உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/218

விக்கிமூலம் இலிருந்து

218. தனியனாகக் கேட்பேனோ?

பாடியவர் : கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்.
தினை : நெய்தல்.
துறை : வரைவிடை மெலிந்த தலைமகள் வன்பொறை எதிர்மொழிந்தது.

[(து. வி.) களவு உறவிலே கூடிய காதலன் குறித்தபடி வரைந்து வந்து தன்னை மணந்து கொள்ளாததனாலே தலைவியின் துயரம் மிகுதியாகின்றது. அது கண்டு ஆற்றாளாகிய தோழி, 'இன்னும் சில நாட்பொறுத்திரு' என்று கூறுகின்றாள். அதனைக் கேட்டதும், தலைவி தன் ஆற்றாமை தோன்ற அவருக்குக் கூறுவதுபோல அமைந்த செய்யுள் இது.]


ஞாயிறு ஞான்று கதிர்மழுங் கின்றே,
எல்லியும் பூவீகொடியிற் புலம்படைந் தின்றே,
வாவலும் வயின்தொறும் பறக்கும், சேவலும்
நகைவாய்க் கொளீஇ நகுதொறும் விளிக்கும்,
மாயாக் காதலொடு அதர்ப்படத் தெளிந்தோர் 5
கூறிய பருவங் கழிந்தன்று—பாறிய
பராரை வேம்பின் படுசினை இருந்த
குராஅற் கூகையும் இராஅ இசைக்கும்,
ஆனா நோயட வருந்தி, இன்னும்
தமியேன் கேட்குவென் கொல்லோ. 10
பரியரைப் பெண்ணை அன்றிற் குரலே?

தெளிவுரை : தோழி! ஞாயிறும் மேலைத் திசையிலே இறங்கித் தன் கதிர்களும் மழுக்கம் அடைந்ததாய் உள்ளது. அதனாலே, இரவுப்பொழுதும் பூவுதிர்ந்த கொடியினைப் போலத் தனித்துத் துயருரா நின்றது. வௌவால்களும் இடந்தோறும் பறந்து கொண்டிருக்கும். ஆந்தைச் சேவலும் தான் மகிழ்ச்சியினை மிகவும் பெற்றதாகி நகைக்குந்தோறும் தன் பெட்டையை அழையாநிற்கும். அழிவற்றதான காதலோடும் நெறிப்படப் பலவுங் கூறி என்னைத் தெளிவித்துப்போன காதலர் வரைந்து வருவதாகக் கூறிய பருவமும் மெல்ல மெல்லக் கழிந்து போகின்றது. இடையிடையே பட்டுப்போன பருத்த அடிமரத்தையுடைய வேம்பினது இலையுதிர்ந்த கிளையினிடத்தே தங்கிய குராஅலாகிய கூகையும் இரவெல்லாம் குழறா நிற்கும்; நீங்காத காமநோயானது வருத்துதலாலே வருந்தியிருக்கும்யானும், பருத்த அடியினையுடைய பனைமரத்தின் மடலிலே இருந்தபடி தன் துணையை விளித்துக் கூவும் அன்றிற் பறவையினது குரலையும் இன்னும் தனிமையளாக இருந்த படியே கேட்டிருப்பேனோ? எவ்வண்ணம் ஆற்றி இருப்பேன் என்பதாம்.

சொற்பொருள் : ஞாயிறு ஞான்று–ஞாயிறு சாய்ந்து. எல்லி–இரவுப் பொழுது. புலம்படைந்தது–பொலிவிழந்துவிட்டது. வயின்தொறும்–இடந்தோறும். 'சேவல்' என்றது ஆந்தைச் சேவலை. விளிக்கும்–கூவி அழைக்கும். மாயாக்காதல்–குன்றாத காதல். அதர்ப்பட–நெறிப்பட. பாறிய–பட்டுப்போன. பாருசினை–இலைகள் உதிர்ந்துபோன கிளை. குராஅல்–கபில நிறம். கூகை–பேராந்தை. ஆனா–அமையாத, நீங்காத. அன்றில்–அன்றிற் பறவை.

விளக்கம் : ஞாயிறு சாய்ந்து கதிர் மழுங்கினாற்போல யானும் ஒளியிழந்தேன்; எல்லியிற் பூவீழ் கொடியிற் புலம் படைந்தாற் போன்று யானும் புலம்படைந்தேன் என்கின்றாள். கூடியிருந்த காலத்து இனிதாயிருந்த மாலையும் இரவுப்பொழுதும் இதுகாலை மகிழ்வூட்டவில்லை என்பாள் இவ்வாறு கூறுகின்றாள்.

'ஆந்தைச் சேவல் இரைதேடப் போன தன் துணையை விரும்பிக் கூப்பிடும்' என்றாள், அத்தகைய அன்புதானும் தலைவனிடம் இலையாயிற்றென்று வருந்துகின்றாள். அதுவும் இன்புற்றிருத்தலையே நினையும் பொழுதில், அவன்தான் பிரிந்து உறைகின்றானே எனவும் நோகின்றனள்.

'மாயாக் காதலொடு அதற்படத் தெளிந்தோர்' இன்று அக்காதலையும் மறந்தனர் போலும் என்கின்றாள். பகற்போது பிறவாற்றான் ஒருவாறு தேறியிருக்கின்றமனம், இரவுப் போதில், அவனே நினைவாக நின்று வருந்தித் துயிலையும் கெடுத்து நோயும் செய்யும் என்பாள், 'கூகையும் இராஅ இசைக்கும்' என்கின்றாள். இனியும் தான் உயிரோடு ஆற்றியிருத்தல் தானும் இயலாது என்பாள் 'அன்றிற் குரலைத்தமியேன் கேட்குவென் கொல்லோ?' எனச் சொல்லி வேதனையுறுகின்றாள். இதனால் அவள் கொண்ட துயரத்தின் மிகுதியும் புலப்படும்.

மாலைப் பொழுதானது காமநோயினை முற்படவிட்டு வருதலால், அது வருவதற்கு ஏதுவாய் அமைந்த ஞாயிறு படுந்தன்மையைக் கூறினாள்; தனித்து உறையும் வாழ்விலே இரவுப்போது இன்பந் தராமையின் எல்லியும் புலம்பு அடைந்தது என்றாள். ஏனைப் புள்ளினந்தானும் புணர்ச்சி கருதித்தத்தம் துணையை விளிக்கும் குரலைக் கேட்பதனாலே, தன் துயரம் மிகுவதனையும் கூறிப் புலம்புகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/218&oldid=1698380" இலிருந்து மீள்விக்கப்பட்டது