உள்ளடக்கத்துக்குச் செல்

நற்றிணை-2/341

விக்கிமூலம் இலிருந்து

341. துணையிலேம் யாமே!

பாடியவர் : மதுரை மருதனிளநாகனார்.
திணை : குறிஞ்சி.
துறை : வினைவயிற் பிரிந்து ஆற்றானாகிய தலைமகன் சொல்லியது.

[(து-வி.) வேந்துவினை முடித்தற்குப் போர்முனை சென்ற தலைவன், வாடைக்காலத்தில் காதலியைப் பிரிந்துறையும் பிரிவின் வெம்மை தாங்காதவனாகத் தனக்குள் சொல்லி வருந்துவதாக அமைந்த செய்யுள் இது.]


வங்கா வரிப்பறைச் சிறுபாடு முனையின்,
செம்பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும்
விளையாடு இன்நகை அழுங்கா, பால்மடுத்து,
அலையா, உலவை ஓச்சிச் சில கிளையாக்
குன்றக் குறவனொடு குறுநொடி பயிற்றும் 5
துணை நன்கு உடையள், மடந்தை, யாமே
வெம்பகை அருமுனைத் தண்பெயல் பொழிந்தென,
நீர் இரங்கு அரைநாள் மயங்கிக் கூதிரொடு
வேறுபுல வாடை அலைப்பத்
துணையிலேம், தமியேம், பாசறை யேமே! 10

தெளிவுரை : வெள்ளியாலே செய்யப்பெற்ற, வரிகளையுடைய பறையினை அடித்துச் சிறிதுபொழுது விளையாடியபின், அது தானும் வெறுத்ததானால், சிவந்த புள்ளிகொண்ட அரக்கினது வட்டுப்போன்ற நாவாலே வடித்து இறக்கப்படும் விளையாட்டின் இனிய களிப்பானது நீங்கப்பெறாதபடி பாலினையும் சென்று பருகுவான். அதன்பின், அங்குமிங்குமாகச் சுற்றியலைந்தும், சிறு குச்சியைக் கைக்கொண்டு ஓங்கிக் காட்டிப் பிறரை அச்சுறுத்தியும், இடையிடையே சிலசில சொற்களைப் பேசியும் விளையாடுவான், குன்றத்துக் குறவனாகிய எம் மகன். அம்மகனோடு, சிறிய நொடி பயிற்றியபடியாகப் பிரிவை மறந்திருக்கும் துணைமையினை, நல்லபடியே அவள்தானும் பெற்றிருக்கின்றாள். ஆனால், யாமோ,—

கொடிய பகைவர் நாட்டிலேயுள்ள போர்முனையிடத்தே குளிர்ந்த மழையானது பெய்ததாக, மழை நீர் அருவியாக வீழ்ந்தபடியேயிருக்கும் ஒலியானது கேட்டபடியிருக்கின்ற இரவின் நடுயாமப் பொழுதிலே, கூதிரோடு கலந்து வேற்றுப் புலத்துள்ள வாடையானது வந்து வருத்துதலாலே மனம் மயங்கி, அதனை நீக்குதற்குத் துணையாவார் யாரும் இல்லாதேமாய், தமியேமாய், பாசறையிலேயே உள்ளோம்!

கருத்து : 'என் பிரிவால் அவளும் நலிந்தாலும் மகனைத் துணையாகப் பெற்றுளதால் ஆறுதல் பெறலாம், எனக்கோ யாரும் துணையில்லை' என்பதாம்.

சொற்பொருள் : 'வங்கா வரிப்பு அறை' எனப் பாடம் கொண்டு, வெள்ளிபோன்ற வெண்கோடுகள் அமைந்துள்ள கற்பாறையிலே சென்று, அதன்பால் வீழும் அருவி நீரிலே எனவும் உரைகொள்வர். சிறுபாடு முணையின் – சிறிதளவு வெறுப்படைந்தால். செம்பொறி அரக்கின் வட்டு நா – சிவந்த புள்ளிகளையுடைய அரக்கின் வட்டம்போன்று விளங்கும் நாக்கு. நாவடிக்கும் பால் மடுத்து – நாவாலே சுவைத்துக் குடிக்கும் தாய்ப்பாலைப் பருகி. விளையாடு இன் நகை – விளையாட்டிலே பெறுகின்ற இனிய மகிழ்ச்சி. 'குன்றக் குறவன்’ என்றது, தன் குடிக்குத் தலைவனாகப் பிறந்த தன் மகனை. நீர் இரங்கு – நீர் ஒலிக்கும். அரைநாள் – இரவின் நடு யாமப்பொழுது.

விளக்கம் : 'குன்றக் குறவெனொடு' என்பதற்கு வேறு குறவன் எனப் பொருள்கொள்வது, தலைவிக்கு ஏற்காததாதலின், தலைவன் அவ்வாறு நினைப்பது பொருந்தாததாதலின் ஏற்புடைத்தாகாது என்க. 'மகனாவது அவளுக்குத் துணையாக உள்ளனன்' என எண்ணுவதே பொருந்தும் என்க. கார்காலத்தில் மீள்வேன் என் உறுதிகூறிப் பிரிந்து வந்தவன், கூதிர் காலமும் வந்து, மழையும் வாடையும் வருத்தத் தன் ஆசை மனைவியை நினைத்து இவ்வாறு புலம்புகின்றான் என்பதே சிறப்பாகும்.

'வேறுபுல வாடை அலைப்ப என்றது, வேற்றுப் புலத்து வாடை வருத்த என்று பொருள்பட்டு, அவன் தன் நாட்டிலிருப்பின் வாடை வருத்தாது அவள் அணைப்பிலே கிடப்பன் என்பதையும் உணர்த்துவதாம். இது பாசறைப் புலம்பல்.

பாடபேதங்கள் : வட்டு நா வடிக்கும், விளையாட்டின்னகை அழுங்கப் பால்மடுத்துத், தலையா உலவை ஓச்சிச் சில்கிளைக் குன்றக் குறவனொடு.

'முணைவு வெறுப்பாகும்' என்பது தொல்காப்பியம் சொல்லதிகாரம் (சூ. 386); ஈங்கை முகையானது அட்டரக்கு உருவின் வட்டுமுகை போல்வதென (நற். 193) முன்னரும் கண்டோம். இங்கே அது குழந்தைக் குறவனின் நாக்குக்கு உவமையாயிற்று.

பயன் : மேலும் காலம் தாழ்த்தாதே, தன்னூர் திரும்புதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதலிலே, தலைவன் மனம் செலுத்துவானாவான் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நற்றிணை-2/341&oldid=1698657" இலிருந்து மீள்விக்கப்பட்டது