உள்ளடக்கத்துக்குச் செல்

நமக்கு நாமே உதவி/முடிவு எடுப்பதுதான் முக்கியம்

விக்கிமூலம் இலிருந்து



6
முடிவு எடுப்பதுதான் முக்கியம்!

ஆரம்பம் என்று ஒன்று இருந்தால், முடிவு என்று ஒன்று இருந்தாக வேண்டும். முடிவு நேர்வதற்கு இடையில் காலதாமதம் நேரலாம். அவ்வளவுதான்.

ஆகவே, முடிவுக்காக நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். எங்கோ ஓரிடத்தில் ஊற்றாகத் தோன்றுகின்ற ஆறுக்கு முடிவு கடல்தான். இடைக் காலத்தில் ஏற்படுகின்ற உறவு ஆறுகள், கிளைநதிகள் எல்லாம் பயணத்தில் வந்து போகும் அன்றாட நிகழ்ச்சிகள்.

நாம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம். நமது வாழ்வுக்கும் ஒரு முடிவு உண்டு என்பதை நாம் அறியாததா?

அதுபோலவேதான் ஒரு செயலும், நாம் தொடங்குகிற செயல், நம்மையறியாமல் ஏற்படுவது அல்ல. எண்ணித் துணிந்து, எத்தனையோ வழி முறைகளை ஆய்ந்து, அவற்றில் தோய்ந்து, வெளி வந்ததன் விளைவுதான் அது.

ஆரம்பிக்கவே பயப்படுகிறவன் எவனும் அரை நொடிக்கூட தொடர முனைய மாட்டான். ஏனெனில் அவனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னம்பிக்கையற்றவர்கள் கோழைகள்.

'கோழைகளுக்குக் குலைக்கத்தான் தெரியும். கடிக்க முடியாது’ இப்படி கேலியாக பேசுபவர்களும் உண்டு.

ஒரு காரியத்தை ஆரம்பிக்கும் பொழுது. அதனை முடிக்கின்ற வழிகளையும், முறைகளையும், நியதிகளையும் நாம் முதலிலேயே நன்கு ஆராய்ந்து தொடங்கி விடுகிறோம். காரியத்தை ஆரம்பித்த பிறகு, நமது கவனமெல்லாம் முடிவிலேதான். அதாவது முடிக்கும் காரியத்திலேதான் இருக்க வேண்டும்.

‘முடித்துத்தான் ஆக வேண்டும்’ என்ற முயற்சியுடன் காரியத்தைத் தொடங்குபவன், முனைப்புள்ளவன். நிச்சயம் அந்தக் காரியத்தை நிறைவேற்றியே தீருவான். அது எப்படிப்பட்ட முடிவாக இருக்கும். இருக்க வேண்டும் என்பது பற்றி அவன் கவலைப்படுவதில்லை. ஏனென்றால் அவன்தான் காரியவாதி. கடமையே கண்ணானவன், கருமமே கருத்தாகக் கொண்டவன். முடிவு முழுமையானதாக, சிறந்ததாக (Perfection) இருக்க வேண்டும் என்பதில் கவலையில்லாத முனைப்புக் கொண்டு, தயக்கம் கொள்ளாமல் உழைப்பவன் அவன்.

ஏனெனில், ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்யச் செய்ய, அதில் பழக்கம் ஏற்படுகிறது. பக்குவம் உண்டாகிறது. தெளிவு கிடைக்கிறது. தேர்ச்சி நிலைக்கிறது. அதில் ‘பர்பெக்‌ஷன்’ தானாகவே பரிணமித்துக் கொள்கிறது.

எனக்கு ‘பர்பெக்‌ஷன்’ தான் வேண்டும். அப்பொழுதுதான் நான் அந்தக் காரியத்தை ஆரம்பிப்பேன் என்று யாராவது சொன்னால், அவன் காரியவாதி அல்ல... பேசிக் கொண்டே பொழுதைப் போக்கும் பயந்தாங் கொள்ளி ஆவான்.

பேசுவதிலேயே இன்பம் கண்டு, பேசுவதிலேயே பிறரிடம் மரியாதை பெற்று. காலப் போக்கில் கேலிக்குரிய மனிதனாகப் போகிறவன் அவன். எப்படியென்றால், தான் தொடங்கப் போகும் காரியம் வெற்றி தருமோ, தராதோ என்ற குழப்பங்களுக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டு இருப்பவன்.

இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவன் சரியான முடிவுக்கு வரமுடியாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டேதான் கிடப்பான். அவனைப்போல் அவதிப்படும் ஆள் வேறு யாராகவும் இந்த உலகில் இருக்க முடியாது.

நல்லதோ கெட்டதோ முடிவெடுக்கத் தெரிந்தவன் மட்டுமே நிம்மதியாக வாழ்கிறான். நேர்த்தியாக செயல்படுகிறான். நிறைவான காரியங்களில் நேர்த்தியாக ஈடுபடுகிறான். நிலையான புகழை அடைகிறான்.

ஏனென்றால், உலகில் உள்ள எல்லா காரியங்களுமே முடிவினால் மட்டுமே ஏற்பட்டுவிடுவதல்ல. அதிகமான வாய்ப்புக்களால் தான் நடைபெறுகின்றன.

நாம் எடுக்கின்ற முடிவோ நமது இலக்கினைக் குறித்துக் காட்டுகிறது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நமது இலட்சியப் பயணத்தைத் தொடங்கி வைக்கிறது. அதில் தவறு நேரலாம். தவறு நேர்ந்தால் என்ன?

