நற்றிணை-2/282
282. நாடுகெழு வெற்பனின் தொடர்பு !
- பாடியவர் : நல்லூர்ச் சிறுமேதாவியார்; நன்பாலூர்ச் சிறுமேதாவியார் எனவும் கொள்வர்.
- திணை : குறிஞ்சி.
- துறை : சிறைப்புறமாகத் தோழி செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.
[(து.வி.)] களவொழுக்கத்தேயே ஒழுகிவரும் தலைவனைத் தலைவியைத் திருமணம் செய்து கொள்வதற்கு விரைதற்குத் தூண்டக் கருதினாள் தோழி. அவன் ஒருநாள் வந்து குறியிடத்து ஒரு பக்கத்தே செவ்வி நோக்கி நிற்பதறிந்தவள், தலைவிக்குக் கூறுவாள் போல, அவனும் கேட்டு உணருமாறு சொல்லிய பாங்கில் அமைந்த செய்யுள் இது.]
தோடமை செறிப்பின் இலங்குவளை ஞெகிழக்
கோடேந் தல்குல் அவ்வரி வாட
நன்னுதல் சாய படர்மலி அருநோய்
காதலன் தந்தமை அறியா துணர்த்த
அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்
5
கிளவியில் தணியின் நன்றுமன் சாரல்
அகில்சுடு கானவன் உவல்சுடு கமழ்புகை
ஆடுமழை மங்குலின் மறைக்கும்
நாடுகெழு வெற்பனொடு அமைந்தநம் தொடர்பே!
தெளிவுரை : தோழி! தொகுதியாக அமைந்த, செறித்தலைக் கொண்டவான இலங்குகின்ற வளைகளும் நெகிழ்ந்தன; பக்கம் உயர்ந்த அல்குலினது அழகிய இரேகைகளும் வாட்டமுற்றன: நல்ல நெற்றியிடத்தே பசலையும் பாய்ந்தது; பிரிவுத் துயரம் மிகுந்த நீக்குதற்கரிய காம நோயானது, நம் காதலனாலே இந்நிலையிலே நமக்குத் தரப்பட்டது. இதனை அறியாத அன்னையானவள், 'தெய்வக் குற்றம்' எனக் கருதிப் படிமத்தானுக்கு இதனை அறிவித்தனள். வெறிக்களத்தே, முன்னிடப்பெற்ற கழங்கினாலே ஆராய்ந்தான் அறிவு வாய்ந்த வேலனும். அவன் சொன்னாற் போல, இதுதான் முருகனைப் பராவுதலாலே தணியுமாயின், அதுவும் நன்றுதான்! இம்மலைசாரலினிடத்தே அகிற்கட்டையைச் சுடுகின்ற கானவன், ஆங்குள்ள சருகில் முதற்கண் நெருப்பை மூட்டுதலினாலே எழுகின்ற புகையானது வானத்தையே மறைக்கும். இத்தன்மைப்பட்ட நாடு விளங்கிய வெற்பனோடு அமைந்த நம் தொடர்புதான், இனிக்கழிந்தே விட்டது போலும்!
சொற்பொருள் : தோடு–தொகுதி. செறிப்பு–செறிந்திருக்குமாறு அமைத்தல்! இலங்குதல்–விளங்குதல். கோடு–பக்கம். அவ்வரி–அழகிய இரேகைகள். படர்–காம நோயாகிய துன்பம்; பற்றிப் படர்தலால் 'படர்' என்றனர்: அருநோய்–தீர்த்தற்கரிய நோய். முதுவாய்–அறிவு வாய்ந்த முதுமை வாய்ந்த. வேலன்–வெறியாடுவோன். உவல்–சருகு. ஆடு மழை மங்குல்–இயங்கும் மழை மேகம்.
விளக்கம் : களவுக் காலத்து இடை இடையே உண்டாகும் சிறுபிரிவாலேயே தலைவி பெரிதும் நலிவெய்துகின்றனள்; அதனைத் தெய்வக் குற்றமோவெனத் தாய் கருதினள்; வெறியாடலுக்கு ஏற்பாடும் செய்தனள்; இனி இற்செறிப்பும் நிகழும்; எனவே, விரைய மணந்து கொள்வதற்குத் தலைவன் முயலவேண்டும் என்பதாம். கானவன் அகிற்கட்டையைச் சுடுதல் தினைக் கொல்லையை விரிவு படுத்தக் கருதியாகும்.
இவர்களது பேச்சைக் கேட்கும் தலைவன், அவளை மணந்து கொள்வதற்கான விரைந்த முயற்சிகளைச் செய்தலிலே விருப்பங் கொள்ளுகின்றவன் ஆவான் என்பதாம்.
இறைச்சி : 'கானவன் சுடுபுகையானது மேகம்போலத் தோன்றி மறைக்கும்' என்றனர். இது, களவின்பமே சிறந்ததெனக் காட்டி நம்முடைய தொடர்ந்த ஒழுக்கம் நம் காதலனையும் மயக்கா நிற்கும் என்பதாம்.