உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/205

விக்கிமூலம் இலிருந்து

205. மாமைக்கவின் மறையுமே!

பாடியவர் : இளநாகனார்,
திணை : .....
துறை : தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது; தோழி செலவழுங்கச் சொல்லியதூஉம் ஆம்.

[(து. வி.) இச்செய்யுள் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாவும், தோழி தலைமகன் கேட்கச் சொல்லியதாவும் கொள்ளப்படும். தலைமகனது கடமையுணர்வும் காதற்பாசமும் சமநிலையிலே தமக்குள் போராடும் இனிய சுவையை இதன்கண் கண்டு உணரலாம். கடமை தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்லலே தக்கது என்று அவனுக்குக் கூறுகிறது; காதற் பாசம், பிரிந்து செல்லின் தலைவியின் கவினழியுமே என்று நினைத்து ஏங்குகிறது. இல்வாழ்வின் சுவையான கட்டம் இது.]


அருவி யார்க்கும் பெருவரை யடுக்கத்து
ஆளி நன்மான் வேட்டெழுபு கோள்உகிர்ப்
பூம்பொறி உழுவை தொலைச்சிய வைந்நுதி
ஏந்துவெண் கோட்டு வயக்களி றீர்க்கும்
துன்னருங் கானம் என்னாய் நீயே! 5
குவளை யுண்கண் இவள்ஈண் டொழிய
ஆள்வினைக் ககறி யாயின் நின்னொடு
போயின்று கொல்லோ தானே படப்பைக்
கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர்
நீர்மலி கதழ்பெயல் தலைஇய 10
ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே!

தெளிவுரை : அருவிகள் ஆரவாரத்துடன் வீழ்ந்தபடியேயிருக்கின்றதான பெரிய மலைப்பக்கத்தே, ஆளியாகிய நல்விலங்கானது இரைகுறித்து வேட்டையாடுவதற்கு எழும். கொள்ளுதல் வல்ல நகங்களையும், அழகிய பொறிகளையுமுடைய புலியைக் கொன்றொழித்த, மிகவும் கூர்மையும் உயர்வான அமைப்பும் கொண்டதான வெண்ணிறக் கோட்டையுடைய வலிய களிற்றினைக் கொன்று, தன் முழைஞ்சிற்கு அதனை இழுத்துக்கொண்டும் செல்லும். நீ செல்லுதற்குரிய வழியானது அத்தகைய புகுதற்கரிய காடு என்றும் கருதாயாயினை!

குவளை போலும் மையுண்ணும் கண்களையுடைய இவள், இவ்விடத்தே நின்னை நீங்கித் தனித்திருக்க, நீயும் ஆள்வினைப் பொருட்டாக அகன்று போகின்றனை! அங்ஙனமாயின்,

தோட்டப் புறத்துள்ள வளைவான முட்களைக் கொண்ட ஈங்கைச் செடியின் நெடிய அழகிய இளந்தளிரானது, நீர்மிகுதியுடையதாக வேகத்தோடு பெய்யும் பெருமழையால் நனைந்தபோது தோன்றும் அழகிய நிறத்தைப் போன்றதான், இவளது மேனியின் மாந்தளிர்க்கவினானது, நின்னோடு, தானும் இவளைவிட்டு அகன்று போய் விடுமே!

சொற்பொருள் : பெருவரை அடுக்கம்–பெரிய மலையிடத்துள்ள அடுக்கடுக்காக விளங்கும் சாரற்பகுதிகளுள் ஒரு பகுதி. கோள்–கொள்ளுதல். பூம்பொறி–அழகிய பொறிகள். உழுவை–புலி. வைந்நுதி–கூரிய நுனிப்பகுதி. ஏந்து–மேல் நோக்கி உயர்ந்து. வயம்–வலிமை. ஈர்க்கும்–இழுத்தபடியிருக்கும். துன்னல்–நெருங்கல். ஆள்வினை–செயன்முயற்சி. படப்பை–தோட்டக்காற் பகுதி. கொடுமுள் – வளைந்தமுள். ஈங்கை–ஈங்கைச்செடி; வேலியில் வைக்கப்படுவது. மாமைக்கவின்–மாந்தளிர் போன்று மென்மையும் ஒளியும் பளபளப்பும் கொண்ட அழகு. ஆய்நிறம்– அழகிய நிறம்.

