உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/283

விக்கிமூலம் இலிருந்து

283. இன்னை ஆகுதல் தகுமோ ?

பாடியவர் : மதுரை மருதனிள நாகனார்.
திணை : நெய்தல்.
துறை : (1) பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது. (2) கடிநகர் புக்க தோழி பிற்றைஞான்று வேறுபடாது ஆற்றினாய் என்று சொல்லியதூஉம் ஆம்.

[(து.வி.) (1) பகற்குறியிடத்தே வந்த தலைமகனை எதிரே கண்டாளான தோழி, 'இவளை வரைந்து வந்து மணந்து கொள்வதற்கு முயல்வாயாக' என்று உள்ளுறையால் உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.

(2) தலைவியை மணந்து கொண்டு தலைவன் இல்லற வாழ்விலே திளைத்து வருகின்ற காலத்தில், தோழி தலைவன்பாற் சென்று அவனைப் பாராட்டிக் கூறியதாக அமைந்த செய்யுளும் இது.]


ஒண்ணுதல் மகளிர் ஓங்குகழிக் குற்ற
கண்நேர் ஒப்பின் கமழ்நறு நெய்தல்
அகல்வரிச் சிறுமனை அணியுந் துறைவ!
வல்லோர் ஆய்ந்த தொல்கவின் தொலைய
இன்னை யாகுதல் தகுமோ? ஓங்குதிரை 5
முந்நீர் மீமிசைப் பலர்தொழத் தோன்றி
ஏமுற விளங்கிய சுடரினும்
வாய்மை சான்றநின் சொல்நயந் தோர்க்கே.

தெளிவுரை : ஒளியுடைய நெற்றியைக் கொண்டவரான பெண்கள், அகன்ற கழியிடத்தே யிருந்தும் பறித்துவந்த, மகளிரது கண்ணை நேராக ஒத்தலையுடையதும், மணம் கமழ்கின்றதுமான நறிய நெய்தல் மலர்கள், அகன்ற, கையாலே அமைத்துக் கோலஞ் செய்த சிற்றில்லை அழகுபடுத்தியிருக்கும் துறைகளையுடைய தலைவனே! உயர்ந்து வரும் அலைகளைக் கொண்ட கடலின் மேலாகப், பலரும் போற்றித் தொழுமாறு தோன்றுதலைச் செய்து, யாவரும் இன்பமடையும்படியாக விளங்கும் ஞாயிற்றினுங் காட்டில், வாய்மை விளங்கிய நினது பேச்சையே விரும்பிய எம்மனோர்க்கு, அறிவுடையோரால் ஆய்ந்து கண்ட பழைய அழகெல்லாம் தொலையும்படியாக, நீதான் இத்தன்மையனாகுதல், நினக்குத் தகுதியாகுமோ? ஆதலின், நீதான் நன்குக் கருதினையாய் ஒரு முடிவையும் செய்வாயாக!

சொற்பொருள் : ஓங்குகழி–அகன்றகழி. குறுதல்–கொய்தல். நேர்ஒத்தல்–மிக்க ஒப்புடையதாதல். அகல்வரிச் சிறுமனை–அகன்ற கையாலே கோலஞ்செய்த சிறு வீடு. வல்லோர்–அறிவிலே வல்லவர்; அறிஞர். தொல்கவின்–பழையதான அழகு. முந்நீர்–கடல். ஏம்–இன்பம். சுடர்–கதிரவன்.

விளக்கம் : ஞாயிற்றை உவமை கூறியது, பகற்குறிக்கண்ணே அவனும் தவறாது வந்து தோன்றுதலினாலே. அவளை வரைந்து எய்தாயாய் இங்ஙனம் ஒழுகி வந்ததனாலே அவள் தான் பெரிதும் நலனழிந்தாள்; நின் பேச்சை நம்பினோரை வருந்தவிடுதல் தான் நினக்கு முறையாகுமோ' என்கின்றாள்.

'தயங்குதிரைப் பெருங்கடல் உலகு தொழத்தோன்றி' 'வயங்கு கதிர் விரிந்த உருகெழு மண்டிலம்'—(அகம் 263) என வாய்மைக்குக் கதிரைப் பிற சான்றோரும் காட்டுவர்.

உள்ளுறை : 'மகளிர் கொய்து கொணர்ந்த நீலமலர்கள் சிறுமனையை அழகு செய்யும்' என்றது, இவளை மணந்து கொண்டனையாய் உடன்கொண்டு சென்று, நினது இல்லத்தையும் இவளால் அணிபெறச் செய்வாயாக' என்று கூறியதாம்.

இரண்டாவது துறை : தலைவனே! இவளை இங்ஙனம் வரைந்து கொள்ளாது தன் பழைய கவினழியச் செய்து நலிவித்ததுதான் நினக்குத் தகுதி தானோ?" என்றதாகக் கொள்க.

உள்ளுறை : 'சிறுமனையை மகளிர் கழியிடைக் கொய்து வந்த நெய்தல் மலரே அழகு செய்தலைப் போல, நின் இல்லத்தை இவள்தான் அழகுசெய்தற்கு உரியவள்' என்றதாகக் கொள்க.

குறிப்பு : இச்செய்யுளில் எட்டு அடிகளேயுள்ளன. 'சிறுமை' எனக் கூறிய ஒன்பது அடியினுங் காட்டில் ஓரடி குறைவாகவே உள்ளது. செய்யுளின் அமைப்பு முதலிலுள்ள ஒன்றிரண்டு அடிகள் காணாமற் போயிருக்கலாமோ என்று உணர்த்துகின்றது.

'ஒண்ணுதல் மகளிர்' என்றது அவர்தாம் கவலையாற் பற்றப்படாத குமரிப்பருவத்தினர் என்றற்காம். 'வல்லோர்’ என்றது, அழகுபற்றிய சாத்திர நுட்பமறிந்த அறிஞர் என்றதுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/283&oldid=1698495" இலிருந்து மீள்விக்கப்பட்டது