நற்றிணை-2/339
339. என்னோ பண்பு ?
- பாடியவர் : சீத்தலைச் சாத்தனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : சிறைப்புறமாகத் தலைவன் கேட்பச் சொல்லியது.
[(து-வி.) களவுக் காலத்தே, தலைமகன் வந்து ஒருபக்கமாகச் செவ்வி நோக்கி ஒதுங்கி நிற்பதைத் தோழி கண்டாள். அவன் மனத்தைத் திருமணத்திற்குத் தூண்டக் கருதியவள், தலைவிக்குச் சொல்வாள்போல, அவனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]
தோலாக் காதலர் துறந்துநம் அருளார்;
'அலர்வது அன்று கொல் இது?' என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி,
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை—சிறந்த
5
சீர்கெழு வியனகர் வருவனள் முயங்கி
நீரலைக் கலைஇய ஈரிதழ்த் தொடையல்
ஒள்நுதல் பெதும்பை நல்நலம் பெறீஇ,
மின்நேர் ஓதி இவளொடும், நாளைப்
பன்மலர் கஞலிய வெறிகமழ் வேலித்
10
தெண்ணீர் மணிச்சுனை ஆடின்,
என்னோ மகளிர்தம் பண்பென் றோளே!
கருத்து : அன்னை அறிந்தால் இற்செறிப்பு நிகழும்; ஆதலின், இனிக் களவுறவு வாயாது, கடிமணமே செய்தற்கு உரியது என்பதாம்.
சொற்பொருள் : தோலா – தோல்வி கண்டறியாத. அலர்வது – அலராகிப் பிறரால் தூற்றப்படுவது. இது – இந்த உறவு. நன்றும் புலரா நெஞ்சம் – வருவது நன்றாகும் என்ற நினைவே தோன்றாது, தீமை வரவையே நினைந்து நலியும் மனம். புதுவ – புதிதான பேச்சுக்கள். பருவரல் வெள்ளம் – துன்பமாகிய கடல். சிறந்த சீர் கெழு வியல் நகர் – சிறந்த சிறப்புகள் நிரம்பிய பெரிய அரண்மனை. தொடையல் – மார்பிலே அணியும் மாலை; தொடுக்கப்படுவதால் தொடையலாயிற்று. 'பெதும்பை' பருவம் குறித்தது. கஞலிய – கலந்து நிறைந்த. வெறி – மணம். வேலி – சுற்றிலுள்ள எல்லைக் காப்பு. மணிச்சுனை – அழகிய சுனை. தெண்நீர் மணிச்சுனை – தெளிவான நீரானது கருமணிபோலத் தோன்றும் சுனையும் ஆம். சுனை – மலைப்பள்ளத்து நீர்த்தேக்கம்.
விளக்கம் : 'நாளை, சுனை ஆடின், மகளிர் பண்பு என்னோ என்றோளே;' என்று அன்னை கூறியதாகச் சொன்னது, தலைவியின் மேனியிலே புணர்ச்சியால் நேர்ந்த மாற்றத்தைச் சுனையாடியதால் வந்தவென்று தோழி கூறியதுகேட்டு, அன்னை நகையாடி, நாளைக்கு நீராடினாலும் இவ்வாறு இன்னும் புது மாற்றம் நேருமோ என்று, கேலியாகக் கூறியதாகக் கொள்க. இனி, மணந்து கூடுதலே செயத்தக்கது என்பதாம்.
பாட பேதங்கள் : புலவா நெஞ்சமொடு; மின்னேர் ஓதி.
பயன் : அன்னை அறிந்தாளெனச் சொன்னதால், இனி தலைவி இற்செறிக்கப் படுவாளாகவே, அவளை மணங்கொண்டன்றிக் கூடியின்புறல் வாய்ப்பதரிது என்பதாம்.