நற்றிணை-2/251
251. நீடினை விளைமோ தினையே!
- பாடியவர் : மதுரைப் பெருமருதன் இளநாகனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : சிறைப்புறமாகச் செறிப்பு அறிவுறீஇயது.
[(து.வி.) தினையை நோக்கிக் கூறுவதுபோல அமைந்தது இச்செய்யுள். புனங்காவல் கொண்டிருக்கும் காலத்தே வந்து, களவொழுக்கத்திலே ஈடுபட்ட தலைவனின் உள்ளத்திலே, தலைவியை விரைந்து வந்து வரைந்து மணந்து கொள்வதை வற்புறுத்த நினைக்கின்றாள் தோழி, அவன் வந்து, செவ்விநோக்கி ஒரு சார் ஒதுங்கி நிற்பதையும் அறிந்தவள், இப்படித் தினையை நோக்கிக் கூறுகின்றாள். இவ்வாறு அமைந்த செய்யுள் இது.]
நெடுநீர் அருவிய கடும்பாட் டாங்கண்
பிணிமுத லறைய பெருங்கல் வாழைக்
கொழுமுதல் ஆய்கனி மந்தி கவரும்
நன்மலை நாடனை நயவாய் யாம்அவன்
அளிபே ரன்பின் இன்குரல் ஒப்பி
5
நின்புறங் காத்தலும் காண்போய் நீயென்
தளிரேர் மேனித் தொல்கவின் அழியப்
பலிபெறு கடவுட் பேணிக் கலிசிறந்து
தொடங்குநிலைப் பறவை உடங்குகுரல் கவரும்
தோடிடங் கோடாய், கிளர்ந்து
10
நீடினை விளைமோ வாழிய தினையே!
சொற்பொருள் : கடும்பாட்டு–கடுமையான வெருட்டும் பாட்டு. பிணிமுதல் அரைய–பிணிப்புண்ட அடிப்பகுதியையுடைய; இது கன்றுகள் பல்கிப் பிணிப்புண்டிருத்தலையும், காட்டுக் கொடிகளாலே பிணிப்புண்டிருத்தலையும் உணர்த்தும். நயத்தல்–விரும்பல். அளிபேர் அன்பு–தலையளி செய்தலாய பேரன்பு; இரக்கம்கொண்டு செய்த பேரன்பும் ஆம். புறங்காத்தல்–பாதுகாத்தல். தளிர் – மாந்தளிர். பலிபெறு கடவுள்–பலியேற்று உண்ணும் கடவுள்; முருகு. கலி–ஆரவாரம். தொடங்குநிலை–தொடங்கும் பொழுதிலே. கிளர்ந்து–நிமிர்ந்து நின்று.
விளக்கம் : 'களவுப் புணர்ச்சியினாலே என் பழைய மேனிநிறம் மாறுபட்டத்தறிந்த அன்னையும் தமரும், முருகு அணங்கிற்றுப் போலும் என்று கருதினர்; என்னைக் குறித்து வெறியயர்தலையும் மேற்கொள்வர். அக்காலத்து யானும் இற்செறிப்பு உறுதலை அடைவேன். ஆதலின், நின் கதிர்களைப் பறவையினம் கவர்ந்து போகும். ஆகவே, நீயும் கதிர் முற்றி விளைதலைச் சற்றுக் காலம் நீட்டிப்பாயாக' என்கின்றாள். இதனைக் கேட்கின்ற தலைவன், அவளைப் பிரிந்து வாழற்கியலாத தன் காதன் மிகுதியாலே தானும் உளஞ்செலுத்தப் பட்டானாய், அவளை மணந்து கோடற்கு உரிய செயல்களை நாடுபவன் ஆவன் என்பதாம்.
'தினை விளையுங் காலம் மணவினைக்கு உரிய காலமாதலின், அதனைத் தலைவனும் நினையாது நீட்டித்தவனாக இருத்தலின், 'தினையே நீயும் நின் கதிர்முற்றி விளைதலைச் சற்று அதுவரை நீட்டிப்பாயாக' என்றனளும் ஆம்.இன்றேல், அவனைப் பெறாத யாம் நலிவெய்தி அழிவெய்தலும் நேரும் என்றதும் ஆம். அவன்தான் காலத்தை மறந்தானாயினான்; ஆதலினாலே, நீ கதிர்முற்றுங் காலத்தையேனும் நீட்டிப்பாயாக என்பது தலைவியின் துயரத்தை நன்கு காட்டும்.
உள்ளுறை : அருவியொலி நீங்காதிருக்கும் இடத்தருகேயுள்ள வாழையின் கனியை, அவ்வொலிக்கு அஞ்சாதே சென்று மந்தி கவர்ந்து உண்ணும் அஃதேபோல, வெறியயர்தலிலே தமர் ஈடுபட்டு ஆரவாரித்திருக்கும் காலத்துத் தலைவி தலைவன்பால் வந்து களவிற் சேர்ந்து இன்புறலும் வாய்க்கும் என்றதாம். இதுதான் எளிதாகாமையின் வரைந்து கோடலே செயற்குரியது என்று குறிப்பாக உரைத்ததும் ஆம்.