உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/220

விக்கிமூலம் இலிருந்து

220. பெரிதும் சான்றோர் !

பாடியவர் : குண்டுகட் பாலியாதனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) குறைநேர்ந்த தோழி தலைமகளை முகம் புக்கது. (2) பின்னின்ற தலைமகன் தோழி கேட்பத் தலைமகளை ஓம்படுத்தது. (3) தான் ஆற்றானாய்ச் சொல்லியது.

[(து-வி.) (1) தலைமகன் அடைந்த துயரத்தைப் போக்குமாறு தலைவியிடஞ் சொன்ன தோழி, அவளும் அதற்கு இசையாளாக, ஊரவரின் அறியாமையைக் குறித்துத் தலைவியும் கேட்டு மனம் மாறுமாறு உரைப்பதாக அமைந்த செய்யுள் இது. (2) தன் குறையைத் தோழிபால் உரைத்து நின்றானாகிய தலைவன், அவள் கேட்கும் எல்லையிலே பின்பக்கமாக ஒதுங்கி நின்று, தோழியின் சிறந்த நிலையை வியப்பான் போலக் கூறுவதாகவும் இது அமையும். (3) தோழிபால் குறையிரந்து நின்றவன், தான் தன் துயரத்தை ஆற்றானாகி, அவள் கேட்குமாறு கூறுவதாசுவும் கொள்ளலாம்.]


சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நீறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதரும் சிறுகுறு மாக்கள்
பெரிதுஞ் சான்றோர் மன்ற—விசிபிணி 5
முழவுக்கண் புலரா விழவுடை ஆங்கண்
'ஊரேம்' என்னுமிப் பேரேம் உறுநர்
தாமே ஒப்புரவு அறியின், 'தேமொழிக்
கயலேர் உண்கண் குறுமகட்கு
அயலோர் ஆக'லென்று எம்மொடு படலே! 10

தெளிவுரை : உணவு உண்ணாததாகிய நல்லதொரு குதிரையைப் பனைமடலாலே பண்ணிக் கொண்டோம். அதற்குச் சிறிய மணிகளையும் தொடராகக் கோத்தேம். பெரிய கச்சையையும் பூட்டி நிறுத்தினோம். குறியதாக முகிழ்த்துள்ள எருக்கின் பூவாலாகிய கண்ணியையும் சூட்டினேம். அதிலே ஏறினேமாய் அதனை ஈர்த்துக் கொண்டேமாய்த் தலைவியின் ஊரிலுள்ள தெருவிடத்தேயும் எம்குறையைக் கூறியபடி வந்தேம். அதுகாலை அத்தெருவின் கண்ணே எம்மைப் பின்தொடர்ந்து திரிகின்றவராகச் சிறிய குறிய பிள்ளைகளும் பலர் சூழ்ந்தனர். அவர்கள் தாம் பெரிதும் சான்றோர் ஆவர் காண்! நன்றாக இறுகக்கட்டிய குடமுழாவின்கண் ஓயாது அடித்தலாலே எழுகின்ற முழக்கத்தோடுங் கூடிய திருவிழாவையுடைய அவ்வூரினிடத்தே, 'யாமும் இவ்வூரினேம்' எனச் சொல்லியபடி, எம்மோடும் உரையாடியவர்தாம், பெரிதான மயக்கத்தை உடையவர்கள் ஆவர். தாந்தாம் உலகநடையினை அறிந்திருப்பாராயின், 'தேன்போலே இனிக்கின்ற பேச்சினையும் கெண்டைமீனைப்போல விளங்கும் மையுண்ட கண்களையும் உடையவளான நம் இளமடந்தைக்கு இத்தோழியர்தாம் அயலாம் தன்மை உடையராவர் என்று சொல்லுகின்றனரே! அவர் தாம் எத்துணை மயக்கம் கொண்டவர்!

சொற்பொருள் : தொடர்தல்–தொடர்ந்து கோத்துக்கட்டுதல்; தொங்கலாகக் கட்டுதலும் ஆம். கச்சு–பனைமடலின் கறுக்கால் புண்ணாகாமைப் பொருட்டு மேலாக இடப்படும், பெரிய துணியாலாகிய கச்சு. குறுமுகிழ்–எருக்கு–குறிதாக முகிழ்த்த எருக்கு; நன்கு இதழ் விரியாத பூ என்றபடி; குவிமுகிழ் எனவும் பாடம். 'நன்மா' என்றது, அதுதான் தனக்குத் தலைவியை இசைவித்தலாகிய நன்மையைச் செய்தலினால். முழவு–குடமுழவு என்னும் தோல் கருவி. ஏமுறல்–மயங்குதல். ஒப்புரவு–ஒத்தது அறிந்து அதற்கேற்ப நடக்கின்ற ஒழுகலாறு. மனத்திற்பட்டதைப் பட்டபடியே ஒளியாது உரைத்தல் சிறுபிள்ளைகளின் இயல்பாதலின் 'சான்றோர்' என்றனர்.

விளக்கம் : தலைவி இசையாதபோது, 'அச்சிறுவர் தாம் உண்மையே உரைத்தனர்; யாம் நினக்கு அயலோர் ஆகலே உண்மையாயிற்று' எனத் தோழி வருந்துவதாகவும், அதனால் தலைவி தெளிவடைந்து இசைவு கூறுவதாகவும் கொள்க. 'அயலோர் ஆகலே உண்மை' என அவர் கூறியது சான்றாண்மையான பேச்சுப் போலும்" எனத் தலைவன் கூறியதைக் கேட்ட தோழி, தலைவியின் முன்னுறவை உணர்ந்தாளாய்த் தன் நட்புரிமை தோன்ற அவனுக்கு உதவ முற்பட்டு அவளை அவனோடு கூட்டுவிப்பள் என்பதாம். 'முகம்' என்பது, தான் புகுதற்கு இடமாகிய நோக்கு; புகுதல்–அந் நோக்கிற்கு எதிரே தான் சென்று புகுதல். மெய்ப்பாடு, பிறன்கட்டோன்றிய இளிவரல்; பயன்– தலைமகளை முகம் புகுவித்தல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/220&oldid=1698382" இலிருந்து மீள்விக்கப்பட்டது