நற்றிணை-2/219
219. என்னதூஉம் புலவேன்!
- பாடியவர் : தாயங்கண்ணனார்.
- திணை : நெய்தல்.
- துறை : வரைவிடை வைத்துப் பிரிய ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
[(து.வி.) பொருளீட்டி வந்து நின்னை மணப்பேன் என்று உறுதி கூறிப்பிரிந்தானாகிய காதலன், தான் குறித்த பருவத்தில் வராது போயினதனால், அதுவரை ஆற்றியிருந்த தலைவியின் ஆற்றாமை மிகுதியாகின்றது. அதுகாலை, அவள் துயர்கண்டு பொறாதாளான தோழியானவள் தலைவனின் பாற் குறையாகச் சில கூற, அது கேட்டுத் தலைவி தன் காதலுறுதி புலப்படக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
கண்ணும் தோளும் தண்நறும் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய,
இன்னுயிர் பெரும்பிறி தாயினும், என்னதூஉம்
புலவேன் வாழி—தோழி!—சிறுகால்
அலவனொடு பெயரும் புலவுத்திரை நளிகடல்
5
பெருமீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர்
கங்குல் மாட்டிய கனைகதிர் ஒண்சுடர்
முதிரா ஞாயிற்று எதிரொளி கடுக்கும்
கானலம் பெருந்துறைச் சேர்ப்பன்
தானே யானே புணர்ந்த மாறே!
10
தெளிவுரை : தோழீ! நீயும் நெடிது வாழ்வாயாக! கண்களும் தோள்களும் தண்ணிய நறியகூந்தலும் தத்தம் உடைய பழைய அழகினை இழந்தன. என் மேனியிலும் பசலை பாய்ந்தது. இனிதான உயிரும் இறந்துபடுவதான எல்லைக்கண்ணே உள்ளது. ஆயினும், நம் சேர்ப்பனோடுயான் சிறிதேனும் புலத்தலைச் செய்யேன் என்று அறிவாயாக. சின்னஞ்சிறு கால்களை உடையவான ஞெண்டுகளோட பெயர்ந்து செல்லும் புலவு நாற்றத்தைக் கொண்ட அலைகளை நெருங்கியிருப்பது பெருங்கடல். அதனிடத்தே சென்று பெரிய பெரிய மீன்களை வேட்டையாடிக் கொள்ளும் தொழிலினர் நம் சிறுகுடிப் பரதவர்கள். அவர்கள் கடலிடை மீண்டு வருவார்க்கு அடையாளமாக இரவுப்பொழுதிலே ஏற்றி வைத்துள்ள மிக்க கதிர்களையுடைய ஒள்ளிய விளக்குகள் தானும், முதிராத இளஞாயிற்றினிது எதிராகத் தோன்றுவதோர் ஒளியைப் போலத் தோன்றா நிற்கும். இத்தகு கானற் சோலையையும் கடற்றுறையும் உடையோனாகிய நம் தலைவன், தானே தமியனாக வந்து என்னை முன்னர்க் கூடினோன் ஆதலினாலே, இனியும் அவனாகவே மீளவும் வருவான் எனும் நம்பிக்கையுடையேன். அதனால் அவன்பால் சினங்கொள்ளேன்!
சொற்பொருள் : 'பழநலம்' என்றது, அவனைக் கூடுதற்கு முன்பாக விளங்கிய கன்னிமைக்காலத்தின் அழகுநலத்தை. பசலை –தேமலாகிய படர் நோய், பெரும்பிறிது–சாக்காடு. அலவன்–ஞெண்டு. புலவு–புலால் நாற்றம். கனைகதிர்–மிக்க கதிர்கள். முதிரா ஞாயிறு. –இளஞாயிறு. எதிரொளி–எதிரான ஒளி; அன்றிக் கானற் சோலையிலே அதனால் உண்டாகும் எதிரொளியும் ஆம். 'கானலம் பெருந்துறை'–அழகிய கானற் சோலைகளையுடைய பெரிதான கடற்றுறை.
விளக்கம் : இதனாலே, தலைவிக்குத் தலைவனிடத்தேயுள்ள தளராத நம்பிக்கை தெளிவாகும். அவனது அன்பின் செறிவைக் களவிற்கூடி அநுபவித்துக் கண்டவளாதலின் 'அவன் தன்னை மறந்தான்; அதனாலேயே காலம் நீட்டித்தான்' என்று குறைகாணும் தலைவியின் சொற்களை இப்படி மறுத்துக் கூறுகின்றனள். 'தன் மனையறத்துக்கு வேண்டிய பொருளைத் தானே முயன்று தேடிவந்த பின்னரே, தன் காதலியை மணந்துகூடி இல்லறம் நாடத்தல் பண்டைத் தமிழ் மரபு. பெற்றோர் செல்வத்து இன்பநலம் துய்த்தலை எவரும் விரும்பார். 'ஆகவே, அம் முயற்சிகளுக்குத் தலைவன் பிரிதலைப் பொறுத்து ஆற்றியிருத்தலும் தலைவியரின் கோட்பாடு ஆகியிருந்தது. 'கொண்ட கொழுநன் குடிவறன் உற்றெனக் கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்' (நற்.110) ஒழுகுநீர் நுணங்கறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே' எனப் போதனார் காட்டும் பண்பே தமிழ் மகளிர் பண்டைப் பெரும் பண்பு ஆகும்.
இறைச்சிப் பொருள் : பரதவர் கங்குல் மாட்டிய விளக்குகளின் ஒளியானது இளங்கதிரின் செவ்வொளிபோல விளங்கும் என்றது. தலைவன் கூடிப் பிரியுங் காலத்தே 'நின்னைப் பிரியேன்' என்று கூறிய வாய்மையானது; அவன் மறந்து விட்ட இன்றும் என்னுளத்தே பசுமையாக நின்று என் உயிரைப் போகாதே தாங்கி நிற்கின்றது என்பதாம்.
இதனாலே விளங்கும் மெய்ப்பாடு அழுகை; பயன் அயாவுயிர்த்தல் என்பர்.
அகவாழ்விலே திளைக்கும் பண்டைக் கன்னியர் காளையர் எத்துணைச் செம்மையான நெறியிடத்தே நின்று, உறுதியோடு வாழ்வியலைக் கண்டனர் என்பதனை இச்செய்யுளால் அறியலாம்.