உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/204

விக்கிமூலம் இலிருந்து

204. விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே!

பாடியவர் : அம்மள்ளனார்.
திணை: .....
துறை: பின்னின்று தலைமகன் ஆற்றானாய்த் தோழி கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.

[(து. வி.) தோழியின் உதவியாலே தலைவியை அடைய நினைக்கும் தலைவன், அவள்பால் சென்று இரந்து வேண்டுகின்றான். அவள் உதவுதற்கு மறுத்துவிடவே, அவன் தலைவிக்கும் தனக்குமுள்ள பிரித்தற்கு இயலாத உறவைத் தன் நெஞ்சோடு உரைத்துக்கொள்வானே போலத் தோழியும் கேட்குமாறு உரைத்துத் தோழிக்கும் தெளிவு படுத்துகின்றான். இவ்வாறமைந்த செய்யுள் இது.]


தளிர்சேர் தண்தழை தைஇ நுந்தை
குளிர்கொள் வியன்புனத் தெற்பட வருகோ
குறுஞ்சுனைக் குவளை அடைச்சிநாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ
இன்சொல் மேவலின் இயலுமென் நெஞ்சுணக் 5
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்கென
யான்றன் மொழிதலின் மொழியெதிர் வந்து
தான்செய் குறிவயின் இனிய கூறி
ஏறுபிரி மடப்பிணை கடுப்ப வேறுபட்
டுறுகழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும்
கொடிச்சி செல்புறம் நோக்கி 10
விடுத்த நெஞ்சம் விடலொல் லாதே!

தெளிவுரை : "தளிர்சேர்ந்த தண்மையான தழையுடையை உடுத்து, குளிரென்னும் கிளிகடி கருவியைக் கையிற்கொண்டு, நீதான் காவல் புரியும் நின் தந்தையுடைய அகன்ற தினைப்புனத்திடத்தே, ஞாயிறு தோன்றி விளங்கும் காலைப்போதிலேயே யான் வரவோ? அல்லது, குறுகிய சுனையிடத்தே கொய்த குவளைப்பூவை அணிந்து, நாம் தலைப்புணர்ச்சி பெற்ற நறிய தண்ணிய மலைச்சாரலிடத்தே ஆடிக்களித்தற்கு வரவோ? நின் இனிய சொல்லினை விரும்பித் துடிக்கும் என் நெஞ்சமானது அமைதி கொள்ளுமாறு, மடந்தையே! நின் கூர்மையான பற்களிடத்தே ஊறுகின்ற வாயூறலைப் பருகுவேன்" என்று யான் தனக்கு உரைத்தேன், அதனைக் கேட்டாளாகிய அவளும், தான் செய்தகுறியிடத்தே என்னைக் கொண்டு சென்று, இனிய சொற்களைக் கூறி, என்னையும் தெளிவித்தனள். கலைமானைப் பிரிந்து செல்லும் அதன் இளைய பெண்மானைப்போல, என்னைவிட்டு வேறாகப் பிரிந்து நீங்கி, மிகுதியான மூங்கில்கள் உயர்ந்த தன்னுடைய சிறுகுடி நோக்கியும் அவள் சென்றனள். அப்படிச் சென்ற அவளது முதுகுப்புறத்தை நோக்கியபடி போகவிடுத்த என் நெஞ்சமானது, அவளை நினைத்தலை எதனாலும் இனிக்கைவிடாது. இனி, யான்தான் யாது செய்வேனோ?

சொற்பொருள் : தளிர்–இளந்துளிர். தழை–தழையுடை. குளிர்-கிளிகடி கருவி. வியன் புனம்–அகன்ற தினைப்புனம்; தகப்பனின் வளமையைக் குறித்தது. ஏற்பட–காலையில். குறுஞ்சுனை–குறுகலான சுனை; 'குறுகல்' என்றது, சுனையின் மேற்பரப்பை. சுனை–மலைக்கண் மழைநீர் தங்கிநிற்கும் பள்ளமான இடம். குவளை–நீர்க்குவளைப் பூ. புணரிய–தலைக் கூட்டம் வாய்க்கப்பெற்ற. சாரல்–மலைப்பகுதிச் சோலை. ஆடுகம்–கூடிவிளையாடுதற்கு. மேவல்–விரும்புதல். இயலும்–ஒழுகும். நெஞ்சு உண–நெஞ்சம் தன் கவலை தீர்ந்து களிப்பெய்த. குறிவயின்–குறியிடத்தில். குறியிடம்–இருவரும் சந்திக்கக் கருதிக் குறிப்பிட்ட இடம். ஏறு–மானேறு. கொடிச்சி–குறக்குலப் பெண், பூங்கொடி போன்றவள் என்பது சொற்பொருள்.

விளக்கம் : 'தளிர்சேர் தண்தழை' என்றது பெரும்பாலும் அசோகந்தளிர் போன்றவையே தழையுடைக்குப் பயன்பட்டு வந்ததனால்; 'தளிரும் பூவும் சேர்ந்த தண்ணிய தழையுடை' எனலும் பொருந்தும். 'எற்பட' என்பதனை 'மாலைநேரம்' எனவும் சிலர் கொள்வர்; ஆயின் புனத்து வருதலும் சாரற்கண் ஆடுதலும் பிறவும் மாலைநேரத்து நிகழக்கூடாமையின் காலைநேரமாகக் கொள்ளப்படுதலே சிறப்பு; படுதல்–தோன்றுதல். 'குறிவயின்' என்றது, தலைவியால் 'இன்னவிடத்துக்கு இன்ன போதிலே நீயிர் வருக' எனச் சுட்டப்படும் இடத்தை; 'களஞ் சுட்டு கிளவி கிளவியது ஆகும்' என்பது விதி—(தொல். பொருள். சூ 120). முதற்சந்திப்பு புனத்திடத்தும், அடுத்து மலைச்சாரலிலும், பின் குறியிடத்தும் இவர்கள் களவிற் சந்தித்துப் பழகி நட்புச் செய்தனர் என்று கொள்க. 'ஏறுபிரி மடப்பிணை கடுப்ப' என்றது, தங்கள் பழைய உறவைப் பற்றிய உண்மையை உரைத்ததோடு, அவளும் தன்னைப் பிரிந்து, பிரிவைத் தாங்கி வாழ்ந்திராள் என்பதையும் தோழிக்கு உணர்த்தியதாம்.


இதன் பயன், தோழி தலைவிபால் பேரன்பினளாதலின், அவர்கள் கூட்டத்திற்குத் தானும் துணையாக அமைந்து உதவுவாள் என்பதாம்.

மேற்கோள் : 'மெய்தொட்டுப் பயிறல்' என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துச், 'சொல்லவட் சார்தலிற் புல்லிய வகையினும்' என்னும் பகுதிக்கண், 'வகை' என்றதனானே இதனின் வேறுபட வருவனவும் கொள்க' என்று கூறி, இச்செய்யுளைக் காட்டினர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 102 சூ. உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/204&oldid=1698364" இலிருந்து மீள்விக்கப்பட்டது