கிறது.

இத்தகைய விடா முயற்சியுள்ள மனோபலம் உள்ளவர்கள் இந்த உலகத்தார்களுக்கு ஏற்ற முறையில் வரவழைத்துக் கொண்டு, வடிவமைத்துக் கொண்டு விடுகின்றார்கள்.

இவர்களின் காலடியில் உலகம் காத்துக் கிடக்கிறது. இவர்கள் எண்ணியதை முடிக்கும் திண்ணியர்களாக வாழ்கிறார்கள். மற்றவர்களுக்கும் வாழ்ந்து காட்டுகின்றார்கள்.

ஆகவே, நாம் ஒன்றை மட்டும் நினைவு கொண்டே ஆக வேண்டும்.

வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் வேண்டும். தினம் அதை நோக்கியே நமது பயணம் தொடர வேண்டும். நமது முழு பலத்தையும் முழு மனத்தையும் அதிலே ஈடுபடுத்திக் கொண்டு விட வேண்டும்.

பெரிய இலட்சியத்திற்காக முயன்று, தோற்றாலும் பரவாயில்லை, யானை பிடிக்கும் முயற்சியில் தோற்பது கேவலமில்லை. ஒரு நாயைக் கல்லால் அடித்து விரட்டுவது பெரிய கெளரவமான காரியமுமல்ல.

மனிதனை உயர்திணை என்பார்கள். அவனது சிந்தனையும் செயலும் உயர்ந்ததாகத் தான் இருக்க வேண்டும்.

நம்மிடையே வாழ்பவர்கள் பலர், தாங்களாகவே தங்கள் திறமைகளைக் குறைத்து மதிப்பிட்டுக் கொண்டு, குலைந்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். தங்களுக்கு இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்று ஓர் எல்லை கட்டிக் கொண்டு முடங்கிப் போகின்றார்கள்.

இவ்வாறு குறுகிய எல்லைக்குள்ளே கோட்டை கட்டிக் கொண்டு, சும்மா கிடக்க முயல்வது தான் மனிதர்களின் முன்னேற்றத்தின் தடைக் கல்லாக விளங்குகிறது.

ஒரு காரியத்தில் ஈடுபட்டுத் தோற்றுப் போவது வீரம். தாழ்ந்த மனப்பான்மை என்பது பாவம். தனக்கு எதுவுமே செய்ய முடியாது என்ற முடிவுக்கு வருவது மன்னிக்கப் படாத மாபெரும் குற்றமாகும்.

1954ஆம் ஆண்டு வரை, ஒரு மைல் தூரத்தை 4 நிமிடங்களுக்குள் ஓடி முடிக்க முடியாது என்று உலகமே நினைத்து, ஒரு முடிவோடு இருந்தது. ஆனால், தன்னால் ஒடமுடியும் என்று நிரூபித்துக் காட்டினார் ரோகர் பானிஸ்டர் என்னும் வீரர்.

அவரைத் தொடர்ந்து மற்ற வீரர்களும் ஓடி முடித்தனர். இப்பொழுது 4 நிமிடங்களுக்குள்ளே நூறு தடவை ஓடி ஒரு உலக சாதனையையே செய்திருக்கிறார் ஜான் வாக்கர் என்பவர்.

மனித சக்திக்கு எல்லையே கிடையாது. 100 மீட்டர் தூரத்தை 12 வினாடிகளில் 1896ம் ஆண்டு ஓடினார்கள். இப்பொழுது 9.9 வினாடிகளில் ஓடி சாதிக்கிறார்கள். 6 அடி உயரம் தாண்டினால் மிக அற்புதம் என்றனர் அந்த நாட்களில், இப்பொழுது 7½ அடி உயரம் தாண்டி, இன்னும் உயரே மனிதனால் தாண்ட முடியும் என்று சாதித்துக் காட்டுகின்றனர்.

அறுபது அடி தூரம் இரும்புக் குண்டெறிந்தவரை பீமன், மகாபலசாலி என்று 1960ஆம் ஆண்டு வருணித்தார்கள். இன்று 75 அடி தூரம் எறிகின்றார்கள். அது எப்படி?

மனிதனால் விரைவாக ஓட முடியும், உயரமாகத் தாண்ட முடியும், அதிக தூரம் எறிய முடியும் என்பதை நிரூபிக்கத் தானே ஒலிம்பிக் பந்தயங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

ஒலிம்பிக் பந்தயத்தின் லட்சியம். விரைக, உயர்க, வலிமை பெறுக என்றால், வாழ்வின் லட்சியமும் அப்படித் தானே அமைந்திருக்கிறது.

