உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/331

விக்கிமூலம் இலிருந்து

331. முனிவில் நல்லூர்!

பாடியவர் : உலோச்சனார்.
திணை : நெய்தல்.
துறை : தோழி இரவுக்குறி நேர்ந்தது.

[(து-வி.) பகற்குறி வந்தொழுகும் தலைவனின் உள்ளத்திலே தலைவியை மணந்து கொள்ளும் நினைவைத் தீவிரமாக்கக் கருதுகின்றாள் தோழி. அதனால், பகற்குறி மறுத்து இரவுக்குறி நேர்வாள் போலச் சொல்லுகின்றாள். அவ்வாறு தோழி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]


உவர்விளை உப்பின் உழாஅ உழவர்
ஒழுகை உமணர் வருபதம் நோக்கி,
கானல் இட்ட காவற் குப்பை
புலவுமீன் உணங்கல் படுபுள் ஓப்பி,
மடநோக்கு ஆயமொடு உடனூர்பு ஏறி, 5
'எந்தை திமிலிது நுந்தை திமி'லென
வளைநீர் வேட்டம் போகிய கிளைஞர்
திண்திமில் எண்ணும் தண்கடற் சேர்ப்ப!
இனிதே தெய்யஎம் முனிவில் நல்லூர்; 10
இனிவரின் தவறும் இல்லை; எனையதூஉம்
பிறர் பிறர் அறிதல் யாவது
தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே.

தெளிவுரை : புலவு நாற்றத்தை உடைய மீனை உப்பிட்டு காயவைத்திருக்கும் பொழுது, அதனைக் கவர்தற்கு வந்து வீழும் புள்ளினங்களை ஓட்டியபடி இருப்பர் பரதவர் மகளிர், மடப்பம் பொருந்திய பார்வையினைக் கொண்ட அவர்கள், தம் தோழியரோடு—

உழாது, உவர் நிலத்திலே, உப்பாகிய விளைவைக் கொள்ளும் உழவராகிய பரதவர்கள், ஒழுங்காக ஒன்றன்பின் ஒன்றாக உமணர்கள் வண்டியோடு உப்பை விலைக்குக் கொள்வதற்கு வருகின்ற காலச்செவ்வியை எதிர்பார்த்தவராக, கடற்கானலிலே குவித்து இட்டிருக்கும் காவலையுடைய உப்புக் குவியல்களின் மேலே தவழ்ந்து ஏறி நின்றவராகக், கடலிடத்தே கரைநோக்கி வரும் திமில்களைச் சுட்டியபடி,

'அதோ வருவது என் தந்தையின் படகு; அதோ வருவது நின் தந்தையினது படகு' என்றும் கூவுவர். வளைந்த கடல் நீரிடத்தே மீன் வேட்டை குறித்துச் சென்றுள்ள தம் சுற்றத்தாருடைய திண்மையான படகுகளை அம்மகளிர் எண்ணிக்கொண்டிருப்பர். இத்தகைய தண்மையுடைய கடற் சேர்ப்பனே! எவரையும் வெறுத்தல் என்பதே இல்லாத எம்முடைய நல்ல ஊர்தானும் மிகவும் இனிமை உடையதே. இனி, நீதான் அங்கே வந்தாலும் தவறு ஏதும் இல்லை. சுற்றத்தார்களும் ஒருவர் போக்குவரவை மற்றவர் அறியாதாராக, அவரவர்தத்தம் கடமைகளில் மனஞ் செலுத்தியிருக்கும் சேரியினை உடையதாதலால், எவ்வளவேனும் நின் வரவைப் பிறர் எவரும் அறிவர் என்பதும் இயலுமாறில்லை. ஆதலின், நீதான் அஞ்சாதே எம்மூர்க்கு வருவாயாக என்பதாம்.

கருத்து : இரவில் நின்னையே நினைந்து அவன் படுகின்ற துயரம் மிகவும் பெரிதாதலின், விரைவில் அவளை மணந்து பிரியாத வாழ்வைத் தருக என்பதாம்.

சொற்பொருள் : ஒழுகை – வண்டிகளின் வரிசை. உமணர் – உப்பு வணிகர். பதம் – காலச் செவ்வி. குப்பை – மேடு. படுபுள் – படுகின்ற புள் – காக்கை கொக்கு போல்வன. திமில் – மீன்பிடி படகு. முனிவு – வெறுத்தல். நல் ஊர் – நல்ல பண்புடைய ஊர்.

உள்ளுறை : பகல் வேளையிற் புள்ளோப்பியபடி மீன் உணங்கற்குக் காவலிருக்கும் பரதவர் மகளிர், மாலையில் உப்புக் குவட்டின்மீது ஊர்ந்து ஏறி நின்று, கரை நோக்கி வரும் படகுகளை எண்ணி மகிழும் துறை என்றனள். இது, பகற்போதில் கானலிலே புள்ளோப்பியிருந்த யாம், இரவில் மனையகம் புகுந்திருந்து, நீதான் சோலையிலே வந்து நின்று புள்ளோசையிட்டுக் குறி செய்வதை நினைந்து, இது நின்குறி என்று எண்ணியபடி நின் வரவையே எதிர்பார்த்திருப்போம் என்பதாம்.

விளக்கம் : 'இனிதே' என்றது, எம்மூர் நின் ஊர் போன்றே இன்னாது கருதாத செவ்வியது என்றதாம். அன்னையும் பிறரும் நீவரின் ஐயுறார் என்பாள், தமர் தமர் அறியாச் சேரி என்றனள். 'பிறர் பிறர் அறிதல் யாவது' என்றது, அலர் உரைத்துப் பேசுவாரும் எவரும் இல்லையென்று கூறியதாம். இதனால், அவனை இரவு வேளையிற் கானற் சோலைக்கு அஞ்சாது வருமாறு கேட்டுக்கொள்ளுகின்றாள் தோழி.

பயன் : இரவுக்குறி நேர்தல் மூலம் வரைவு வலியுறுத்தல் என்று கொள்க; இரவுக்குறி வாயாது என்பதற்கு உப்பு விளைப்போர் காத்திருக்கும் நிலைமை கூறினள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/331&oldid=1698623" இலிருந்து மீள்விக்கப்பட்டது