நமச்சிவாயத்திருப்பதிகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர் பாடியது

மூன்றாந் திருமுறை

பண்- நட்டபாடை

(அஞ்செழுத்துண்மை)

பாடல்: 01 (காதலாகி)[தொகு]

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினு மெய்ப்பொரு ளாவது
நாத னாம நமச்சி வாயவே. (01)

பாடல்: 02 (நம்புவார்)[தொகு]

நம்பு வார்நமர் நாவி னவிற்றினால்
வம்பு நாண்மலர் வார்மது வொப்பது
செம்பொ னார்தில கம்முல குக்கெலாம்
நம்ப னாம நமச்சி வாயவே. (02)

பாடல்: 03 (நெக்கு)[தொகு]

நெக்கு ளார்வ மிகப்பெரு கிநினைந்
தக்கு மாலைகொ டங்கையி லெண்ணுவார்
தக்க வானவ ராய்த்தகு விப்பது
நக்க னாம நமச்சி வாயவே. (03)

பாடல்: 04 (இயமன்)[தொகு]

இயமன் றூதரு மஞ்சுவ ரின்சொலால்
நயம்வந் தோதவல் லார்தமை நண்ணினால்
நியமந் தானினை வார்க்கினி யானெற்றி
நயன னாம நமச்சி வாயவே. (04)

பாடல்: 05 (கொல்வாரேனுங்)[தொகு]

கொல்வா ரேனுங் கணம்பல நன்மைகள்
இல்லாரேனு மியம்புவ ராயிடின்

்:எல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரால்

நல்லார் நாம நமச்சி வாயவே. (05)

பாடல்: 06 (மந்தரம்மன)[தொகு]

மந்த ரம்மன பாவங்கண் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமு மல்குமால்
நந்தி நாம நமச்சி வாயவே. (06)

பாடல்: 07 (நரகமேழ்)[தொகு]

நரக மேழ்புக நாடின ராயினும்
உரைசெய் வாயின ராயினு ருத்திரர்
விரவி யேபுகு வித்திடு மென்பரால்
வரத னாம நமச்சி வாயவே. (07)

பாடல்:08 (இலங்கை)[தொகு]

இலங்கை மன்ன னெடுத்த வடுக்கன்மேல்
தலங்கொள் கால்விரல் சங்கர னூன்றலும்
மலங்கி வாய்மொழி செயதவ னுய்வகை
நலங்கொ ணாம நமச்சி வாயவே. (08)

பாடல்:09 (போதன்)[தொகு]

போதன் போதன கண்ணனு மண்ணறன்
பாதந் தான்முடி நேடிய பண்பராய்
யாதுங் காண்பரி தாகிய லந்தவர்
ஓது நாம நமச்சி வாயவே. (09)

பாடல்:10 (கஞ்சி)[தொகு]

கஞ்சி மண்டையர் கையினுண் கையர்கள்
வெஞ்சொன் மிண்டர் விரவில ரென்பரால்
விஞ்சை யண்டர்கள் வேண்ட வமுதுசெய்
நஞ்சுள் கண்ட னமச்சி வாயவே. (10)

பாடல்:11 (நந்தி)[தொகு]

நந்தி நாம நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தை யான்மகிழ்ந் தேத்தவல் லாரெல்லாம்
பந்த பாச மறுக்கவல் லார்களே. (11)

திருஞானசம்பந்தப்பெருமான் பாடிய நமச்சிவாயத்திருப்பதிகம் முற்றும்

பார்க்க[தொகு]

திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
பஞ்சாக்கரத்திருப்பதிகம்
மாலை மாற்று