ஆகவே, நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை உடையவர்கள் தான் வாழ்வின் வெற்றியை எட்டிப் பிடிக்கின்றார்கள்.

நம்மால் முடியாது என்று நினைப்பவர்கள், தனக்குள்ளே அமிழ்ந்து போய் விடுகின்றார்கள். தனக்குத்தானே உதவிக் கொள்ளாதவன் தரித்திரர்களாகத் தான் மாறி விடுகின்றார்கள்.

அதே சமயத்தில், உயர்ந்த சாதனையாளர்களாகத் திகழ்பவர்கள் எல்லோரும், தற்காலிகமாக எதிர்படும் தடைகளை எல்லாம், தடைகள் என்று தடுமாறாமல், தயங்கி நிற்காமல், தாண்டி வந்து விடுகின்றார்கள்.

இந்த சாமர்த்தியம் எப்படி அவர்களுக்கு வருகிறது?

அவர்கள் தங்கள் திறமைகளை சாமர்த்தியமாக கணக்கிட்டுக் கொள்கிறார்கள். அந்தத் திறமைகளை அறிவார்த்தமாக வளர்த்துக் கொள்கிறார்கள். தங்கள் உணர்வுகளை செயல்படுவதற்கு ஏற்ப திறப்படுத்திக் கொள்கிறார்கள். அத்துடன், தங்கள் முயற்சிகளைத் தொடங்குவதற்கேற்ப முன்னேற்பாடுகளில் முனைகின்றார்கள். அத்துடன், அதே கவனத்துடன் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இணைந்து கொள்கின்றார்கள்.

ஆகவே தான், சாதனையாளர்கள் என்னும் புகழுடன் சரித்திரம் படைத்து விடுகின்றார்கள்.

இலட்சியமே ஒருவரை, எப்படிப்பட்டவராக அவர் விளங்கினாலும், வலிமையாளராக மாற்றி விடுகிறது.

இலட்சியம் தான் ஒருவரை இணையிலா செயல் வீரராக ஆக்கி விடுகிறது.

மண் வீடு கட்டி முடித்து விட்டு, அது காற்றில் கலைந்து விழும்போது, கண் கலங்கிக் கவலைப்படுபவராகத்தான் பலர் வாழ்கின்றார்கள்.

காகிதத்தில் கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு அது நீருள் மூழ்கும்போது நொந்து மனத்தால் நைந்து போகின்ற மனிதர்களாகத் தான் பலர் வாழ்கின்றார்கள்.

பனிக்கட்டியால் சிலை செய்து, அது வெயிலின் கொடுமையால் கரைந்து விழும்போது, கதறுகின்ற மாக்களாகத்தான் பலர் இன்றும் காட்சியளிக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று இப்பொழுது எண்ணிப்பார்ப்போம்.

ஒருவனது பார்வையில் அவனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது தான் முதற்படி.

அந்தப் பார்வை வழியே, எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புவது இரண்டாம் படி.

தனது எதிர்கால வெற்றி தான் போடுகின்ற திட்டத்தில் தான் உள்ளது என்று முனைவது மூன்றாவது படி.

தன்னால் தனது திட்டத்தில் வெற்றி பெற முடியும் என்று நம்பி, செயலைத் தொடர்வது நான்காவது படி.

இப்படி, படிப்படியாக இலட்சியப் பணியில் நாம் இணைந்து கொண்டால், நமது வாழ்வு இன்பலோகமாகவே விளங்கும். இன்பக்கனிகளே குலுங்கும்.

இப்படி செய்ய முடியுமா என்று கேட்பவர்கள் உண்டு.

எல்லா மனிதர்களுக்கும் வலிமையில் குறைவை ஆண்டவன் வைக்கவில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ள சுய நம்பிக்கையில் தான் குறையுள்ளவர்களாக வாழ்கிறார்கள்.

உலகத்தில் நடக்கும் எல்லாமே நமது முடிவுபோல நிகழ்வதில்லை, அதிர்ஷ்டத்தால்தான் நடைபெறுகிறது என்பதை மட்டும் நம்புகிறார்கள்.

அப்படி வாழக்கூடாது என்பது தான் நமது விருப்பம். நமக்கு நாமே உதவிக் கொள்ள, நம்மால் முடியும் என்று காரியங்களைத் தொடர வேண்டும். அதிலே இலட்சிய நினைவுகள் படர வேண்டும். அப்பொழுது தான் எண்ணியதை எண்ணியது போலவே அடைவோம்.....

அந்தக் கடமையை இன்றே தொடரலாம் அல்லவா!