உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/297

விக்கிமூலம் இலிருந்து

297. அன்னை கூவினள்!

பாடியவர் : மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்.
திணை : குறிஞ்சி.
துறை : (1) தோழி சிறைப்புறமாகத் தலைமகட்கு உரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது; (2) தோழி தலைமகளை அறத்தொடு நிலை வலிப்பித்ததூஉம் ஆம்.

[(து-வி) (1) தலைவன், செவ்விநோக்கிச் சிறைப்புறமாக ஒதுங்கி நிற்பதைக் கண்டாள் தோழி. தலைமகளிடம் சொல் பவள் போலத் தலைவனும் கேட்டுக், களவு வெளியாயின உணர்ந்து, தலைவியை விரைய மணக்கும் முடிவுக்கு வருமாறு குறிப்பாகக் கூறுகின்றாள். (2) தலைமகளை அறத்தொடு நிற்பாயாக என்று வற்புறுத்தி அதன்கண் நிலை பெறுத்தியதும் ஆம்.]


பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப
நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய்;
பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை;
அவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை; 5
நின்னுள் தோன்றும் குறிப்புநனி பெரிதே;
சிதர்நனை முணைஇய சிதர்கால் வாரணம்
முதிர்கறி யாப்பில் துஞ்சும் நாடன்
மெல்ல வந்து நல்லகம் பெற்றமை
மையல் உறுகுவள் அன்னை; 10
ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே !

தெளிவுரை : தோழீ! பொன்னாலே செய்யப்பெற்ற கிண்ணத்திலே வைக்கப்பட்ட பாலானது, நின்னால் உண்ணப் படாதேயே கீழே வைக்கப்பட்டிருப்பதனைக் காணாய்! நின் மேனியது ஒளியும் மிகுந்து வேறாகத் தோன்றுகின்றது! நின் சிவந்த அடிகளால் நடந்து ஒதுங்கிப் போனாயும் அல்லை! பலவாறாகவும் மாண்புகொண்ட படுக்கையைப் பகையாகக் கருதிக்கொண்டு, கள்ளுண்டவர் அடையும் மயங்கிய பார்வைக்கு நின்பால் இடமில்லையாகவும், நீயும் மயக்கம் அடைந்தவளேபோலத் தோன்றுகின்றனை! நாம் இவ்வாறு இருப்பதன் காரணம் எதனாலே என்று எண்ணியும் பார்த்தாயில்லை; ஆதலினாலே, நின் உள்ளத்தே தோன்றும் குறிப்பானது மிகவும் பெரிதாயுள்ளது!

வண்டுகள் மொய்க்கும் மலரும் பருவத்தையுடைய பூக்களை வெறுத்ததான, சிதர்ந்த இறகுடன் கூடிய கால்களையுடைய கோழியானது, முதிர்ந்த மிளகுக்கொடிகள் பின்னிக் கிடக்கும் இடத்திலே சென்று உறங்கியபடி யிருக்கும் மலை நாடனானவன், மெல்ல வந்தானாகி, நின் நல்ல உள்ளத்தேயும் இடம் பெற்றதனைப்பற்றி ஐயமுற்றவளாக, அன்னையும் மயக்கமடைவள். இப்போது, அவள் ஐயம் இல்லாதேயே, கடுங்குரல் எடுத்து நின்னை அழைக்கின்றனள்; காண்பாயாக!

கருத்து : நின்னுடைய மயக்கத்தால் களவுறவை அன்னையும் அறிவாள் என்றதாம். தலைவியால் சிறு பிரிவையும் மறக்க முடியாமையின், விரைவில் அவளை மணந்து, பிரியாதுறையும் இல்லறவாழ்வினை அமைப்பதே தலைவனின் விரைந்த செயலாக வேண்டும் என்பதுமாம்.

சொற்பொருள் : வள்ளம் – கிண்ணம்; வட்டமாகக் குழிந்திருப்பது; இதேபோலக் குழிந்துள்ள சிறு தோணியும் 'வள்ளம்' எனப்படும். கிழக்கிருத்தல் – கீழே வைத்திருத்தல். ஏறிய – மிகுந்த. மகிழ்தல் – கள்ளால் உளவாகும் மயக்கம். சிதர் –வண்டு. சிதர்கால்–மென்கால். கறி – மிளகுக்கொடி. யாப்பு–கட்டியதுபோலப் பின்னிக் கிடத்தல். நல்லகம் – நல்ல உள்ளம்; அது முன்னைய நிலை; இப்போது அதுவே நின் மயக்கத்திற்கும் காரணமாயிற்று என்பது குறிப்பு. மையல் – மயக்கம்; எதனாலோ மகள் இவ்வாறாயினாள் என்னும் பெருங் கவலையால் உண்டாவது. ஐயம் – இவள்தான் களவுறவு பெற்றாளோ என்று நினைத்தல்.

விளக்கம் : பாலும் உண்ணப்படாதே கீழே யுள்ளது என்றது, உணவையும் வெறுத்ததனால் உடல் மெலிவுற்றனள் என்றற்காம். சேவடி ஒதுங்காய் என்றது நடத்தற்கும் வன்மையற்றுப் போயினை என்பதாம்; மெலிவாலும், களவை மறக்க இயலாது பெருகிய பிரிவுத் துயராலும் இஃது ஆகும். 'குறிப்பு நனி பெரிது' என்றது, களவு வெளிப்படின் அறத்தொடு நிற்றலுக்கும், தலைவனோடு உடன் போதற்கும் துணிந்துள்ள மனவுறுதியின் குறிப்பினை. அன்னை மையல் உறுகுவள் என்றது, அவள் வெகுளாளாயினும், நின் நலனையே கருதுபவளாதலின், துயரத்தால் உண்மை காணமாட்டாதே மயங்குவாள் என்பதாம். கூவினள் – கூப்பீட்டைச் செய்கின்றனள்; இது அன்னை இவர்கள் இடத்திற்குத் தொலைவாயிருப்பதைக் குறிப்பதும் ஆகும். ஐயம் இல்லாதேயும் கடுங்கூவினளான அன்னை, ஐயமுற்றனளாயின் இற்செறிப்பே நிகழும்; அப்போது களவுறவும் வாயாது; இவளும் இறந்துபடுபவள் என்பதாம்.

உள்ளுறை : நனையை வெறுத்த கோழியானது கறிக்கொடியது யாப்பிலே துஞ்சும் என்றனள். இது மலரன்ன மெல்லியலாளான தலைவியை வெறுத்தானாகத், தலைவன் தன்னூர்க்கண்ணே சென்று ஒடுங்கினான் என்று குறிப்பிட்டுக் கூறியதாகும்.

பயன் : தலைவியைத் தலைவன் மணக்கும் முயற்சியிலே விரைபவன் ஆவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/297&oldid=1698527" இலிருந்து மீள்விக்கப்பட்டது