தவறு நேர்கிறது என்று அறியும் பொழுது அதனைத் தவிர்த்துவிட முயலலாம். அதைச் சரி செய்து மேற்கொண்டு நடக்க முயற்சிக்கலாம். நாம் செய்வது சரி என்று தெரிந்தால், இன்னும் உறுதியாகச் செல்லலாம். இதுதான் வாழ்க்கை முறை.

அதைவிட்டுவிட்டு, தன்னம்பிக்கை இல்லாமல், ஒரு முடிவெடுக்கத் தெரியாமல், செக்கு மாடாகச் சுற்றிச் சுற்றி வருவது, ஆறறிவுடைய மனிதர்க்கு அழகல்லவே!

“நீ என்ன செய்யப் பேகிறாய்? நீ என்ன செய்வாய்?” என்ற சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் திகைத்துப் போய் தடுமாறி நின்று பேதலித்து நிற்பவன், ஒரு அவமானச் சின்னமாகத்தான் அடுத்தவர்களுக்குத் தெரிவானே தவிர, வேறெப்படித் தெரிவான்?

'நான் என்ன செய்ய வேண்டும். நான் என்ன செய்யக் கூடாது' என்று முடிவெடுக்கும் ஆற்றல் உள்ள மனிதன்தான் செயற்கரிய செயல்களைச் செய்பவனாகத் திகழ்கிறான்.

எதற்கும் முடிவுதான் முக்கியம். ஆரம்பிக்கிறவன், அதற்குரிய முடிவினை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எழுத்துப் பணியில் எனக்கு ஏற்பட்ட பிடிப்பினால், செய்கின்ற ஒரு உத்தியோகத்தைத் தொடர்வதா விடுவதா என்ற பிரச்சினை எழுந்தது. இரண்டாயிரம் ரூபாய் வருமானம் வருகின்ற பதவி அது. அதை விட்டால்தான், எழுத்தில் கவனம் செலுத்த முடியும்.

விடுவது என்று, முடிவு எடுத்தாகி விட்டது. வருமானம் அந்த அளவுக்கு வருமா? வராவிட்டால், என்ன ஆவது? ‘வசதி வசதி’ என்ற வாழ்க்கை வசதிவந்து குழப்பத் தொடங்கியது.

அப்படி வருமானம் வராவிட்டால், எழுத்து இலட்சியப்பணி, தோற்றுவிட்டால், ஆலமரத்தடியில் - போய் தங்கியாவது பிழைத்துக் கொள்ளலாம். வாழ்வைப் பார்த்துக் கொள்ளலாம். அதற்கிடையில், வேறு ஒரு பணியில் ஈடுபடலாம் என்றெல்லாம் தோல்வி பற்றிய முடிவுக்கு மாற்று வைத்துக் கொண்டேன். அந்தப் பணியை உடனே விட்டுவிட்டேன். _ அப்பொழுது எனக்கிருந்த துணிவு ஒரு முடிவினை எடுக்கும் துணிவுதான். எழுத்துப் பணியை தொடர்வதென்ற முடிவுதான். அந்த நோக்கத்திலே மிகவும் உறுதியோடு இருந்ததால், நுழைந்து பார்த்து நோகச் செய்த நலிவுகள் எல்லாம், வால்களை சுருட்டிக் கொண்டு வந்த வழியாக ஓடி விட்டன.

ஆகவே, முடிவு எடுப்பது மட்டும் முக்கியமல்ல. அந்த முடிவுக்கு இறுதி வடிவம் வரும்போது ஏற்படுகின்ற விளைவுகளைச் சந்திக்கும் திறமைகளையும் இடையிடையே இடைவிடாது வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான்.

நல்லதோ கெட்டதோ வரும் முடிவுகளை ஏற்றுக் கொண்டு, மேலும் மேலும் செயலாற்றல் பெற விழைந்தால் போதும் தேர்ச்சிகள் தானாக வந்து சரணடைந்துக் கொள்ளும்.

தடுமாறாத, தன்னம்பிக்கையுள்ள எண்ணங்களே நமக்குத் துணை வாழ்வுக்கு அந்தச் செல்வம் தான் முக்கியம்.

நல்ல செல்வம் என்பது அடுத்தவரை நேசிப்பதும், அவர்களால் நேசிக்கப் படுவதும்தான். இலட்சியவாதிகளுக்கு இந்தச் செல்வம் நிறையவே கிடைக்கும்.

நல்ல செல்வத்தை எப்படிப் பயன்படுத்துவது? புத்திசாலித் தனமாக, வாழ்க்கைப் பயணத்தில் மகிழ்ச்சி செல்வத்தை அடைய மாறாத புத்திசாலித்தனம் தான் வேண்டும். அதற்கு வரும் முடிவுகளுக்கேற்ப வாழ்ந்து கொண்டாக வேண்டும். வளைவுகளில் வளைந்து நெளிந்து செல்லும் வாகனம்தான் பத்திரமாகப் போய்ச் சேருகிறது.

நமது பத்திரத்திற்கும், பாதுகாப்பான வாழ்வுக்கும் நமக்கு நாமே துணை. நமக்கு நாமே உதவிக் கொள்வோம். உலகை வெல்வோம் என்று பயணத்தைத் தொடங்குவோமே!