நற்றிணை-2/285
285. எறிபுனத்துப் பகல் வருவான்!
- பாடியவர் : மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்; மதுரைப் பொற்கொல்லன் வெண்ணாகனார் எனவும் கொள்வர்.
- திணை : குறிஞ்சி.
- துறை : தோழி, சிறைப்புறமாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்க அம்பலும் அலருமாயிற்று என்று கூறியது.
[(து.வி.) தலைவன் வந்து, செவ்வி நோக்கி ஒருசார் ஒதுங்கி நிற்பதறிந்த தோழி, தலைவிக்குச் சொல்வாள் போல, 'அவர்கள் உறவைக் குறித்த அம்பலும் அலரும் மிகுதியாயிற்று' என உரைத்து, அவை தீர்தற்பொருட்டு அவளை அவன் விரைய வந்து வரைந்து கொள்ளல் வேண்டும் என்று குறிப்பாக உணர்த்துவதாக அமைந்த செய்யுள் இது.]
அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்
இரவின் வருத லன்றியும் உரவுக்கணை
வன்கைக் கானவன் வெஞ்சிலை வணக்கி,
உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு
வளைவாய் ஞமலி ஒருங்குபுடை யாட
5
வேட்டுவலம் படுத்த உவகையன் காட்ட
நடுகாற் குரம்பைத் தன்குடிவயிற் பெயரும்
குன்ற நாடன் கேண்மை நமக்கே
நன்றால் வாழி தோழி! என்றும்,
அயலோர் அம்பலின் அகலான்
10
பகலின் வரூஉம், எறிபுனத் தானே!
தெளிவுரை : பாம்புகள் இரைதேடித் திரிந்தபடியிருக்கும், மிக்க இருள்பரந்த நள்ளிரவாகிய இரவுக்காலத்திலே வருதல் அல்லாமலும், வலிய கணைகளையும் வன்மை பொருந்திய கைகளையும் கொண்ட கானவன்,வெவ்விய வில்லை வளைத்து, நெஞ்சிடத்தே செலுத்தி வீழ்த்தப்பட்ட முள்ளம் பன்றியின் ஏற்றையோடு, வளைந்த வாயையுடைய நாய்கள் ஒருபக்கத்தே கூடிக் குரைத்தபடியே வந்து கொண்டிருக்க, வேட்டையாடி வெற்றியோடு வந்ததனாலே உவகை கொண்டோனான கானவன், காட்டகத்தேயுள்ள கால்களை நட்டுக் கட்டிய குச்சுவீடுகளைக் கொண்ட தன் ஊர்க்குச் செல்வான். அத்தகைய குன்ற நாடனின் உறவுதான், தோழீ! நமக்கும் நலம் தருவதாகுக! நீயும் வாழ்க! அவன் தான், அயலோர் உரைக்கும் அம்பலைக் கேட்டும் நம்மை விட்டு அகலாதவன் ஆதலோடு, பகற்போதிலும் குறியிடத்துக்கு காடு எறித்துச் செய்யப்பட்ட தினைப்புனத்துக்கு, வருதலைத் தவிர்தலும் இலனாவன் கண்டாய்!
சொற்பொருள் : நடுநாள் – நள்ளிரவுப் போது. உரவு–வலிமை; கணையின் வலிமையாவது அது செவ்விதாக வடிக்கப்படல். வன்கை – வலிமையான கை; அம்பு செலுத்துதற்கான வலிமையைக் குறித்தது. முளவுமான் – முள்ளம்பன்றி. வளைவாய் ஞமலி – வளைந்த வாயினதான ஞமலி; 'மனைவாய் ஞமலி' எனவும் பாடம்; மனையிடத்தேயுள்ள நாய் என்று கொள்க. காட்ட – காட்டகத்ததான. நடுகாற் குரம்பை – கால் நட்டு வேய்ந்த குடிசை; சுவர் எழுப்பாதது என்க. எறிபுனம் – காட்டை யெறித்துச் செய்த புனம். வலம்படுத்தல் – வலப்புறமாக வீழச் செய்தல்.
விளக்கம் : 'அரவிரை தேரும் ஆரிருள் நடுநாள்' என்றது, அதனால் ஏதமுறுமோவெனத் தாம் அஞ்சியதைக் கூறி, இரவுக்குறி மறுத்தலாம். வேட்டுவனின் வல்லாண்மை கூறுவார், அவன் முள்ளம்பன்றியின் ஏற்றை வேட்டையாடியதைக் கூறினார்; இது அவர் காட்டில் திரிதலின் அவராலும் ஏதம் உண்டாகுமெனத் தாம் அஞ்சியது கூறிப்பகற்குறியும் மறுத்தலாம்.
'எறிபுனம்' என்றது, தினை கொய்து அழித்த புனம் என்றதுமாம். ஆகவே, பகற்குறியும் வாயாமை கூறி விலக்கியதாம். இதனால், பகற்குறியும் இரவுக்குறியும் விலக்கியவளாக வரைவு வேட்டனள் ஆயிற்று.
உள்ளுறை : வேட்டுவனாலே புண்பட்டு வீழ்ந்த முள்ளம் பன்றியின் ஏற்றை, மனைநாய்கள் சுற்றிச் சூழ்ந்து நின்று குரைத்தாற்போல், தலைவனின் அருளாமையாலே நெஞ்சம் புண்பட்ட தலைவியைச் சேரியிடத்து அலவற் பெண்டிர்கள் குழுமியவராக நின்று அலருரைப்பாராவர் என்றதாம். வேட்டுவன் தலைவனுக்கும், புண்பட்ட முள்ளம் பன்றி தலைவிக்கும், நாய்கள் அலவற் பெண்டிர்க்கும் உவமையாகப் பொருந்துவன கண்டு இன்புறுக.