நற்றிணை-2/330
330. உண்மையோ அரிதே!
- பாடியவர் : ஆலங்குடி வங்கனார்.
- திணை : மருதம்.
- துறை : தோழி தலைமகனை வாயில் மறுத்தது.
[(து-வி.) பரத்தையை நாடிப் போன தலைவனுக்கு, மீண்டும் தலைவியின்பால் ஆர்வம் உண்டாகிறது. அவன் வீட்டிற்கு வந்து, தலைவியின் இசைவைப் பெற்றுத் தருமாறு தோழியை வேண்ட, அவள் அவன் போக்கைக் கடிந்து மறுத்துக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]
தடமருப்பு எருமைப் பிறழ்சுவல் இரும்போத்து
மடநடை நாரைப் பல்லினம் இரிய
நெடுநீர்ந் தண்கயம் துடுமெனப் பாய்ந்து
நாள்தொழில் வருத்தம் வீடச் சேட்சினை
இருள்புனை மருதின் இன்னிழல் வதியும்
5
யாணர் ஊர! நின் மாணிழை மகளிரை
எம்மனைத் தந்துநீ தழீஇயினும், அவர்தம்
புன்மனத்து உண்மையோ அரிதே, அவரும்,
பைந்தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து
நன்றி சான்ற கற்போடு
10
எம்பா டாதல் அதனினும் அரிதே!
தெளிவுரை : வளைந்த கொம்புகளையுடைய எருமையின், அசையும் பிடரினையுடைய கருமையான கடா ஒன்று, இளநடையையுடைய நாரைகளின் பலவான கூட்டம் எல்லாம் அச்சமுற்று ஓடும்படியாக, நெடிய நீர் நிரம்பிய தண்ணென்ற பொய்கையிலே, துடுமென்னும் ஒலியுண்டாகச் சென்று பாய்ந்து, நாளிற் செய்த உழு தொழிலின் வருத்தமானது நீங்கும் படியாக நீராடும். அதன்பின் நீண்ட கிளைகளை உடையதும், இருள் நிரம்பியது போன்ற அடர்த்தியுடையதுமான மருதமரத்தின் இனிய நிழலிலே சென்று ஓய்வாகத் தங்கியிருக்கும். அத்தகைய புதுவருவாய் மிகுந்த ஊரினை உடையவனே! நீதான், நின்னுடையவரான மாட்சிகொண்ட கலனணிந்த பரத்தை மகளிரை, எம்முடைய வீட்டுக்கே அழைத்து வந்து வைத்து, குலமகளிரைப் போலப் பேணிக்கொண்டு அவரோடு கூடியிருந்தாலும், அவர்களது புன்மையான மனத்திலே உண்மையான காதலன்பு நின்னிடத்து உண்டாதல் என்பதோ அரிதேயாகும். அவரும், பசிய நொடியணிந்த புதல்வியரோடு புதல்வரையும் நினக்குப் பெற்றுத்தந்து, நன்மை பொருந்திய கற்புடைமையுடனே, எம்பக்கத்தவராக ஆகுதல் என்பதோ அதனினும் அரிதாகும். இதனை நீயும் அறிந்தாய் அல்லையோ!
கருத்து : பரத்தையராகிய அவர்பால் விருப்புடைய நின்னைத் தழுவி மகிழ்தல் எம்முடைய செவ்விக்கு மாசாவது என்று இடித்துக் கூறியதாம்.
சொற்பொருள் : தட மருப்பு – வளைந்த கொம்பு. பிறழ்சுவல் – அசைந்து பிறழும் பிடரியிடம்; பிணர் சுவல் எனப் பாடங்கொண்டு சருச்சரையுடைய பிடர் என்றும் கூறுவர். நாள் தொழில் – நாட் காலையிலே செய்த உழுதொழில். சேட்சினை இருள்புனை மருது – நெடிய கிளைகளோடு இருள்போல அடர்ந்த நிழலைக்கொண்டதான மருதமரம். யாணர் – புது வருவாய். மாணிழை மகளிர் – மாண்பான இழைகள் பூண்ட பரத்தையர்; இது எள்ளல் உவமை. எம்மனை – எம்மனைப் புறம்; இது தலைவன் வீடாயினும், அதற்கு உரியவள் மனைவியே என்னும் மரபுபற்றிக் கூறியதாம். புன்மனம் – புன்மை வாய்ந்த மனம்; நன் மனத்திற்கு எதிரானது இது. நன்றி – நன்மை. எம்பாடு – எம் பக்கல்; எமக்கு இணையான தகுதிபெறல்.
உள்ளுறை : எருமைக் கடா நாரையினம் இரியப் பொய்கையிலே புகுந்து தன் வருத்தம் தீர்ந்தபின், தான் புகுதற்சூரியதான தன் தொழுவம் புகுந்து தங்காது, இன்னிழல் மருத நீழலிலே தங்கும் ஊரன் என்றனள். இவ்வாறே தலைவனும் பரத்தையர் சேரியிற் புகுந்து, அதனால் காமக்கிழத்தியர் வெருவி ஒதுங்கி அகன்று போக, பின்னும் வீடு திரும்பாது, பாணன் கூட்டிய புதுப்பரத்தையுடன் தங்கியிருந்தனன் என்று தலைவனைக் குறிப்பாற் சுட்டிப் பழிக்கின்றனள். இங்கு நினக்கு வேண்டியதுதான் இனி யாதுமில்லை என்றதாம்.
விளக்கம் : 'பிறரும் ஒருத்தியை எம்மனைத் தந்து, வதுவை அயர்ந்தனை' (46) என அகத்தினும் வருவதால், இவ்வாறு காம மீதூர்ந்த தலைவர்கள் சிலபோது பரத்தையைத் தம்மனைக்கே கொண்டுவந்து வைத்துக் கூடிமகிழ்வதும் உண்டென்பது புலனாகும். எனினும், 'பொருளே அவர்தம் குறியாதலால்' அவர் உண்மையன்பினர் ஆதல் அரிதென்றும், மற்று அவரும் மகப்பெற்றாலும் அம்மக்கள் மனைவிக்குப் பிறந்தாரைப் போலக் குலத்துக்குச் சிறிதளவும் பயன்படார் என்றும் தலைவனுக்குச் சொல்லி, அவனைப் பழிக்கின்றாள் தோழி.
பயன் : வாயின் மறுத்தலே துறையாயினும், தலைவன் தன் குற்றமுணர்ந்து வருந்த, தலைவியும் அவனை ஏற்றுக்கொள்வாள் என்பதாம்.