உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/250

விக்கிமூலம் இலிருந்து

250. நகுகம் வாராய்!

பாடியவர் : மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார். :திணை : மருதம்.
துறை : புதல்வனொடு புக்க தலைமகன் ஆற்றானாய்ப் பாணற் குரைத்தது.

[(து.வி.) பரத்தை உறவிலே மகிழ்ந்தவனாகச் சில காலம் தலைவியைப் பிரிந்திருந்த தலைவன், ஒரு சமயம் தன் வீட்டின் பக்கமாக வருகின்றான். தெருவிலே சிறுதேர் உருட்டி விளையாடும் தன் புதல்வனைக் கண்டதும் மகிழ்கின்றான். அவனை எடுத்து அணைத்தபடியே தலைவியின் நினைவெழத் தலைவிபாற் செல்கின்றான். அப்போதும் அவள் 'நீர் யாரோ?' என்று கேட்க, அதனைச் சொல்லித் தன் பாணனுடன் நகையாடுவதாக அமைந்த செய்யுள் இது.]


நகுகம் வாராய் பாண! பகுவாய்
அரிபெய் கிண்கிணி யார்ப்பத் தெருவில்
தேர்நடை பயிற்றுந் தேமொழிப் புதல்வன்
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
காமர் நெஞ்சந் துரப்ப யாந்தன் 5
முயங்கல் விருப்பமொடு குறுகினே மாகப்
பிறைவனப் புற்ற மாசறு திருநுதல்
நாறிரும் கதுப்பினெம் காதலி வேறுணர்ந்து
வெரூஉமான் பிணையின் ஒரீஇ
யாரை யோவென் றிகந்துநின் றதுவே! 10

தெளிவுரை : பாணனே! நாம் நகையாடிக் களிக்கலாம் வருவாயாக! உள்ளே பரல்கள் இடப்பெற்றதும் பிளந்தவாயினை உடையதுமான கிண்கிணி ஆரவாரிக்கத் தெருவிலே சிறுதேர் உருட்டி நடைபயின்று கொண்டிருந்தனன், இனிய மொழியினைப் பேசும் எம் புதல்வன். செவ்வாம்பலின் மலரைப்போலத் தோன்றும் சிவந்த அவன் வாயின் நீரானது ஒழுகுதலாலே சிதைந்த சந்தனப் பூச்சோடு, யான் இல்லத்துள் அவனை எடுத்து அணைத்தபடியே சென்றேன். விருப்பம் கொண்ட என் நெஞ்சமானது என்னைத் தூண்டிச் செலுத்துதலாலே யானும் தலைவியை முயங்குதல் என்னும் விருப்பத்தோடே அவளைச் சென்றும் நெருங்கினேன். பிறையது வனப்பைக்கொண்ட குற்றமற்ற அழகிய நெற்றியையும், மணங்கமழும் கரிய கூந்தலையும் கொண்டாளான என் காதலியானவள், என் வருகையைப்பற்றி வேறாகக் கருதிக் கொண்டாள். அஞ்சி அகலுகின்ற மான்பிணையினைப்போல என்னைவிட்டு ஒதுங்கிச் சென்று நின்றபடி, 'என் அருகே நெருங்கி வருவதற்கு நீதான் யாவனோ?' என்ற படியே வினவலையும் செய்தனள். அதனை எண்ணி யாம் நகையாடி மகிழலாம், வருவாயாக!

சொற்பொருள் : பகுவாய் பிளப்புண்ட மூட்டுவாய்; பெரியவாயும் ஆம்; இதனைத் தவளைவாய்க் கிண்கிணி என அதன் மூட்டுவாய் அமைப்பையொட்டிக் கூறுதலும் உண்டு. அரிஉள்ளிடு பரல்கள். தேர் நடை பயிற்றல்–சிறுதேர் உருட்டிய படி நடை பயிலுதல். தேமொழி–இனிமையான மழலைப் பேச்சு. பூநாறு செவ்வாய்–செவ்வாம்பலைப் போலத் தோன்றும் சிவந்த வாய். துரப்ப–செலுத்த. வேறு உணர்ந்து–என்னை வேற்றானைப் போலக் கருதி; இப்படிக் கருதியது ஊடற் சினத்தால் என்க. வெரூஉம்–அஞ்சும்; அஞ்சுவது பகை விலங்குகளைக் கண்டவிடத்து. இகந்து–கைகடந்து.

விளக்கம் : "தலைவன் தன்னை விரும்பி வந்தான் அல்லன்; தெருவிற் போவோன் தன் புதல்வனைக் கண்டதும் பாசத்தால் ஈர்க்கப் பெற்று, அவனைத் தூக்கியபடி உள்ளே வந்தவன், வந்தவிடத்துத் தன்னைக் கண்டதும் ஆசை மீதூர நெருங்குகின்றனன்" என்பதனை அறிந்த தலைவி, இவ்வாறு கடிந்து அவனைவிட்டு ஒதுங்கி நிற்கின்றாள். தங்கள் உறவின் பேறாகிய புதல்வனையும் நினையாளாய், 'நீ யாரையோ?' என்று சொன்னாள். இதுதான் தலைவனுக்கு நகைப்பைத் தருகின்றது. அதனைத் தன் பாணனோடும் சொல்லி மகிழ்கின்றான் அவன் இதனால், பாணனும் நகைகொள்ளத் தலைவியும் தன் சினந்தணிந்து தலைவனை ஏற்று இன்புறுத்துவாளாவது பயனாகும்.

மேற்கோள் : 'கரணத்தின் அமைந்து முடிந்த காலை' எனத் தொடங்கும் தொல்காப்பியச் சூத்திரத்தின் (தொல். பொருள்.) 'அழியல் அஞ்சல் ஆயிரு பொருளினும் தானவட் பிழைத்த பருவத்தானும்' என்றதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரணனார். இச்சூத்திரத்தின், 'ஏனைவாயில் எதிரொடு தொகைஇ' என்னும் பகுதிக்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டி,' இஃது ஏனை வாயிலாகிய பாணனுக்கு உரைத்தது' என்பர் நச்சினார்க்கினியர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/250&oldid=1698419" இலிருந்து மீள்விக்கப்பட்டது