உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/298

விக்கிமூலம் இலிருந்து

298. நமக்குப் பொருந்துமோ?

பாடியவர் : விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்.
திணை : பாலை.
துறை : தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி, ஆற்றாதாய நெஞ்சினை நெருங்கிச் சொல்லித், தலைமகன் செலவழுங்கியது.

[(து-வி) 'பொருள் தேடி வருக' என்றாள் தோழி. மனமும் பொருள்பாற் செல்லுகின்றது. தலைமகன், தலைவிபாற் செல்லும் தன் நெஞ்சினை நினைக்கின்றான். அவளைப் பிரியவும் துணியமுடியாமல், பொருள் ஆசையையும் விடமுடியாமல் மனம் கலங்கி, முடிவில், பொருள்தேடப் போதலைப் தள்ளி வைக்கின்றான். அவன் மனக்கலக்கமாக அமைந்த செய்யுள் இது.]


வம்ப மாக்கள் வருதிறம் நோக்கிச்
செங்கணை தொடுத்த செயிர்நோக்கு ஆடவர்
மடிவாய்த் தண்ணுமைத் தழங்குகுரல் கேட்ட
எருமைச் சேவல் கிளைவயிறு பெயரும்
அருஞ்சுரக் கவலை யஞ்சுவரு நனந்தலைப் 5
பெரும்பல் குன்றம் உள்ளியும் மற்றிவள்
கரும்புடைப் பணைத்தோள் நோக்கியும் ஒருதிறம்
பற்றாய்—வாழிஎம் நெஞ்சே—நற்றார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்
ஒருமை செப்பிய அருமை வாண்முகை 10
இரும்போது கமழுங் கூந்தல்
பெருமலை தழீஇயும் நோக் கியையுமோ மற்றே!

தெளிவுரை : எம் நெஞ்சமே! புதிதாக வருகின்ற மக்கள், வழியூடே வருகின்ற தன்மையை நோக்கியபடியே காத்திருப்பவர், ஆறலைப்போராகிய கள்வர்கள். அவரைக் குறிவைத்துச் சிவந்த கணையை அம்பிலே தொடுத்து எய்பவரும் அவர். சினந்த பார்வையினரான அவரது, வாய்மடித்துப் போர்த்த தண்ணுமையின் முழங்கும் குரலைக் கேட்டதும், பருந்தின் சேவலானது அச்சங்கொண்டு, தன் கூட்டம் வாழும் அவ்விடத்தை நோக்கிப் பறந்து செல்லும். கடத்தற்கரியதும், கவருபட்டதுமான அச்சந் தரும் அகன்ற அவ்விடத்தேயுள்ள பெரிய பலவாகிய குன்றுகளைக் கடந்து போவதுபற்றியும் ஒருபால் நினைப்பாய். அடுத்து, இவளுடைய கரும்பெழுதிய பணைத்த தோள்களையும் எண்ணி நோக்குவாய்! ஒருபாலும் மனம்பற்றாமல் மயங்குகின்றாய்! நல்ல வேப்பந்தாரினை அணிந்தோனான பொற்றேர்ச்செழியனின் கூடல் நகரத்திலே, பண்டுயாம் ஒருதலையாகத் துணிந்து பொருள்தேடி வருவதாகத் தோழிபாற் சொல்லிய அருமையான சொற்கள்தாம் என்னே! வெளிய அரும்பு மலர்ந்த பெரிய மலரின் மணங் கமழும் கூந்தலை உடையவள் என் காதலி! இவளைப் பார்த்தபின்னர், பெருமலைகளைக் கடந்து பொருள் தேடிவரச் செல்லுவதுதான் நம் காதலுறவுக்குப் பொருத்தமாகுமோ?

கருத்து : இவளைப் பிரிதல் ஆற்றேம்; ஆதலின், பொருளை நாடிச் செல்லுதலைச் சிறிதுகாலம் மறந்திருப்பாய் என்பதாம்.

சொற்பொருள் : வம்பமாக்கள் – வெளியூராரான புதியர்கள். வருதிறம் – வருகின்ற தன்மை. செங்கணை – சிவந்த கணை; சிவப்பு முன்னர்ப் பிறர் உடலிற் பாய்ந்து பெற்ற குருதிக்கறை. 'மடிவாய்' என்றது, மடித்து வைத்துக் கட்டப்பெற்ற தோலையுடையது என்று பொருள் தரும். எருவை - பருந்து வகையுள் ஒன்று. அது கிளைவயிற் பெயர்தல், தண்ணுமை ஒலியால் அச்சங்கொண்டு என்க. நனந்தலை – அகன்ற இடம். கரும்பு – தோளில் எழுதும் ஒப்பனை. பணைத்தோள் – பருத்த தோள். ஒருதிறம் – ஒரு பக்கம். 'கூடல்' என்றது மதுரையை. 'ஆங்கண்' – அவ்விடத்தே. வாண்மை – வெண்மை. இரும் போது – பெரிய மலர்கள்.

விளக்கம் : 'வம்பமாக்கள்' என்றது, வழியின் கொடுமையறியாது வந்த புதியவர் என்பதற்கு. 'செங்கணை தொடுத்த' என்றது, மறைந்து நின்று அம்பு தொடுப்பவர் என்பதையும், 'செயிர் நோக்கு' எதிர்வரினும் அஞ்சாது சினந்து நோக்கும் கொடியவர் என்பதையும் காட்டும். பொருளே கருத்தினராதலின், அருள்நோக்கு இன்றிச் செயிர் நோக்கே கொண்டவர் என்று கொள்க. பிணத்தை நாடி வானிற் பறக்கும் எருவைச் சேவலும் அஞ்சித் தன் கிளையிடம் செல்லும் என்றது, அவரது கொடிய போரைக் குறித்துச் சொன்னதாம். 'பெருமலை தழீஇய நோக்கு இயையுமோ?' என்பது, மனத்திற்குச் சொல்லும் முடிபு.

இறைச்சிப் பொருள் : எருவைச் சேவலானது தண்ணுமையின் ஒலிக்கு அஞ்சித் தன் சுற்றத்திடம் நோக்கிப் பெயர்ந்து போகும் என்றது, யாம் பொருள் தேடி வருதலைக் குறித்துச் சென்றாலும், இவள் பிரிவாற்படும் வேதனையை எண்ணி, இடை வழியில், மீண்டு வருதலையே நினைப்போம்போலும் என்றதாம்.

பயன் : இந்த எண்ணத்தின் பயனாவது, அவன் தான் போகக் கருதிய செலவைச் சிறிது காலத்திற்குத் தள்ளி வைப்பான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/298&oldid=1698529" இலிருந்து மீள்விக்கப்பட்டது