விளக்கம் : கானமோ நெருங்குதற்கு அரியது; கொடுவிலங்குகளையுமுடையது; அதனூடே செல்ல நினைத்தால் நினக்கு யாதாகுமோ? அதுவும் இனிதாகக் கூடியிருக்கும் நின் மனைவியை நலமிழந்து மெலிவடையச் செய்துவிட்டுப் போவதாற் பெறும் பயன்தான் யாதோ? நீ மீண்டும் வரும் வரை இவள்தான் நலன் அழியாதிருப்பாளோ? என்று கூறிச் செலவை நிறுத்துகின்றனன் எனக் கொள்க; அல்லது தோழி கூறக்கேட்டுத் தலைவன் நிறுத்தினன் எனக் கொள்க.

ஈங்கை வளைவான முள்ளைக் கொண்டது; அதன் நனைந்த தளிர் மகளிரது மேனி வனப்புக்கு ஒப்பிடப் படுவதை, 'மாரியீங்கை மாத்தளிர் அன்ன அம்மா மேனி ஆயிழை மகளிர்' எனப் பிற சான்றோரும் கூறுவர் (அகம். 208) உழுவை தொலைச்சிய வயக்களிற்றைக் கொன்று இழுத்துச் செல்லும் என ஆளியின் பெருவலிமைபற்றிக் கூறப்பட்டது. ஆள்வினை செயன்முயற்சி. 'மாந்தளிர்' கரிய அழகிய தளிருமாம்; மாமரத்தினது இளந்தளிருமாம்.

'மாமைக்கவின் நின்னொடு போயின்று கொல்' என்றது, பிரிந்ததன் அத்துணையே அதுதான் பசலையால் உண்ணப் பட்டுப் பாழாகுமே எனத் தலைவியது பேரன்பினைக் காட்டுதற்காம்.

இறைச்சிப் பொருள் : களிறு தனக்குப் பகையாகிய உழுவையைக் குத்திக் கொன்றதன் வலிமையைக் கூறினான், தன் மனத்திண்மையை வென்று தன்னைத் தனக்கு ஆட்படுத்திக் கொண்ட தலைவியது மாண்புமிக்க மாமைக்கவினைச் சிறப்பித்தற்கு; அவ்வலிய களிறு ஆளி நன்மானாற் கொன்று இழுத்துச் செல்லப்பட்டதைக் கூறினான், அத்தகைய அவளது மாமைக் கவினும் பிரிவு நேர்ந்துவிட்டபோது பசலையால் உண்ணப்பட்டு அழிந்து போம் என்பதைச் சிறப்பித்ததற்கு

மேற்கோள் : 'விழுமம் ஆவன, பிரியக் கருதியவன் பள்ளியிடத்துக் கனவிற் கூறுவனவும், போவேமோ தவிர்வேமோ என வருந்திக் கூறுவனவும், இவள் நலன் திரியும் என்றலும், பிரியுங்கொல் என்று ஐயுற்ற தலைவியை ஐயந்தீரக் கூறலும், நெஞ்சிற்குச் சொல்லி அழுங்குதலும் பிறவுமாம்' என்று, 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' என்னும் சூத்திரத்து, 'வேற்று நாட்டகல்வயின் விழுமத்தானும்' என்பதன் உரைக்கண் கூறுவர் நச்சினார்க்கினியர். 'இஃது இவள் நலன் அழியுமென்று செலவு அழுங்கியது' எனவும் உரைப்பர்–(தொல். பொருள். 185,146)

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/205&oldid=1698365" இலிருந்து மீள்விக்கப்பட்டது