உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாக்கரத்திருப்பதிகம்

விக்கிமூலம் இலிருந்து

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக

திருஞானசம்பந்தர்

மூன்றாந்திருமுறை

பண்: காந்தாரம்

(அஞ்செழுத்துண்மை)

[தொகு]

பாடல்: 01 (துஞ்சலுந்)

[தொகு]
துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமி னாடோறும்
வஞ்சக மற்றடி வாழ்த்த வந்தகூற்
றஞ்ச வுதைத்தன வஞ்செ ழுத்துமே. (01)

பாடல்: 02 (மந்திர)

[தொகு]
மந்திர நான்மறை யாகி வானவர்
சிந்தையு ணின்றவர் தம்மை யாள்வன
செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க்
கந்தியுண் மந்திர மஞ்செழுத்துமே. (02)

பாடல்: 03 (ஊனில்)

[தொகு]
ஊனி லுயிர்ப்பை யொடுக்கி யொண்சுடர்
ஞான விளக்கினை யேற்றி நன்புலத்
தேனை வழிதிறந் தேத்து வார்க்கிடர்
ஆன கெடுப்பன வஞ்செழுத் துமே. (03)

பாடல்: 04 (நல்லவர்)

[தொகு]
நல்லவர் தீயரெ னாது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ
கொல்ல நமன்றமர் கொண்டு போமிடத்
தல்லல் கெடுப்பன வஞ்செ ழுத்துமே. (04)

பாடல்: 05 (கொங்கலர்)

[தொகு]
கொங்கலர் வன்மதன் வாளி யைந்தகத்
தங்குள பூதமு மஞ்ச வைம்பொழில்
தங்கர வின்பட மஞ்சுந் தம்முடை
அங்கையி லைவிர லஞ்செழுத்துமே. (05)

பாடல்: 06 (தும்மல்)

[தொகு]
தும்மலிரும றொடர்ந்த போழ்தினும்
வெம்மை நரகம் விளைந்த போழ்தினும்
இம்மை வினையடர்த் தெய்தும் போழ்தினும்
அம்மையி னுந்துணை யஞ்செ ழுத்துமே. (06)

பாடல்: 07 (வீடுபிறப்பை)

[தொகு]
வீடு பிறப்பை யறுத்து மெச்சினர்
பீடை கெடுப்பன பின்னை நாடொறும்
மாடு கொடுப்பன மன்னு மாநடம்
ஆடி யுகப்பன வஞ்செ ழுத்துமே. (07)

பாடல்: 08 (வண்டமர்)

[தொகு]
வண்டம ரோதி மடந்தை பேணின
பண்டை யிராவணன் பாடி யுய்ந்தன
தொண்டர்கள் கொண்டு துதித்த பின்னவர்க்
கண்ட மளிப்பன வஞ்செழுத்துமே. (08)

பாடல்: 09 (கார்வணன்)

[தொகு]
கார்வண னான்முகன் காணுதற் கொணாச்
சீர்வணச் சேவடி செவ்வி நாடொறும்
பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்
கார்வண மாவன வஞ்செ ழுத்துமே. (09)

பாடல்: 10 (புத்தர்)

[தொகு]
புத்தர் சமண்கழுக் கையர் பொய்கொளாச்
சித்தத் தவர்க டெளிந்து தேறின
வித்தக நீறணி வார்வி னைப்பகைக்
கத்திர மாவன வஞ்செ ழுத்துமே. (10)

பாடல்: 11 (நற்றமிழ்)

[தொகு]
நற்றமிழ் ஞானசம் பந்த னான்மறை
கற்றவன் காழியர் மன்ன னுன்னிய
அற்றமின் மாலையீ ரைந்து மஞ்செழுத்
துற்றன வல்லவ ரும்ப ராவரே. (11)

திருஞானசம்பந்தர் பாடிய பஞ்சாக்கரத்திருப்பதிகம் முடிந்தது

பார்க்க

[தொகு]
திருஞானசம்பந்தரின் முதற்பதிகம்
திருநீற்றுப்பதிகம்
திருவெழுகூற்றிருக்கை
நமச்சிவாயத்திருப்பதிகம்
மாலை மாற்று