உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/332

விக்கிமூலம் இலிருந்து

332. குவளை குறுநர்!

பாடியவர் : குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்.
திணை : குறிஞ்சி.
துறை : 1. பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி களவுக் காலத்து வற்புறுப்ப, தலைவி கூறியது; 2. பொறை எதிர் மறுத்ததூஉம் ஆம்.

[(து-வி.) 1. தலைமகன் பிரிவினால் மெலிந்த தலைமகளிடம், 'நாள் தவறாதே அவன் வந்து நின்னைத் தழுவியும் நீதான் மெலிதல் எதனாலோ?' எனத் தோழி கேட்கின்றாள். 'அவன் வரும் வழியினது கொடுமையை நினைந்து மெலிவேன்' என்கிறாள் தலைவி. அத்தலைவியின் கூற்றாக அமைந்த செய்யுள் இது. 2. தலைவியின் மெலிவுக்குத் தோழி வருந்தித் தலைவனைப் பழிக்க, அது பொறாத தலைவி தன் நிலையைத் தோழிக்கு உரைக்கின்றனள்.]


இகுளை தோழி! இஃது என்னெனப் படுமோ
'குவளை குறுநர் நீர்வேட் டாங்கு'
நாளும் நாள்உடன் கவவும், தோளே
தொன்னிலை வழீஇய நின்தொடி' எனப் பல்மாண்
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர்முகை 5
ஈன்பிணவு ஒடுக்கிய இருங்கேழ் வயப்புலி
இரைநசைஇப் பரிக்கும் மலைமுதற் சிறுநெறி
தலைநாள் அன்ன பேணலன், பலநாள்,
ஆர் இருள் வருதல் காண்பேற்கு
யாங்கு ஆகும்மே, இலங்கிழை செறிப்பே? 10

தெளிவுரை : இகுளையாகிய என் தோழியே! "நீரிலேயே இறங்கி நின்று குவளை மலரினைக் கொய்பவர்கள், நீர் வேட்கையாலே வருந்தினாற்போல், நாள்தோறும் காதலனுடனே தழுவுதலைப் பெற்றும், நின் தோள்கள், தம்முடைய பழைய பூரிப்பிழந்தவாய்த் தொடிகள் கழன்று வீழ்கின்றபடி மெலிந்தனவே" என்று, பலவான மாட்சிமைப்படச் சொல்லுதலை நீயும் மேற்கொண்டுள்ளனை. துருகல்லினை அடுத்த மலைப்பிளவினுள்ளே குட்டிகளை யீன்ற பெண் புலியின் பசியைப் போக்குதலை வேண்டி, கரிய நிறத்தையுடைய வலிமையுள்ள ஆண் புலியானது இரையினை விரும்பிப் பதுங்கியிருக்கின்ற, மலையின் தொடக்கத்தேயுள்ள சிறிதான வழியிலே, அதனைப் பாராட்டாதவனாய், என்னைக் கண்டு கூடிய தலைநாள் போன்ற விருப்பம் கொண்டவனாய், பலநாளும் கடத்தற்கு அரிய இருள்வேளையிலே வருதலைக் காணுகின்ற எனக்கு, விளங்கும் அணிகள் செறிப்புடன் விளங்குதல்தான் எவ்வாறு இயலுமோ?

கருத்து : அவன் இரவிலே வருகின்ற வழியினது தன்மை என்னைப் பெரிதும் வருத்துதலால் யான் மெலிவேன் என்பதாம்.

சொற்பொருள் : இகுளை – இளம் பருவத்தினள். குறுநர்: கொய்பவர். தொன்னிலை – பழைய தன்மை. தொடி – தோள்வளை. விடர் முகை – துறுகல் அடுத்த மலைப் பிளப்பிடம். பிணவு – பெண்புலி. இருங்கேழ் – கரிய நிறம்; 'இருங் கோள்' எனக்கொண்டு, கொள்ளுதலில் பெரிதும் வன்மையுடைய புலி எனவும் உரைப்பர். பரிக்கும் – பதுங்கியிருக்கும். காண் பேற்கு – காண்பாளாகிய எனக்கு.

இறைச்சி : பெண்புலியின் பசியைத் தீர்ப்பதற்கு, ஆண் புலி இரை தேடிப் பதுங்கி இருக்கின்றதான பாசத்தின் செவ்வியைக் கண்டோனாகியும், என்னுடைய மனக்கவலையை உணர்ந்து, அது தீர்தற்கு, என்னை மணந்து கொள்ளும் முயற்சியிலே மனஞ் செலுத்துகின்றான் இல்லையே என மனம் நொந்து கூறியதாம்.

விளக்கம் : 'குவளை குறுநர் நீர் வேட்டாங்கு' என்றது, காதலின்பத்தை நுகர்ந்தும் மீண்டும் மீண்டும் நுகர்தலையே நாடும் மனப்போக்கை விளக்குவதாகவும் கொள்ளக்கூடும். இனி, 'விடர் முகை ஈன்பிணவு' பற்றிக் குறித்தது, தானும் மனையறம் பேணிப் புதல்வனைப் பெற்றுத் தந்திட, அவன் தன்னையும் தன் புதல்வனையும் பேணிக் காத்திட, வாழ்கின்றதான, இல்லற வாழ்வியலின் நாட்டத்தைப் புலப்படுத்தற்கு என்றும் கருதலாம். தலைநாள் – முதல் நாள்; அவர்கள் ஒன்று கூடிய நாளாதலால் தலையாய சிறந்த நாள் எனினும் பொருந்தும்.

பயன் : தலைவன் விரைந்து திரும்பத் தலைவியும் மீண்டும் புதுநலன் அடைவாள் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/332&oldid=1698625" இலிருந்து மீள்விக்கப்பட்டது